valasa-vallavan 400ராசாசி 21-4-1938இல் கட்டாய இந்தியைத் திணித்து உத்தரவு பிறப்பித்தவுடன் 1938 மே மாதம் முழுவதும் குடிஅரசு இதழில் இந்தியை எதிர்த்து தலையங்கங்கள் தீட்டப்பட்டன. இராசாசி இந்தியை எதிர்ப்பாளர்களை ஒடுக்க கடுமையான அடக்குமுறைச் சட்டத்தை கொண்டுவர காங்கிரசு கட்சியிடம் அனுமதி பெற்றதைத் தொடர்ந்து இத்தலையங்கம் தீட்டப்பட்டது.

“அக்கிரகார சரணாகதி மந்திரிகளின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் நெருங்கிவிட்டது. தமிழ்நாட்டில் ஒரு சிறு அளவுக்கு இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஆரம்பித்த உடன் அதை ஒடுக்குவதற்கு அவசியமான அடக்குமுறைகளைக் கையாள முதல் மந்திரி தோழர் கனம் ஆச்சாரியார், காரியக் கமிட்டியார் அதிகாரம் பெற்று வந்துவிட்டாராம்.

மற்றும் எப்படிப்பட்ட கிளர்ச்சியாய் இருந்தாலும் அதற்கு வகுப்புவாதம் என்கின்ற பெயரைக் கொடுத்து அடக்கி விட அனுமதி பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இதே சாக்கில் தன்னை ஆதரிக்காத பத்திரிகைகளையும் தங்களது உண்மையான நடத்தைகளையும் யோக்கியதைகளையும் உள் எண்ணங்களையும் வெளியிடும் பத்திரிகைகளையும் ஒழிப் பதற்கும் அனுமதி பெற்று வந்துவிட்டார்களாம்.

தலைவர்கள் யோக்கியதை :

இந்த “அனுமதி”களின் யோக்கியதை நாமறியாத தல்ல. காங்கிரஸ் தலைவரின் யோக்கியதையையும், காரியக் கமிட்டியாரின் யோக்கியதையையும், காங்கி ரசின் சர்வாதிகாரியான காந்தியாரின் யோக்கியதையையும் பற்றித் தனித்தனியாகவும், சேர்த்தும் பல தடவை எழுதியும் சொல்லியும் வந்திருக்கிறோம். கனம் ராஜகோபாலாச்சாரியாரின் யோக்கியதையைத் அறிந்தவர்கள் காந்தியாரின் யோக்கியதையை தனியாக அறிவதற்கு முயற்சிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

நம் நாட்டுத் தோழர்கள் சத்தியமூர்த்தி, வரதாச்சாரி, சந்தானம் ஆகியவர்கள் யோக்கியதையை உணர்ந்த வர்களுக்கு தோழர்கள் பண்டித நேரு, போஸ் போன்ற வர்களின் யோக்கியதையை அறிய முயற்சிக்க வேண்டியதில்லை. அது போலவே தோழர்கள் முத்துரங்க முதலியார், பக்தவச்சலம் முதலியவர்களை உணர்ந்தவர்கள் தோழர் பஜாஜ் படேல் பிரசாத் முதலியவர்களின் யோக்கியதைகளை உணரக் கவலையெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இதுபோலவே மற்றும் தோழர்கள் குப்புசாமி, அண்ணாமலை, சுப்பையா, உபயதுல்லா, சுப்பிரமணியம், காமராஜ், முத்துசாமி முதலிய தோழர்களை உணர்ந்தவர்கள் வடநாட்டு மற்ற காரியக் கமிட்டி மெம்பர்களையும் மற்றத் தலைவர்களையும் பற்றி அறிய நினைக்க வேண்டிய தில்லை.

இதில் ஏதாவது வித்தியாசம் இருக்காதா என்றால் மேலே குறிப்பிட்ட நம் நாட்டுத் தோழர்களுக்கு நம்மைப் பற்றியும், நம் நாட்டைப் பற்றியும், இங்கு பார்ப்பனர்கள் நம்மை எப்படிக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது பற்றியும் நன்றாகத் தெரியும். ஆனால் குறிப்பிட்ட வடநாட்டுத் தலைவர்கள் என்பவர்களுக்கு நம்மைப் பற்றியும் பார்ப்பனர்கள் நம்மை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பற்றியும் நன்றாய்த் தெரியாது.

தென்னாட்டைப் போன்றதே வடநாடும் :

என்றாலும் நம் நாட்டுப் பார்ப்பனர்களின் நாண யத்திற்கும் யோக்கியப் பொறுப்புக்கும் நடத்தைக்கும் வடநாட்டு பார்ப்பனர்களின் நாணயத்துக்கும், யோக்கிய தைக்கும், நடத்தைக்கும் சிறிதுகூட வித்தியாசம் காண முடியாது என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டிய தில்லை.

என்றாலும் நம் நாட்டுப் பார்ப்பனர்களின் குணம் அறிந்த அநேக பார்ப்பனரல்லாத தோழர்கள் வட நாட்டுப் பார்ப்பாரிடம் சற்று யோக்கியதையும், மரியா தையும் வைத்து இருப்பதாகக் காணப்படுவதற்குக் காரணம், வடநாட்டுப் பார்ப்பனர்களைப் பற்றி நம் நாட்டுப் பார்ப்பனரும் அவர்களது பத்திரிகைகளும் செய்யும் பித்தலாட்டப் பிரசாரமும் நம்மவர்களைக் கூலிக் காரராகப் பிடித்துக் கூலி கொடுத்துக் கவிபாடும்படி செய்யும் பிரச்சாரமும் நம்நாட்டார்களைவிட வடநாட்டவரகள் யோக்கியர்கள் என்றும் மாபெரும் தியாகிகள் என்றும் கருதும்படியாக ஆக்கிவிடுகிறது. இதைத்தவிர வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகக் கூறுவதற்கில்லை.

இப்படிப்பட்டவர்களைக் கொண்டு கூட்டிய கூட்டத்தில் ஆச்சாரியார் அடக்கு முறைக்கு “அனுமதி” பெற்று வந்துவிட்டார் என்றால், அது ஏதோ ஒரு மகாபிரமாதமென்றோ அல்லது அந்தப் படிச்செய்து தீர வேண்டிய அவசியத்தைக் காட்டுகிற தென்றோ மலைக்கத்தக்க காரியம் என்றோ நாம் கருதவில்லை.

ஆச்சாரியருக்கு சக்தி இருந்தால் :

அப்படிப்பட்ட அரசியல் யோக்கியதை உடையவர்கள் கூட்டத்தில் “அடக்குமுறை கையாள வேண்டியது அவசிய”மென்று தீர்மானம் செய்துவிட்டதினாலேயே அதற்கு அவசியமும், நீதியும் இருக்கிறது என்பதாக ஆகிவிடாது. ஆனால் அடக்குமுறை நடத்த வேண்டும் என்பது கனம் ஆச்சாரியாரின் ஆசை என்பதும், அதையும் செய்து பார்த்துவிட ஆச்சாரியார் துணிந்து விட்டார் என்பதும் விளங்கிவிட்டது. மற்றும் அவருக்குச் சக்தி இருந்து காரியமும் நடைபெறுவதாய் இருந்தால் ஒரே மூச்சில் தமிழர்களை அனுமார்களாக்கித் தாம் ஒரு ராமனாக அவருக்கு ஆசை இருக்கலாம் என்பது தமிழர்கள் பூராவும் சதா சர்வகாலம் ராம பஜனையும், ராமபக்தியும், ராமர் தொண்டு செய்யும்படி செய்துவிடுவார் என்பதும் தெரிந்துவிட்டது. அதற்கு யோக்கியதை இல்லாததால் தான் இப்போது இந்தியைப் புகுத்தித் தமிழர்களை ராம பக்தராக்கப் பார்க்கிறார்.

அதை எதிர்ப்பவர்களை அடக்கப் பார்க்கிறார்.இந்த அடக்குமுறையையும் தமிழ்மக்கள் எதிர்பார்த்துத்தான் ஒரு கை பார்க்கிறது என்கின்ற துணிவின்மீது இத்தொண்டில் இறங்கி இருக்கிறார்களே ஒழிய, ஆச்சாரியார் பூச்சாண்டிக்கும் காரியக் கமிட்டியின் மிரட்டலுக்கும் பயந்து ஓடுகிற நிலை யில் இங்கு எந்தத் தமிழனும் இன்று ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் இறங்கவில்லை என்பதைக் காரியக் கமிட்டி யும் ஆச்சாரியாரும் உணர வேண்டுமாய் ஆசைப்படுகிறோம்.

காரியக் கமிட்டியார் பொறுப்புடையவர்களானால்

காரியக் கமிட்டிக்கு ஏதாவது கடுகளவு பொறுப் பாகிலும் கவலையாகிலும் இருக்குமானால் ஆச்சாரியார் அடக்குமுறைக்கு அனுமதி கேட்டவுடன் அப்படிப் பட்ட அனுமதி கேட்கும் காரியம் எதற்கு என்றும், அதற்கு அவசியம் என்ன என்றும் அறிய கவலை எடுத்து விஷயங்களை நன்றாய் உணர்ந்து பிறகு பரிகாரம் தேடி இருப்பார்கள். இந்தியாவில் அதிகாரி வர்க்க ஆட்சி இருக்கிற காலத்தில் வகுப்புத் துவேஷமும் வகுப்புக் கலகமும் ஏற்படும்படியான காரியங்கள் நடக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது காங்கிரஸ்காரர்களுடைய-அதுவும் மாகாண ஆட்சி சுதந்திரத்துடன் கூடிய ஆட்சி நடக்கும் போது ஏன் வகுப்புத் துவேஷமான காரியம் அவர்கள் எல்லைக் குள் நடக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.

காரியக் கமிட்டி தீர்மானம் :

இதுபோலவே கனம் ஆச்சாரியார் தனது சட்டசபை மெஜாரிட்டி பலத்தினால் என்ன கொடுமை வேண்டு மானாலும் செய்யலாம் என்பதற்காகவே காரியக்கமிட்டி ஆச்சாரியாருக்கு அடக்குமுறைக்கு உத்தரவு கொடுத் திருப்பதாகவே தெரிகிறது. என்றாலும், ஒரு கை பார்க் கும் எண்ணத்தில்தான் தமிழ் மக்கள் இதில் பிரவேசிக் கிறார்களே ஒழிய அடக்குமுறை வராது என்று கருதி யாரும் பிரவேசிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தவிர சென்னையில் இந்த ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி விஷயமாய் தோழர் ஸ்டாலின் ஜகதீசன் அவர்கள் 1-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதமிருக்கிறார். மற்றும் தோழர் பல்லடம் பொன்னுசாமி அவர்கள் முதல் மந்திரி வீட்டு வாசலில் உண்ணாவிரதமிருக்கப் போனவரை சிலர் நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் கூடி திட்டம் தீர்மானிக் கும்வரை பொறுத்திருக்கும்படி நிறுத்தி இருக்கிறார்களாம்.

எப்படியும் தோழர் பொன்னுசாமி ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து முதல் மந்திரி வீட்டின் முன் பட்டினி கிடந்து சாவதாக உறுதி கொண்டு இருக்கிறார் எனத் தெரிகிறது. இனி கல்வி மந்திரி வீட்டின் முன் மற்றொரு தோழர் பட்டினி கிடந்து சாகப் போகிறாராம். பல தோழர்கள் தடுத்தும் தோழர் ஸ்டாலின் ஜகதீசன் இணங்காமல் சாகப்போகிறார். இன்னும் பலர் இக்காரி யத்தில் பிரவேசிக்கலாம் என்றாலும் எதிர்ப்புக் கிளர்ச்சியின் திட்டம் இது மாத்திரமல்ல என்பதோடு அதில் இது முக்கியமானதல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்ப்புக் கமிட்டியார் பல திட்டங்கள் வகுப்பார்கள்.

பல இடங்களில் கிளர்ச்சி நடக்க வேண்டி இருக்கும். ஆதலால் இப்பொழுது முன்வந்துள்ள தொண்டர்கள் போல் இன்னும் பலர் வேண்டியிருக்கிறது.

வெளிநாட்டு நண்பர்கள் பலர் தங்கள் அனுதாபத் தைத் தெரிவித்து நம்மை ஊக்கி வருகிறார்கள். ஆனாலும் காரியத்திற்குப் பொருளாதார உதவியும் வேண்டி யிருப்பதால் இந்தியாவுக்கு வெளியிலும் நம் மாகாணத் துக்கு வெளியிலும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் அபி மானிகள் தகுந்த பொருளுதவி செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.

பொருளுதவி செய்பவர்கள், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக் காரியதரிசியான, “தோழர் கே.ஏ.பி. விஸ்வநாதம் அவர்கள், திருச்சி” என்ற விலாசத்துக்கு அனுப்பிக் கொடுக்க கோருகிறோம். தொண்டர்கள் முன்வர வேண்டுமாய்க் கோருகிறோம். இதன் அவசியத்தைப் பற்றி முன்பு இரண்டு தடவை எழுதி இருக்கிறோம். இனிமேல் எழுத சௌகரியப்படுமா?

அதுவரை நம் பத்திரிகைகளை விட்டுவைத் திருப்பார்களா? என்பன சந்தேகமாய் இருக்கிறதால் வெளிநாட்டு, உள்நாட்டுத் தோழர்கள் இதை அலட்சிய மாய்க் கருதாமல் சற்று மான உணர்ச்சியோடு கருது மாறு வேண்டுகிறோம்.

“குடிஅரசு”-தலையங்கம் - 22.05.1938

(தொடரும்)

Pin It