‘திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றன’
பெருமணற்
பழங்கால முதலாய்ப்
பேசப்படும் மொழிகள் இவை!

இப்போதோ
சாதியில் மாறித்
தாலியை அணிந்தாலோ
கோத்திரம் மாறித்
திருமணம் புரிந்தாலோ
அவை
மரணத்தில்
நிச்சயிக்கப்படுகின்றன

நாட்டில்
விலைவாசிகள்
ஏறுவதுபோல்
‘மானக்
கொலை வாசிகள்’
எண்ணிக்கையும் கூடுகிறது!

அரியானா. பஞ்சாப்
இராசத்தான், பீகார்
உ.பி, உள்ளிட்டவை
மாநிலங்கள் மட்டுமல்ல
மானக்கொலையின்
புகலிடங்கள்!

மானக்கொலைஆண்
பெண் இருவர்க்கு
மான கொலைதான். எனினும்
மாக் கொடுமை பெண்μக்கே!
மின்னல் வேகத்தில்
விண்கலம் விடுவது
அறிவியல் புதுமை

பெண்ணின் சோகத்தைப்
பிழிந்து குடிப்பது
பிற்போக்கு மடமை

முற்போக்கு உலகமய
முடிச்சு, கொண்டையில்!
கற்காலக் காட்டு மிராண்டி
அழுக்கு, மண்டையில்!

கணவன் அதிகாரமே
கரையின்றிப் புரளும்
மனைவி தலைமட்டுமங்கு
மண்ணிலே உருளும்!

தசரத ராமன் கதையிலும்
ஆண்தான் அய்யப்படலாம்
மகாபாரதக் கதையிலும்
பெண் மானந்தான் கெடலாம்

சட்டத்தின் கடமை ..... ? அது
எழுத்தில் மட்டுமே உள்ள
மடமை

‘காக்கிச்சட்டை’
கையூட்டுக்குப்
பை தேடும்

சாதி வாக்கு
அரசியல்வாதியின்
வாய்மூடும்

ஊர்ப்பஞ்சாயத்தின்
ஒற்றை ஆலமரந்தான்
எல்லா வழக்குகளையும்
தீர்க்கும்; இங்கே
உச்சநீதி மன்ற
உத்தரவும் தோற்கும்

குற்றத்தை
மெய்ப்பிக்கும்
பொறுப்பைக்
குற்றவாளிக்கே
ஆக்கினால்
குற்றங்கள்
குறையுமா?

முற்ற முழுதான
பொதுமை அறச்
சமூகமே
முற்றான தீர்வு!
முன்னேறுவோம் ...