இந்தியா ஒற்றை ஆட்சியாய் இருக்க வேண்டுமா?

கன்னியாகுமரி முதல் காசுமீர் வரை உள்ள நிலப்பரப்பு ‘இந்தியா’ என்னும் ஓர் ஆட்சிப்பரப்பாக ஆக்கப்பட்டது. கி.பி. 1801இல் தான். கி.மு. 320 முதல் இப்பெரிய நிலப்பரப்பில் எண்ணற்ற நகர அரகள், சிற்றரசுகள், பேரரசுகள் இருந்தன. அவற்றைப் பற்றிய தோராயமான வரலாறுகள் உள்ளன.

அவற்றுள் அசோகர் ஆட்சிக் காலம் (கி.மு. 273 - 232), அக்பர் ஆட்சிக் (கி.பி. 1556 - 1605) காலப் பேரரசுகளே பெரியவை. கடைசிப் பாண்டியர் அரசு 1310 அழிந்தது. அக் காலங்களில் கூடத் தமிழ்நாடு அவர்களின் ஆட்சிகளுக்கு உட்பட்டிருக்கவில்லை. அதுவரையில் சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிகளுக்கே தமிழகம் உட்பட்டிருந்தது.

இந்தியாவில் 56 தேசங்கள் இருந்தன என்பதற்கான வரலாறு உண்டு. அக்பர் ஆட்சிக்காலத்தில்தான் பிரிட்டிஷ் இளைஞர்கள் இந்தியாவுக்கு வந்தனர். கி.பி. 1600இல் கிழக்கிந்தியக் குழுமம் என்கிற வணிக நிறுவனத்தைப் பிரிட்டிஷார் உருவாக்கினர். 1801இல்தான் ஒரு பெரிய நிலப்பரப்பை அவர்கள் இங்கே பிடித்தனர். அப்பெரிய பரப்பில் மூன்றில் இரண்டுபங்கைத் தம் நேரடி ஆட்சியிலும், மூன்றில் ஒரு பங்கைத் தமக்குக் கட்டுப்பட்ட 580 சிற்றரசுகளின் ஆட்சியிலும் வைத்துக்கொண்டு 1801இல், இந்தியா என்னும் ஒற்றை ஆட்சிப் பரப்பை உண்டாக்கினர். 1801வரையில் ‘இந்தியா’ என ஒரு நாடு இல்லை.

இந்தியா என்கிற நிலப்பரப்பு 1858இல் சிலோன் என்கிற இலங்கை, ஆப்கனிஸ்தானம், பர்மா, கிழக்கு வங்கம், சிந்து, வடமேற்கு எல்லை மாகாணம் (பாகிஸ்தான்) என்கிற பகுதிகளையும் கொண்டிருந்தது. 1919க்குள் சிலோன், ஆப்கனிஸ்தான் இவை பிரிந்தன. 1935இல் பர்மா (மியான்மர்) பிரிந்தது. மற்ற பகுதிகள் 1947இல் பாகிஸ்தான் என்கிற ஒரே நாடாகப் பிரிந்தன. பல பகுதிகள் அப்படிப் பிரிந்த பிறகும் - 1947க்குப்பிறகு இருந்த மிச்சப் பகுதியை மட்டும் “இந்தியா” என்றே அழைத்தனர். கோவா, டையூ, டாமன், புதுச்சேரி, மாகி, காரைக்கால் இவை சேர்க்கப்பட்ட பிறகும் “இந்தியா” என்று அழைக்கப்படுகிறது.

இதிலிருந்து நாம் உணருவது என்ன? வெள்ளைக்காரர்கள் தங்களுடைய ஆட்சி வசதிக்காகவும், சுரண்டுவதற்கான பெரிய சந்தை வசதிக்காகவும், தொடர்வண்டிப் போக்குவரத்து வசதி, அஞ்சல் வசதி, படை வசதி இவற்றைப் பெருக்கிக்கொண்டு ஒரே ஆட்சிக்கு உட்பட்ட பரப்பாக இந்தியா என்பதை வைத்துக்கொண்டனர். அதை நியாயப்படுத்தத் திட்டமிட்டனர்.

அமெரிக்கா பல மாநிலங்களைக்கொண்ட ஒரு கூட்டாட்சியாக 1920களுக்குள் உருவானது. மிகப்பெரிய முன்னேற்றம் உள்ள நாடாக வளர்ந்துள்ளது. இந்தியாவை ஒரு கூட்டாட்சியாக ஆங்கிலேயர்கள் நடத்துகிறார்கள் என்று உலகத்தாரை நம்பச் செய்ய ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். அதற்காக சர். பிரடரிக் ஒய்ட் என்பவரை வைத்து, “இந்தியா ஒரு கூட்டாட்சி“ என்னும் பெயரில் ஒரு நூலை 1925இல் எழுதச் செய்து உலகெங்கும் வெள்ளையர் பரப்பினர்.

இந்திய அரசு ஒரு மிகப்பெரிய சுரண்டல் அரசாக விளங்கியது.

அப்போது இருந்த மாநிலங்கள் அவையில் 1926 பிப்பிரவரியில் சர். சி. சங்கரன் நாயர், பி.சி. தேசிகாச்சாரி இருவரும் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தனர்.

“சென்னை மாகாணத்தில் உள்ள தமிழ் பேசப்படும் மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து, அப் பகுதியைத் தன்னுரிமைபெற்ற தனி மாகாணமாக அமைக்க வேண்டுமென்பதே” அத்தீர்மானம். அது 15.3.1926 அன்று தோற்கடிக்கப்பட்டது.

ஆயினும் சர். சி. சங்கரன் நாயர் 1931 திசம்பரில் இன்னொரு வடிவிலான தீர்மானத்தை மாநிலங்கள் அவையில் முன்மொழிந்தார்.

“இந்தியாவிலுள்ள எல்லா மாகாணங்களுக்கும் தன்னுரிமை வழங்கவேண்டும்; அல்லது தன்னுரிமை வழங்கப்பட ஏற்ற மாகாணங்கள் எனத் தாங்கள் கருதும் மாகாணங்களுக்கு அவ்வுரிமைகளை வழங்க வேண்டும்” என்பதே அத்தீர்மானம்.

ஆனால், அத்தீர்மானத்தின்பேரில் வாக்கெடுக்கும்போது 16 பேர் எதிர்த்து வாக்களித்தனர். சர். சங்கரன் நாயர், சையது அப்துல் ஹபீஸ், கான் பகதூர் சவுத்திரி முகம்மது தின், நாராயணசாமி செட்டி என்கிற 4 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர். ஏன்?

‘தேசியத் தன்னுரிமை’ என்பது 1920களில் அய்ரோப்பாவில் அந்தந்த மொழிவழித் தேசத்து முதலாளிகளால் முன்வைக்கப்பட்டுத் தூக்கிப்பிடிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் அந்தத் தன்மையில் அது நடைபெறவில்லை. ‘சூயவiடிn ளுவயவந’ “ மாநில அரசு” “தன்னாட்சிபெற்ற அரசு” பிறநாட்டு அரசுகளின் சுரண்டலிலிருந்து தத்தம் நாட்டை விடுவிக்க வேண்டுமென்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. “சுரண்டலற்ற தன்னாட்சி” என்பது அதன் நோக்கமாக இல்லை.

இச்சூழலில்தான் இந்தியச் சமுதாயம்பற்றிப் பொறிஞர் பா.வே. மாணிக்க நாய்க்கர் தாம் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் ஏற்கெனவே தந்திருந்த விளக்கத்தை நெஞ்சில் தேக்கிக்கொண்ட ஈ.வெ.இரா., 1930இல் சேலத்தில் முதன்முதலாக ஒரு கருத்தை வெளியிட்டார்.

“இந்தியா ஒரு நேஷனா? அது பல நேஷன்களைக்கொண்ட ஒரு நேஷன். அது ஒரு சாதிகள் காட்சிச்சாலை” எனக் குறிப்பிட்டார்.

ஆனால், அதற்கு முன்னரே 1928இலேயே சென்னையில் தென்னாட்டுச் சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய அவர் தாம் விரும்புகிற மாதிரியான மதச்சார்பற்ற அரசு அமைய, சோவியத்து நாட்டைப்போன்ற ஆட்சி அமைப்பு-தொழிலாளர் சர்வாதிகார ஆட்சி அமைப்பு வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

அவருடைய தலைமையை ஏற்றுக்கொண்ட நீதிக்கட்சி 1937-1939இல் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட கட்டாய இந்திப் பாடத்திணிப்பை எதிர்த்துப் போராடியது. அப்போராட்டம் பற்றிப் பரப்புரை செய்த நடைப்பயணப்படை திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்னைக் கடற்கரையை 11.9.1938 அன்று அடைந்தது. அப்படையை வரவேற்றபோது “தமிழ்நாடு தமிழருக்கே!” என்ற முழக்கத்தை அவர் முதன்முதலாக எழுப்பினார்.

அக்கோரிக்கையை அன்றையத் தமிழ்நாட்டு முதலாளிகளான சர். எம்.ஏ. முத்தய்யா, மதுரை கருமுத்து. தியாகராசச் செட்டியார், கோவை ஆர்.கே. சண்முகஞ்செட்டியார், நெடும்பலம் ஆர், சாமியப்ப முதலியார் போன்றோர் ஆதரித்தனர்.

“தமிழ்நாடு தமிழருக்கே!” என்பதன் உள்ளடக்கத்தை விளக்கி 21.11.1939, 22.11.1939, 23.11.1939, 24.11.1939, 25.11. 1939 “விடுதலை” நாளிதழில் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

ஈ.வெ.இரா. தலைமையில் இயங்கிய நீதிக்கட்சியில் தெலுங்கர், கேரளர், ஒரியர் இடம் பெற்றிருந்தனர்.

சென்னை செட்டிநாட்டு அரண்மனைத் தோட்டத்தில் 1939இல் நடைபெற்ற அக்கட்சியின் ஓர் ஆய்வுக் கூட்டத்தில், “தமிழ்நாடு தமிழருக்கே என்றால் எங்கள் நிலைமை என்ன?” என்று மற்ற மொழிக்காரர்கள் வினா எழுப்பினர். அதனை வைத்துத்தான், 17.12.1939 அன்று “திராவிடநாடு திராவிடருக்கே” என்ற முழக்கத்தை ஈ.வெ.இரா. வெளிப்படுத்தினார்.

1940 ஆகஸ்டில் திருவாரூரில் நீதிக்கட்சி மாநாடு நடந்தது. அம் மாநாட்டுக்கு ஆந்திராவிலிருந்து தெலுங்கர்கள் பலர் வந்திருந்தனர். அவர்களுக்கு நாட்டுப் பிரிவினைபற்றி விளக்கும் தன்மையில், அரைமணி நேரம் ஈ.வெ.இரா. தெலுங்கில் உரையாற்றினார். சென்னை மாகாணமே “திராவிட நாடு”. அதன் படத்தை அறிஞர் சி.என். அண்ணாதுரை அம்மாநாட்டில் திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து ‘திராவிடநாடு’ என்று கருதப்பட்ட பிற மொழிப்பகுதிகளில் “திராவிடநாடு ஏன்?” என்பதை விளக்கி நீதிக்கட்சித் தலைவர்கள் பரப்புரையை மேற்கொண்டதற்கான சான்று இல்லை. மேலும், “தனிச் சுதந்தர திராவிடநாடு” தான் தம் கோரிக்கையா என்பதுபற்றி 1942வரை தெளிவான விளக்கமில்லை.

வெள்ளையர்கள் இந்தியர்களுக்கு அதிகாரத்தை மாற்றித் தருவதுபற்றிய கருத்தை அறிய, பிரிட்டிஷ் அமைச்சரவைத் தூதுக்குழு ஒன்றை, சர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ் தலைமையில் 1942இல் இந்தியாவுக்கு அனுப்பினர். அக்குழுவினரிடம் நீதிக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஈ.வெ.இராமசாமி, ஊ.பு.அ. சௌந்தர பாண்டியன், சர்.எம்.ஏ. முத்தய்யா செட்டியார், நெடும்பலம் ஆர். சாமியப்பா முதலியார் ஆகிய நால்வர் ஒரு விண்ணப்பத்தை 30.3.1942 அன்று நேரில் அளித்தனர்.

அவ்விண்ணப்பத்தில் காணப்பட்டது என்ன?

“சென்னை மாகாணத்தில் பார்ப்பனர் அல்லாதாரே அதிகம்பேர். ஆனால், மிகச் சிறுபான்மையான பார்ப்பனரே எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதிலிருந்து எங்களை மீட்க வேண்டும். எனவே, சென்னை மாகாணத்தைத் தில்லி ஆதிக்கத்திலிருந்து பிரித்து, நேரடியாகப் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்பதே நீதிக்கட்சியின் கோரிக்கை என அதில் காணப்பட்டது. அக் கோரிக்கையை ஏற்க முடியாது என்று 14.6.1945 அன்று கிரிப்ஸ் தம் உரையில் அறிவித்தார். என்ன காரணம் சொன்னார்?

1. நீதிக்கட்சியின் சார்பில் கோரிக்கையை முன்வைத்த குழுவினர், திராவிட நாட்டின் மொத்தப் பகுதியின் பிரதிநிதிகள் அல்லர்.

2. பிரிட்டிசார் 1935ஆம் ஆண்டைய சட்டப்படி 1. சாதி இந்துக்கள், 2. இசுலாமியர்கள், 3. சீக்கியர்கள்,

4. பட்டியல் வகுப்பினர், 5. அய்ரோப்பியர் என்கிற பிரிவுகளை மட்டுமே ஏற்கமுடியும் என்று கூறினார்.

அதன் விளைவாகத்தான் “பிரிட்டிஷார் உள்ளிட்ட அந்நியரிடமிருந்து தனிச் சுதந்தர நாடாக சென்னை மாகாணம் (திராவிடநாடு) பிரிக்கப்பட வேண்டும்” என, 30.9.1945இல் திருச்சியில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 18ஆவது மாகாண மாநாட்டில் திராவிடர் கழக (2ஆவது) மாநாட்டில் முதன்முதலாகத் தெளிவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1945 வரையில் பெரியார் ஈ.வெ.இரா.வின் நாட்டுப் பிரிவினைக்கோரிக்கை தெளிவற்றதாகவே இருந்தது என்பது இப்போது புரியும். 1945க்குப் பின்னரும் தமிழ்நாட்டு எல்லைக்கு வெளியே, மற்ற திராவிட மொழிப்பகுதிகளில் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கைபற்றி எப்போதும் பரப்புரை செய்யப்படவில்லை; ஆதரவு திரட்டப்படவில்லை.

இந்தியாவில் செல்வாக்குப்பெற்ற கட்சிகளாக இருந்த இந்திய தேசியக் காங்கிரசு, இந்தியப் பொதுவுடைமைக்கட்சி முதலானவை இந்தியாவை ஒரு போதும் உடைக்கக் கூடாது என்பதில் உறுதியாக நின்றன.

1945க்குப் பிறகுகூட, திராவிடர் கழகம் தமிழ் தவிர்த்த வேறு எந்த மொழியிலும் நாட்டுப் பிரிவினை பற்றிய அறிக்கைகளையோ, நூல்களையோ வெளியிடவில்லை. ஆந்திரம், கேரளம், கருநாடகம், பஞ்சாப், புதுதில்லி முதலான மாநிலங்களுக்குச் சென்று அவரவர் தாய் மொழியிலும், ஆங்கிலத்திலும் நாட்டுப் பிரிவினைக் கருத்துகளை விதைக்கவே இல்லை. இதுபற்றிய புரிதல் தமிழர்களுக்கு அன்றுமில்லை; இன்றுமில்லை.

ஆங்கிலத்தில் உரையாற்றிடத் திறமை பெற்றிருந்த அறிஞர் சி.என். அண்ணாதுரை, விடுதலை சா.குருசாமி, திருச்சி தி.பொ. வேதாசலம், சண்டே அப்சர்வர் பி. பாலசுப்பிரமணியம், டார்ப்பிடோ ஏ.பி. சனார்த்தனம் போன்றோரைப் பிற திராவிட மொழிகள் பேசப்படும் பகுதிகளுக்கும் மற்ற வெளி மாநிலங்களுக்கும் போகச் செய்து நாட்டுப் பிரிவினைக் கோரிக்கைக்குப் பெருமளவில் ஆதரவு திரட்டப்படவில்லை. இவர்களுள் எவரும் இதுபற்றி எந்த முயற்சியையும் தாமாகவும் மேற்கொள்ளவில்லை.

1944முதல் அறிஞர் சி.என். அண்ணாதுரை மறைமுகமாகத் தம் கருத்து வேறுபாடுகளை “திராவிடநாடு” இதழில் கட்டுரைகளாக வெளிப்படுத்தினார். ‘ஆகஸ்டு 15 சுதந்தர நாள்தான்’ என விளக்கி 1947 ஆகஸ்டில் வெளிப்படையாகத் தம் கருத்தை எழுதினார். அவருடைய கருத்துக்கு ஆதரவு இல்லை. ஆயினும் 1949 வரையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளராக அவர் இருந்தார்.

1949இல் “புதிய திராவிடத்தின் அரசியல் அமைப்பு” என்ற தலைப்பிலான ஒரு கொள்கை விளக்கக் கட்டுரை “குடிஅரசு” கிழமை இதழில் 21.5.1949, 28.5.1949, 4.6. 1949 ஆகிய நாள்களில் வெளியிடப்பட்டது.

“வருங்காலப் புதிய திராவிடத்தில் - விடுதலை பெற்ற நாட்டில் கூடும் அரசியல் நிருணய சபைதான் திராவிடர்களின் தலையெழுத்தை நிருணயிப்பதற்கு உரிமை உடையதாகும்.... இந்த அரசியல் அமைப்பு மன்றத்தின்மூலம் சென்னை மாகாணத்திலுள்ள 4 வட்டாரங்களும் தங்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் திராவிடக் குடியரசின் அரசியலை அமைத்துக்கொள்ளலாம். ஆகவே, ஆந்திர, கேரள, கருநாடகத் தோழர்கள் திராவிடநாடு கிளர்ச்சியை ஆதரித்து, விடுதலைப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டியது இன்றியமையாதது”. (“குடிஅரசு” 21.5.1949, பக்கம் 16) என ஒரு விருப்பத்தை அது அறிவித்தது.

மேலும், இக்குறிக்கோள்பற்றி, “புதிய திராவிடம் - தமிழ்நாடு, ஆந்திரநாடு, கேரளநாடு, கருநாடக நாடு ஆகிய நான்கு வட்டாரங்களின் கூட்டாட்சி நாடாக இருக்கும். அமெரிக்காவைப் போல் இங்கு நான்கு நாடுகளும் தங்களுக்கிடையில் ஒரு சமஷ்டியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். அந்த சமஷ்டி ‘அய்க்கிய திராவிடக் குடி அரசுகள் சர்க்கார்’ என்பதைப் போன்ற பெயருடன் விளங்கும்.... இம் மாதிரி ஒரு சமஷ்டி அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் தனித்தனியாகவே இருந்தால் என்ன என்று சிலருக்குத் தோன்றும். அப்படியிருந்தால் நாட்டின் பொது முன்னேற்றமும் பாதுகாப்பும் பாதிக்கப்படும் என்றுதான் கூற முடியும்.” (“குடி அரசு”, 28-5-1949, பக்கம் 4)

இதே கட்டுரையில், திராவிட நாடு கோரிக்கையைப் பற்றித் தலைவர் பெரியார் “தி மெயில்” ஏட்டின் செய்தியாளருக்கு, ஏற்கெனவே அளித்த நேர்காணலில் கூறிய கருத்து பற்றிக் குறிப்பிட்டுவிட்டு,

“தமிழ், ஆந்திரம், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு பிராந்தியங்களையும் சில விஷயங்களில் தனியாக நிர்வகிக்கும்படி விட்டுவிடலாம். மீதமுள்ள சில விஷயங்களைக் கவனித்து மேற்பார்வையிட, நான்கு அங்கங்களும் அடங்கிய ஒரு சம்மேளனம் அமைக்கலாம்” என்று, ஆந்திரப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சி.ஆர். ரெட்டி அவர்கள் சமீபத்தில் தம்மைப் பேட்டி கண்ட ஒரு நிருபரின் கேள்விக்கு விடையளித்துள்ளார்” என்றும் மேலே கண்ட கட்டுரையில் (பக்கம் 14) கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுரையாளரின் பெயர் “புத்ததாசன்” என உள்ளது. மேற்கொண்டு அவரைப்பற்றிய எந்த விவரமும் இல்லை. இது பெரியாரால் படிக்கப்பட்டே வெளியிடப்பட்டுள்ளது என்பது உறுதி. ஏனெனில், அவரைப் பற்றிய குறிப்பு இதில் வருகிறது. நிற்க.

1949க்குப் பிறகு நாட்டுப் பிரிவினை பற்றிப் பேச்சளவில் மட்டுமே இருந்தது.

1938-39 இந்தி எதிர்ப்பு; 1948 குடந்தை இந்தி எதிர்ப்புப் போராட்டம்; 1952, 1953, 1954ஆம் ஆண்டுகளில் தொடர்வண்டி நிலையங்களில் பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி அழிப்பு; 1955 இல் நேருவின் முயற்சியால் தட்சணப் பிரதேசம் அமைக்கப்பட இருந்ததை எதிர்த்தது; 1955இல் முயற்சிக்கப்பட்ட தேசியக் கொடியை எரிக்கும் போராட்டம்; 1957 நவம்பர் 26இல் வருண சாதிப் பிரிவுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளைத் தனியே அச்சுப் போட்டு எரித்த பெரிய போராட்டம்; முதலான போராட்டங்களே நாட்டுப் பிரிவினைக்கான வலிமையான போராட்டங்கள் ஆகும்.

இடையில் 1-11-1956இல், இந்தியா முழுவதிலும் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது தொடங்கி, மிகவும் தெளிவாக,“தனிச் சுதந்தரத் திராவிட நாடு வேண்டாம்” - “தனிச் சுதந்தரத் தமிழ்நாடு வேண்டும்” என்று பெரியார் கோரினார்.

தமிழ்நாடு பிரிவினையை வலியுறுத்தும் தன்மையில், தமிழ்நாடு நீக்கப்பட்ட இந்திய தேச வரைபடத்தை எரிக்கும் கிளர்ச்சியை 1960இல் நடத்தினார். 1957 - 1959இல் திராவிடர் கழகத்தினரிடையே இருந்த எழுச்சி 1960இல் இல்லை.

பெரியார் மேற்கொண்ட இவ்வளவு பெரிய முயற்சிகளையும் இந்தியத் தேசியவாதிகளும், பொதுவுடைமையாளர்களும், சமதர்மவாதிகளும் மிகவும் துச்சமாகவும் தேச நலனுக்கு எதிரானதாகவும் கருதினர். மதவாதிகள் மூர்க்கமாக எதிர்த்தனர்.

மேற்கண்ட எல்லா அமைப்புகளின் தலைவர்களாக - சித்தாந்திகளாகப் பெரிதும் பார்ப்பனர்களே அக்காலத்தில் இருந்தனர்; தேசியக் காங்கிரசிலும், மதவாத அமைப்புகளிலும் பார்ப்பனர், பனியா, மார்வாரிகளும், பெரு நில உடைமையாளர்களும், பார்ப்பனியத்தை வாழ்க்கை முறையாகக் கொண்ட சாதி இந்துக்களுமே ஆதிக்கம் செலுத்தினர்.

நாட்டுப் பிரிவினை அரசியல் பற்றியது என்பது போலவே, மதச் சார்பற்ற கொள்கை - வருணப் பாதுகாப்பு ஒழிப்பு என்பவையும் முற்றிலும் அரசியலே. இவற்றை நிறைவேற்றுவதற்கான அரசமைப்புச் சட்டமும், அச்சட்டப்படி நடக்கும் அரசுமே நம்மால் நிலைநாட்டப்பட வேண்டியவை ஆகும்.

இன்று நம்மைக்கட்டிப் போட்டிருக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு எதிரானது என்பதுடன், நம் குறிக்கோளுக்கு முற்றிலும் நேர் எதிரானது. ஆனால், 1952 முதல் 2009 வரை இந்திய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுள் பலருக்கு அரசமைப்புச் சட்டம் என்றால் என்ன என்றே தெரியாது. இவர்களுக்கு நம்மைப் போன்றவர்கள்தான் இதைக் கற்பிக்க வேண்டும்; இது முடியும். அந்தந்தக் கட்சிகளும் இதைக் கற்பிக்க வேண்டும்.

வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மற்றும் படித்தவர்கள்; மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள், நூலாசிரியர்கள், இதழ் வெளியீட்டாளர்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் நடத்துவோர், பொது மக்கள் இவர்களுள் சிலருக்கு மட்டுமே இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றித் தெரியும். இன்றுள்ள அரசமைப்பை மாற்றியே தீர வேண்டும் - ஏன் என்பது பற்றிய புரிதலும் ஈடுபாடும் அக்கறையும் இவர்களுள் சிலருக்கு மட்டுமே உண்டு. இவர்களில் 2 விழுக்காடு பேர்களுக்கேனும் இவற்றை நாம் புரிய வைக்க வேண்டும்.

அப்படியானால், பெரியார் தொண்டர்களின் முன்னுள்ள பணி இமயமலை அளவு பெரியது. எப்படி? எதனால்?

விடுதலைபெற்ற இந்தியாவுக்கு ஒரு புதிய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட வேண்டும். அது எப்படி, யாரால் எழுதப்படும் என 1922இல் காந்தியார் கூறினார்.

இந்திய தேசியக் காங்கிரசு 1934லும், 1935லும் இதுபற்றி விரிவான தீர்மானம் நிறைவேற்றியது.

“இந்திய தேசியக் காங்கிரசு இந்தியாவுக்கு விடுதலை பெறவும், இங்கே ஒரு சனநாயக அரசை நிறுவவும் பாடுபடுகிறது. விடுதலை பெற்ற இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை தந்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசமைப்பு அவையைக்கொண்டு, வெளியார் தலையீடின்றி, நிறைவேற்றுவோம்”என்பதே அத் தீர்மானம். காந்தியாரும் அப்படியே கூறியிருந்தார்.

வெள்ளையர்கள் 15.8.1947இல் வெளியேறினர். ஆனால், விடுதலை பெற்ற இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கான அரசமைப்பு அவைக்கூட்டம் 9.12.1946 அன்றே தொடங்கப்பட்டது. யார்? யாரை வைத்து அந்த அவை தொடங்கப்பட்டது?

1. இந்தியச் சட்ட மன்றத்திற்கு 1946 சூலை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

2. மாகாணச் சட்ட மன்றங்களுக்கு 1946இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய அவையே அரசமைப்புச் சட்டத்தை எழுதத் தொடங்கியது.

1946இல் வயது வந்தோருக்கு வாக்குரிமை தரப்படவில்லை. எனவே, அரசமைப்பு அவை பற்றிக் காந்தியாரும், காங்கிரசும்சொன்ன உறுதி மொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. இதுபற்றி யாருக்கும் வெட்கமில்லை; கவலையுமில்லை. ஆனால், பெரியார் ஈ.வெ.இரா. மட்டும் 1946 முதலே இந்த ஏற்பாட்டை எதிர்த்தார். இதைவிட மோசடியாக இன்னொரு ஏற்பாடு நேருவினால் செய்யப்பட்டது.

உலக நாடுகள் பலவற்றுக்குச் சென்று இந்தியாவுக்கு ஓர் அரசமைப்பை எழுதுவதற்கான போதிய தரவுகளைத் திரட்டி வரும்படி பெனிகல் நரசிங்கராவ் (க்ஷ.சூ. சுயர) என்கிற ஆந்திரத்துப் பார்ப்பனரை நேரு அனுப்பினார்.

பி.என். ராவ் அமெரிக்கா, பிரிட்டன், அயர்லாந்து முதலான நாடுகளுக்குச் சென்று, அந்தந்த நாட்டு அரசமைப்பில் உள்ளவற்றில் இந்தியக் காங்கிரசு அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஏற்ற பகுதிகளைப் பிரித்து எடுத்து, அவற்றை அடிப்படையாக வைத்து ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தையே முழு ஆவணமாக 1947 செப்டம்பருக்குள் எழுதி முடித்துவிட்டார்.

அப்படி அவரால் எழுதப்பட்ட சட்டமே “முதலாவது அரசமைப்புச் சட்ட வரைவு.” ஆகும். அது இந்திய அரசமைப்பு அவையிடம் 1947 அக்டோபர் 17 அன்று ஒப்படைக்கப்பட்டது. (அதன் முழுப்படி ஒன்று, எனக்கு 2008 மார்ச்சு மாதம் கிடைத்தது.) அதாவது, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவராக வருவதற்கு முன்னரே அப்படி ஒரு அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டுவிட்டது.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இயங்கிய குழுவுக்கு வரைவுக்குழு என்று பெயர். அரசமைப்பை உருவாக்கிட, 13 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் வரைவுப் பணியை செய்யும் குழுவும் ஒன்று.

1948 மே மாதம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட முதலாவது வரைவு வெளியிடப்பட்டது. அதில் சேர்க்கப்பட்ட திருத்தங்களுடன், இறுதி வரைவு 26.11.1949இல் நிறைவேற்றப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்தியாவிலுள்ள உழைக்கும் கீழ்ச்சாதி மக்களுக்கு எதிரான எல்லாக் கோட்பாடுகளும் உள்ளதை நாம் தெளிவாக அறிய வேண்டும். எடுத்த எடுப்பில், அரசமைப்பில் “இந்திய மக்களாகிய நாங்கள் - We the people of India” என்று தொடங்குகிறது. “இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவையினால்” என்பதே அதன் பொருள். ஆனால், அது பொய்யானது என்பதை முன்னரே விளக்கியுள்ளோம்.

2. அரசமைப்பின் முகவுரையில், “அந்தஸ்திலும் வாய்ப்பைப் பெறுவதிலும் சமத்துவம்உண்டு” எனக் கண்டுள்ளது. ஆனால், விதி 13(3) (b)யிலும், விதி 372 (3) (b) யின்கீழ் உள்ள விளக்கம். II என்பதிலும் - பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் சொற்களைப் பயன்படுத்தாமலே பிராமணனைவிட சத்திரியன் தாழ்ந்தவன்; இவ்விரண்டு வருணத்தாரை விட வைசியன் தாழ்ந்தவன்; இம்மூன்று வருணத்தாரைக்காட்டிலும் சூத்திரன் இழிந்தவன்; அதாவது பிறவி நிலை காரணமாக இந்த நான்கு வருணத்தாரைச் சார்ந்த மனிதரிடையே மனிதனுக்கு மனிதன் சமம் என்பது இல்லை” என்கிற கொள்கைக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மனிதரிடையே சமத்துவம் இல்லை. 2010, 2011ஆம் ஆண்டுகளிலும் இந்த இரண்டு விதிகளிலும் உள்ள “வழக்கச் சட்டம் இன்றும் செல்லும்” என்கிற கொள்கை இன்றைய நாடாளுமன்றத்தினால் சட்டத் திருத்தம் மூலம் நீக்கப்படுகிறவரையில் இந்த “மனித சமத்துவமின்மை”க் கொள்கை அப்படியே நீடிக்கும். பெரியார் தொண்டர்கள் இந்த இழிநிலையை மாற்றிட என்ன செய்தோம்? என்ன செய்யப்போகிறோம்? என்று பொறுப்புடன் சிந்திக்க வேண்டும். ‘இந்து’ என்று நம்புகிற ஒவ்வொருவரும் கவலையுடன் எண்ணவேண்டும்.

3. விதி 25 (2) (a)இலும், (2)இலும் உள்ளபடி இங்கு “ மதச்சார்பின்மை” என்கிற கோட்பாடு அதற்கு உரிய உண்மையான கருத்தில் இல்லை என்பதையும், விதி 25 (2)இல் உள்ளபடி, “இந்த விதியில் உள்ள எதுவும் இப்போது நடப்பில் உள்ள எந்தச் சட்டத்தின் செயல்பாட்டையும் தடுக்காது” என்பது பழைய பழக்க வழக்கச் சட்டத்தைக் காப்பாற்றுவது என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்.

“விதி 13, 25, 372, இவற்றில் உள்ள பழக்கவழக்கப் பாதுகாப்புச்சட்டம், நால்வருணப் பாதுகாப்புச் சட்டம் முதலானவை, இந்திய அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்தபிறகு செல்லுபடியாகமாட்டா” என, மிக எச்சரிக்கையுடன், 1948இல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் முன்மொழிந்த இந்துச் சட்டத்திருத்த மசோதா அடியோடு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுபற்றியும் எவரும் கவலைப்படவில்லை.

4. 1950இல் நடப்புக்கு வந்த அரசமைப்பில் அனைவர்க்கும் இலவசக் கட்டாயக் கல்வி, வாழ்க்கைக்கு உத்தரவாதம், மக்கள் நல்வாழ்வுக்கு உரிய வசதி, மது ஒழிப்புக்கு முயலுதல் முதலான கொள்கைகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளாக இல்லாமல் அரசின் வழிகாட்டு நெறிகள் என்பதாக விதிகள் 36 முதல் 51 வரை பகுதி IV என்பதன்கீழ் வைக்கப்பட்டுள்ளன.

இது வேண்டுமென்றே பெரிய எண்ணிக்கையுள்ள மக்களுக்கு அடிப்படை உரிமைகள் வந்து சேரக்கூடாது என்கிற உள்நோக்கம் கொண்டது. இதைத் தேடிப்பிடித்து அயர்லாந்து அரசமைப்புச் சட்டத்திலிருந்து - அதன் தலைப்பு உட்பட அப்படியே பிய்த்து எடுத்து, அவருடைய முதலாவது அரசியல் அமைப்பு வரைவில் பி.என். ராவ் இணைத்தார். அயர்லாந்து சட்டத்தில் இது (Directive Principles of State Policy) என்று உள்ளது. நிற்க. 

5. மேலே கண்ட பகுதி IVன்கீழ், IV, A என்னும் ஒரு பகுதி விதி 51. A என, 1976இல் இணைக்கப்பட்டது.

அடிப்படைக் கடமைகள் - குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் Fundamental Duties என்பது IV A என்பதற்குத் தலைப்பு ஆகும். இதில் 51 A- (h) என்பதில், “to develop the scientific temper, humanism and spirit of inquiry and reform - அறிவியல் கண்ணோட்டம், மானிட உரிமை உணர்வு, ஆய்வுக்கான தேடல், சீர்திருத்தம் இவற்றை மேற்கொள்ள வேண்டும்” என உள்ளது. இது விதிகள் 13, 25, 372, இவற்றில் ‘பழைய பழக்கவழக்கச் சட்டங்களை மாற்றாமலிருக்கிற வரையில் பின்பற்ற வேண்டும்’ என்று கூறிவிட்டு, அதன்பிறகு பிதற்றுவதும், பயனற்றதும், ஏமாற்றுத் தன்மை கொண்டதும் ஆகும்.

6. மேலும் எந்த ஒரு மாற்றம் வர வேண்டும் என்றாலும் - அமெரிக்காவின் முறையைப் பின்பற்றிச் - சட்ட வரன்முறையைப் பின்பற்றி, சட்ட வரன்முறைக்கு உட்பட்டே (Due process of law) வின்படியே மாற்றம் வரவேண்டும் என்பதை உறுதிப்படக் கூறுகிறது, இன்றையச் சட்டம்.

இதன்படி, “இந்திய ஒருமைப்பாடு -ஒற்றை ஆட்சி அமைப்பு - நாட்டின் எல்லை இவற்றை மாற்றுவது; நாட்டுப் பிரிவினை கோருவது முதலானவை சட்டத்தின் அடிக்கட்டுமான அமைப்புக்கு (basic structure of the Constitution) எதிரானது” என்று விதிகள் 1, 2, 3, 4 இவற்றில் உள்ள விளக்கங்கள் கூறுகின்றன.

7.     இந்தியா ஓர் ஒற்றை ஆட்சி முறை உள்ளது என்பதை, “இந்தியாவின் அலுவல் மொழி இந்தி மட்டுமே” என உள்ள விதி 343இன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விதிகள் 344, 351 முதலானவை இந்தி மொழியை வளப்படுத்தவும் வளர்த்தெடுக்கவும் அலுவல் மொழியாக ஆக்கவும் எல்லா முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வழி வகுக்கின்றன.

8.     விதிகள் 344(1), 351 இவற்றின் கீழ் அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அசாமி, வங்காளி, போடோ, டோக்ரி, குசராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மணிபுரி, மராத்தி, நேப்பாளி, ஒரியா, பஞ்சாபி, சமற்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது முதலான 22 இந்திய மொழிகள் “மொழிகள்” என்ற தலைப்பில் உள்ளன. இவற்றுள் இந்தி மட்டுமே இந்திய அரசின் அலுவல் மொழி ஆக்கப்பட்டுள்ளது.

இந்தியா, எப்போதோ ஒரு காலத்தில், துண்டாடப்படுவதற்கு இது மட்டுமே போதும். இந்தி பேசாத மக்களின் மொழிகள் 21 என்று ஏற்கப்பட்டுள்ள போது, இந்தி உள்ளிட்ட 22 மொழிகளும் இந்திய அரசின் அலுவல் மொழிகளாக ஆக்கப்படுவது மிகவும் முதன்மை. இந்தி பேசாத மாநிலங்களின் மக்களுக்கும் தலைவர்களுக்கும் இதன் தேவையைப் புரிய வைத்தால், விரைவிலேயே, அந்தந்த மொழிக்காரரும் கிளர்ந்தெழுவார்கள். தமிழகம், ஆந்திரம், கருநாடகம், பஞ்சாப், மகாராட்டிரம், அசாம், மணிப்பூர் முதலானவை இதற்கு இப்போதைக்கு ஏற்ற செயல்களங்கள் ஆகும்.

9.     மய்யப்படுத்தப்பட்ட ஒற்றை நிர்வாகம். வெள்ளையர் ஆட்சிக்காலத்தில், அரசப் பிரதிநிதி (Vice - roy), மாகாண ஆளுநர் (Provincial Governor) இவர்களை வெள்ளையரே நியமித்தனர். மாகாண அரசுத்துறை நிருவாகிகளான மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள் எல்லோரும் 1947 வரையில் நிர்வாகப் பணித் (Indian Civil Service - I.C.S.) தேர்வுக் குழுவினால் தேர்வு செய்யப்பட்டவர்களே அமர்த்தப்பட்டனர். இவர்களுள் பெரும்பாலோர் வெள்ளையர்களும், இந்திய மேல் சாதிக்காரர்களும் ஆவர். இப்போது இப்பணிகளில் உள்ளவர்கள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் (Indian Administraive Service - I.A.S.) என அழைக்கப்படுகிறார்கள். விதிகள் 312A முதலியவை இதற்குப் பாதுகாப்பாக உள்ளன. இது 1947 அக்டோபருக்கும் பிறகு நடப்புக்கு வந்தது.

 

இவர்கள் இந்திய அரசின் ஊழியர்கள்; இந்திய அரசுக்குக் கண்ணாகவும், காதாகவும், கையாள்களாகவும் இருப்பவர்கள். மாநில ஆட்சிகளில் இந்திய ஒற்றை ஆட்சியின் மய்யமாக விளங்குகிறவர்கள்.

இவர்களைத் தேர்வு செய்பவர்கள் இந்திய ஆட்சிப் பணிகளுக்கான தேர்வு ஆணையத்தினர். (U.P.S.C.) இது மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதாகும். இவர்களை அந்தந்த மாநிலத்தவர்களே தேர்வு செய்து கொள்ள உரிமை வேண்டும். இதற்கு விதிகள் 315 முதல் 318 வரை உள்ளவை நீக்கப்படவேண்டும்.

10.    உயர்நீதித்துறை, உச்சநீதித் துறை இவற்றுக்கு நீதிபதிகளைத் தேர்வு செய்வதை அரசமைப்புச் சட்டவிதிகள் 124 முதல் 143 வரையில் உள்ள படியும்; விதிகள் 214 முதல் 217 வரையில் உள்ளபடியும் இந்திய அரசே செய்கிறது. இவற்றுக்கு நீதிபதிகளைத் தேர்வு செய்கிற அதிகாரம் முற்றிலும் மய்ய அரசிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது அடியோடு மாற்றப்படவேண்டும். அந்தந்த மொழிவழி மாநில அரசுகளே அந்தந்த மாநில உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத் தேர்வு செய்து கொள்ளும் அதிகாரம் முழுமையாக வேண்டும்.

11.    இவ்வாறே அரசமைப்பு விதிகள் 246 முதல் 252 வரை உள்ளவை மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பவையாகவும், இந்தியாவை ஓர் ஒற்றை ஆட்சியாக நீடித்திருக்கச் செய்ய அதிகாரம் தருபவையாகவும் உள்ளன.

12.    அவசர நிலைக் காலங்களில் மாநில அரசுகளைக் கலைக்கிற அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களைக் கலைக்கிற அதிகாரம் விதிகள் 249, 250, 352, 356 இவற்றில் உள்ளன. மாநில அரசுகளின் தலைமேல் தொங்கும் கத்திகளாக இவ்விதிகள் உள்ளன.

13. 1950இல் நடப்புக்கு வந்த அரசமைப்பில் இந்திய அரசு எப்படிப்பட்ட தன்மை உள்ளது என்பது பற்றிப் பின்ருமாறு முகவுரையில் குறிக்கப்பட்டது. “இறையாண்மையுள்ள சனநாயகக் குடிஅரசு ” என்பதே அத்தன்மை எனக் குறிப்பிடப்பட்டது. ஆனால், 1976இல் இது, பின்வருமாறு மாற்றி எழுதப்பட்டது.

“இறையாண்மையுள்ள சமதரும மதச்சார்பற்ற சனநாயகக் குடிஅரசு ” என்பதே இந்திய அரசின் தன்மை என மாற்றி எழுதப்பட்டது.

இது ஊரையும் உலகத்தையும் ஏமாற்றுகிற தீய நோக்கம் கொண்டது; பொய்யானது. ஏன்? இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பற்றது அல்ல என்பதை நாம் மேலே விளக்கியுள்ளோம்.

“சமதருமம்” - என்பது என்ன என்று எந்த இடத்திலும் விளக்கம் இல்லை. “எல்லா உற்பத்திச் சாதனங்களையும் சமூக உடைமை” ஆக்குவதுதான்” சமதருமம் என்பதன் முதலாவது இலக்கணம். அது இச்சட்டத்தில் அறவே இல்லை. இது மிகப்பெரிய மோசடி.

14. இவ்வளவு கேடுகளைக் கொண்ட அதே அரசமைப்புச் சட்டத்தில், விதிகள் 16(4), 338(3) - (இப்போது 338(10) என்கிற விதிகளைச் சேர்த்து, இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகிய மூன்று வகுப்பினருக்கும் அரசு வேலையில் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்கிற பாதுகாப்பை அறிஞர் அம்பேத்கர் தேடினார். அதேபோல், பட்டியல் வகுப்பாருக்கும், பழங்குடியினருக்கும், இந்திய மக்கள் அவையிலும், மாநிலச் சட்டமன்றங்களிலும் ஏறக்குறைய விகிதாசார இட ஒதுக்கீடு தரப்படுவதற்கு ஏற்ற விதிகள் 330, 332 இயற்றப்பட வழி வகுத்தார்.

அவர் அரசமைப்பு அவையில் உறுப்பினர் ஆனதற்கான தலையாய காரணம் இதுதான் என்பதை, 25-11-1949இலேயே அரசமைப்பு அவையில் தெளிவுபடக் கூறினார்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர் மற்றும் எல்லா வகுப்பினருக்கும் - சென்னை மாகாணத்தில் 1940 முதல் கல்வியில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு செல்லாது என ஆனபோது, அவை செல்லுபடி ஆவதற்கான சட்டத் திருத்தம் வேண்டும் என, 1950 ஆகஸ்டில் ஈ.வெ.ரா. கோரினார்.

அதற்கென, விதி 15(4) என்னும் உட்பிரிவு 2-6-1951இல் சேர்க்கப்பட்டது. இது முன் மொழியப்பட, பண்டித நேரு எல்லாம் செய்தார்; இது நிறைவேற்றப்பட அம்பேத்கர் அரும்பாடுபட்டார். தன்னுரிமை பெற்ற மாநிலக் குடி அரசுகள் இயற்றப் போகும் அரசமைப்பிலும், அப்போது இருக்கப்போகும் நிலைமைக்கு ஏற்ப, இப்படிப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கான விதிகள் கட்டாயம் இடம் பெறவேண்டும்.

இன்றைய இந்திய அரசமைப்பில் மாநில அரசுகள் எல்லாம் அடங்கி ஒடுங்கிச் செயல்படும் அடிமைப்பட்ட அரசுகளாக உள்ளன.

இப்படிப்பட்ட அடிமைத்தனம் நீடிக்கிற வரையில் - எந்த மொழி பேசும் மாநிலத்து மக்களும் தத்தம் தாய்மொழி, தத்தம் பண்பாடு, வரலாறு, தங்கள் மக்களுக்கான அரசியல், பொருளியல், சமுதாய நலன்கள் - உரிமைகள், விருப்பங்கள், விழுமியங்கள் இவற்றைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. மதச்சார்பற்ற கோட்பாடு, வருண சாதி ஒழிப்பு, சாதியப் பண்பாடு அழிப்பு, ஆண், பெண் உயர்வு தாழ்வு ஒழிப்பு, பொருளாதாரச் சுரண்டல் ஒழிப்பு இவற்றை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஒட்டு மொத்தத்தில் எந்த மொழி மாநில மக்களுக்கும் எந்தத் துறையிலும் தன்னுரிமை - தன்னாட்சி அல்லது சுதந்தரம் இருக்காது.

இந்த ஈன நிலையை மாற்றிட ஒவ்வொரு மொழித் தேசிய இனமும் முயலவேண்டும்; போராட வேண்டும். தமிழ்த் தேசிய இனம் இப்படிப்போராட வேண்டும் என்பதே மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை.

இக்கட்சியின் குறிக்கோள்: “இந்தியாவில் பொதுவுடைமை மலர மார்க்சிய - பெரியாரிய நெறியில், தேசிய இன வழிப்பட்ட சமவுரிமை உடைய சமதர்மக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டாட்சி அமைய ஆவன செய்தல்” என்பதே அக்குறிக்கோள் ஆகும்.

இதனைத் தெளிவாக விளக்கும் கட்சி அரசியல் ஆவணம் ஒன்றை, 10-2-1990இல் பெரம்பலூர் மாவட்டம் எசனையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றி வெளியிட்டுள்ளோம். இதே தன்மையில் மா.பெ.பொ.க.வின் இரண்டாவது கட்சி ஆவணத்தை 14-2-1999இல் அரக்கோணத்திலும்; 4-4-1999, 24-4-1999இல் சென்னையிலும் பொதுக் குழுவில் நிறைவேற்றி 1-5-1999இல் வெளியிட்டுள்ளோம்.

தமிழ்த் தேசிய இன விடுதலை பற்றி இவ்விரண்டு ஆவணங்களிலும் விளக்கியுள்ளோம். தேசிய இன விடுதலைக் கோரிக்கையை இந்திய அளவில் எடுத்துச் செல்லும் முயற்சியை 1987 இலேயே மா.பெ.பொ.க. மேற்கொண்டது. பஞ்சாபில் 1987 ஏப்பிரலில் லூதியானாவிலும், 1987 செம்படம்பரில் ஜலந்தரிலும் தேசிய இன விடுதலையைப் பற்றி வே. ஆனைமுத்து, டாக்டர் து. மூர்த்தி ஆகியோர் பரப்புரை செய்தோம். “காலிஸ்தான் வேண்டாம் - பஞ்சாபிஸ்தான் வேண்டும்” என்று கோருங்கள் எனப் பஞ்சாபியர்களை வேண்டிக் கொண்டோம். மாநாட்டில் கூடியிருந்த பஞ்சாப் மார்க்சிய - லெனினியக் கட்சியினர் (M.L.) அதை மனமார வரவேற்றனர்.

அடுத்து, 1991 அக்டோபர் 17, 18, 19இல், புதுதில்லியில் வித்தல்பாய் பட்டேல் (V.P. House) வளாகத்தில், மவ்லங்கர் மன்றத்தில் இந்தியக் கூட்டாட்சி மாநாட்டை நடத்திப் பல்வேறு மாநிலத்தலைவர்களைக் கூட்டி வைத்துப் பேசினோம். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக - நாகாலாந்துக் காரர்களும், மணிப்பூர் மக்களும், அசாமில் உல்ஃபா அமைப்பினரும் அவரவர் மொழி மாநிலத்துக்கு விடுதலை கேட்டுப் போராடுகின்றனர். அவர்கள் ஆயுதம் தாங்கிப் போராடுகிறார்கள்; மறைந்திருந்து போராடுகிறார்கள்.

அசாம் மாநிலத்தில் நானும் சில தோழர்களும் 1986, 1987 இல் இதுபற்றிப் பரப்புரை செய்தோம். இந்திய அரசு, முறை போட்டுக்கொண்டு, கொஞ்சங் கொஞ்சமாக அந்நாட்டுப் போராளிக்குழுக்களை அழித்து வருகிறது. இதிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.

ஜம்மு - காஷ்மீர் மக்கள் 1957 முதல் திட்டமிட்டு நசுக்கப்படுகிறார்கள். ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொண்ட அந்நாட்டில் - மறைந்திருந்து ஆயுதம் தாங்கிப் போராடுவோர் - எழுச்சி கொண்டு தெருவுக்கு வந்து போராடும் இளைஞர்கள், இளம் பெண்கள் என இரு வகையிலும் நாட்டுப் பிரிவினைப் போராட்டத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

அமெரிக்கரும், பிரிட்டானியரும், பாக்கிஸ்தானியரும், காஷ்மீர் சிக்கலில் தொடர்ந்து மறைமுகமாகவும் நேரிடையாகவும் தலையிட்டு - அதைத் தீராத சிக்கலாக ஆக்கி வருகின்றனர். ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டம் 17.11. 1956 இல் ஜம்மு - காஷ்மீர் அரசமைப்பு அவையில் நிறைவேற்றப்பட்டது.

அது - முகவுரையில் கண்டபடி,

1.     1947 அக்டோபர் 26இல் இந்தியாவுடன் இணைந்ததை ஏற்றுக் கொள்கிறது;

2.     இந்தியாவிலிருந்து பிரிக்க முடியாத பகுதி என்பதை ஏற்றுக் கொள்கிறது. ஆனாலும், குறைந்த அளவு தன்னுரிமைகளைப் பெற்றதாக அது அமைந்துள்ளது. எப்படி?

1.     முகவுரையில் “ஜம்மு - காஷ்மீர் குடிமக்களாகிய நாங்கள் ...” என்று தொடங்கப்படுகிறது. அதாவது, முதலில் அவர்கள் ஜம்மு - காஷ்மீர் குடிமக்கள், இரண்டாவதாக அவர்கள் இந்தியாவின் குடிமக்கள். அது ஒரு தன்னுரிமை பெற்ற நாடு என்பதற்கு முதல் அடையாளம் இது.

2.     ஜம்மு - காஷ்மீர் நாட்டின் நிருவாகத் தலைவர் சதர்-அய்-ரியாசத் ‘குடிஅரசுத் தலைவர்’ - என அழைக்கப்படுவார்.

3.     அந்நாட்டின் ஆட்சித் தலைவர் ‘பிரதமர்’ - என அழைக்கப்படுவார்.

4.     விதி 144 இன்படி அந்நாட்டுக்கென்று தனித் தேசியக் கொடி உண்டு. அது நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இருக்கும்; அதன் நடுவில் ஏர் வரைபடம் இருக்கும்.

இவையெல்லாம், ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டப்படி, காஷ்மீர் மக்கள் பெற்றிருந்த தன்னுரிமைகள். இவ்வுரிமைகள் ஒவ்வொன்றாக 1959 முதல் 1965க்குள் இந்திய அரசால் பறிக்கப்பட்டன. அதாவது, அவர்கள் பெற்றிருந்த குறைந்த அளவு தன்னுரிமையையும் பறித்துக்கொண்டது இந்திய வல்லாதிக்க அரசு.

அந்த வல்லாதிக்க அரசிடமிருந்து முற்றுரிமை பெற்ற - முழு விடுதலை பெற்ற தமிழகத்தை அடைய நாம் முன்வரவில்லை.

1.     பாதுகாப்பு, பணம் அச்சடிப்பு, செய்திப் போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளும் இந்திய அரசிடம் இருக்க வேண்டும். மற்றெல்லா அதிகாரங்களும் அந்தந்த மொழி மாநிலக் குடி அரசுகளிடமே இருக்க வேண்டும்.       தமிழ்நாட்டுக் குடி அரசுக்கும் அப்படியே அதிகாரங்கள் இருக்க வேண்டும்.

2.     ஒவ்வொரு மாநிலக் குடிஅரசில் உள்ள மக்களும் முதலில் அந்தந்த நாட்டுக்குடி மக்கள்; இரண்டாவதாக இந்தியக் குடி மக்கள். அதாவது, எல்லா மாநிலக் குடி அரசு மக்களுக்கும் இரட்டைக் குடி உரிமை வேண்டும்.

3.     ஒவ்வொரு மாநிலக் குடி அரசுக்கும் ஒரு தனித் தேசியக் கொடி பெற்றிருக்க உரிமை உண்டு.

4.     ஒவ்வொரு மாநிலக் குடி அரசுக்கும், உண்மையான இந்தியக் கூட்டாட்சியை ஏற்றுக் கொண்ட, தனி அரசமைப்புச் சட்டம் வேண்டும். அதை, இனி அந்தந்த மாநில மக்களே தகுதி படைத்த அரசமைப்புச் சட்ட அவை மூலம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட தன்னுரிமை பெற்ற மாநிலக் குடிஅரசுகள் விரும்பி ஒன்றிணைந்த ஓர் உண்மையான சமதரும - மதச் சார்பற்ற கூட்டாட்சியாக இந்தியாவை உருவாக்குவதே மா.பெ.பொ.க.வின் இறுதி இலக்காகும்.

இன்னும் ஒரு தலைமுறைக் காலம் - 30 ஆண்டுகள் நாம் போராடியேனும் இந்த இறுதி இலக்கை நாம் அடைந்தே தீரவேண்டும்.

முயன்றால்! வெல்லுவோம்! முயலுவோம்! முடிப்போம்! வாருங்கள்!