போர் மூண்டு விட்டது; தமிழர் ஒன்று சேர்க :

ஆரியச் சூழ்ச்சிக்கும், தமிழர் (திராவிடர்) வீரத்திற்கும் போர் மூண்டுவிட்டது. மூளாமல் தடுக்க தமிழ் மக்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் பயனற்ற தாகிவிட்டன.

தமிழர்கட்குள் ஒற்றுமை இல்லை என்றும், தமிழர் களைக் காட்டிக் கொடுத்துத் தமிழர்களை அழிக்க, தமிழ் மக்களில் தங்களுக்கு வேண்டிய “அநுமார், சுக்கிரீவன், விபீஷணன்” போன்ற இழி மக்கள் கிடைத் திருக்கிறார்கள். இன்னும் கிடைப்பார்கள் என்றும் கருதியிருக்கும் இறுமாப்பால் “நான் செய்வதைச் செய்கிறேன். உன்னால் ஆனதைப் பார்” என்று சூழ்ச்சி யில் வல்ல நமது ஆச்சாரியார் போர்க்கோலம் கொண்டு விட்டார்.

பிரிட்டிஷ் ஆட்சியும் தனது சுயநலத்தையும், தமிழ் மக்களின் கதியற்ற நிலைமையும் கருதி தமிழர் மானத்தைச் சூறையாட ஆச்சாரியாருக்கு அனுமதிச் சீட்டு அளித்துவிட்டது.

ஆதலால் எண்ணிக்கையில் பெருத்து ஒற்றுமையின்றிச் சிதறி வலிமையில் சிறுத் துக் கிடக்கும் தமிழ் மக்களுக்குப் போக்கிடம் இல்லாமல் இன்று நலிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.

ஹிந்தி பலாத்காரம் :

ஹிந்தி பாஷை என்ற பாஷையை ஆச்சாரியார் ஆட்சியானது தமிழ் மக்களுக்குள் கட்டாயமாகப் புகுத்த சபதம் செய்து கொண்டதானது பொறுக்க முடியாத கொடுமையாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு இன்று 100க்கு 90 பேர்களுக்கு மேல் தங்கள் தாய் மொழியில் (தமிழில்) கூடக் கையெழுத் துப் போடத் தெரியாத அவ்வளவு தற்குறி - பாமரத் தன்மை இருந்து வருகிறது.

இதில் ஒரு விகிதத்தையாவது குறைக்க ஆச்சாரியார் ஆட்சி இதுவரை ஒரு சிறு முயற்சியும் எடுத்துக் கொண்டதாகச் சொல்ல எவ்வித ஆதாரத்தையும் காண முடியவில்லை.

இந் நிலையில் உள்ள தமிழ் மக்களுக்கு மற்ற ஒரு அந்நிய பாஷையைக் கொண்டு வந்து “வலுவில் புகுத்தித்தான் தீருவேன்” என்று ஆச்சாரியார் ஆட்சி சொல்லுமே யானால், இதில் ஏதாவது சூழ்ச்சியோ வஞ்சகமோ இல்லாமல், சிறிதாவது யோக்கியப் பொறுப்பு இருக்க முடியுமா என்று கேட்க வேண்டியிருக்கிறது.

உலகிலேயே இந்திய தேசம் கல்வி, அறிவற்ற நாடு என்கின்ற தன்மையில் இருக்கும்போது குறிப் பாகத் தமிழ்நாடு மிக்கப் பாமர மக்களைக் கொண்ட தாக இருக்கும்போதும் அதிலும் பழங்குடி மக்களாகிய தமிழர்களில் சராசரி 100க்கு 95 பேர் கள் தற்குறிகளாகவும், பெண்கள் 100க்கு 99 பேர் தற்குறிகளா கவும் இருக்கும் போதும் படிப்பில்லாதவர்களுக்குப் படிப்பைக் கொடுக்க வழிகோலாமல் படித்து இருக்கும் மக்களுக்கே மற்றும் ஒரு பாஷையை படிப்பிக்க முயற்சிப்பதும், பணம், ஊக்கம், நேரம் ஆகியவைகளைப் பாழடிக்க முயற் சிப்பதும் எப்படி யோக்கியமானதும் நல்லெண்ண முடையதுமான காரியமாகுமென்று மறுபடியும் கேட்கின் றோம்.

மனு முறைக்குச் சூழ்ச்சி :

கல்விக்காக மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரி கல்வி இல்லாதவர்களுக்குக் கல்வி கற்பிக்கவா அல்லது கற்றவர்களுக்கு மற்றுமொரு பாஷை கற்பிக்கவா என்று கேட்கின்றோம். இவைகளைப் பார்க்கும்போதும் தோழர் காந்தியார் முதலிய பல அரசியல் தலைவர்கள்,

“இந்தியா சுயராஜ்யம் பெறுவது என்றால் வரு ணாச்சிரம தர்மமாகிய மனுதர்ம ஆட்சி முறையை நிறுவுவதுதான்” என்று சொல்லி வந்ததை இப்போது எப்படியோ சமயம் கிடைத்த உடன் மனுதர்ம ஆட்சி ஏற்படுத்த காந்தியாரின் பிரதம சிஷியர் என்ற உரிமை பாராட்டிக் கொள்ளும் ஆச்சாரியாரின் ஆட்சி மூர்க்க முயற்சியில் இறங்கிவிட்டது.

இந்த வருணாச்சிரம மனுதர்ம ஆட்சி நிறுவப்பட்டால் இந்நாட்டுத் தமிழ் மக்களுடைய சுதந்திரம், வீரம், தன்மானம் ஆகியவை அடியோடு புதைக்கப்பட்டது என்பதுதான் கருத்தாகும்.

ஹிந்தி வடமொழி பாஷையைத் தழுவியது என்ப தோடு ஹிந்தி பாஷையின் எழுத்துக்கள் அநேகமாக வடமொழிக்கு ஏற்பட்ட எழுத்துக்களேயாகும். சப்தமும் பெரிதும் அதுவேயாகும்.

அப்பாஷையில் படிக்க வேண் டிய விஷயங்களும், படிக்க நேரும் விஷயங்களும் மனுதர்மத்தை ஆதரிக்கத் தூண்டும் விஷயங்களும் மனுதர்மப்படி நடக்கச் செய்யும் விஷயங்களுமே யாகும்.

தமிழ்நாடும் சிறப்பாகத் தமிழ் மக்களும் இன் றுள்ள இந்த இழிநிலைக்கு அதாவது தன்மானமற்று, எதிரியைப் பணிந்தும், சார்ந்தும், வாழ்வு நடத்தும் மனப்பான்மை கொண்டு வாழ வேண்டிய நிலையில் இருப்பதற்குக் காரணம் ஆரிய சூழ்ச்சியால் மனுதர்ம முறையை ஒப்புக்கொண்டு இதுவரை வாழ்ந்து வந்த தேயாகும்.

ஏதோ இடைக்காலங்களில் அவ்வப்போது ஒன்றிரண்டு தமிழர்கள் தங்கள் நாட்டின் பழைய நிலைமையும், சமூகத்தின் பழந்தன்மையும், தங்கள் கலைகளின் உயர்வையும் ஓர் சிறிதாவது உணர்ந்து செய்து வந்த உண்மைத் தொண்டுகளினால் ‘தமிழர் ஆரியருக்கு அடிமைகளல்ல; ஆரியருக்குத் தொண்டு செய்யப் பிறந்தவரல்ல, ஆரியரின் போகப் பெண்டிர்களின் மக்களல்ல - சூத்திரர்களல்ல”என்று தலைநிமிர்ந்து பேசவும், பறைசாற்றவும் தமிழ் மக்களுக்கு உணர்த்தவு மான நிலை சற்று ஏற்பட்டும், மறைந்தும் மறுபடியும் தலைதூக்கியும் இப்படியே நடந்து வந்திருக்கிறது.

சைவரால் ஏற்பட்ட இழிவு :

பொதுவாக, தமிழ் மக்களை இம்மாதிரியான ஆரியப் படுகுழியில் தள்ளி என்றும் தலைதூக்காமல் இருக்கத்தக்கவண்ணம் ஆரியருக்குத் துணைபுரிந்து வந்தவர்கள் - வருகிறவர்கள் சைவர்களேயாகும்.

அவர் களும், அவர்களது சைவ சமூகமே தமிழ்நாட்டில் ஆரியத்தை வளர்த்து ஆரியர்களுக்குத் தமிழர்களை அடிமையாக்கிற்று. இன்றும் பெரும்பாலும் சைவனே தான் ஆரியர்களுக்குக் அனுமார், சுக்ரீவர்களாகவும், விபீஷணர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

இம்மாதிரி ஆரிய அடிமைச் சமய உணர்ச்சி ஏற்படாதிருந்திருக்கு மானால் இன்று ஆரியருக்கு எந்நாட்டையும் விட இத்தமிழ்நாட்டில் மாத்திரம் இத்தனை சிறப்பும் மூர்க்க உணர்ச்சியும் ஏற்பட்டிருக்க முடியாதென்றே சொல்ல லாம்.

எனவே ஆரியர்கள் நம் நாட்டில் சமயத்தின் பேரால் பெற்ற செல்வாக்கால், தான் சமூகத்தில் மேம்பாடடைந் தார்கள். சமூகத்தில் அடைந்த மேம்பாட்டால்தான் இன்று அரசியலில் ஆதிக்கம் பெற்றார்கள். அந்த அரசியல் ஆதிக்கத்தால்தான் நம்மை மநுமுறைக்குத் தள்ளுகிறார்கள்.

அப்படிப்பட்ட அவ்வாதிக்கத்திற்கு இன்றும் சைவர்களே பெரிதும் அனுமார்களாய் இருக்கிறார்கள் என்றால், சைவர்கள் தங்கள் அறிவற்ற செயலுக்குப் பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டாமா என்று கேட்கிறோம்.

உண்மைச் சைவர்களுக்குக் கடுகளவா வது தன்மான உணர்ச்சி ஏற்பட்டு, தங்களுடைய சற்சூத்திரத் தத்துவத்தை சிறிதாவது பின்வாங்கிக் கொள்ள அறிவு கொள்ளுவார்களேயானால் ஆச்சாரி யாரின் மூர்க்க ஆட்சி அன்றோடு அழியத் தொடங்கி விடும் என்பதில் யாதொரு சந்தேகமும் கொள்ள இடமில்லை என்று உறுதி கூறலாம்.

அந்த உணர்ச்சி சைவர்களுக்குச் சுலபத்தில் ஏற்படாது என்கின்ற தைரி யத்தாலேயே இன்று ஆச்சாரியார் இவ்வளவு துணிச் சலுடனும், மூர்க்க உணர்ச்சியுடனும் காரியாதிகள் செய்ய முடிகின்றன.

ஹிந்தி இஷ்டப் பாடமாகவாவது ஏன்?

ஹிந்தி பாஷை கட்டாயப் பாடமாகக் கூடாது என்பது தான் இன்று தமிழ் மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறதே தவிர மற்றபடி ஹிந்தி பாஷை தமிழர்கள் பள்ளியில் இஷ்டப் பாடமாகவாவது ஏன் நுழைய வேண் டும்? என்று கேட்பதற்கு இதுவரை எந்தத் தமிழனும் முன்வரவில்லை.

இங்கிலீஷ் ஏன் வந்தது தமிழன் பள்ளியில் எப்படி நுழைந்தது என்று சிலர் கேட்கலாம். இங்கிலீஷைக் கொண்டு வந்தவர்கள் ஆரியர்கள். இங்கி லீஷைப் பரப்பினவர்கள் ஆரியர்கள். இங்கிலீஷால் பயனடைந்தவர்கள் ஆரியர்கள். இங்கிலீஷைப் புகுத்த உத்தரவு போட்டது பிரிட்டிஷார்.

ஆதலால் இங்கிலீஷ், தமிழர்கள் பள்ளியில் புகுந்ததற்குத் தமிழர்கள் சிறிதும் பொறுப்பாளிகள் அல்ல. இங்கிலீஷின் உதவியில் ஆட்சி ஆதிக்கத்தைக் கைப்பற்றிய ஆரியர்கள் தங்களைத் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு, எதற்காக மற்றொரு அன்னிய பாஷையாகிய ஹிந்தியை தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்குப் பள்ளிகளில் புகுத்த வேண்டும்? அதுவும் ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? என்பதுதான் நமது கேள்வியாகும்.

எவ்வளவோ அதிருப்தியையும், எதிர்ப்பையும், கெஞ்சுதல்களையும், பிரார்த்தனைகளையும் சிறிதும் லட்சியம் செய்யாது ஹிந்தியைத் தமிழன் பள்ளியில், தமிழன் வரிப்பணத்தில், தமிழன் சம்மதமின்றி புகுத்த உத்தரவு போட்டாய்விட்டது.

ராஜி முயற்சி :

மற்றும் சில தமிழ் மக்கள் ஆச்சாரியாருக்கும், தோழர் ஸ்டாலின் ஜெகதீசனுக்கும் ராஜி செய்ய முயற்சிப்பதாக வெளிவந்து ராஜி நிபந்தனையாக “ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக வைக்கப்படுமே ஒழிய அதில் பரீட்சை வைக்காமலே மற்ற படிப்புகளில் மாத்திரம் தேறி இருந்தால் மேல் வகுப்புக்கு அனுப்பப்படும்” என்று ஆச்சாரியார் ஒப்புக்கொள்வதாகச் சொல்லி ராஜி பேசுகிறார்கள்.

ஹிந்தியைப் பரீட்சை வைப்பதில்லை என்று கல்வி மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் 3 மாதத்திற்கு முன்பே ஈரோட்டில் சொல்லிவிட்டார். இதில் ஆச்சாரியார் தயவு என்ன வேண்டியிருக்கிறது என்பது விளங்கவில்லை.

என்னவானாலும் ஆச்சாரியார் பிடி வாதம் சிறிதும் குறையவில்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. இப்பிடிவாதத்தைத் தமிழர் கள் ஒற்றுமையாலும் ஒன்றுபட்ட முயற்சியாலும்தான் ஒழிக்க வேண்டியிருக்கிறது.

இதற்காக 28.5.1938இல் திருச்சியில் ஒரு கமிட்டிக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் ஹிந்தியை ஒழிக்கப் போர் தொடுக்க பல முறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

பலாத்காரப் புரளி :

அம்முறைகளுக்குத் தமிழ் மக்கள் ஆதரவளித்து, போரில் இறங்கி வெற்றி பெறச் செய்ய வேண்டியது தமிழர்களின் நீங்காக் கடமையாகும் என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர வேண்டும் என்பதாக வேண்டிக் கொள்ளுகிறோம்.

போரில் காந்தியார் மிரட்டும் பலாத் காரத்தைப் பற்றி எவரும் கவலைப்படக்கூடாது. பலாத் காரத்துக்கு இந்த உலகில் காந்தியார் மாத்திரமே பாஷி யக்காரரென்று கருதும் முட்டாள் கோஷ்டியில் நாம் சேர்ந்தவரல்ல.

உண்மையில் பலாத்காரம் என்றால் சரீரத்திற்கு நோவுண்டாகும்படி செய்வதும், மனிதனுடைய சரீர பலத்தை மற்றொரு மனித சரீரத்தின் மீது பிரயோகிப்பதையுமே நாம் பலாத்காரம் என்று கருதுகிறோம்.

அப்பேர்ப்பட்ட பலாத்காரம் நமக்கு சுமார் 20 - வருஷமாகவே கூடாத - கண்டிப்பாய் கூடாத காரியமாய் இருந்து வருகிறது. நாம் வகுக்கும் எந்தப் போர் முறையிலும் இம்மாதிரி பலாத்காரத்தை அறவே வெறுத்தும் நீக்கியும் வந்திருக்கிறோம்.

ஆதலால் திருச்சி போர் முறையானது இப்படிப்பட்ட பலாத்காரமில்லாமல் மற்றபடி எப்படிப்பட்ட முறையானாலும் அதற்குத் தமிழ் மக்கள் இசைந்து ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு இதை முடிக்கிறோம்.

குடிஅரசு - தலையங்கம் - 29.5.1938

Pin It