26.3.2014இல் சென்னையிலிருந்து வாலாஜா ரோடு ரயில் நிறுத்தம் வரை கேட்ட உரையாடல்கள்.

இரண்டு பெரியவர்கள் பேசியது. ஒருவர் வெள்ளைச்சட்டை மற்றவர் வண்ணச்சட்டை போட்டவர்கள். இருவருக்கும் வயது 65க்குக் குறையாது. இவர்களில் வெள்ளைச் சட்டைக்காரர் பேசியது.

“இப்பொழுதெல்லாம் நம்மை கூத்தாடிகள் அதிகம் கூறுபோட்டுப் பார்க்கின்றனர். தமிழகத்தில்தான் அறிஞர் பட்டம் பெற்ற கூத்தாடிகள் அதிகம். இவர்களின்-கூத்தாடித்தனத்தை அரசியலில்-அதுவும் தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக நடிக்கின்றனர். காவிரி நீர் பிரச்சனை தீர்ந்துவிடும்.

சாதிக் கலவரம் ஒழிந்து விடும். பெண்களுக்கு இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேறும். மகளிர் மசோதா வருகிற பாராளுமன்றக் கூட்டத்தில் நிறைவேறும் என்றும், மதுவை பூரணமாக அகற்றுவோம் என்றும் கூறுகின்றனர். இவை அனைத்தும் ஓட்டு வாங்கக் கூறும் நடிப்பு. உலகமகா நடிகர்கள் இவர்கள் என்று கூறினார் வெள்ளைச் சட்டைக்காரர்.

வண்ணச்சட்டை போட்டவர் : “ஆமாம் ஆமாம் ஓட்டுக் கேட்பவனுக்கு ஒரு தகுதியும் இல்லை. தேர்தலில் நிற்பவன் திரையரங்கில் கள்ள டிக்கெட் விற்றவர்; கொலை கொள்ளைகளில் ஈடுபட்டவர் போல் செயல்படுகின்றனர்.

மக்களின் பணத்தைச் சுருட்டியவர் சுருட்டிய பணத்தைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு கட்சியில் இடையூறு என்றால், வேறு கட்சிக்கு மாறி விடுகின்றனர், கட்சியின் கொள்கையை கடைப்பிடிக் காத இவர்கள் எப்படிப் பெரியார் வழி, அண்ணா வழி, காமராசர் வழி செயல்படுவார்கள்? கட்சியின் முன் னோடிகள் வகுத்த கொள்கைகளைப் பெயரளவுக்குப் போட்டுக் கொண்டு ஓட்டுக் கேட்கின்றனர். இதுவே பெரிய கூத்தாடித்தனம்.

ஓட்டு கேட்கும் நேரத்தில் மட்டும் பொது மக்கள் தேவை. பிறகு பல வழிகளில் வரியை மக்கள் தலையில் சுமத்தி வசூலித்து மீண்டும் அவர்களுக்கு யானைப் பசிக்குக் கொடுக்கும் சோளப்பொறி மாதிரி இனாம் அரிசி, இனாம் ஆடு, மாடு, தொலைக்காட்சிப் பெட்டி போன்றவற்றைக் கொடுத்து நாங்கள்தான் வள்ளல்கள் என்று கூறிக்கொள்கின்றனர்.

உண்மையாக மக்கள் தேவை என்ன என்பதை கண்டு செய்வதில்லை. தமிழகத்திற்கு வந்தவர் தேநீர் குடிக்கப் பணமில்லாதவர்கள், ஓட்டுநர், தங்க இடமில்லாமல் தோழி வீட்டில் தங்கியவர்கள், இலங்கையிலிருந்து வந்தவர் அனை வரும் கோடிக்கணக்கில் அரசியலில் சேர்ந்து நடித்த பின்னர் சம்பாதித்தனர்” என்று கூறினார் வண்ணச் சட்டைக்காரர்.

தேர்வு எழுதச் செல்லும் மாணவனைக் கவனிக்க 5000 பறக்கும் படை. தவறு செய்யும் மாணவனுக்குத் தண்டனை மூன்று ஆண்டு தேர்வு எழுதத் தடை.

ஆனால் அரசியல்வாதிகள். பல தவறுகள் செய்து இந்த நாட்டை ஆட்சி செய்யத் துடிப்பவர்கள் செய்யும் தவறுகளுக்கு சட்டத்தின் ஓட்டையில் தப்பி விடுகின்றனர்.

இது அரசியல் சட்ட மோசடியாகும். எனவே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்யும் முன் எவ்வளவு உற்சாகப்படுத்தி ஓட்டு கேட்டாலும் விழிப்புடன் சிந்தித்துச் செயல்படுவோம்.

Pin It