திராவிடர் இயக்கம் என்பது 1912இல் டாக்டர் சி. நடேசனாரால் திராவிடர் சங்கமாகத் தொடங்கப்பட்டு, பின்பு 1916இல் சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் முயற்சியால் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கமாக மலர்ந்தது (South Indian Liberal Federation – S.I.L.F.).

இந்தக் கட்சி பார்ப்பனரல்லாதாரின் நலன்களைப் பேணிக்காப்பதற்காக உருவாக்கப்பட்டது. பார்ப்பனரல் லாதாரின் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் உரிமை ஆகியவற்றை மய்யப்படுத்தியே இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது.

இந்த இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் ஆகியவற்றில் பார்ப்ப னர்கள் மட்டுமே ஏகபோகமாக அனுபவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்திய தேசிய காங்கிரசு என்கிற ஒரே அரசியல் கட்சி தான் இருந்தது. அதிலும் பார்ப்பனர் ஆதிக்கமே தலைதூக்கி நின்றது.

இந்த அமைப்பிற்காக 1917இல் மூன்று நாளேடுகள் தொடங்கப்பட்டன. அவை தமிழில் ‘திராவிடன்’, ஆங்கிலத்தில் ‘ஜஸ்டிஸ்’, தெலுங்கில் ‘ஆந்திரபிரகாசிகா’ ஆகும். அந்தக் காலகட்டத்தில்தான் பார்ப்பனர் இந்தியையும், அதற்கு முன்பே சமஸ்கிருதத்தையும் தமிழ் மக்கள் மீது திணித்து, தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொண்டு, அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

காங்கிரசுக் கட்சியும், காந்தியும், இந்தியை இந்தி யாவின் பொது மொழியாக்க 1917லிருந்தே ஆயத்தம் செய்தனர். இதை அப்போதே எதிர்த்தது திராவிடர் இயக்கம்தான்.

காந்தி இந்தியாவின் பொது மொழியாக இந்தியை ஏற்படுத்த வேண்டும் என்று மும்பையில் பேசினார். அதைக் கண்டித்து திராவிடன் ஏட்டில் தலையங்கம் எழுதப்பட்டது. “மிஸ்டர் காந்தியும் இந்தியும்” என்ற தலையங்கத்தில் காந்தியின் கூற்று எவ்வளவு பொருத்தமற்றது; நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்பதைச் சான்றுகளுடன் எழுதி இருந்தது. (திராவிடன் 1.8.1917).

மீண்டும் “இந்தியாவின் பொது பாஷை இந்தியா?” என்ற கட்டுரையில், “இந்தி பேசுவார் 6.5 கோடி மக்கள்; மற்றவர்கள் 23.5 கோடி மக்கள். இந்தியாவின் சிறுபான்மை மக்கள் பேசும் ஒரு மொழியைப் பெரும்பான் மை மக்கள் மீது திணிக்க முற்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று எழுதி எதிர்ப்புத் தெரிவித்தது (திராவிடன் 24.8.1917).

இந்தியும், சமஸ்கிருதமும் திணிக்கப்படுவது பார்ப்பனரல் லாத மக்களை அடிமைப்படுத்துவதற்குப் பார்ப்பனர்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சி முறையேயாகும். இந்தியும், சமஸ்கிருதமும் தென்னாட்டிற்குத் தேவையற்ற மொழி கள். இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திராவிடன் ஏடு எழுதியது (திராவிடன் 25.8.1917).

‘ஆரியமும் திராவிடமும்’ என்ற கட்டுரையில் ஆரிய மொழியின் வளர்ச்சியின்மையையும் திராவிட மொழிகளின் வளர்ச்சியுற்றிருந்த நிலையையும் விளக்கி எழுதி, ஆரிய மொழியைத் திராவிட மொழிகளின் மீது திணிக்கக் கூடாது என்று திராவிடன் ஏடு எழுதியது (23.8.1917).

‘தமிழர்களின் நாகரிகம்’ என்ற தலைப்பில், சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் எவ்வாறு சிறப் புற்று வாழ்ந்திருந்தார்கள்-இடையில் ஏற்பட்ட ஆரிய ஆதிக்கத்தால் எவ்வாறு வீழ்ந்துவிட்டார்கள் என்பதை விளக்கி எழுதியிருந்தது (திராவிடன் 16.6.1917).

தாய்மொழி வழியாகக் (சுயபாஷை) கல்வி போதிக் கப்பட வேண்டும்; அதுதான் குழந்தைகளின் மனவளர்ச்சிக்கு ஏற்றது என்ற தலைப்பில் இரண்டு கட்டுரைகள் எழுதப்பட்டன.

14.6.1917 திராவிடனில் ‘சுயபாஷை வழியாகக் கல்வி’ என்ற கட்டுரையும், 22.6.1917 திராவிடனில் ‘சுயபாஷை வழியாகக் கல்வி போதித்தல் வேண்டும்’ என்ற கட்டுரையும் எழுதப்பட்டன.

‘இந்தியாவிற்குப் பொது மொழி ஆங்கிலமே’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையும் எழுதப்பட்டது (திராவிடன் 27.10.1917).

பி.ஏ. பட்டப்படிப்பில் தமிழ்க் கட்டுரைப்பாடமும், பி.ஏ.ஆனர்ஸ் படிப்புத் தொகுதியில் திராவிட மொழி களைப் பயிலும் வாய்ப்பும் ஏற்படுத்தித்தர வேண்டும் என அரசப் பிரதிநிதி (Vice-Roy) விண்ணப்பம் அளிக்கத் திராவிடர் சங்கம் 1918இல் ஏற்பாடு செய்தது. (நம்பி ஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.138). தாய்மொழியில் கட்டுரை கட்டாயம் என்பதை எதிர்த்து எழுந்த கிளர்ச்சியை முதன்முதலில் தொடங்கியவர்களே (Board of Sanskrit) சமஸ்கிருதக் கல்விக் கழகத்தினர் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.130).

1918 மார்ச்சு 30, 31 தேதிகளில் தஞ்சை, திருச்சி மாவட்டப் பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம் சமஸ்கிருதச் சார்புடன் செயல்படு வதைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழ் மொழியின் சிறப்புக் கூறுகளை நுணுகிப் பயின்று உயராய்வு மேற்கொள்ளும் நோக்குடன் தமிழின் எல்லாத் துறைகளிலும் சிறப்புத் தேர்வுகளைச் சென்னைப் பல்கலைக்கழகம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அந்த மாநாடு வற்புறுத்தியது. (நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.139).

1919 சூன் மாதத்தில் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் ‘இந்திய அரசுப் பணித் தேர்வுகளிலும், சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வுகளிலும், சமஸ்கிருதம், அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளை செம்மொழிப் பாடமாக வைப்ப தைப் போல, அதே அடிப்படையில் வளஞ்செறிந்த பழம்பெரும் இலக்கியங்களைக் கொண்ட தமிழ்மொழி யையும் செம்மொழியாக ஏற்கவேண்டும்’ என்று உரிமையுடன் கோரி ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. (நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.139).

1918ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் இந்தி யைப் பரப்புவதற்காக, காந்தி, சென்னையில் இந்தி பிரச்சாரச் சபையைத் தொடங்கினார். 1920ஆம் ஆண்டு சூன் மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் ஒரு மார்வாடியிடம் ரூ.50,000 த்தை, சென்னை மாகாணத்தில் இந்தியைப் பரப்பு வதற்காக நன்கொடையாகப் பெற்றுக் கொண்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. (நம்பி ஆருரன் தமிழ் மனுமலர்ச்சியும், திராவிடத் தேசியமும்).

பெரியாரிடம் மார்வாடிகள் பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள் என்று குணா “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற நூலில் குறிப்பிட்டதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. மார்வாடிகளுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது-பெரியாரிடம் கொடுப்பதற்கு.

மீண்டும் மீண்டும் காந்தி சென்னை வந்தபோ தெல்லாம் மார்வாடிகளைப் பார்த்து ‘இந்தி பிரச்சாரச் சபா; அது உங்கள் சபா; இந்திப் பிரச்சாரச்’ சபாவிற்குத் தாராளமாக நிதி உதவி செய்யுங்கள் என்று வேண்டு கோள் வைத்தார்.

I appeal to the Marwaries; Gujaratis and other northern settlers here to regard this institution as their own and pay more attention to the work in all possible ways - 6.9.1927இல் இந்தி பிரச்சாரச் சபாவில் காந்தி பேசியது. (Collected Works of Mahatma Gandhi Vol.40 pp 31, 32).

காந்தி எப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வந்தா ரோ அப்பொழுதெல்லாம் இந்தியைப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்.

நீதிக்கட்சியின் சார்பில் இலண்டன் கூட்டுக் குழு முன் சாட்சியமளிக்க இலண்டன் சென்ற டாக்டர் டி.எம். நாயர் அங்கேயே மறைவுற்றார். அவருக்கு உதவி யாகச் சென்ற ஆர்க்காடு ஏ.இராமசாமி முதலியாரும், சர்.கே.வி. ரெட்டிநாயுடுவும் இங்கிலாந்து நாடாளு மன்றக் கூட்டுக்குழு முன் அறிக்கை அளித்தனர். அதில் அவர்கள் கூறியதாவது.

“இந்தியாவை ஒரே நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், திராவிடர் நாகரிகம் வேறு, ஆரியர் நாகரிகம் வேறு; எங்களை ஒன்றாகப் பிணைக்கக் கூடாது என்றும்” கோரிக்கை வைத்தனர் (politics and Social Conflict in South India Eugene F. Irschic page No.150).

1919இல் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டத்தின்படி, இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை 1920இல் ஏற்பட்டது. அதன்படி தேர்தலில் வென்று, சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி 1920 டிசம்பரில் ஆட்சிக்கு வந்தது. சென்னை மாகாணம் போன்றே இந்தியாவில் மீதமிருந்த ஒன்பது மாகாணங்களிலும் இரட்டை ஆட்சி ஏற்பட்டது. சென்னை மாகாணத்தில் மட்டும் சிறப்பான ஆட்சியாக நடைபெற்றது. நீதிக்கட்சி ஆட்சி வந்தவுடனேயே முதலில் வகுப்புரிமை ஆணை யை வெளியிட்டது. 16.9.1921இல் அரசு வேலையில் இடஒதுக்கீடு ஆணை வெளியிடப்பட்டது.

கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பது தொடர் பாகக் கல்லூரி மாணவர் சேர்க்கைக் குழுவை அமைத்தது. பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

மாநிலக் கல்லூரியில் மொத்த மாணவர் எண் ணிக்கை 242 ஆகும். 1922ஆம் ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் கணக்கிடும்போது 167 பார்ப்பன மாணவர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும். கல்லூரிச் சேர்க்கைக் குழுவில் சி. நடேசமுதலியார் இருந்ததால் அவர் 50 விழுக்காடு என்ற அளவுகோல் அடிப் படையில் 121 பார்ப்பன மாணவர்களுக்குமேல் இடம் அளிக்கவில்லை. அதனால் 121 பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. அதனால் பார்ப்ப னரல்லாத மாணவர்களைவிட 46 பார்ப்பன மாண வர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றிருந்தும் அனுமதி மறுக்கப்பட்டனர். தமிழகக் கல்வி வரலாற்றில் இது ஒரு புரட்சியாகும். அதேபோல மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைகளிலும் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை                1921-ஆண்டு 1922-ஆண்டு

பார்ப்பனர்      58           33

பார்ப்பனரல்லாத இந்துக்கள்       15           36

கிறித்தவர்    9              5

ஆங்கிலோ-இந்தியர்          6              2

                -----        -----

மொத்தம்      88           76

                -----        -----

(குறிப்பு : 1921ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்து 7.12.1921 டாக்டர் நடேச முதலியார் கேள்விக்கு அரசு அளித்த பதில்)

18.9.1922இல், எஸ். சீனிவாச அய்யர் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்த கேள்விக்கு அரசு அளித்த பதில்.

கல்லூரிச் சேர்க்கைக் குழு அமைக்கப்பட்டதால், பார்ப்பனரல்லாத மாணவர்கள் பெற்ற பயனை இப் புள்ளி விவரம் தெளிவாகப் புலப்படுத்துகிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின், சிண்டிகேட்டி லும், செனட்டிலும், பார்ப்பனர்கள் ஆதிக்கம் தலை தூக்கி விட்டது. முன்பு கட்டாயப்பாடமாக இருந்த தமிழ் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கிய, செயலை வன்மையாகக் கண்டித்துத் திராவிடன் ஏடு எழுதியது (14.2.1922). பார்ப்பனரல்லாதார் ஒருவரா வது சிண்டிகேட்டில் இருந்திருந்தால் இந்நிலை ஏற் பட்டிருக்குமா என்றும் அவ்வேட்டில் எழுதப்பட்டது.

1922 டிசம்பர் 26இல் சென்னையில் நடைபெற்ற ஆறாவது பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் பேசிய சி. நடேச முதலியார், சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட், சிண்டிகேட், அகாதெமிக் கவுன்சில் போன்ற அதிகார அமைப்புகளில் பார்ப்பனர் அல்லாதார் உரிய அளவில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கத் தேவை யான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டு மென்று தீர்மானம் கொண்டுவந்தார் (Madras Mail 27, Dec 1922).

1923இல் நீதிக்கட்சி ஆட்சி சென்னைப் பல்கலைக் கழகச் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி துணைவேந்தர் பதவிக்கும் மேலாக இணைவேந்தர் பதவி உருவாக்கப்பட்டது. கல்வி அமைச்சரே இணை வேந்தராக இருந்து வர வழிவகை செய்யப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழகம் செனட், சிண்டிகேட் உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்கு விரிவுபடுத்தியது. சென்னைப் பல்கலைக்கழகத்தால் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகளால் முப்பது உறுப்பி னர்கள் ஆட்சிக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்க வகை செய் யப்பட்டிருந்தது. இந்த மசோதாவைப் பற்றி விவாதம் நடைபெற்ற போது, இந்த முப்பது உறுப்பினர்களில் இருபது பேர், பதிவு செய்த பார்ப்பனர் அல்லாத பட்ட தாரிகளிடையேயிருந்து அவர்களுக்குள்ளாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். மீதமுள்ள பத்துப் பேர் பதிவு செய்த பார்ப்பனப் பட்டதாரிகளிடையி லிருந்து அவர்களுக்குள்ளாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் சி. நடேச முதலியார்.

நீதிக்கட்சி ஆட்சியின் மேற்கண்ட முயற்சியின் பயனாகத்தான் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட்டில், டாக்டர் சி. நடேசமுதலியார், டாக்டர் சர்.ஏ. இராமசாமி முதலியார், நல்மணி திருநாவுக்கரசு முதலியார், தமிழ்ப் பேராசிரியர் நமச்சிவாய முதலி யார், தாழ்த்தப்பட்டோர் தலைவரான எம்.சி. இராசா போன்றோர்க்கு 1923இல் பல்கலைக்கழக ஆளவைக் குழுவில் இடம் கிடைத்தது.

1924 பிப்பிரவரியில் சென்னைத் தமிழ்ச் சங்கமும் வேறு சில இலக்கிய அமைப்புகளும் இணைந்து சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் நடத்திய ஒரு பொதுக் கூட்டத்தில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இண்டர் மீடியட், பி.ஏ. பட்டப் படிப்புத் தேர்வுகளில் தாய்மொழி இலக்கியங்கள் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளையும், சென்னைப் பல்கலைக்கழகத்தையும் வற்புறுத்துவ தென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்குத் தலைமை வகித்த நீதிக்கட்சி அமைச்சர் டி.என். சிவஞானம்பிள்ளை, “உண்மைத் தமிழர்களாகிய நாம் பல்கலைக்கழகப் பாடத் திட்டங் களில் தாய்மொழிப் பாடங்களைக் கட்டாயமாக்க வேண்டும். அதன்மூலம் நமது பழமைமிக்க தமிழ் மொழியின் மீது அதிகம் அக்கறைகாட்ட முடியும், என்று வலியுறுத்திப் பேசினார் (Madras Mail 5, Feb, 1924).

- தொடரும்