65 ஆண்டு சுதந்தர இந்தியா தனது 2012-13 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நாடாளு மன்றத்தில் 16.03.2012 அன்று வைத்துள்ளது. நாட்டின் ஆண்டு நிதிநிலை அறிக்கை வெகு மக்களின் மேம்பாட்டிற்காகப் பன்முகத் திட்டங்களைக் கொண்ட தாக இருக்க வேண்டும். ஆனால் இதன் உள்ளடக் கத்தை ஆய்வு செய்தால் உண்மையில் ஓர் அடிப் படையான வினா எழுகிறது? அதாவது இந்திய அரசு உண்மையில் திட்டமிடத் தவறுகிறதா? அல்லது தவறுதற்கே திட்டமிடுகின்றதா? நிதி நிலை அறிக் கையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதற்கு முன் இந்தியாவின் நிலை என்ன என்று அரசே சொல்வதை முதலில் காணலாம்.

இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைப்பதற்கு முந்தைய நாள் சென்ற நிதியாண்டின் பொருளாதார நிலை பற்றிய ஆய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைப்பதை மரபாகக் கடைப்பிடித்து வருகிறது. அதன்படி 2011-12க்கான பொருளாதார ஆய்வறிக்கை 15.03.2012 இல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. ஒரு பக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அளவு கோலான உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பு (GDP) உயரளவில் இருந்தே வருகின்றது என்ற கூற்று எழும்போது, அது நாட்டில் வளம் படைத்தோருக்கு மட்டுமே என்ற உண்மை வெளியாகிறது. வெகுமக்களின் வாழ்க்கை தொடர்ந்து வீழ்ச்சிக்குள்ளாகியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இது “வளம் படைத்தோருக் கும் வளமற்றோருக்கும் இடையிலுள்ள பொருளாதார இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது” என்ற நடுவண் திட்டக்குழுத் துணைத் தலைவர் கூற்றிலிருந்து உறுதிப்படுகிறது. எனவே பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் வெற்றுக் கூச்சல் என்றுதான் கொள்ள வேண்டும்.

அந்த ஆய்வறிக்கையில் பல விவரங்கள் தரப்பட் டுள்ளன. பள்ளிப் பருவ வயதிலுள்ளோர்களுள் பள்ளி யிலுள்ளோர் உலக அளவிலான விழுக்காட்டைக் காட்டிலும் இந்தியாவில் குறைவாகத்தான் உள்ளது. ஏன் வங்கதேசம், பாக்கிஸ்தான், இலங்கை, எகிப்து, வியட்னாம், சைனா போன்ற நாடுகளின் அளவிலும் குறைவாகத்தான் இந்தியாவில் உள்ளது. இதேபோன்று ஆண், பெண் விகித வேறுபாடு அதாவது 1000 ஆண் களுக்கு எவ்வளவு பெண்கள் உள்ளனர் என்று கணக் கிட்டால் உலக அளவினைக் காட்டிலும் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. பாக்கிஸ்தான், வங்கதேசம் போன்ற பின்தங்கிய நாடுகளிலுள்ள வேறுபாடு இந்தியாவி லுள்ள வேறுபாட்டைக் காட்டிலும் குறைவாக உள்ளது.

தனியொருவரின் சராசரி ஆண்டு வருவாய் உலக அளவிலும் பின்தங்கிய நாடுகளான வங்கதேசம், பாக்கிஸ்தான் போன்ற பின்தங்கிய நாடுகளிலும் இந்தியாவில் உள்ளதைக் காட்டிலும் அதிகமாகத்தான் உள்ளது. பொருளாதார வளர்ச்சி அதிகமாக உள்ள சீனா போன்ற நாடுகளிலும், இக்குறியீடு இந்தியா வைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. உலக மக்களின் சராசரி வயதை ஒப்பிடுகையில் இந்தியாவில் சராசரி வயது குறைவுதான். பொருளாதார வளர்ச்சி குறை வாக உள்ள வங்கதேசம், பாக்கிஸ்தான் நாடுகளை ஒப்பிடுகையிலும் இந்தியாவில் நிலை குறைவாகத் தான் உள்ளது. ஊட்டச்சத்துச் குறைவாகவுள்ள குழந் தைகளின் விழுக்காடும் கொடுமையான வறுமையின் பிடியில் உழன்று கொண்டிருக்கும் சோமாலியா நாட்டைக் காட்டிலும் இந்தியாவில் அதிக அளவில் உள்ளனர் என்ற அவல நிலை அய்க்கிய நாடுகள் அவை வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்திய நாட்டில் பிறக்கும் குழந்தையின் எடை குறைவாகவுள்ள குழந்தைகளின் விழுக்காடும் ஆசிய கண்டத்தில் உள்ள பிற நாடுகளில் உள்ளதைக் காட்டிலும் அதிகமாக உள்ள இழிநிலைதான் என்று அவ்வறிக்கை கூறுகிறது. குழந்தைகள் பிறக்கும் போது எடைகுறைவாக அதாவது 2.5 கிலோவிற்குக் குறைவு என்றால் அதன் இளமைக் காலங்களில் எலும்புறுக்கி நோய் தாக்கிடலாம் என்று மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாட்டிலுள்ள 25 கோடி குடும்பத்தினுள் மூன்றில் இரண்டு பங்காக ஊர்புறங்களிலுள்ள குடும்பங்களில் அடிப்படை வசதி களான வீடு, மின்சாரம், மருத்துவம் போன்றவை இல்லாமை மலிந்து கிடக்கிறது என்ற விவரங்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கும் கீழேயுள்ள மக்களின் விழுக்காடு உலகின் பல நாடுகளில் உள்ள தைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும், மேற் சொன்ன குறியீடுகளிலும் இந்தியா பின் தங்கியுள்ள தாலும் உலக அளவில் மனித மேம்பாடு குறியீட்டில் 184 நாடுகளுக்குள் 137 ஆம் இடத்தில் கீழ் நிலையில் உள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

இந்த வறுமைக் கோட்டை வரையறுப்பதற்கு இந்தியத் திட்டக்குழு செய்து வரும் குளறுப்படி வெட்கி நாணத்தக்கது. உலக நாடுகள் யாவும் எள்ளி நகை யாடும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு மட்டும் போதுமான அளவு கிடைப்பவர் என வரையறுத்துள்ளனர். 2004-05 ஆண்டில் ஒருவரின் நகரிலிருப்போர் ரூ.32/-ம் ஊர்ப்புறத்திலிருப்போர் ரூ.28/-ம் ஒரு நாள் செலவு செய்வாரெனில் அவர்கள் வறுமைக் கோட் டிற்கு மேலுள்ளோர் என்று கருதப்படுவர் என நடுவண் அரசுத் திட்டக்குழு ஒரு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையில் கணக் கிட்டால் 34% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழுள் ளோர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செலவுத் தொகை மிகவும் குறைவானது என்று பல பொருளியலாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் இப்போது வேறு அளவீடுகளைக் கணக்கிற் கொண்டு 2009-2010 ஆண்டுக்கான வறுமைக் கோடு அளவைத் திருத்தி வரையறுத்துள்ளது நடுவண் திட்டக்குழு. அதன்படி ஒருவர் நாளொன்றுக்கு நகரத்தில் ரூ.28/-ம் ஊர்ப்புறத்தில் ரூ.22/-ம் செலவு செய்வோர் வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளோர் எனக் கொள்ளப் படுவர். இதன் அடிப்படையில் இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ளோர் 29% மக்கள் எனக் கணக்கிட்டுள்ளது நடுவண் திட்டக்குழு. இதன்படி 5% மக்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்துவிட்டனர் என்று தம்பட்டம் அடித்து கொள்கிறது அரசு.

இந்த இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் சராசரியாகப் பணவீக்கம் 7-8 விழுக்காடு. பணவீக்கம் இருக்கும் போது பணத்தின் மதிப்பு அதாவது வாங்கும் திறன் அந்தளவுக்கு குறைந்துவிடும். இயல்பு நிலை இவ்வாறு இருக்கும்போது 2004 இல் வறுமைக் கோட்டுக்கென வரையறுக்கப்பட்ட ரூ.34/- மற்றும் ரூ.28/- ஐந்து ஆண்டுகள் கழித்து 2009இல் இது ரூ.28/- மற்றும் ரூ.22/- என்று எவ்வாறு இறங்குமுகமாகக் குறைவாகக் கணக்கிடப்பட்டது. எவ்வளவு வன்கொடுமையான செயல். இவ்வளவு கீழ்த்தரமான முறை பின்பற்றப்பட்டுள்ளது என்பது நாட்டுக்கே இழிவு என்றுதான் கருதமுடியும்.

ஏப்ரல் 2012 முதல் மார்ச் 31 முடிய வருகிற 2012-2013 நிதி ஆண்டு நிதிநிலை அறிக்கையின் படி திட்டமிடப்பட்டுள்ள மொத்தச் செலவுத் தொகை ரூ.14,90,925 கோடி. இது 2011-2012 நிதி ஆண்டின் திட்டமிட்ட மொத்தச் செலவு ரூ.12,59,729 கோடியைக் காட்டிலும் ரூ.2.3 இலக்கம் கோடி மட்டுமே அதிகம். நாட்டின் பணவீக்கம் 10% அளவில் இருந்துவரும் நிலையில் வெறும் பணவீக்கம் வழியாக உயர்ந்த தொகை ரூ.1.3 இலக்கம். இதுபோக உண்மையில் உயர்த்திருப்பது ஒரு இலக்கம் கோடி ரூபாய்தான். 2011-2012 ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள செலவுத் தொகை யில் வெறும் 8% அளவுக்குத்தான் அதிகரித்துள்ளது?

முதலில் இத்தொகையை அரசு எவ்வாறு ஈட்டு கின்றது எனப் பார்க்கலாம். நேரடி வரி, மறைமுக வரி என மொத்த வரி வரவு ரூ.10,77,812 கோடி. இதில் வெறும் 28% அளவுக்கு அதாவது ரூ.3,06,741 கோடி மாநிலங்களுக்கு அவற்றின் பங்காக அளிக்கப்படுகிறது. எஞ்சிய ரூ.7,71,071 கோடி நடுவண் அரசுக்குக் கிடைக் கிறது. மேலும் வரியில்லா வரவு என ரூ.164,614 கோடி திரட்டப்படுகிறது. மேலும் திரும்பப் பெறப்படுகிற கடன்தொகை, பிற வரவு என கிடைக்கும் தொகை ரூ.41,650 கோடி. ஆக மொத்தம் கிடைக்கும் வருவாய் ரூ.9,33,335 கோடி மட்டுமே. எனவே திட்டமிடப்பட்ட மொத்தத் செலவுத் தொகை ரூ.14,90,925 கோடியில் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.5,13,590 கோடியை நடுவண் அரசு கடனாகப் பெறத் திட்ட மிட்டுள்ளது. இதுதான் நிதிப்பற்றாக்குறை எனப்படுகிறது. அதாவது உண்iயான வரி வருவாய் வரவில் பாதியான 50% அளவுக்குக் கடனாகப் பெற்றுத்தான் மொத்தச் செலவை ஈடுகட்ட வேண்டி யுள்ளது. இந்த அளவுக்குக் கடன் பெற்றுதான் செலவுத் தொகையைத் திரட்டவேண்டுமா? வேறு வழிகளே இல்லையா? பல வழிகள் உள்ளன. அவை கீழே.

பெரு முதலாளியக் குழுமங்கள் வழி வரி வரவு ரூ.1,95,786 கோடி, வருமான வரி வரவு ரூ.1,95,786 சொத்து வரி ரூ.1,244 கோடி என மொத்தம் ரூ.5,70,257 கோடியான நேரடி வரிவரவை சற்றே உயர்த்தி அதிக வரவை ஈட்டியிருக்க முடியும். ஆனால் மக்கள் தொகையில் வெறும் 10% க்கும் குறைவாக உள்ள இவ்வரி செலுத்துவோர் சிறிதும் மனம் கோணாத-இன்னல் அடையாத வகையில் தான் வரி விதிப்புக் கொள்கை திட்டமிடப்படுகிறது என்பது கையாலாகாத்தனம். இதில் கொடுமை என்ன வென்றால் இவர்களை மகிழ்விப்பதற்காக 2011-12 ஆம் ஆண்டை விட ரூ.4500/- கோடி வரை குறை வாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் வன்கொடுமை என்னவென்றால் இதில் இவ்வளவு கரிசனத்துடன் இருக்கும் நடுவண் அரசு மறைமுக வரிவிதிப்பில் தாராளமாக வரியை உயர்த்தி உள்ளது. ரூ.46,940 கோடிக்கு அதிகமான மறைமுக வரி விதித்து எளிய மக்களை வாட்டி வதைக்கிறது.

நேர்முக வரியைப் பொறுத்தமட்டில் அது ஒரு தனி மனிதனின் வருமானத்தையும் சொத்தையும் அடிப் படையாகக் கொண்டது. அதன்படி பெரும் பணக்காரர்கள் அதிகமாகவும், நடுத்தரப் பணக்காரர்கள் குறைவாக வும் வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் மறை முக வரியைப் பொறுத்தமட்டில் அன்றாடம் காய்ச்சி யாக உள்ள சுமார் 40 கோடி மக்களும் பெரும் பணக் காரர்களும் பொருள்கள் வாங்குவதற்கு ஒரே அளவி லான வரி செலுத்த வேண்டியிருக்கும். காட்டாக மருந்து, உணவு பொருள் போன்ற இன்றியமையாத அன்றாடத் தேவைப் பொருள்களை ஒரே வரி விலை கொடுத்துத் தான் வாங்க வேண்டியிருக்கும். இது எளியோர்க்குப் பெருஞ்சுமையாக நேரிடும். இது மன்னராட்சிக் காலத்தில் கருவூலம் கரையும் போது எளிய மக்களிடம் இன்றியமையாப் பொருள்களை வலுக்கட்டாயமாக கொள்ளையடித்து பறித்துக் கொண்டு வந்து கருவூலத்தை நிரப்புவார்களாம். அதே நிலைதான் மக்களாட்சி என்று சொல்லப்படும் இக்காலத்திலும், மறைமுகவரி என்ற பெயரால் எளிய மக்கள் மறைமுகமாக கொள்ளை யடிக்கப்படுகிறார்கள். இந்த இழி நடப்புகளுக்கு எதற்கு ஓர் அரசு என்ற நிறுவனம், எதற்குத் திட்டக்குழு, எதற்கு பொருளியல் வல்லுனராகக் கருதப்படும் மன்மோகன் முதன்மை அமைச்சர், இன்னுமொரு பொருளியல் மேதை எனச் சொல்லப்படும் மான்டெக் அலுவாலியா, திட்டக்குழு துணைத் தலைவர்.

இங்கு ஓர் ஒப்பீடு, 2011-12 ஆண்டு நேரடி வரி வருவாய்களான கார்ப்பரேட் வரி வரவு ரூ.3,59,990 கோடி, வருமானவரி வரவு ரூ.1,72,026 கோடி. இவை 2012-13இல் முறையே ரூ.3,73,227 கோடி, ரூ.195786 கோடி. இவ்வரிகள் முறையே ரூ.13,000/- கோடி ரூ.23000 கோடி அதிகமாகியுள்ளன என நடப்பு ஆண்டு நிலவும் பணவீக்கம் 9% - 10% அளவை கருத்திற்கொண்டால் இதனாலேயே இவ் வரிகள் முறையே ரூ.36000 கோடி ரூ.17000 கோடி அதிகரித்திருக்க வேண்டும். இதன்படி பெருமுதலாளிய நிறுவனங்கள் மீதான வரி நிலை மதிப்பில் (Constant Price) முற்றிலுமாக உயர்த்தப்படவே இல்லை என்பது மட்டுமின்றி முன்பைவிட வரியை ரூ.23,000/- கோடி அளவுக்குக் குறைத்துத்தான் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வரி செலுத்துவோர் பல வகைகளில் வரி விலக்குச் பெறுவோராகவும், அதற்கு மேலாகச் சலுகைகள் எனப் பல இலட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி பெறுவோராக இருக்கின்றனர்.

 

வருவாய் ஈட்டுவதில் வஞ்சமாக நடந்து கொள்ளும் அரசு, செலவு செய்வதிலும் வெகுமக்களுக்கான ஒதுக் கீட்டைக் குறைத்து அவர்களை வாட்டி வதைத்து, வருவாய்-செலவு என இரு வகையிலும் கொடுமை இழைப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது இந்திய அரசு.

நாட்டின் வருவாயில் 21% அளவுக்கு வட்டிக்காக ஒதுக்கப்படுகிறது. 2011-12ஆம் ஆண்டில் வட்டிக்கான ஒதுக்கீடு ரூ.267986 கோடி என்பது 2012-13 ஆம் ஆண்டிற்கு ரூ.319759 கோடி என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டைக் காட்டிலும் 20% அளவுக்கு - ரூ.51733 கோடி அதிகமாகியுள்ளது. மொத்த வருவாயில் வட்டிக்கு மட்டும் ஐந்தில் ஒரு பங்குக்கு மேல் அதிகமாவதற்குக் காரணம் அரசு மேலும் மேலும் பெருமளவு புதிய கடன்கள் வாங்கி வருகின்றது. இவ்வாறு பெருமளவு வட்டி செலுத்த ஏழை எளிய மக்களை மறைமுக வரி மூலம் கசக்கிக் பிழிந்து கொள்ளையடித்து ஈடு செய்கின்றது.

மொத்தக் செலவுத் தொகையில் கணிசமான அளவு பாதுகாப்புக்குச் செலவிடப்படுகிறது. 2011-12 இல் ரூ.1,64,415 கோடி என்ற அளவில் இருந்தது. 2012-13இல் 16 விழுக்காடு ரூ.28,993 கோடி அதிகரிக்கப்பட்டு அது ரூ.1,93,408 கோடியாக உயர்ந்து விட்டது. இது மொத்த வருவாயில் 13 விழுக்காட்டை விழுங்கிவிட்டது.

ஆனால் கல்வி, மக்கள் மருத்துவம் போன்றவற் றிற்கு வெறும் ரூ.20784/- கோடி மட்டுமே. மொத்தச் செலவில் இது 1.4% தான். இதேபோன்று வேளாண்மை, தொழில், மின்சாரம், போக்குவரத்து போன்ற துறை களுக்கு வெறும் ரூ.24,105 கோடிதான். இதுவும் மொத்த வருவாயில் 1.6% தான். இவ்விரு தொகுப்பில் அடங்கியுள்ள கல்வி, மருத்தும், வேளாண்மை பரந்து பட்ட 70% க்கு மேலான வெகுமக்களாகிய பாட்டாளி, விவசாய உழைப்பாளி மக்கள் சார்ந்தவை. ஆனால் இதற்கான பங்கீடு இத்தொகுப்பிற்கான மொத்தச் செலவில் ஐந்தில் ஒருபகுதி கூட இருக்காது. பெருமளவு நிதி ஒதுக்கீடு வசதி படைத்தவர்கள் சார்ந்த அறிவில் தொழில்நுட்பம் தொலைத் தொடர்பு போன்றவற்றிற்கே சென்றுவிடும். 70% க்கு மேலான வெகுமக்களுக்கு-குறிப்பாக ஊர்ப்புற ஏழை-எளிய மக்களுக்குப் பயன் படும் அஞ்சல் துறைக்கு வெறும் ரூ.5727 கோடி அதாவது 0.4% தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொது நிதி நிலை அறிக்கையைப் பற்றி விவரித்தோம். ஆண்டுதோறும் தொடர்வண்டி நிதி நிலை அறிக்கையும் பொது நிதிநிலை அறிக்கை வைக்கப்படும் முன்பே தனியே நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். 2012-13 நிதியாண்டின் தொடர்வண்டி நிதிநிலை அறிக்கை 14.3.2012 அன்று நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.

2012-13 இல் தொடர் வண்டித்துறை மூலம் ஈட்டப் படும் மொத்த வருமானம் ரூ.1,35,694 கோடி இதில் பயணிகள், வண்டிகள் சரக்கு வண்டிகள் வழியாக மொத்தம் ரூ.1,32,552 கோடி ஈட்டப்படுகிறது. பயணி கள் வண்டிகள் மூலம் ரூ.36073 கோடியும் சரக்கு வண்டிகள் மூலம் ரூ.89339 கோடியும் வருவாய் பெறப்படுகிறது. பிற வழியாக தொடர் வண்டிக்குக் கிடைக்கும் வருவாய் ரூ.3142 கோடி ஆகும். பயணி கள் வண்டி மூலம் பெறப்படும் வருவாய் போன்று 2ஙூ மடங்கு அதிகமாகச் சரக்கு வண்டி மூலம் பெறப் படுகிறது. 2011-12 நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ.106239 கோடியாக உள்ளது. இது கிட்டத்தட்ட ரூ.29500 கோடி அதாவது சுமார் 30% அளவில் அதிகரித்துள்ளது.

இத்துறை பயணிகள் கட்டணத்தை உயர் வகுப்புக்கு மட்டும் உயர்த்தி நடுத்தர மக்கள் பயணிக்கும் பிற வகுப்புப் பயணத்திற்குக் கட்டணத்தை உயர்த்தவில்லை. தொடர்வண்டி பயணத்தை மேற்கொள்வோர் பெரு மளவில் பெருகி வருவதால் பயணக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லாமலே உயர் வருவாய் ஈட்டி செலவினங்களை ஈடு செய்து கொள்ளலாம். எனவே இது முறையாகத் திட்டமிட்ட பயணக் கட்டண உயர்வு எனக் கருதலாம். ஆனால் சரக்குக் கட்டண உயர்வு வழி ரூ.3000/- கோடி ஈட்டியிருப்பது மறை முகமாக நடுத்தர எளிய மக்களைப் பெரிதும் பாதிக்கும். இந்த வருவாயைச் சரக்குகளை அனுப்புவதில் முறையான வழிகளைக் கையாளுவதின் மூலமே வருவாயை பெரிதும் அதிகரித்திருக்கலாம்.

இத்துறை இருப்பதை மேம்படுத்துவதில்தான் 60 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவனம் கொண்டுள்ளது. புதிய இருப்புப் பாதைகள் அமைப்பதில் முற்றிலும் இத்துறை முனைப்புக் காட்டவே இல்லை. தொடக்கக் காலத்திலேயே அமைக்கப்பட்டிருந்தால் பல இன்னல் களைத் தவிர்த்திருக்க முடியும். இருப்பினும், இனி மேலாவது புதிய இருப்புப் பாதை அமைத்திட முனைய வேண்டும்.

ஒரு வளரும் நாட்டின் இருப்புப் பாதை பெருக் கத்தினால், பொருளாதாரம் பெரிதும் வளரும். மேலும் அனைத்து இருப்புப் பாதைகளையும் மின் தடங்களாக மாற்றுவதன் முலம் மாசுக் கட்டுப்படும். மாற்றுப் போக்குவரத்துகள் நாட்டின் பொருளாரத்தைப் பெரிதும் வளர்ப்பதற்குத் துணையாக இருக்காது. எனவே பொரு ளாதார மாற்றத்திற்குப் பெரும் அளவு இருப்புப்பாதை மற்றும் உயரிய இருப்புப் பாதை தடங்களுமே முதன்மையாக அமையும் என்பதால் இத்துறை இதில் முனைப்புக் காட்ட வேண்டும்.

இந்த நிதி நிலை அறிக்கைகளில் வகுக்கப்பட்டுள்ள வருவாய் முறையும் செலவு முறையும் வெகுமக்களுக்கு வாழ்வளிக்கத் தக்கதாக அமைய வேண்டும் என்றால் இவ்விரண்டும் திருத்தி அமைக்கப்படவேண்டும்.

வரிவருவாய் கீழ்வரும் இருபெரும் பிரிவான நேர்முகவரி, மறைமுகவரி விதிப்பு முறை மாற்றப்பட வேண்டும். மேல்தட்டு மக்களாக உள்ள வளம் கொழிப்போர் நேர்முக வரி அதிகம் செலுத்தும் வகையில் கார்ப்பரேட் வரி, வருமானவரி வகிதம் அதிகமாக்கப்பட்டுப் பெரும் வருவாய் ஈட்ட வழிகாண வேண்டும். அவர்கள் பெற்றுள்ள வாழ்வு, வளம் சொத்து யாவும் இந்நாட்டிலிருந்து உழைக்கும் மக்கள் வழியாகப் பெற்றவைதான் என்பதால் இந்தச் சமூகம் முழுமைக்கும் பயன்படும் வகையில் அவர்கள் திருப்பி செலுத்தி தம் பங்கை உயர் வரியாகச் செலுத்திட வேண்டும். வரி விகிதம் அவரவர் சொத்து வருமானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மறைமுக வரி விதிப்பில் இறக்குமதி செய்யப்படும் துய்த்தல் சார்ந்த பொருள்கள் மீது சுங்கவரி அதிகமாக விதிக்க வேண்டும். எளிய மக்களின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்காத வகையில் இறக்குமதித் திட்டம் வகுக்கப்பட வேண்டும். மறைமுக வரி விதிப்பு ஏழை-எளிய மக்களைப் பாதிக்காத வண்ணம் திருத்தியமைக்கப்பட வேண்டும்.

செலவினத்தைக் குறைப்பதற்கு முதலில் பாது காப்புக்கான ஒதுக்கீடு பெரிதும் குறைக்கப்பட வேண்டும். அண்டை நாடுகளுடன் நட்புறவை, வலுப்படுத்து வதன் மூலம் நாட்டின் ஆயுதக் குவிப்பை முற்றிலும் குறைத்துப் பாதுகாப்பு நிதியைப் பெரிதளவு குறைத்திட முடியும். வெற்றுப் பாதுகாப்பு என கூக்குரலிட்டுத் தொடர் பயன்பாட்டை விளைவிக்காத பாதுகாப்புச் செலவை குறைத்திடலாம். அவ்வகையில் ஆயுதம் வாங்குவதற்கென அன்னியக் கடன் வாங்குவதைக் குறைத்துக் கொண்டால் வருவாயில் பெருமளவு வட்டிக்கென்றே ஒதுக்கிட வேண்டிய நிலை மாறும்.

இவ்வாறு நிதி வருவாயைப் பெருக்கியும், செல வினங்களைக் குறைத்துக் கொண்டும் கிடைக்கபெறும் உபரி நிதியை மக்கள் நலத் திட்டங்களுக்குக் பெரு மளவுக்கு ஒதுக்கலாம். முதலில் நாட்டின் வளத்தைப் பெருக்கும் வகையில் கல்விக்கே ஒதுக்கீடு படிப்படியாக அதிகப்படுத்தப்பட்டு கல்வி மேம்பாட்டுக்கென்று 1963 இல் கோத்தாரி குழு அளித்த பரிந்துரையின்படி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஆறு விழுக்காடு வரை செய்யப்படவேண்டும். அதிலும் தொடக்கக் கல்விக்கு மிகவும் அதிகமான அளவு ஒதுக்கீடு இருக்க வேண்டும். தொடக்கக் கல்வியில் பலதர, பல்வகைக் கல்விமுறை நிலவுவதால் கல்வி அளிப்பது வணிகம் செய்வதுபோன்ற தொழிலாக மாறி வருவதை மாற்றி ஒரே சீரான கல்வி முறையைப் பின்பற்றி நாடு முழுவதும் தரமான கல்வி அளிப்பதற்குப் போதுமான நிதி ஒதுக்கிச் செலவிட வேண்டும்.

அடுத்து உழவுத் தொழில் சார் உழைக்கும் மக் களுக்கு வேண்டிய கருவிகள், பொருள்கள், மின்சாரம், பாசனத்திற்குத் தண்ணீர் என அனைத்தும் தரமாக வும் போதுமானதாகவும் கிடைப்பதற்கு ஆவன செய்யப்பட வேண்டும். பிற தொழில்களில் உயர் ஊதியம் / வருவாய் கிட்டும் வகையில் அமைக்கப்பட்ட முறையில் உழவர்கள் வாழ்வும் வளமும் பெருக அவர்கள் விளைவிக்கும் வேளாண் விளை பொருள்களுக்கு ஈடாக விலை கொடுக்கும் குறைவான விலை நிர்ணய முறையை மாற்றியமைத்து உயர் விலை கொடுத்துக் கொள்முதல் செய்ய எல்லாம் செய்ய வேண்டும். இதில் விளை பொருள்களுள் இன்றியமையாதவைகளுக்கு அரசே பொறுப்பேற்றுக் கொண்டு சலுகை விலையில் அனைவருக்கும் போதுமான அளவு கிடைக்கும் வகையில் விநியோகம் செய்யவேண்டும். மேலும் வெகுமக்கள் நலம் பேணும் திட்டங்களுக்காக அரசு பெரும் நிதி ஒதுக்கி, எல்லோருக்கும் இலவசமாக மருத்துவசதி அளித்திட வேண்டும். இதில் அரசின் பங்கு பெருமளவுக்கு உயர்த்தப்பட்டு தனியாரின் வணிக வேட்டைக் காடாக உள்ள மருத்துவத் துறையை மீட்டெடுக்க வேண்டும்.

உண்மையில் நாம் முன்னே தந்துள்ள மாற்று வழிகள் இந்த ஆட்சியாளர்களால் மனங் கொள்ளப் படுமா என்பது ஐயமே. எனவே ஆளுமை படைத்த மக்கள் மன்றத்தை அணுகுவோம். நடுவண் அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கையில் தரப்பட்டுள்ள மக்கள் நிலை குறித்த செய்திகளில் சிலவற்றை மேலே சொல்லியுள்ளோம். இன்னும் அரசு வெளியிட்ட பல அறிக்கைகள் வாயிலாகவும் அறியவந்துள்ள சில விவரங்களும் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. அதே போல் 2012-13 நிதி ஆண்டில் நிதி நிலை அறிக்கை யின் உள்ளீடுகளையும் மேலே விவரிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களைச் சிறிதேனும் கருத்தில் கொண்டு நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தால் அது இவ்வளவு பிற்போக்குத் தனமாக அமைந்திருக்காது.

இரண்டு விவரங்களையும் ஆழ்ந்து ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும். சென்ற அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சுதந்தர இந்தியாவில் ஆண்டுதோறும் வந்துள்ள நிதிநிலை அறிக்கையை ஆய்வுக்கு உட்ப டுத்தினாலும் இதே நிலைதான் வெளிப்படும் என்பதை நாம் காணமுடியும். இதே நிலைதான் நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகளும்.

உழைக்கும் மக்களின் அதிலும் பெரும் பகுதி யாக உள்ள உழவர் பெருமக்களின் வாழ்க்கை வளத் திற்கும் அரசு அளித்துள்ள நிதிநிலை அறிக்கைக்கும் சற்றேனும் தொடர்பு இருக்கின்றதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. இதில் மிகப் பெரிய இழிவு என்னவென்றால் சென்ற அறுபது ஆண்டு களுக்கும் மேலாக நிதிநிலை அறிக்கை வெளியிடல் என்ற சடங்கு ஓசையின்றி உழைக்கும் மக்களைத் தொடர்ந்து வஞ் சித்துக் கொண்டே வந்திருக்கின்றது. ஏன் எதிர்வினை இல்லை?

இதில், காங்கிரசு அரசா, காங்கிரசுக் கூட்டணியின் அரசா, பாரதிய சனதா கூட்டணி அரசா, மற்ற கட்சி களின் கூட்டணி அரசா என்ற வேறுபாடின்றி சுதந்தரம் என்ற பெயராலும், மக்கள் நாயகம் அல்லது வாக்கு என்ற வெற்று உரிமை பெயராலும் இங்கு இந்தியா வில் ஒடுக்கப்பட்ட மக்கள் உழைக்கும் மக்கள் வாழ்வு அழித்தொழிக்கப்பட்டே வந்துள்ளது. இதில் என்ன மன்மோகன் சிங்கங்கள், நரசிம்மராவ்கள், வாஜ்பாயிகள், இந்திராகாந்திகள், நேருகள், நம்பூதிரிபாடுகள், சோதி பாசுகள், இ.கே.நாயனார்கள், கருணாநிதிகள், எம்.ஜி.ஆர்.கள், செயலலிதாக்கள், மாயாவதிகள், மம்தாக்கள் என்ற வேறுபாடு ஒன்றுமில்லை எல்லாம் ஒன்றுதான்... மக்களை ஒடுக்குவதில்.

இவற்றிற்கெல்லாம் மக்களின் உண்மையான வல்லாண்மைதான் வென்றெழ வேண்டும் என்பது தான் விடிவு. இதைத்தான் இங்குள்ள பொதுவுடைமைத் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வழியாக நாம் பெறும் விடை.

தோழர் ஜோதிபாசு தனது 20 ஆண்டுக்கும் மேலான இடதுசாரி ஆட்சியை மேற்கு வங்கத்தில் தொடர்ந்து தலைமையேற்று நடத்தியபின் சொன்னார். மேற்கு வங்கம் வளமாக வாழ்கின்றதா என்று கேள்வி எழுப்பப் பட்டது. அவர் சொன்னார், “இந்த அரசமைப்பின் கீழ் இந்த நாட்டில் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கு கின்ற அரசு மக்களின் வாழ்க்கை உத்தரவாதத்திற்குப் பெரிதாக ஒன்றும் சாதித்திட முடியாது” என்று! அதுதான் உண்மையில் வங்கத்தின் மக்கள் நிலை.

சென்ற வாரத்தில் தமிழ்நாட்டின் மார்க்சிஸ்ட் பொது வுடைமைக் கட்சியின் செயலாளர் சொல்கிறார், மார்க்சு சொன்னவாறு பொதுவுடைமை மலர முற்றிலுமாகத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிட வேண்டும். அதுவன்றி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடிவரும் என்று நாங்கள் சொல்லவில்லை என்கிறார். பின் ஏன் வாக்குப் பொறுக்கிப் பன்றித் தொழுவம் சென்று பண்ணையம் செய்யவேண்டும்.

வாக்குக்கு நாக்கைத் தொங்கக் போட்டு வந்தவன், போனவனிடமெல்லாம் வழிந்து அலைந்து திரியும் போக்கை விட்டுவிட்டு உண்iயாக மக்களை அணுகி அவர்களை அணிதிரட்டி இந்த அரசு அமைப்புகளை மாற்றி வைத்து மக்களுக்கு உண்மையான விடுதலை யையும் வாழ்வையும் அளிக்க வேண்டும்.

90 ஆண்டுகாலப் பொதுவுடைமைக்காரர்களின் வரலாறு என்ன? வளர்ச்சி என்ன? மக்கள் பொதுவுடை மைக்காரனைப் எப்படிப் பார்க்கிறார்கள்? அவர்கள் எப்படி தங்களைப் பார்க்க வைத்துள்ளனர் இந்தப் பொதுவுடைமைக்காரர்கள்? இந்தியா பரந்துப்பட்ட பல மொழிவழிப்பட்ட, பல பண்பாட்டுத் தளங்களையும் கொண்ட பல்வேறு இன மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு வாழவைக்கப்பட்ட நாடு. இங்கு பொதுவுடைமைக் காரர்களின் நிலை என்ன?

இந்நிலையில் இந்தியத் தேசியம் ஒன்றை இறை யாண்மையுடன் காலனிய ஆட்சி முறையையே பின்பற்றி மக்களை ஒடுக்கி அடக்கி வதைத்துக் கொண்டு தான் இருக்கின்றது. இத்தேசிய நாட்டில் பொதுவுடைமைத் தத்துவம் இரண்டு மூன்று மாநிலங்களில் மட்டும் துளிர்விட்ட நிலையில் உள்ளது என்று சொல்லுமளவுக் குத்தான் நிலைமை. வேர் பிடித்ததா என்பதே வினாவிற்குரியது. பின் 25 மாநிலங்களில் குறிப்பாக வடமாநிலங்கள் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குசராத், மகராஷ்டிரா, அரியாணா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், பீகார் என எதிலும் துளிர்கூட விட்டதா என்பதும் கேள்விக்குறி. அடிப்படை யான புரிதல்வழி பார்த்தால் ‘வாக்கு வேட்டை வழி’ ‘பன்றித் தொழுவம்’ செல்ல 60 ஆண்டுகளுக்குமேல் முற்பட்டதனாலோ என்னவோ மக்களிடமிருந்து அன்னியப்பட்டே நிற்கும் ஈனநிலை. உண்மையில் மக்கள் பொதுவுடையினர் மீது நம்பிக்கை கொண்டுள் ளனர் என்பது தான் இருப்பு நிலை. ஆனால் அவர் களின் நம்பிக்கையை ஒன்று திரட்டி மக்கள் சக்தியாக திரட்டிட வாக்குவேட்டை தடையாகிவிட்டது என்பதே அழுத்தமான உண்மை. எனவே மக்களை மக்கள் பிரச்சனைகள் வழியால் அணுகி ஆய்ந்து மக்களுக்கு வாழ்கையையும் விடுதலையையும் வென்றிடெடுத்திட வேலைத் திட்டம் வகுத்து மக்களிடையே செயல்பட வேண்டும்.

காட்டாக வேளாண் மக்கள் அணிதிரள அவர் களுடன் களம் அமைத்துச் செயல்படவேண்டும். உழைத்து உணவளிக்கும் உழவர்கள் சென்ற 10 ஆண்டுகளில் 2ஙூ லட்சம் பேர் கடும் உழைப்புக்குப் பின் அவர்களின் விளைபொருள்களுக்கு அரசு நிர்ண யித்த ஈன விலையால் அடைந்த கடன் இன்னலால் உயிரை மாய்த்துக் கொண்டனர். இது அவர்கள் படும் இன்னல்களில் ஒரு துளி. இது செய்தியாக வெளிவரு கிறதன்றி அதற்கு இந்த அரசுகள் செவிமடுக்கவில்லை என்பது தான் உண்மை நிலை. இதில் பொதுவுடை மையரின் புரிதல் தான் என்ன?

எனவே மக்களிடம் போவோம். அவர்களுடன் ஒன்றரக் கலப்போம், உறுதி அவர்கள் வாழ்வு, விடுதலை என்ற புரிதல் பயன் அளிக்கும். இதேபோன்று மக் களுக்கான கல்வியும், மருத்துவமும் அரசின் பொறுப் பில்லை என்று மாறிவரும் சூழலால் முற்றிலும் தனியார் வணிகமயமாக்கப்பட்ட களமாகவே மாற்றப்பட்டுவிட்டது. வெகுமக்கள் படும் இன்னலுக்கு எல்லையே இல்லாது போகின்றது. இன்னும் மக்களுடன் மக்களாக உறவாடி ஒன்றிணைந்து உரம் சேர்ப்பதும் நல்ல புரிதல் பாற் பட்டதாகும்.

எனவே, வேளாண்மை, கல்வி, மருத்துவம் ஆகிய வற்றைப் பெரும் விரிந்த தளங்களாக அமைத்து மக்களை ஓரணியில் திரட்டி உண்மையான மக்கள் நாயகம் அமைக்க அணியமாவோம். இதுபோன்று மக்களை வதைக்கும் நிதிநிலையை மாற்றி மக்கள் நல நிதிநிலையை உருவாக்குவோம். மக்கள் நல்ல வர்கள், வல்லவர்கள், அவர்கள் வாழ்வையும் விடுதலையையும் வென்றெடுப்போம்.

Pin It