“உங்கள் கையில் உங்கள் பணம்” என்கிற பொய் யான முழக்கத்தை முன்னிறுத்தி 2013 சனவரி முதல் ஒரு புதிய திட்டத்தை நடுவண் அரசு செயல் படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் பெயர் “நேரடிப் பணமாற்றத் திட்டம்” ((Direct Cash Transfers) என்பதாக இருந்தது. 2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடா ளுமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு நேரடியாகப் பணம் வழங்கும் திட்டம் இது என்று எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதனால், “நேரடியாகப் பயன்களை வழங்கும்” (Direct Benefits Transfers) திட்டம் என்று நடுவண் அரசு இதன் பெயரை மாற்றி உள்ளது. 

நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இத்திட்டத்தை ‘ஒரு யுகப் புரட்சி’ என்று புகழ்ந்துள்ளார் (தினமணி 17.12.12). 1917இல் சோவியத் நாட்டில் வெற்றி பெற்ற சோசலிசப் புரட்சியை, ‘யுகப் புரட்சி’ என்று பாரதி போற்றினான். ப. சிதம்பரம் போற்றும் இந்த யுகப்புரட்சியில் என்ன இருக்கிறது? ஒரு புடலங்காயும் இல்லை. மாறாக, மக் களுக்கு அரசு வழங்கிவரும் நலத்திட்டங்களின் மானியத் தொகையைக் குறைப்பது, முற்றிலுமாக நீக்குவது; பொதுவழங்கல் முறையையும், வேளாண் விளை பொருள்களை அரசு கொள்முதல் செய்யும் ஏற்பாட்டை யும் அடியோடு ஒழிப்பது; அதன் மூலம் மேலும் தாராள மயத்தையும் - தனியார்மயத்தையும் ஊக்குவிப்பது என்பன இத்திட்டத்தின் உள் நோக்கங்களாகும்.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியின் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் தில்லியில் ஆட்சியைப் பிடிப்பதற்குப் “பசிப்பிணிப் போக்கும்” ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் முதன்மையான காரணமாக இருந்தது என்று அரசியல் ஆய்வாளர்கள் எழுதினார்கள். அதுபோன்றதொரு துருப்புச்சீட்டாக, மானியத் தொகையை நேரடியாகப் பணமாக வழங்கும் திட்டம் பயன்படும் என்று காங்கிரசுக் கட்சியின் தலை மை நம்புகிறது. அதனால் 2013 சனவரி முதல் 51 மாவட்டங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதாக நடுவண் அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் 640 மாவட்டங்கள் உள்ளன. 2013ஆம் ஆண்டிற்குள் எல்லா மாவட்டங்களிலும் நேரடியாகப் பணம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார். நடுவண் அரசு மானியம் வழங்கும் 39 திட்டங்களும் இப்புதிய முறையில் செயல்படுத்தப்படுமாம்.

முதியோர் உதவித்தொகை, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, விதவைகளுக்கான உதவித் தொகை போன்றவை முன்பே நேரடியாகப் பயனாளிகளுக்குப் பணமாக வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களில் ஒருசில இடங்களில் அஞ்சல்காரரும், தலைமை ஆசிரியரும், மருத்துவத் துறையின் அலுவலர்களும், இடைத்தரகர் களும் இலஞ்சம் வாங்குகிறார்கள் என்பது எல்லோ ருக்கும் தெரிந்த உண்மைதான். அதனாலேயே இத் திட்டங்கள் வீணானவை என்று சொல்லிவிட முடியுமா?

உரியவருக்கு முழு உதவித் தொகையும் சென்று சேருவதில்லை என்பதைக் காரணமாகக் காட்டி, ஒரு வரின் தனித்த அடையாளங்களும் (Unique Identity -UID)) குறிப்பிட்ட எண்ணும் கொண்ட “ஆதார்” (Aadhaar) எனப்படும் அடையாள அட்டை மூலம் வங்கியில் அவர் பெயரில் செலுத்தப்படும் பணத்தைப் பெறும் திட்டத்தை நடுவண் அரசு அறிவித்துள்ளது. இதற்காகக் கடந்த ஓராண்டாக ஆதார் அட்டை வழங்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரையில் 20 கோடிப் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் 8 கோடிப் பேரின் அட்டை மட்டுமே அவர்களின் வங்கிக் கணக்குடன் இணைக் கப்பட்டுள்ளது. நடப்பு நிலை இவ்வாறிருக்க, 2013ஆம் ஆண்டிற்குள் அனைத்து மாவட்டங்களிலும் நேரடிப் பணமாற்றத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று ப. சிதம்பரம் கூறுவது எவ்வளவு பெரிய ஏமாற்று!

இத்திட்டத்தின் முதன்மையான நோக்கம் அரசின் நிதிப்பற்றாக்குறையைக் குறைத்திட, மக்களுக்கு வழங் கும் நலத்திட்ட உதவிகளைக் குறைக்க வேண்டும் என்பதேயாகும். இதற்காகவே மன்மோகன் சிங் அரசு, சந்தோசு மெக்ரோத்தா என்பவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு 3.12.2010 அன்று அரசுக்கு அளித்த அறிக்கையில் முதன்மையாக நான்கு பரிந்துரைகளை முன்மொழிந்திருந்தது.

1.            வீடுகளுக்கு வழங்கும் மானிய விலை எரிவளி உருளைகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஆறு என்று ஆக்க வேண்டும்.

2.            மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண் ணெயின் அளவை உடனடியாக 60 விழுக்கா டாகக் குறைக்க வேண்டும்.

3.            நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரசி, கோதுமை, சர்க்கரை போன்ற பண்டங்களுக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட தொகையைப் பயனாளி களுக்குப் பணமாக நேரடியாக வழங்க வேண்டும். அந்தப் பணத்தைக் கொண்டு வெளிச்சந்தையில் அவர்கள் தங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை வாங்கிக் கொள்ளட்டும்.

4.            உழவர்களுக்கு மானிய விலை உரம் அளிப்ப தற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்டத் தொகையைப் பணமாக நேரடியாக வழங்கிவிடலாம். அவர்கள் தங்களுக்கு வேண்டிய இடுபொருள்களை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ளட்டும்.

சந்தோசு மெக்ரோத்தா அறிக்கையை ஒரு காரண மாகக் காட்டிக் கடந்த செப்டம்பர் மாதம் வீடுகளுக்கு இனி ஆறு எரிவளி உருளைகள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று நடுவண் அரசு அறி வித்தது. இந்தியாவில் உள்ள 24 கோடிக் குடும்பங் களில் 6 கோடிக் குடும்பங்கள் மட்டுமே எரிவளி உரு ளையைப் பயன்படுத்துகின்றன. இவர்களில் மிகப் பெரும்பாலோர் ஏழைகள், நடுத்தரக் குடும்பத்தினர் ஆவர். 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒரு எரிவளி உருளை கட்டாயம் தேவை. எரிவளி உருளை எண்ணிக்கையை ஆறாகக் குறைத்ததை மக்கள் கடுமை யாக எதிர்த்தனர். அதனால் இப்போது மானிய விலையில் வழங்கும் எரிவளி உருளை எண்ணிக்கையை 9 ஆக நடுவண் அரசு உயர்த்தியுள்ளது.

இரசாயன உரங்களைப் பொறுத்தவரையில், 2010 ஏப்பிரல் முதல், ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் என்ற கொள்கையை நடுவண் அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் பெயரால் உரங்களின் விலையை நடுவண் அரசு நிர்ணயிக்கும் நிலை ஒழிக்கப்பட்டு, உரத் தயாரிப்பு நிறுவனங்களே உரங்களின் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 2010ஆம் ஆண்டில் 50 கிலோ டி.ஏ.பி. (டைஅமோனியம் பாஸ்பேட்) உரத்தின் விலை ரூ,486 ஆக இருந்தது. 2012இல் ரூ.1,200 ஆக உயர்ந்துவிட்டது. இதேபோன்று பொட்டாஷ் (M.O.P) உரம் 50 கிலோவின் விலை ரூ.231 லிருந்து ரூ.840 ஆகவும், 50 கிலோ காம்பளக்ஸ் உரம் ரூ.374 என்பதிலிருந்து ரூ.1110 ஆகவும் உயர்ந்துள்ளது (தினத்தந்தி 25.1.2013, முதலமைச்சர் செயலலிதா அறிக்கை).

உர நிறுவனங்களே விலைகளை நிர்ணயித்துக் கொள்ள அனுமதித்ததுடன், அவற்றிற்கு உரமானியத் தொகையையும் அரசு அளிக்கிறது. எல்லாப் பொருள் களையும் சந்தை விலைக்கே மக்களை வாங்கச் செய்து, அதன்மூலம் முதலாளிகளின் கொள்ளை இலாபத்தைப் பாதுகாப்பதே அரசின் பொருளாதாரக் கொள்கையாகும். இது முற்றிலும் மக்கள் விரோத அரசாகவே செயல்படுகிறது. காங்கிரசு ஆண்டாலும் பாரதிய சனதா கட்சி ஆண்டாலும் மக்களைக் கசக்கிப் பிழிந்து முதலாளிகளைப் பேணும் அரசுகளாகவே செயல்படுகின்றன.

அடுத்து மண்ணெண்ணெய் நிலையைப் பார்ப் போம். மானிய விலையில் மண்ணெண்ணெயை வழங்குவதற்குப் பதிலாக நேரடிப் பணமாற்றத் திட்டத் தின்கீழ் வழங்குவது என்பது முன்னோட்டமாக இராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டம், கோட்காசிம் வட் டாரத்தில் (ஒன்றியப் பகுதி - Block) 2011 திசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோட்காசிம் வட்டாரத்தில் 25,000 குடும்பங்கள் உள்ளன. கடந்த ஓராண்டில் இதன் செயல்பாடு குறித்து நேரில் கள ஆய்வு செய்த, பாரத் பாத்தி, மதுலிகா கன்னா ஆகியோர் எழுதிய கட்டுரை 4.12.12 அன்று ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் நடுப்பக்கக் கட்டுரையாக வெளிவந்தது.

குடும்ப அட்டை வைத்திருப்போர் 2011 திசம்பர் மாதத்திற்கு முன்வரை, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.15 கொடுத்து வாங்கி வந்தனர். ஆனால் கடந்த ஓராண்டாக அதன் சந்தை விலையான ரூ.50 கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளனர். ஒரு குடும்பத்துக்கு 10 லிட்டர் மண்ணெண் ணெய் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இதன்படி 10 லிட்டர் மண்ணெண்ணெயை நியாயவிலைக் கடை யில் ரூ.500 கொடுத்துதான் வாங்க வேண்டும். இதே போன்று ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.50 கொடுத்து வாங்கியவர்கள் இனிமேல் சந்தை விலையான ரூ.35 அல்லது 40 கொடுத்துதான் வாங்க வேண்டும். இவைபோக அரிசி, கோதுமை ஆகியவற்றையும் சந்தை விலை கொடுத்தே வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இதைப்பற்றிய விளக்கத்தை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் மாதந் தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் படுகிறது. இந்திய உணவுக்கழக்ததின் சந்தை மதிப் பீட்டின்படி அரிசியின் விலை கிலோவுக்கு 22 ரூபாய். நேரடிப் பணமாற்றத்திட்டத்தின்படி, முதலில் 20 கிலோ அரிசியை ரூ.440 கொடுத்து ஒரு குடும்பம் வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு இத்தொகையை அக் குடும்பத் தiலைவரின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்தும். இத்தொகையை அவர் அரிசி வாங்காமல் டாஸ்மாக் கடைக்குச் சென்று குடிக்கவும் செய்வார்.

மேலும் இம்மானியத் தொகை மூன்று மாதங் களுக்கொருமுறைதான் உரியவரின் வங்கிக் கணக் கில் செலுத்தப்படும். காலப்போக்கில் இது ஆறு மாதங் கள், ஓராண்டு என்று கூட மாறிட வாய்ப்புண்டு. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், சர்க்கரை, சமையல் எரிவளி உருளை ஆகியவற்றுக்கான மானியத் தொகை உரிய வரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாகவே வைத்துக் கொள்வோம். ஒரு மாதத்திற்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரை முன்பணம் வைத்து - மூன்று மாதங்களுக்குக் கிட்டத்தட்ட ரூ.10,000 முன்பணம் வைத்து ஏழைகள் வாங்க முடியுமா?

அரசு அமைத்த அர்ஜூன் சென் குப்தா அறிக்கை யின்படி, இந்தியாவில் 77 விழுக்காடு மக்கள் ஒரு நாளைக்கு ரூ.20க்கும் குறைவாகவே செலவிடும் வறிய வாழ்நிலையில் உள்ளனர். இவர்கள் கடும் வட்டிக்குக் கடன் வாங்கித்தான் நியாய விலைக் கடைகளில் இப்பொருள்களை வாங்க முடியும். மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் கழித்து இவர் களுக்குக் கிடைக்கும் மானியத் தொகை இவர்கள் பெற்ற கடனுக்கான வட்டியைக் கட்டவே சரியாகி விடும். இவர்கள் இவ்வாறு தொடர்ந்து கடன் சூழலில் சிக்கி, நியாய விலைக் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவற்றை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அரை வயிற்றுக் கஞ்சிக்கும் வழியில்லாதவர்களாகி, பட்டினி கிடந்து நடைப்பிணமாவார்கள். பட்டினிச் சாவுகளும் தற்கொலைகளும் பெருகும்.

கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதற் காகப் பிரதமர் மன்மோகன் சிங் முகத்தில் உள்ள ஒரு மயிர் கூட அசையவில்லை. எனவே இன்னும் எத்தனை இலட்சம் மக்கள், நேரடியாகப் பணம் அளித்தல் எனும் திட்டத்தில் மாண்டாலும், மன்மோகன் அரசு தன் கொள்கையிலிருந்து மயிரளவும் பின்வாங்காது. மக் களின் உயிரைவிட நாட்டின் நிதிப்பற்றாக்குறையைப் போக்குவதே மன்மோகன் அரசின் குறிக்கோள்.

இந்திய அரசு, பல்வேறு நலத்திட்டங்களுக்காக அளிக்கும் மக்களுக்கான மானியத்தின் அளவு 3.25 இலட்சம் கோடி ரூபாய் ஆகும். இம்மானியத்தால் 85 விழுக்காட்டினராக உள்ள ஏழைகள், நடுத்தர வகுப் பினர் பயன்பெறுகின்றனர். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக அளவிலான பொருளாதார நெருக்கடியைக் காரணமாகக் காட்டி, மன்மோகன் சிங் அரசு ஆண்டுதோறும் 5 இலட்சம் கோடி உருபாயை இந்திய முதலாளிகளுக்கு வருமான வரிச் சலுகை, உற்பத்தி வரிச் சலுகை, ஏற்றுமதி-இறக்குமதி வரிச்சலுகை என்ற பெயர்களில் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மாநில அரசுகளும் இதே கொள்கையைத்தான் பின்பற்றுகின்றன. ஆக்டோபசு போல் தன் கொடிய கைகளால் எல்லாத் திசைகளிலி ருந்தும் மக்களைச் சுரண்டும் தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்ற அரசின் கொள்கைகளையும், அதன் அடிப்படையிலான திட்டங்களையும், செயல் பாடுகளையும் மக்கள் அணிதிரண்டு எதிர்த்து, அவற்றை வெகுமக்களுக்கு நலம் சேர்ப்பவையாக மாற்றிய மைக்காவிட்டால், விட்டில் பூச்சிகள் போல் மக்கள் மடிவதைத் தடுக்கவே முடியாது.

மீண்டும் கோட்காசிம் பகுதிக்குச் செல்வோம். நேரடிப் பணமாற்றத் திட்டத்தைக் கடந்த ஓராண்டாகச் செயல்படுத்தியதன் விளைவாக நியாயவிலைக் கடை களில் மண்ணெணெய் வாங்கும் அளவில் 79 விழுக் காடு குறைந்துள்ளது என்று காங்கிரசுக் கட்சி ஆட்சி செய்யும் இராஜஸ்தான் மாநில அரசு பெருமிதத்துடன் கூறுகிறது. கோட்காசிம் பகுதியில் நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவோர்க்கு முன்கூட்டியே மூன்று மாதங்களுக்கான மானியத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டது. அவ்வாறிருந்தும் மண்ணெண்ணெய் வாங்கு வது முக்கால் பங்கு குறைந்திருப்பது ஏன்?

இக்கட்டுரையில் முன்னரே குறிப்பிட்டுள்ளவாறு முழு விலையில் முன்பணம் வைத்து மண்ணெண் ணெய் வாங்க முடியாமையே முதன்மையான காரண மாகும். ஓராண்டுக் காலத்தில் மூன்று மாதங்களுக் கொரு தடவை என்று நான்கு தவணைகளில் மானியத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரு சிலர் இரண்டு தவணை தொகையையும் மேலும் சிலர் ஒரு தவணைத் தொகையையும் பெற்றுள்ளனர். பெரும்பாலோர் ஒரு தவணைத் தொகையைக் கூடப் பெறவில்லை என்று ‘தி இந்து’ ஏட்டின் கட்டுரையா ளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோட்காசிம் பகுதியிலுள்ள புர் கிராமத்தைச் சேர்ந்த பத்ரம் என்பவர், “குடும்ப அட்டை என் தந்தையின் பெயரில் இருக்கிறது. வங்கிக் கணக்கோ என் பெயரில் உள்ளது. அரசு அதிகாரிகள் இதைக் காட்டி எனக்கு மானியம் வழங்க மறுப்பதால், நான் மண்ணெண்ணெய் வாங்குவதையே நிறுத்திவிட்டேன்” என்று கூறியுள்ளார் (படம்). இதேபோன்று ஆதார் அட்டை உரியவர்களுக்கு வழங்கப்படாததாலும், ஆதார் அட்டை வழங்கப்பட்டிருந்தாலும் அடையாளங்கள் பொருந்தி வரவில்லை என்ற காரணத்தாலும் பலர் மானியத் தொகையைப் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மேலும் தொலைவில் உள்ள வங்கிக் கிளைகளில் தம் கணக்கில் பணம் செலுத்தப் பட்டுள்ளதா என்பதை அறிய மக்கள் பலமுறை அலைய வேண்டியுள்ளது. இவ்வாறாகப் பலவகையிலும் அலைக் கழிக்கப்பட்டு இன்னல்களுக்குள்ளானவர்களில் பலர் மண்ணெண்ணெயை நியாய விலைக் கடைகளில் வாங்குவதையே நிறுத்திவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் இருப்பதுபோல் வடஇந்திய மாநிலங் களில் நியாய விலைக் கடைகள் அரசின் பொது வழங்கல் துறையின்கீழ் இருப்பதில்லை. தனியார் ஆட்களே நியாய விலைக் கடைகளை நடத்துகின்ற னர். அதற்கென அவர்களுக்குக் கமிசன் தரப்படுகிறது. பொருள்களுக்குரிய முழுப் பணத்தையும் செலுத்தித் தான் இவர்கள் நியாயவிலைக் கடைகளை நடத்த முடியும். ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு ரூ.15 செலுத்தியவர்கள் இப்போது ரூ.50 செலுத்த வேண்டும். அதனால் பெருந்தொகையை முன்பணமாகச் செலுத்த முடியாததால் பலர் வாங்கும் அளவைக் குறைத்துக் கொண்டனர். அல்லது விற்பனைக் கடைகளையே மூடிவிட்டனர். ஆனால் அதிகாரிகள் கெடுபிடி செய்து, இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுவதாகக் காட்டுவதற் காக, தனியார் முகவர்களைத் தொடர்ந்து நியாயவிலைக் கடைகளை நடத்துமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.

இத்தகைய இடர்ப்பாடுகளும் இயலாமைகளும் இருக்கின்றன என்பது அரசுக்கும் தெரியும். அதனால் தான் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கும் போது ஏற்படும் நிர்வாகப் பிரச்சனைகளால்தான் கோட்காசிம் பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியம் முறையாகக் கிடைக்காமல் போயிருக்கிறது. வங்கி களின் முகவர்கள் கிராமப்புற மக்களின் வீட்டுவாசலுக்கே வந்து மானியத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சில்லறைப் பிரச்சனைகளைக் காட்டி நேரடிப் பணமாற்றத் திட்டத்தை எதிர்க்கக் கூடாது”என்று கூறியுள்ளார்.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, கிராமப் புறங்களில் 40 விழுக்காடு வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. இக்குடும்பங்கள் இரவில் விளக்கு எரிக்கவும், அந்த ஒளியில் புழங்கவும், பிள்ளைகள் படிக்கவும் மண்ணெண்ணெய் இன்றியமையாத தேவையாக உள்ளது. இக்குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் வாங்க முடியாத நிலை ஏற்பட்டால், இவர்களின் வீடுகள் மட்டுமின்றி, பிள்ளைகளின் படிப்பும், எதிர்காலமும் இருண்டுவிடும். அரசியல் கண்ணாமூச்சு விளையாட்டுக்கு இவர்களின் வாழ்க்கை பலியாகிவிடக்கூடாது.

மானியத் தொகையை நேரடியாகப் பணமாக வழங்கும் இத்திட்டம், ஆதார் அடையாள அட்டையின் எண் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும். ஆதார் அட்டைத் திட்டத்திற்கு இதுநாள் வரை நாடாளுமன்றத் தின் ஒப்புதலைப் பெறவில்லை. நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இந்த ஆதார் அட்டை வழங்கும் முறையை ஏற்க முடியாது என்று கூறி விட்டது. ஆயினும் நடுவண் அரசு நிர்வாக ஆணை மூலம் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. வளர்ச்சி பெற்ற நாடான இங்கிலாந்து நாட்டில் இத் திட்டம் தொடங்கப்பட்டு, நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகக் கைவிடப்பட்டது. ஆனால் எல்லா வகை லும் சிக்கலான - வெகுமக்களுக்கு எதிரான இத்திட் டத்தை விடாப்பிடியாக நிறைவேற்றியே தீருவோம் என்று காங்கிரசுக் கட்சியும், நடுவண் அரசும் கூறு கின்றன.

நூறு நாள் வேலைத் திட்டத்துடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ள இடங்களில், மக்கள் பல அல்லல் களுக்கு ஆளாகியும் பணத்தைப் பெற முடியாத நிலை இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும் பான்மை மக்கள் உடல் உழைப்பாளர்களாக உள்ளனர். அதனால் அவர்களது கைவிரல் ரேகைகள் மாறிக் கொண்டே இருக்கும். எனவே ஆதார் திட்டத்திற்காக ஒரு முறை பதிவு செய்யப்படும் கைரேகைகளை நிலை யான அடையாளமாகக் கொள்ள முடியாது. எனவே ஆதார் அடையாளத் திட்டம் அடிப்படையிலேயே பிழையானது என்று சமூக ஆய்வாளர்கள் உரத்துக் கூறி வருகின்றனர்.

பிரேசில் நாட்டில் நேரடியாகப் பணம் தரும் திட்டம் வறுமையை ஒழிப்பதில் பெரும் பங்காற்றியிருப்பதாக உலக வங்கி கூறியுள்ளதே என்று ஆட்சியாளர்கள் எதிர்வினாத் தொடுக்கின்றனர். பிரேசில் நாட்டில் ஊரகப் பகுதிகளில் 15 விழுக்காடு மக்கள் மட்டுமே வாழ்கின் றனர். இந்தியாவிலோ 70 விழுக்காடு மக்கள் ஊரகப் பகுதிகளில் வாழ்கின்றனர். ஒரு நாளைக்கு 1.25 டாலருக்கும் குறைவான வருவாய் உள்ளவர்கள் பிரேசில் நாட்டில் 6 விழுக்காட்டினர் மட்டுமே! இந்தியாவிலே 32.6 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். 5 அகவைக்கு உட்பட்ட குழந்தை களில் 47 விழுக்காட்டு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுடன் உள்ளனர். மேலும் பிரேசில் நாட்டில் நேரடிப் பணமாற்றத்திட்டம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகச் (Conditional Cash Transfer) செயல் படுத்தப்படுகிறது. மக்கள் நலத் திட்டங்களுக்கு அரசு அளிக்கும் மானியத்திற்கு மாற்றீடாக இது பிரேசில் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக அரசின் நலத்திட்ட உதவிகளை மக்கள் செவ்வனே பயன்படுத்திக் கொள்ள ஒரு ஊக்குவிப்பாகப் பணம் தரப்படுகிறது. ஒரு குடும்பத்தில் படிக்கும் குழந்தைக்கு 85 விழுக்காடு பள்ளியில் வருகைப் பதிவு இருக்க வேண்டும். கருவுற்ற காலத்திலும் மகப்பேற்றுக்குப் பின்னும் தாயும் சேயும் இத்தனை தடவை ஆய்வுக் குச் சென்றிருக்க வேண்டும். இதுபோன்ற நிபந்தனை களில் ஒன்று நிறைவேற்றப்படாவிட்டாலும் நேரடிப் பண உதவி கிடைக்காது.

பிரேசில் நாட்டின் மொத்த வருவாயில் (GDP) 4 விழுக்காடு மருத்துவத்திற்காகச் செலவிடப்படுகிறது. மக்களின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்கிறது. இந்தியாவிலே நாட்டின் மொத்த வருவாயில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக மருத்துவத்துக்கு நிதி ஒதுக்கப்படும் கேடான நிலை இருக்கிறது. தென் அமெரிக்காவிலும் மேலும் பல நாடுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்வி, நலவாழ்வு, குடிநீர் முதலான அடிப்படைக் கட்டமைப்புகள் சிறப்பாகச் செயல்படும் நாடுகளில் மட்டுமே இத்திட்டம் செவ்வனே செயல்படுகிறது என்று உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவிலோ இந்த அடிப்படைக் கட்டமைப்புகள் மிகவும் போதாதவை களாக இருக்கும் நிலையிலும், மக்கள் நலத் திட்டங் களின் மானியத்திற்கு மாற்றீடாக இத்திட்டத்தை நடை முறைப்படுத்த ஆட்சியாளர்கள் முனைத்திருப்பது மக்களை வஞ்சிப்பதேயாகும்.

இவ்வளவு பெரிய திட்டத்தை நிறைவேற்றுவதற் கான நிருவாகக் கட்டமைப்பு இல்லை. வங்கிகளில் இப்பொழுதே சில மணிநேரம் காத்திருக்க வேண்டி யுள்ளது. பல கோடி மக்கள் வங்கிகளுக்குச் செல்ல முடியாது என்பது உண்மைதான் என்று அரசும் ஏற்றுக் கொள்கிறது. இதற்கான மாற்றாக வங்கிகள் தரகர்களை (Banking Correspondents) நியமிக்குமாம். அவர்கள் வீடு தேடி வந்து ஆதார் அடையாளங்களைச் சரிபார்த்து நேரடியாகப் பணம் வழங்குவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியரான அஞ்சல்காரரை நம்ப முடியாதாம். ஆனால் தனியார் வங்கித் தரகரை நம்ப வேண்டுமாம். இது ஊழலை ஒழித்துவிடுமாம். மக்கள் காதில் பூ சுற்றுகிறது அரசு.

இத்திட்டத்தில் முதற்கட்டத்தில் முதியோர் ஓய்வூதியம், கல்வி உதவித் தொகை போன்றவை வழங்கப்படும். பிறகு மண்ணெண்ணெய், எரிவளி உருளை ஆகிய வற்றைச் சந்தை விலை (முழு விலை) கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இறுதியாக அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகியவற்றையும் முழு விலை கொடுத்து வாங்க வேண்டும். சில காலத்துக்கு மானி யம் தரப்படும். சந்தை விலை எவ்வளவு உயர்ந் தாலும் மானியத்தின் அளவு உயராது. பிறகு இந்த மானிய அளவும் குறைக்கப்படும். அதன்பின் சில இனங் களுக்கு மானியம் நீக்கப்படும். இறுதியாக மானியம் முழுவதுமே விலக்கிக் கொள்ளப்படும். அப்போது மக்கள் இதை எதிர்க்கமாட்டார்கள். ஏனென்றால், மக்கள் சந்தை விலையைக் கொடுத்து வாங்கும் உளவியலைப் பெற்று விட்டிருப்பார்கள் என்று அரசு நம்புகிறது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், வெகு மக்கள் அரைவயிறு உண்பதற்கு அடித்தளமாக உள்ள நியாய விலைக் கடை - பொது வழங்கல் முறையும், அரசு கொள்முதல் செய்யும் ஏற்பாடும் - இந்திய உணவுக்கழகமும் ஒழியும். அரசு நெல், கோதுமை ஆகியவற்றைக் கொள்முதல் செய்யாத நிலையில், அவற்றின் விலையைத் தனியார் வணிகர்களே தீர்மானிப் பார்கள். பதுக்கலும் கள்ளச்சந்தையும் பெருகும். உழவர் களின் வாழ்வும், வேளாண் தொழிலும் சீரழியும். இந்நிலையை நாம் அனுமதிக்கப் போகிறோமா? அல்லது இந்த ஆட்சி முறையைத் தூக்கி எறியப் போகிறோமா?

Pin It