மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், 15.3.2014 சனிக்கிழமை, சென்னையில் திருவல்லிக்கேணி சிவ. இளங்கோ இல்லத்தில், காலை 10 மணிக்கு, பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக்குரிய செய்திகளைப் பற்றி, கூட்டத் தலை வர் வே. ஆனைமுத்து உரையாற்றினார். அதைத் தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர்கள் இரா. பச்சமலை, சி. பெரியசாமி; மாவட்டச் செயலாளர்கள் வாலாசா வல்லவன், காஞ்சி சி. நடராசன், அரியலூர் இரா. கலியமூர்த்தி, கடலூர் பா. மோகன், பெரம்பலூர் மா. நாராயணசாமி, வேலூர் மோ.சி. சங்கர், நாகை-சீர்காழி முத்து. அன்பழகன், விழுப்புரம் ஆ.கு. ஆறுமுகம், திருச்சி இரா. கலியபெருமாள், புரட்சிக்கவிஞர் கலை இலக்கிய மன்றச் செயலாளர் கவிஞர் தமிழேந்தி, மாணவர் அணிச் செயலாளர் ஆ.முத்தமிழ்ச்செல்வன், மாணவர் அணித் துணைச் செயலாளர் தி. துரை சித்தார்த்தன், உயர்மட்டக்குழு உறுப்பினர் க. முகிலன், அனைத்திந் தியப் பேரவைப் பொதுச் செயலாளர் கலச. இராமலிங்கம், மாணவர் அணி - பகுத்தறிவாளன், சேலம் மக்கள் உரிமை இயக்கத் தோழர் ம. கிருஷ்ணகுமார், திருச்சி ந. கருணாகரன், சென்னை நாத்திகன் சாமி, அறக் கட்டளை அறங்காவலர் துரை. கலையரசு, மாணவர் அணி க. இராவணன் ஆகியோர் உரையாற்றினர்.

பின்கண்ட தீர்மானங்கள் ஒருமுகமாக நிறைவேற்றப்பட்டன.

1. 2014 சனவரி 4, 5-இல், செயங்கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற, “சிந்தனையாளன் பொங்கல் சிறப்பு மலர் வெளியீடு” மற்றும் இரண்டு நாள்கள் நடைபெற்ற மாநாடுகள், இவற்றுக்கான வரவு-செலவுக் கணக்கு விவரம், துரை-கலையரசு அவர்களால் படிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. மாதம் ஒருமுறை, “சிந்தனையாளன்” மற்றும் கட்சி யின் கணக்கு விவரங்களை கணக்கு ஆய்வுக்குழுவின் ஆய்வுக்கு உட்படுத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது.

2. இலங்கையில் 2009 மே திங்களில் நடைபெற்ற ஈழத் தமிழர் அழித்தொழிப்புப் போரில், இலங்கை அரசு செய்த போர்க் குற்றங்களை முன்வைத்து, அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் முன்னர் அமெரிக்கா, மூன்றாவது தடவையாகக் கொண்டு வந்துள்ள தீர்மானம் வலிமையானதாக இல்லை. அங்கு நடந்த போர்க் குற்றங்களைப் பற்றிய எல்லாச் சான்றுகளையும், இங்கிலாந்து நாடும், தனியார் புலனாய்வுத் துறையும், அய்.நா. மனித உரிமைகள் குழுவின் தலைவர் நவிப் பிள்ளையும் துலாம் பரமாக, மனித உரிமைக் குழுவினர் முன் காட்சிப் படுத்தி, அனைத்துலக விசாரணை வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கைக்கு இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் மற்றும் புலம் பெயர்ந்த ஈழ அரசு நிர்வாகிகளும் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளும் நேரில் முழு ஆதரவைத் தெரிவித் துள்ளனர். இந்தக் கோரிக்கையை, இந்திய அரசு, அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் முன் வலியுறுத்தி, இலங்கை அரசின் பேரில் போர்க்குற்றம் பற்றி விசாரணை நடத்தி, ஈழத் தமிழர் பேரில் இலங்கை அரசினால் இழைக்கப்பட்ட கொடுமைகளை ஆய்வு செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று, மா.பெ.பொ.க. இந்திய அரசினரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

3. ஈழத் தமிழர்களுக்கு முழுத் தன்னுரிமை வழங்கிட இலங்கை அமைச்சர் அவையும், இலங்கை நாடாளு மன்றமும் முடிவெடுத்திடவும், இலங்கையிலும், உலக நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களிடையே பொதுக்கருத்து வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் தரவேண்டும் என்றும்; அத்துடன் அய்.நா. அவையினருக்கும், அய்.நா. பாதுகாப்பு ஆணையத்திற்கும் இந்திய அரசு இத்த கைய தீர்மானத்தைக் கொண்டு சென்று நிறை வேற்றிட இந்திய அரசினர் ஆவன செய்ய வேண்டும் என்றும் மா.பெ.பொ.கட்சி வேண்டிக் கொள்கிறது.

இன்னமும் முள்வேலிக் கூடங்களில் அடைத்து வைத்திருப்போரை விடுவிப்பதும், வடக்கு மாகாணத்தில் தமிழர் வீடுகளில் சிங்களவர்களை குடிவைப்பதைத் தடுத்து நிறுத்துவதும், இந்து கோவில்களைப் பவுத்தக் கோவில்களாக மாற்றுவதைத் தடுப்பதும், தமிழ் மொழியையும் தமிழர் வரலாற்றையும் அடையாளந் தெரியாமல் கல்வித் திட்டத்திலிருந்து நீக்குவதைத் தடுப்பதும் மிக அவசரமானவை ஆகும்.

இந்த இரண்டு தீர்மானங்களையும் தமிழ்நாட்டுப் பெருமக்கள், கட்சி வேறுபாடு கருதாது ஆதரிக்க வேண்டும் என்று இக்குழு வேண்டிக் கொள்கிறது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மா.பெ.பொ.க. சார்பில் 2014 சூன் 9 திங்கள் கிழமையன்று சென் னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

4. ஆண்டுதோறும், வழக்கமாக ஏப்பிரல் 14 முதல் அம்பேத்கர்-பாவேந்தர் பிறந்த நாள் விழாவை ஒட்டித் தமிழ்நாடு முழுவதிலும் மா.பெ.பொ.க. பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

தமிழ் நாட்டில் ஏப்பிரல் 24இல் தேர்தல் நடைபெறுவ தால், 2014 மே 1 முதல் மா.பெ.பொ.க. சார்பில் தமிழ்நாடு முழுவதிலும், “அம்பேத்கர்-பாவேந்தர் பிறந்த நாள் விழா மற்றும் மே நாள் விழாக்களை நடத்துவது என்றும்; பகல் நேரத்தில் ஊர்தோறும் ஒலிபெருக்கி மூலம் கொள்கைப் பரப்புரை செய்வ தென்றும்”; உண்டியல் ஏந்தி நிதி திரட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

5. தமிழ்நாடு உயர்நீதிமன்ற மதுரைக்கிளைச் சார்பிலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பிலும், வழக்குரைஞர் சங்கத்தினர், உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியில் வாதாட உரிமை வேண்டும் என்றும், தமிழ் மொழியில் தீர்ப்புகள் எழுத உரிமை வேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றங்களின் முன்னர் பல நாள்களாக வழக்குரைஞர்கள் உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர்.

இக்கோரிக்கை வெற்றி பெறும் வகையில் தமிழ்நாட்டு அரசினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டுப் பொதுமக்களும், மாணவர்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்றும், இப்போராட்டத்திற்கு மா.பெ.பொ.க. முழு மனதுடன் ஆதரவு அளிப்பது என தீர்மானிக் கப்படுகிறது.

பொதுக்குழுவில் தோழர்கள் வைத்த கருத்துக்களைப் பற்றியும், மேலேகண்ட தீர்மானங்களைப் பற்றியும் வே. ஆனைமுத்து உரையாற்றிய பின், இரவு 7 மணிக்குப் பொதுக்குழு முடிவுற்றது.

Pin It