புகழ்பெற்ற இரண்டு தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவம் செய்து கொண்ட இருவர் அண்மையில் இறந்துவிட்டனர். இவர்களில் ஒருவர் 22 நாள்கள் மருத்துவமனையில் இருந்ததற்கான செலவு உருவா 16 இலட்சம். மற் றொருவர் 15 நாள்கள் மருத்துவமனையில் இருந்த தற்கான செலவு உருவா 15.6 இலட்சம். இந்த இரண்டு மருத்துவமனைகளுக்கும் பல கிளை மருத்துவ மனைகள் உள்ளன. இந்த இரண்டு இறப்புகளும் இந்தியாவில், அரசு, மக்களுக்கு அளிக்க வேண்டிய பொது மருத்துவம் எந்த அளவுக்குப் பாழ்பட்டுக் கிடக்கிறது என்பதையும், தனியார் மருத்துவம் எந்த அளவுக்குப் பகல் கொள்ளை யில் ஈடுபட்டு வருகிறது என்பதையும் தெளிவாக உணர்த்துகின்றன. தனியார் மருத்துவமனையில் சேருபவர்களில் பெரும்பாலோர் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

கடந்த சில பத்தாண்டுகளாக இந்தியாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை சீரழிந்து வருவது குறித்து தேசிய அளவிலும் பன்னாட்டு நிலையிலும் வெளியிடப்பட்ட அறிக் கைகளில் தெரிவிக்கப்பட்ட விவரங்களை 2017ஆம் ஆண்டிற் கான தேசிய சுகாதார அறிக்கை உண்மை என உறுதி செய்கிறது. மக்கள் நல்வாழ் வுக்கு அரசு செலவிடும் தொகை குறைந்து கொண்டே வருகிறது. அதனால் தனியார் மருத்து வம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆகவே மக்கள் தனி யார் மருத்துவத்தை நாடும் நிலைக்குத் தள்ளப்படு கின்றனர். எனவே தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிடுவதால் ஏழைகள் கடனாளிகளாகின்றனர்.

பொது மக்களின் மருத்துவச் சேவைக்கு அரசு மிகக் குறைந்த அளவில் நிதி ஒதுக்குவதால், அதை யடுத்து தரமான மருத்துவம் கிடைக்காமையால் மிகவும் ஏழைகளாக இருப்பவர்கள்கூட தனியார் மருத்துவ மனைகளைத் தேடிச் செல்கின்றனர். தனியார் மருத்துவ மனைகளில் அதிகம் செலவாகும் என்று தெரிந்துள்ள போதிலும் வேறு வழியில்லாமல் ஊரகப் பகுதியில் 61 விழுக்காட்டினரும், நகரப் பகுதியில் 69 விழுக்காட்டி னரும் தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்ற னர். தனியார் மருத்துவமனையில் படுக்கையில் சேர்ந்து மருத்துவம் செய்துகொள்ளும் போது, நகர்ப்புறத்தில் 5 குடும்பங்களில் ஒரு குடும்பம், ஊரகப் பகுதியில் நான்கில் ஒரு குடும்பம் மருத்துவச் செலவைக் கட்டுவதற்காகக் கடன் வாங்குகின்றன. அல்லது தங்கள் உடைமை களை விற்கின்றன. நாட்டின் மொத்த சுகாதாரச் செலவில் மக்கள் செலவிடும் தொகையின் அளவு 63 விழுக்காடாகும். தேசிய சுகாதர அறிக்கையின்படி, சராசரியில் ஒருவருக்கு உருவா 3,826 செலவாகிறது; அதில் நோயாளி செலவிடும் தன் சொந்தப் பணம் உருவா 2,394 ஆகும்.

இந்நிலையிலும், அரசு, மக்களுக்கான பொது மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், தனியார் மருத்துவத்தை ஊக்குவிப்பது பெருங்கொடுமையாகும். தனியார் மருத்துவ மனைகளை ஒழுங்குபடுத்துவதற் கான திட்டவட்டமான விதிகளை அரசு வகுக்கவில்லை. அதனால் தனியார் மருத்துவ மனைகள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற நிலை இருக்கிறது. ஆகவே அவை எந்த நெறிமுறைக்கும் கட்டுப் படாமல் இலாபம் ஒன்றையே குறியாகக் கொண்டு செயல்படுகின்றன.

குறை மாதத்தில் பிறந்த ஒரு குழந்தையை உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக அண் மையில் தில்லியில் உள்ள புகழ்பெற்ற ஒரு மருத்துவ மனை அறிவித்தது. குழந்தையைப் பெற்றுக்கொண்ட பெற்றோர் குழந்தை சாகவில்லை என்பதை அறிந்து வேறொரு மருத்துவமனையில் சேர்த்தனர். ஒரு கிழமை உயிருக்குப் போராடிய பின் அக்குழந்தை இறந்துவிட்டது. இது பெரும் பிரச்சனையாக வெடித்தது. உடனே தில்லி அரசு முதலில் அக்குழந்தை இறந்த தாக அறிவித்த தனியார் மருத்துவமனையின் மற்றும் அதன் கிளை மருத்துவமனைகளின் உரிமத்தை இரத்துச் செய்தது. அதனால் அந்த மருத்துவமனை யில் இருந்த உள் நோயாளிகள் பெரும் துன்பத்துக்கு ஆளாயினர். தனியார் மருத்துவமனை தவறு செய் தால் அரசுகளும் நடவடிக்கை எடுக்கும் என்று மக் களிடம் நற்பெயரை வாங்க வேண்டும் என்பதற் காகவே நோயாளிகளின் துன்பத்தைப் பொருட்படுத் தாமல் தில்லி அரசு இப்படி ஒரு தவறான நடவடிக் கையை எடுத்தது.

2010ஆம் ஆண்டில் தனியார் மருத்துவமனைகள் (பதிவு செய்தல் மற்றும் ஒழுங்காற்றல்) சட்டம் இயற்றப் பட்டது. இச்சட்டத்தை இந்திய அரசும், மாநில அரசு களும் முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால். பணம் பறித்தல் மற்றும் பிற வகையிலான முறை கேடுகளைத் தடுத்திருக்கலாம். நெறி முறை தவறி செயல்படும் மருத்துவமனைகளுக்குக் கடுமையான தண்டனை விதிக்க இச்சட்டம் வழிகோலுகிறது. ஆனால் இச்சட்டம் ஏட்டளவிலேயே இருக்கிறது.

அண்மையில் நடுவண் அரசு ஒருவரின் இதயக் குருதிக் குழாய் அடைப்புக்காக “ஆஞ்சியோ பிளாஸ்டி” செய்து, அடைப்பு இருந்த இடத்தில் பொருத்தப்படும் ஸ்டன்ட் (stent) விலைக்கு வரம்பு விதித்தது. ஆயினும் தனியார் மருத்துவ மனைகள் ஸ்டன்ட் விலையில் குறைக்கப்பட்ட தொகையை வேறு பெயர்களில் நோயாளியிடம் வசூலித்துவிடுகின்றன. அதனால் இதயக் குருதிக் குழாயில் ஸ்டன்ட் பொருத்துவதற்கு முன்பு எவ்வளவு பணம் நோயாளியிடம் வாங்கப் பட்டதோ அதே தொகைதான் இப்போதும் மருத்துவ மனையால் வசூலிக்கப்படுகிறது.

கட்டுப்படுத்த முடியாத அளவுக்குத் தனியார் மருத்துவமனைகள் அதிகாரம் மிக்கவையாக வளர்ந்து விட்டுள்ளன என்பதை அண்மையில் கருநாடக மாநிலத் தில் நடந்த நிகழ்வு மெய்ப்பிக்கிறது. மருத்துவம் அளிப்பதில் ஏற்படும் பொறுப்பின் மையாலோ, மற்ற முறைகேடுகளாலோ நோயாளி பாதிக்கப் பட்டால் அது தொடர்பான மருத்துவர், மருத்துவமனை மீது தண் டனைக்குரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு சட்டம் 2017 நவம்பரில் கருநாடகச் சட்டப் பேரவையில் இயற்றப்பட்டது. இச்சட்டத்தை மருத்துவர்களும் தனி யார் மருத்துவமனை முதலாளிகளும் தீவிரமாக எதிர்த்துப் போராட்டம் நடத்தினர்.

அரசு பொது மருத்துவ மனைகளைவிட தனியார் மருத்துவமனைகளில் பல மடங்கு நோயாளிகள் உள்ளனர். மருத்துவர்களின் போராட்டத்தால் தனியார் மருத்துவமனைகளின் நோயாளிகள் பாதிக்கப்பட்டதால், மக்களின் சினம் அரசுக்கு எதிராகத் திருப்பிவிடப்பட்டது. அதனால் இறுதி யில் அரசு, அச்சட்டம் நீர்த்துப் போகும் தன்மையில் மாற்றியமைக்க ஒப்புக்கொண்டது. இந்திய அளவில் மொத்த உற்பத்தி மதிப்பில் ((GDP) 1.1 விழுக்காடுதான் அரசு, மருத்துவத்துக்குச் செலவிடுகிறது. கருநாடக மாநில அரசு 0.7 விழுக்காடுதான் செலவிடுகிறது. கருநாடகத்தில் தனியார் மருத்துவம் எந்த அளவுக்குக் கோலோச்சுகிறது என்பதை இது காட்டுகிறது.

2017ஆம் ஆண்டின் தேசிய சுகாதார அறிக்கையின்படி, 130 கோடி மக்களுக்கு மருத்துவம் செய்வதற் குப் பத்து இலட்சம் ஆங்கில முறை மருத்துவர்கள் இருக்கின்றனர். இந்தப் பத்து இலட்சம் மருத்துவர்களில் 10 விழுக்காடு மருத்துவர்கள் மட்டுமே அரசின் பொது மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர். இதே போன்று அரசு மருத்துவமனைகளில் போதிய அளவுக்குச் செவிலியர்கள், பிற வகையிலான சுகாதாரப் பணியாளர்கள் இல்லை. மேலும் மருத்துவ வசதி கிடைத்தல், தரமான மருத்துவம் ஆகியவற்றில் மாநிலங் களுக்கு இடையில் பெரும் ஏற்றத்தாழ்வு இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. தொற்று அல்லாத நோய்களால் (Non-Communicable Diseases) நாட்டில் ஏழைகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி இருப்பது பற்றியோ, மருத்துவ வசதிகளைப் பெறுவதில் ஊரகப் பகுதிக்கும் நகரப் பகுதிக்கும் இடையில் உள்ள ஏற்றத் தாழ்வு குறித்தோ மருத்துவக் கல்வியில் மாணவர் களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை.

2017ஆம் ஆண்டில் தேசிய சுகாதார அறிக்கை ஜி.டி.பி.யில் (GDP) ஒரு விழுக்காடாக உள்ள மருத்துவத் திற்கான நிதி ஒதுக்கீட்டை 2020க்குள் 2.5 விழுக்கா டாக உயர்த்தப் போவதாகக் கூறுகிறது. ஆனால் இதில் உலக சராசரி 5.99 விழுக்காடு என்பதை ஒப்பிடும் போது மக் களுக்கு அரசு மருத்துவ சேவை அளிப்பதில் எந்த  அளவுக்குப் பின்தங்கியிருக்கிறது என்பது புலனாகும். எனவே அரசு மக்களுக்குப் பொது மருத்துவ சேவையை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராசைப் பிடித்த தனியார் மருத்துவர்கள் - மருத்துவமனைகள் என்னும் கொள்ளைக்காரர் களிடமிருந்து நோயாளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் மீட்பதற்கான - தனியார் மயத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அரசியல் உறுதிப் பாடு ஆளும் வர்க்கத்திடம் ஏற்படுமா?

(நன்றி : Economic and Political Weekly, ஆசிரியவுரை, திசம்பர் 23, 2017.

தமிழாக்கம் : க. முகிலன்)