விளம்பரம் இன்றைய வாழ்வியலோடு நீக்கமறக் கலந்துவிட்டது. விளம்பரமில்லாமல் எந்தப் பொருளும் விற்கப்படுவதில்லை. எந்த நிகழ்வும் நடைபெறு வதில்லை. பொதுக்கூட்டமா? கருத்தரங்கமா? பொருட் கள் விற்பனையா? எல்லாவற்றுக்கும் விளம்பரம், விளம்பரம் என்றே எல்லோராலும் முன்வைக்கப் படுகிறது. இந்த விளம்பரயுக்தியால் யார் பயன் பெறுகிறார்கள்? யார் பாதிப்புக்குள்ளாகிறார்கள்? என்பதைப் பற்றிய ஆய்வுகளும் மிகக் குறைவாகவே உள்ளன.

மானுட வரலாறு தொடங்கிய காலத்திலேயே விளம்பரங்கள் தொடங்கிவிட்டதாகப் பல வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மைக் கால ரோமானிய, எகிப்திய, சிந்து சமவெளி நாகரிகக் காலத்தில் தோன்றிய குகை ஓவியங்கள், சுவர் சித்திர ஓவியங்கள், பாறை-கோடு ஓவியங்களில் விளம்பரத்தின் முதல் படிநிலை வளர்ச்சி யைக் காணலாம் என்று பலர் குறிப்பிடுகின்றனர். இன்றைய விளம்பரங்களில் காணப்படும் ஆபாசங்கள், அருவருக்கத்தக்க காட்சிகள் அன்று இல்லை என்பது தான் உண்மை. பணப் பொருளாதாரத்தின் வெறியும், தாக்கமும் நிறைந்துள்ள இக்காலக்கட்டத்தில் விளம்பர யுக்திகளோடு அக்காலத்தைய விளம்பர ஓவியங்களை ஒப்பிடவும் முடியாது.

இடைக்காலத்தில் கைத்தொழில்களும், கைவண்ணமும் பெருகின. கைவினைஞர்கள் சட்டை, குல்லாய், கடிகாரம், செருப்பு, மெழுகுவர்த்தி, குதிரைக்குளம்பு, வைரம் போன்ற பொருட்களைத் தங்கள் கைவண்ணத்தால் விலைப் பொருட்களாக்கிச் சந்தையில் கொண்டு வந்தபோது, மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஓவிய அடையாளங்களை விளம்பரங்களாகப் பதித்தனர்.

18ஆம் நூற்றாண்டி லிருந்துதான் தற்காலிக விளம்பரயுக்திகள் தலைத் தூக்கின என்று பலர் குறிப்பிடுகின்றனர். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர்தான் துண்டறிக் கைகள் வழியாக விளம்பரங்கள் மேற்கொள்ளப் பட்டன. இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த தாமஸ் ஜெ. பாரட் (Thomas J. Parratt) தற்காலிக விளம்பர யுக்திகளின் தந்தை என்று போற்றப்படுகிறார். உலகப் புகழ்பெற்ற பியர்சு சோப் நிறுவனம் 18ஆம் நூற்றாண் டில் விற்பனையைத் தொடங்கிய போது அந்நிறுவனத் தில் தாமஸ் பாரட் பணிபுரிந்தார்.

“காலை வணக்கம், நீங்கள் பியர்சு சோப்பைப் பயன்படுத்துகிறீர்களா?” என்ற விளம்பர ஒலிதான் முதன்முதலாக விளம்பரத் திற்காக உருவாக்கப்பட்டதாகும். 1890ஆம் ஆண்டில் தாமஸ் பாரட் இதழ்களில் விளம்பரத்தை அறிமுகப் படுத்தினார். ஆண்டுதோறும் ஓவியர்கள், அறிவியல் அறிஞர்கள், சமுதாயத்தின் முக்கியப் பிரமுகர்கள் ஆகி யோர்களை அழைத்து பியர்சு சோப் நிறுவனத்திற்காக அழகுப் போட்டிகளை நடத்தி விளம்பர யுக்தியை மேலும் விரிவுப்படுத்தினார்.

இங்கிலாந்தில் தோன்றிய தொழில், தொழில்நுட்பப் புரட்சியால் பொருள் உற்பத்தி முறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பெருமளவில் நுகர்பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ‘சுவைகள் மாறுகின்றன; வடிவங்கள் மாறுகின்றன; அதனால் விளம்பரங்களும் மாற வேண்டிய சூழலில் உள்ளன’ (Tastes change, fashions change and the advertisements change with them)என்று விளம்பரங்களின் வளர்ச்சியைப் பற்றி அய்ரோப்பிய நாடுகளில் குறிப்பிட்டார்கள். செய்தி ஏடுகளின் வழியாக விளம்பரத்தை முதன்முதலில் அளித்த பெருமை லா பிரஸ் (La Press) என்ற பிரான்சு நாட்டு ஏட்டுக்கே உரியதாகும். அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தில்தான் 1840ஆம் ஆண்டு விளம்பர முகமை (Advertising Agency) வால்னி பி. பால்மர் (Volney B. Palmer) என்பவரால் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இவர்தான் ஏடுகளுக்கும் விளம்பரம் அளிப்பவர்களுக்கும் இடையேயான முதல் தரகர் (ளுயீயஉந க்ஷசடிமநச) என்ற பெயரையும் பெறுகிறார்.

1900ஆம் ஆண்டில்தான் விளம்பரம் செய்வதை ஒரு தொழிலாக அறிவித்து இதே பிலடெல்பியா மாநிலத்தில் என்.டபிள்யு. ஹயர் அண்டு சன்ஸ் (N.W. Hyer & Sons) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. சிக்மண்ட் பிராய்ட் என்ற உளவியல் அறிஞரின் ஒன்று விட்ட சகோதரரான எட்வர்ட் பெர்னஸ் என்பவர்தான் புதிய உளவியல் யுக்திகளின் வழியாக மனித உணர்வு களைத் தூண்டி, விளம்பரங்களின்பால் நுகர்வோரை ஈர்க்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

இவர் தற்கால விளம்பரத்தின் நிறுவனர் என்றும் அழைக்கப்படுகிறார். வானொலி வழியாக 1920 முதல் விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டன. வானொலி நிகழ்ச்சிகளை விளம்பர நிறுவனங்கள் அளிக்கும் முறையும் இக்காலக் கட்டத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சு வானொலி நிலையம் வழியாகத் தொடங்கப்பட்டது.

1950ஆம் ஆண்டில்தான் தொலைக்காட்சிகளில் வணிக ஒளி பரப்புகள் தொடங்கப்பட்டன. 1960ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் ஊடகங்கள் வழியாக விளம்பரங்கள் செய் யும் முறை புகுத்தப்பட்டது. கேபிள் தொலைக்காட்சிகள் வழியாக 1980களிலும், 1990களில் இணையம் வழி யாக விளம்பரங்கள் செய்யும் நிலை உருவாயிற்று.

இவ்வாறு, விளம்பரம் விரிந்துகொண்டே செல்கிறது. விளம்பரங்களுக்காகச் செய்யப்படும் செலவினை யார் ஏற்பது என்ற ஒரு பொருளாதாரக் கேள்வியும் 1930க்கு பிறகுதான் பொருளாதாரக் கோட்பாடுகளில் விவாதிக் கப்பட்டது. சந்தைப் பொருளாதாரக் கூறுகளை விளக்கிப் பல கோட்பாடுகள் உருவாயின. நிறைவுப் போட்டி (Perfect Competition), நிறைகுறைப் போட்டி (Imperfect Competition , முற்றுரிமை (Monopoly), முற்றுரிமைப் போட்டி (Monopolistic Competition), இருவர் முற்றுரிமை (Duopoly) , சில்லோர் முற்றுரிமை (Oligopoly) எனப் பல்வேறு போட்டிகளின் அடிப்படையில் சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகள் பொருளியல் அறிஞர்களால் வகைப்படுத்தப்பட்டன.

எட்வர்ட் ஹெஸ்டிங்ஸ் சேம்பர்லின் என்ற பொருளியல் அறிஞர் முதன்முதலாக விளம்பரங்களைப் பற்றிய கூறுகளுக்குத் தனது நூலில் (Theory of Monopolistic Competition, 1933) விளக்கமளித்தார்.

‘விற்பனைக்கான செலவுதான் விளம்பரம். ஆனால், இந்த விளம் பரச் செலவை உற்பத்திச் செலவோடு இணைக்கக் கூடாது. விற்பனைச் செலவான விளம்பரம் பொருள் களின் விற்பனையைப் பெருக்குவதற்குத்தான் பயன் படுத்தப்படுகிறது’ என்றும் குறிப்பிட்டார். ஆனால் இன்றைய விளம்பரங்கள் இந்தப் பொருளாதாரக் கோட்பாடுகளைக் கடந்து ஒரு பெரும் தொழிலாக உருவெடுத்து நுகர்வோரையும், குழந்தைகளையும், முதியோர்களையும், பொது மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்ற கருத்து வலிமை பெற்று வருகிறது, இணையத்தைப் பார்த்தாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி களைப் பார்த்தாலும், வானொலியைக் கேட்டாலும், சாலைகளில் பயணித்தாலும், பேருந்துகளில் சென்றாலும், கைப்பேசியைத் தொட்டாலும் விளம்பரங்கள் ஓடி வந்து நம்மைச் சுற்றி முற்றுகை இடுகின்றன.

மாபெரும் தலைவர் காந்தி கண்ணை மூடிக்கொண்ட குரங்கு, காதை மூடிக்கொண்ட குரங்கு, வாயை மூடிக்கொண்ட குரங்கு என மூன்று சிறு உருவங்களை வைத்து, “தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே, தீயதைப் பேசாதே” என்று உருவகப்படுத்தினார். இன்றைய நிலையில் இந்த மூன்று குரங்குகளும் அவை வெளிப் படுத்தும் கருத்துகளும் விளம்பரத்தைப் பார்த்துக் கண்ணைத் திறந்து, காதால் கேட்டு, வாயால் கத்தும் அளவிற்கு விளம்பரச் செலவு அதிகரித்து வருகிறது.

2007 முதல் 2012 வரை உலகில் அதிக அளவில் விளம்பரச் செலவு செய்த நாடுகளின் பட்டியல் அண் மையில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் (ரூபாய் மதிப்பில்)

அமெரிக்கா 1 லட்சத்து 12 கோடி

சீனா 57 ஆயிரத்து 288 கோடி

ரஷ்யா 51 ஆயிரத்து 150 கோடி

இங்கிலாந்து 28 ஆயிரத்து 24 கோடி

பிரேசில் 28 ஆயிரத்து 24 கோடி

இந்தியா 19 ஆயிரத்து 592 கோடி

ஜப்பான் 14 ஆயிரத்து 570 கோடி

தென்கொரியா 12 ஆயிரத்து 958 கோடி

தென்ஆப்பிரிக்கா 12 ஆயிரத்து 834 கோடி

அரபு நாடுகள் 12 ஆயிரத்து 276 கோடி

இந்தியாவில் இத்தகைய விளம்பரச் செலவால் ஏறக்குறைய 50 விளம்பர நிறுவனங்கள்தான் பலன் பெறுகின்றன. இவை பெரும்பாலும் கொல்கத்தா, மும்பை, புதுதில்லி ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன. உலகில் 10 பன்னாட்டு விளம்பர நிறுவனங்கள் ஏறக்குறைய 80 விழுக்காடு விளம்பரங்களைச் செய்து அதிக லாபங்களை ஈட்டி வருகின்றன. பெரும்பாலும் இவைகள் அமெரிக்க நிறுவனங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரங்களில் முதன்மைப்படுத்தப்படும் மது அருந்துதல், புகை பிடித்தல் காட்சிகளைப் பார்த்து மது அருந்துவோர், புகைபிடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று சமூக இயலாளர்கள் கூறுகின்றனர். உடலுக்கு ஊறு செய்யும் மது அருந்துவது, புகையிலை உட்கொள்ளும் பழக்கம் முழுமையாகத் தடை செய்யப்படாமல் விளம்பரங்களின் மீது உடலுக்குத் தீங்கானது என்று ஒரு எச்சரிக்கைத்தாள் மட்டும் மிகச் சிறிய அளவில் ஒட்டப்படுகிறது.


நுகர்வோர்களை இந்த விளம்பரங்கள் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன; தரமற்ற பொருட்களை விற்பதற்கு ஊக்கமளிக்கின்றன என்று பல ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அண்மைக் காலமாகப் புகழ்பெற்ற ஆங்கில, தமிழ் இதழ்களில் முதல் பக்கம் முழுவதுமே விளம்பர முகமூடி அணிந்து கொண்டு வலம் வருகின்றன. இந்த இதழ்களுக்குத் தன்மானமோ, சுயமரியாதையோ, தன் கட்டுப்பாடோ, ஊடக நெறிகளோ இல்லை என்பதற்கு இந்த விளம் பரங்களே அடையாளங்களாகின்றன.

இந்தியாவில் நுகர்வேர்களின் உணர்வுகளை ஏமாற்றி மேலை நாடுகளில் விற்பனையாகாத பன்னாட்டுச் சந்தைப் பொருட்களை இந்தியாவில் குவித்தவண்ணமே உள்ளனர். தேவைக்கு அதிகமான பொருட்களின் குவிப்பையும், மேல்நாட்டுப் பொருட்களின் மீது மோகத் தையும், கவர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றனர். ஏழை எளியோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் உள்நாட்டுச் சிறு-குறுத் தொழில்கள் சிதைந்து வருகின்றன. கிழக்கிந்தியக் குழும ஆட்சியில்கூட நடை பெறாத இந்தச் சுரண்டல்முறை தற்போது விளம் பரங்கள் வழியாக அரங்கேறி வருகின்றன.

எடுத்துக்காட்டாக மட்டைப்பந்து விளையாட்டில் ஒரு காலத்தில் சிறந்த வீரர்கள் பயன்படுத்திய மட்டைகள், பந்துகள் ஏலம் விடப்பட்டன. ஆனால் இன்றோ விளையாட்டு வீரர்களையே ஏலம் எடுத்து வருகின்றனர். இத்தகைய மோசடிகளையும், ஆபாசங்களையும் உள்ளடக்கிய மட்டைப்பந்து விளையாட்டின் போது செய்கின்ற விளம்பரங்கள் நொடிக்குப் பல கோடி எனக் கணக்கிடப்படுகிறது.

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளாவது சில கட்டுப்பாடுகளைச் சட்டத்தின் வழியாக வரையறை செய்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, பிபிசி தொலைக் காட்சி நிறுவனம் 1927 வரை தனியார் நிறுவனமாக இருந்த நிலையைச் சட்டத்தின் வழியாகப் பொதுநிறு வனமாக மாற்றினர். சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இன்றளவும் பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக விளம்பரங்கள், செய்திகள், விவாதங்களுக்கிடையே இடம்பெறுவதில்லை. கனடா நாட்டிலும் இதே முறை தான் பின்பற்றப்படுகிறது. அமெரிக்காவில் 1967க்குப் பிறகு பொது ஒளி, ஒலிபரப்புச் சட்டம் வழியாகச் சமு தாயத்தின் நன்மைக்காகச் சில கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டு வருகின்றன.

இந்த விளம்பர நோய் தேர்தலின் போது, மக்களாட்சி முறைமையையே சிதைத்து வருகிறது. காசு கொடுத்துத் தவறான செய்திகளை ஏடுகளில் வெளி யிடும் போக்கும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. நடுவண் அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணி திவாரி, 2014 பிப்ரவரி 5ஆம் நாள் நடைபெற்ற நாடாளுமன்றத் தொடர் கூட்டத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்த பதில் எல்லோரையும் வெட்கித் தலைகுனியச் செய்தது. மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின் போது காசு கொடுத்து வெளியிடும் செய்திகள் தொடர்பாக 165 வழக்குகளும், இராஜஸ்தான் மாநில சட்ட மன்றத் தேர்தலின்போது 85 வழக்குகளும், தில்லி சட்டமன்றத் தேர்தலின்போது 25 வழக்குகளும், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலின்போது 93 வழக்கு களும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார், அவர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19-1 (ஏ) பிரிவின் கீழும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழும் விளம்பரங்களைப் பற்றிய பல சட்ட உட்பிரிவுகளை நடுவண் அரசு இயற்றியுள்ளது. ஆபாச விளம்பரங்கள், தண்டனைச் சட்டத்தின் கீழ்த் தடை செய்யப்பட்டுள்ளன.

1956ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி ஊறு விளைவிக்கும் பொருள்களை விற்பனை செய்வதும், விளம்பரம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

1984 சட்டத்தின்படி பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதுபோன்று 1994ஆம் ஆண்டு உடல் உறுப்பு மாற்றுச் சட்டத்தின் வழியாக மனித உறுப்புகளை விற்பனை செய்வதும், அதற்காகத் தரகு வேலைகளில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டுள்ளன.

2003ஆம் ஆண்டு சிகரெட், புகையிலைப் பொருள்கள் விளம்பரத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிச் சட்டம் 1951ன்படி தேர்தலின்போது விளம்பரங்கள் செய்வது ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல சட்டங்கள் இருப்பினும் உடல் உறுப்புகளை விற்று லாபம் பெறும் மருத்துவர்களும், தரகர்களும் இணையத்தின் வழியாக, கமுக்கச் செய்திகள் வழியாகத் தங்களின் வணிகத்தை இன்றும் தொடர்கின்றனர். தொலைக்காட்சி, வானொலி யில் செய்யப்படும் விளம்பரங்கள், குறிப்பாக, பண்பலை ஒலிபரப்புகளில் வினாடிக்கு வினாடி செய்யப்படும் விளம்பரங்கள், இடையிடையே செய்யப்படும் கிண்டல் கள், கேலிகள் தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ் மொழி யையும் சிதைத்து வருகின்றன.

விளம்பரங்களால் பாமர மக்களும் ஏமாற்றப்படுகிறார்கள். ஏழை, எளிய குடும்பங்களில் நடைபெறும் பிறப்பு, காதுகுத்தல், மணவிழா, இறப்பு போன்ற குடும்ப நிகழ்வுகள் கூட சிறிய, பெரிய எண்ணுரு விளம்பரப் பலகைகளாக (Digital Banner) ஊர்புறந் தொடங்கி நகர்ப்புறம் வரை இன்றைக்குப் பெரும் காட்சியாக நம் கண்முன்னே விரிகிறது.

சினிமா நடிகர்கள், நடிகைகளைப் பற்றிய அருவருக்கத்தக்க எண்ணுரு விளம்பரப் பலகைகள் முதன்மைச் சாலைகளில் தொடங்கி சந்து பொந்து வரை வைக்கப்படுகின்றன. இதற்கு அரசியல்வாதிகள் தான் முதன்மைக் காரணமாக அமைகின்றனர். தமிழகத்தில் குடிகெடுக்கும் குடிக்குப் பிறகு விளம்பர வெறியும் வளர்ந்து வருகிறது என்பது வேதனையிலும் வேதனை. உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு வரி செலுத்தாமலே இந்த விளம்பரப் பலகைகள் எல்லாம் வைக்கப்படுகின்றன என்பதே உண்மை. அவர்கள் காட்டுகிற வழியில் இந்தப் பாமர மக்களும் தங்கள் சேமிப்பில் விளம்பரச் செலவினைச் செய்து வீணாகிப் போகின்றனர்.

சிறிய ஏடுகள், கொள்கை சார்ந்த வார, மாத ஏடுகளில் மட்டும்தான் விளம்பரம் என்பது அந்த ஏடுகள் சமுதாயத்திற்குத் தேவையான நல்ல கருத்துகளைப் பதிப்பதற்காகப் பண உதவி என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பெரு முதலாளிகளால் நடத்தப்படும் செய்தித் தாள், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரங்களால் முதலாளித்துவம் ஊட்டி வளர்க்கப்படுகிறது. கொள்ளை லாபத்திற்குக் கொள்ளை லாபம் என்பது போல, இந்த விளம்பரங்கள் முதலாளித்துவப் பகல்கொள்ளைக்குத் துணை போகின்றன.

பல சட்ட இயல் அறிஞர்களும், சமூகஇயல் அறிஞர்களும் இந்தியாவில் விளம்பரங்களையும், ஆபாசங்களையும் கட்டுப்படுத்துவதற்குப் பல சட்டங்கள் இருப்பினும் அவைகள் நடைமுறையில் செயல் திறனற்றவைகளாக இயங்குகின்றன என்றும் குறிப்பிடுகின்றனர்.

விளம்பரங்களால் ஏற்படும் மோசடிகளை முழுமை யான அளவில் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த கடுமையான சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டால்தான் விளம்பர வெறி குறையும். பராசக்தி படத்தில் உடுமலை நாராயண கவி -

‘பிணத்தைக் கட்டியழும் போதும் தாண்டவக்கோனே!

பணப் பெட்டி மீது கண் வையடா தாண்டவக் கோனே!’

என எழுதிய பாடல் வரிகளுக்கு ஏற்ப, பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்வுகளிலும் விளம் பரங்களைச் செய்து பணப் பெட்டிகளை அடுக்கும் மோசடி, கறுப்பு பண முதலைகளின் ஆட்டம் எப்போது அடங்கப் போகிறதோ? என்று தணியுமோ இந்த விளம்பர மோகம்?

Pin It