உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் தன் நாடகமான “12 ஆம் இரவு” என்ற நாடகத்தில் ஒருவன் மிகப் பெருமையுடயவன் என்று பயப்படாதே; ஏனெனில், சிலர் பிறக்கும்போதே பெருமையுடன் பிறக்கிறார்கள்- சிலர் சாதனை மூலம் பெருமை அடைகிறார்கள். சிலர் மீது பெருமை திணிக்கப்படுகிறது-சூழ்நிலை காரணமாக என்பார். இந்த நிலை நம் பலருக்கும் பொருந்துவதைக் காணலாம்.

இந்தச் “சூழ்நிலை” காரணமாக சிலர் பெருமை அடைவதைப் போலவே; சிலர் சிறுமை அடைவது-வாழ்க்கையில் வளமும் நலமும் இழப்பது, வழக்கு களில் சிக்கிச் சிறைப்பட்டு வாழ்க்கை சின்னாப்பின்னம் ஆவது-இவை நம் நாட்டில் ஏராளம்! ஏராளம்!

மிகப் பெரிய குற்றங்களைச் செய்தவன் / செய்தவள் அரசியல் அதிகாரத்தால், பணப்பலத்தால் பெரிய மனிதர்போல முகமூடியுடன் உலா வருவ தையும்; மிக, மிக அற்ப காரணங்களுக்காக அதுவும் பல நேரங்களில் உண்மைக் காரணங்களே இல் லாமல் சிலர் சித்ரவதைப்பட்டு, சிறைத் தண்டனை அடைவதையும் நாம் கண்டு, கண்டு, கேட்டுக் கேட்டு மனம் துடிக்கிறோம். ஆனால் விடிவு? இப்படிப்பட்டத் திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணையா? துணை செய்திருக்கிறதா? இல்லை! இல்லை!! சட்டம் மட்டுமே துணை செய்யும்.

குற்றவாளிகள் கண்காணிப்புச் சட்டம் 1958 என்பது ஒரு நல்ல சட்டம்.

ஒரு குற்றம் நடைபெறுவதற்குக் குற்றவாளி மட்டுமே காரணமா? இல்லை என்பதுதான் பதில்.

இந்திய நாட்டில் ஏழையாய் பிறப்பதே குற்றம்! நாட்டில் ஏழ்மை இருப்பதற்கு யார் காரணம்? அரசும், ஆட்சியாளர்களுமே காரணம்.

“பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்”

என்பதற்கு விளக்கம்போல

“குடிப் பிறப்பழிக்கும், விழுப்பம் கொல்லும்

பிடித்த கல்வி பெரும்புணை விழும்

நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்

பூண்முலை மாதரொடுப் புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி எனும் பாவியது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது”

என்று கூறுவதோடு

சிறையில் உள்ள சிறைவாசிகள் எல்லோரையும் விடுதலை செய்து; சிறைக்கோட்டத்தை அறக்கோட்டம் ஆக்குக என்று அரசனுக்கே ஆணையிட்டுள்ளாள் மணிமேகலை. 2000 ஆண்டுகள் ஆன பின்பும் நாட்டில் நிலை அன்றைய நிலையேதான்!

பாஸ்டீல் சிறையை உடைத்து சிறைவாசிகளை விடுதலை செய்து கொடுங்கோல் அரசர்களையும், ஆட்சியாளர்களையும் தூக்கிலிட்டும், கொன்று குவித்தும் போரிட்டு விடுதலை, சமத்துவம், சகோரத் துவம் நிலைநாட்டிய தலைவர்கள், வால்டேர், ரூசோ போன்ற பிரெஞ்சு எழுத்தாளர்கள் இங்கு இல்லை!

ஏதுமிலா ஏதிலிகள் மிகப்பலர்-இங்கு! இந்தப் பலரும் எல்லாம் உள்ள மிகச்சிலர் மீது அக்கினிப் பார்வையைத் திருப்பும் காலம் வெகுதூரத்தில் இல்லை! அது வரும்வரை தற்போது இருக்கும் நிலையில் மைய அரசு இயற்றிய குற்றவாளிகள் கண்காணிப்புச் சட்டம் 1958 ஒரு நல்ல சட்டம்.

இது ஏழைக்கான ஒரு சட்டம், இது திக்கற் றோருக்கான ஒரு சட்டம், இது என்ன கூறுகிறது.

இந்தியத் தண்டனைச் சட்டத்தில் ஒரு குற்றவாளிக்கு அளிக்கக்கூடிய அதிக அளவுத் தண்டனை தூக்குத் தண்டனையாகும். தூக்குக்கு அடுத்த தண்டனை வாழ்நாள் சிறைத் தண்டனை. இந்த இரண்டு தண்டனைகளுக்கும் குறைவான தண்டனைக்குரிய எந்தக் குற்றத்தை யார் செய்திருந் தாலும்; அப்படிக் குற்றம் செய்து தண்டனை பெறும் நிலையில் உள்ள எல்லாக் குற்றவாளிகளுக்கும் உடனடியாகக் சிறைத் தண்டனை அளிக்காதே என்று கூறுகிறது இந்தச் சட்டம். என்ன! குற்றவாளிகளுக்குத் தண்டனை இல்லையா! ஏன்? எதற்காக?

ஒரு குற்றம் நடைபெறக் குற்றவாளி மட்டுமே காரணமில்லை என முன்பே கூறினோமல்லவா, அது தான் காரணம்.

குற்றம் எந்தச் சூழலில் நடைபெற்றது?

குற்றத்தின் தன்மை - விளைவு என்ன?

குற்றவாளியின் கடந்தகால நடத்தை என்ன?

என்பன போன்றவற்றை நன்கு ஆய்வு செய்து; அவை குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமையு மெனில், குற்றவாளிக்குக் தண்டனை அளித்துச் சிறைக்கு அனுப்பாமல் சில கட்டுப்பாடுகளுடன் விடுதலை செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது. இந்தச் சட்டப் பயனை எப்படிப் பெற முடியும்?

1.     இதை வழக்கு நடத்தும் நீதிபதியே தன்னிச்கை யாக முடிவு செய்யலாம் அல்லது

2.     குற்றவாளிகள் கண்காணிப்புச் சட்டத்தின் அடிப்படையில் என்னை விடுதலை செய்யுங்கள் எனக் குற்றவாளியே நீதிபதியிடம் வேண்டலாம்.

3.     குற்றவாளியின் வழக்குரைஞர் நீதிபதியிடம் கேட்கலாம்.

4.     குற்றவாளிக்குத் தனியாக வழக்குரைஞரை வைத் துக் கொள்ள வசதி இல்லாத நிலை இருந்தால் - இலவசச் சட்ட உதவி வழக்குரைஞர் நீதிபதியிடம் குற்றவாளியின் விடுதலைக்கு வேண்டலாம்.

இப்படிப்பட்ட ‘விடுதலை’ ஒரு குற்றவாளிக்குக் கிடைக்கும் நிலைமை நீதிபதி உறுதிப்படுத்தும் நிலை இருந்தால்!