வெள்ளையனை வெளியேற்றி

     வீரமுடன் நாம்பெற்ற

     விடுதலை என்ன ஆச்சு?             ...அரோகரா!

கொள்ளையர் பலர்வந்து

     கூடினர் ஆட்சியில்

     குற்றமே பெருகிப் போச்சு   ... அரோகரா!

கள்ளமே இல்லையெனும்

     காந்தியார் கண்டதோர்

     கருணைஅ கிம்சை யெல்லாம்    ... அரோகரா

பள்ளமே வெட்டிபடு

     பாதாளம் சேர்த்தாரே

     பண்பாடு  பழக்க மிங்கே    ... அரோகரா!

சொந்தஇம் மண்ணிலே

     வாழ்கின்ற மக்கள்வாழ்

     வாதாரம் செத்துப் போச்சு    ... அரோகரா!

வந்துபிற நாட்டினர்

     வாழவே இங்குபல

     வாசலும் திறக்க லாச்சு     ... அரோகரா!

கொந்திஇத் தேசத்தைக்

     கூறாக்கி அம்பானி

     அதானி கையில் வைத்து   ... அரோகரா!

இந்தாநீ பிடியென்று

     இந்திய தேசத்தைக்

     கொடுப்பதே பார்லி மென்டு ... அரோகரா!

நாக்குரிமை பெற்றபல

     நரிகளே இதுவரை

     நாட்டினை ஆள வந்தார்     ... அரோகரா!

போக்குபல காட்டியே

     பொன்னான தேசத்தைப்

     பொறுக்கியே சுரண்டித் தின்றார்   ... அரோகரா!

வாக்குரிமை ஆஹாஓர்

     வரமென்று சொன்னீரே

     வரலாறு சொல்வ தென்ன?      ... அரோகரா!

வாக்காள ராய்மட்டும்

     வாழ்ந்துதான் சாகின்றார்

     வாய்க்கரிசிப் போட்டுக் கொண்டு ... அரோகரா!

கொட்டுகிற மழையிலும்

     கொளுத்திடும் வெயிலிலும்

     உழைப்பவர்க் கென்ன நிலைமை?    ... அரோகரா!

பட்டதே போதுமென

     தற்கொலையில் மாய்கின்றார்

     மற்றவர்க் கென்ன உரிமை ... அரோகரா!

மொட்டையைப் போட்டுவிடு

     பட்டையைப் பூசிவிடு

     கொட்டையைக் கட்டிக் கொண்டு ... அரோகரா!

கட்டையைக் கக்கமிடு

     வட்டையைக் கையிலெடு

     பிச்சையெடு தெருவில் நின்று     ... அரோகரா