தமிழாக்கம், அறிமுகவுரை, விளக்கக் குறிப்புகள் - எஸ்.வி. ராஜதுரை

இலண்டனில் ஹைகேட் இடுகாட்டில் உள்ள கார்ல் மார்க்சின் கல்லறையில், “தத்துவஞானிகள் உலகைப் பல வழிகளிலும் விளக்கி இருக்கிறார்கள்; செய்ய வேண்டியது என்னவோ அதை மாற்றுவதுதான்” என்கிற மார்க்சின் வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன (கார்ல் மார்க்சு 5.5.1818 - 14.3.1883).

இந்த உலகத்தை - மனித சமுதாயத்தை உழைக்கும் பாட்டாளிகளுக்கு உரியதாக எவ்வாறு மாற்றிய மைக்க வேண்டும் என்பதை முரசறைந்து உலகம் முழுவதும் எதிரொலிக்கும் வகையில், காரல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் (1820-1895) எழுதி, 1848 பிப்பிரவரியில் வெளிவந்த சிறிய நூல்தான் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்பதாகும்.

பைபிள், குரானுக்கு அடுத்து உலகில் அதிக எண் ணிக்கையில் அச்சிடப்பட்டுப் பரப்பப்பட்டுள்ள நூல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையேயாகும். 1917இல் இரஷ்யாவில் சோசலிசப் புரட்சி வெற்றி பெறுவதற்கு முன்பே கம்யூனிஸ்ட் அறிக்கை 35 மொழிகளில் 544 பதிப்பு கள் அச்சாயின.

நவீன உலகில், ரூசோவின் சமுதாய ஒப்பந்தம், அமெரிக்க அரசியல் சட்டம் - அதன் உரி மைகள், பிரெஞ்சுப் புரட்சியின் மனித உரிமை சாசனம் ஆகிய எல்லாவற்றையும்விட கம்யூனிஸ்ட் அறிக்கை தான் உலகை மாற்றியதில் முதன்மையான பங்காற்றி யது என்று மார்க்சிய ஆய்வாளர் அய்ஜாஸ் அகமத் கூறுகிறார்.

ரா.கிருஷ்ணய்யாவால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு 1975இல் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தால் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்ட ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ தான் நீண்டகாலமாகப் பெருமளவில் (கிட்டத் தட்ட பத்து இலட்சம் படிகள்) தமிழ் வாசகர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாமுவேல் மூர் என்பவரால் ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, எங்கெல்சால் சரிபார்க்கப்பட்டு 1888 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலைஅடிப்படையாகக் கொண்டு ரா.கிருஷ்ணய்யா தமிழாக்கம் செய்தார்.

குறிப்புகளுடன் சேர்த்து 116 பக்கங்கள் கொண்டது இந்நூல். 1888ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கும் 1890ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கும் எங்கெல்சு எழுதிய குறிப்புகள் தமிழில் தரப்பட்டுள்ளன.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கு மார்க்சு எங்கெல்சு இணைந்து எழுதிய இரண்டு முன்னுரைகள், மார்க்சின் மறைவுக்குப் பிறகு எங்கெல்சு தனியாக எழுதிய அய்ந்து முன்னுரைகளின் தமிழாக்கமும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

“கார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - தமிழாக்கமும் அறிமுகவுரையும் விளக்கக் குறிப்புகளும்: எஸ்.வி. ராஜதுரை” என்பதை முகப்பு அட்டையில் தாங்கிய, 481 பக்கங்கள் கொண்ட, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற நூல் கோவை ‘முகம்’ பதிப்பகத்தின் வெளியீடாக 2014 சனவரியில் வெளியிடப்பட்டது.

எஸ்.வி.ராஜதுரை தமிழகம் நன்கறிந்த மார்க்சிய - பெரியாரிய - அம்பேத்கரிய ஆய்வாளர்; மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

எஸ்.வி. ராஜதுரை எழுதியுள்ள மார்க்சியம் ஓர் அறிமுகம், அந்நியமாதல், ஜார்ஜ்தாம்சனின் முதலாளியமும் அதன் பிறகும், மார்க்சு முதல் மாவோ வரை, மனிதசாரம் ஆகிய நூல்களின் மொழிபெயர்ப்புகள், பெரியார் : சுயமரியாதை சமதர்மம், பெரியார் : ஆகஸ்டு 15, இந்து - இந்தி - இந்தியா, அந்தோனியோ கிராம்ஷி: வாழ்வும் சிந்தனையும், அல்தூஸ்ஸார்: ஓர் அறிமுகம், தலித்தியமும் உலக முதலாளியமும், ஆனந்த் டெல்டும்ப்டெ ஆங்கிலத்தில் எழுதிய ‘ஏகாதியபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்’ தமிழாக்க நூல் முதலானவை இன்றைய சூழலில் மார்க்சியத்தையும், பெரியாரியலையும், அம்பேத்கரியத்தையும் எவ்வாறு புரிந்துகொள்வது, ஆராய்வது, இணைத்துச் செயல்படுவது என்பதற்கான விளக்க நூல்களாக - வழிகாட்டிய உள்ளன. அந்த வகையில் எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில் அவருடைய நீண்ட அறிமுக உரையுடனும், விரிவான அரிய விளக்கக் குறிப்புகளுடனும் வெளிவந்துள்ள கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எனும் பெருநூல் தமிழ் வாசகர்களின் மார்க்சியச் சிந்தனையை மேலும் செழு மையூட்டுவதாகவும், புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சு வதாகவும் அமைந்துள்ள அறிவுப் பெட்டகமாகும்.

இந்நூலில் எஸ்.வி. ராஜதுரை, முன்னுரையாகப் பத்து பக்கங்களும், ‘அறிக்கையின் தோற்றமும் பய ணங்களும்’ என்று தலைப்பிட்ட பகுதியில் 93 பக்கங் களும் எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஃபிளெமிஷ், டேனிஷ் மொழிகளில் வெளியிடுவதாகத் திட்டமிடப் பட்டதாக 1848 பிப்பிரவரியில் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் சிறிய முன்னுரையின் இறுதிப் பகுதியில் கூறப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் அறிக்கை ஜெர்மன் மொழியில் வெளி வந்தபின் நாற்பது ஆண்டுகள் கழித்து, சாமுவேல் மூர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, எங்கெல்சால் சரிபார்க்கப்பட்டு, அவருடைய முன்னுரையுடனும், விளக்கக் குறிப்புகளுடனும் 1888இல் வெளி யிடப்பட்டது. (இந்த சாமுவேல் மூர் என்பவர்தான் மார்க்சின் மூலதனம் முதல் பாகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்).

1888இல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையில் குறைபாடுகளும், தவறுகளும் இருப்பதை எரிக் ஹாப்ஸ்பாம், ஹால் ட்ரேப்பர் போன்ற மார்க்சிய அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று எஸ்.வி. ராஜதுரை (இனி எஸ்.வி.ஆர்.) குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தார் வெளியிட்ட மார்க்சு எங்கெல்சு தொகை நூல்கள் ஆறாம் பாகத்தில் (Marx and Engels Collected Works Volume 6) இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் பகுதியில், 1848இல் வெளிவந்த ஜெர்மன் மூல அறிக்கைக்கும் 1888ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்குமுள்ள பாட பேதங்கள் ஆங்காங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறான 850 பாட பேதங்கள் இருப்பதாக தாமஸ் குசின்ஸ்கி கூறியிருப்பதாக எஸ்.வி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.

ஹால் ட்ரேப்பர் (Hal Draper) என்கிற அமெரிக்க மார்க்சிய அறிஞர் 1990இல் இறந்தார். அவர் தனது பன்மொழிப் புலமை ஆற்றலின் துணைகொண்டு ‘The Adventures of the Communist Manifesto’ என்னும் நூலில் ஜெர்மன் மூலத்திலிருந்து புதிய ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளதுடன், தனது மொழியாக் கத்துடன் ஜெர்மன் மூலம், மாக்ஃபர்லேனின் மொழியாக்கம், 1888ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பிலுள்ள (மூர்-எங்கெல்சு) மொழியாக்கம் ஆகியவற்றை ஒன்று டனொன்று ஒப்பிட்டுப் பார்க்கவும் வகை செய்துள்ளார்.

ஹால் ட்ரேப்பரின் இந்நூல் 1994இல்தான் வெளி வந்தது. இதை அமெரிக்காவின் ‘சோசலிச வரலாற்றுக் கான மையம்’ வெளியிட்டது.

“கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கான ஒளிவிளக்காக ஹால் ட்ரேப்பரின் நூல் இருந்தபோதிலும், எனக்கு உடன்பாடான விளக்கங்களை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளேன்.

இதே முறையில்தான் டேவிட் ரையாஸானோவ் (இவர் ஜெர்மன் மொழியிலிருந்து மார்க்சு-எங்கெல்சு மூலப் படைப்புகளை ஜெர்மனியிலிருந்து திரட்டிவந்து இரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் விரிவான விளக்கக் குறிப்புகளுடன் மொழியாக்கம் செய்தவர்.

இவர் மாஸ் கோவில் நிறுவப்பட்ட மார்க்சு - எங்கெல்சு நிறுவனத்தின் இயக்குநர்) எரிக் ஹாப்ஸ்பாம், ஃபில் காஸ்பெர், கரெத் ஸ்டெட்மன் ஜோன்ஸ், டெர்ரெல் கார்வெர் ஆகியோரின் விளக்கங்கள் சிலவற்றையும் பயன்படுத்தியுள்ளேன்” என்று எஸ்.வி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.

மேலே குறிப்பிட்டுள்ள மார்க்சிய அறிஞர்களின் விளக்கங்களையும், மார்க்சு-எங்கெல்சு மூல நூல்களிலிருந்து தான் பெற்ற புரிதல்களையும் எஸ்.வி.ஆர். தன்னுடைய தமிழாக்கத்தில் சேர்த்திருப்பது இந்நூலின் சிறப்புகளில் முதன்மையானதொன்றாகும்.

“எனது தமிழாக்கத்தில், மூர்-எங்கெல்சு ஆங்கில மொழியாக்கம், ஹால் ட்ரேப்பரின் ஆங்கில மொழியாக்கம் ஆகிய இரண்டையும் அந்தந்தப் பத்தியின் தமிழாக்கத்துக்குக் கீழே தந்துள்ளேன்.

பத்திகளை வரிசைப்படுத்துவதிலும் அவற்றுக்கு எண்களிடுவதிலும் ஹால் ட்ரேப்பர் வகுத்துள்ள முறையே இத்தமிழாக்கத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது” என்று எஸ்.வி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் மூல நூலில் ஒரு பக்க அளவில் அமைந்துள்ள முகப்புரையில் ‘அய்ரோப்பாவை ஒரு பேய் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது - கம்யூனிசம் என்னும் பேய்’ என்று தொடங்கும் பத்தி வரிசை எண்.1 எனவும், கம்யூனிஸ்ட் அறிக்கையின் இறுதி வாக்கியமான ‘அனைத்து நாட்டுப் பாட்டாளிகளே ஒன்றுசேருங்கள்’ என்பதற்கு வரிசை எண்.203 எனவும் அறிக்கை முழுவதும் பகுக்கப்பட்டுள்ளது.

ஹால் ட்ரேப்பர் உருவாக்கிய இந்த வரிசை எண் அளிப்பு முறை கம்யூனிஸ்ட் அறிக்கையை ஆழ்ந்து படிப்பதற்குப் பேருதவியாக இருக்கிறது.

எஸ்.வி.ஆர். தமிழாக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை அச்சிடப்பட்டுள்ள நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் இடப்பக்கம் வரிசை எண்ணும் தமிழாக்கமும் தரப்பட்டுள்ளன.

தமிழாக்கத்தின் கீழே மூர்-எங்கெல் சின் ஆங்கில மொழியாக்கம் தரப்பட்டுள்ளது. அதன் கீழே ஹால் ட்ரேப்பரின் ஆங்கில மொழியாக்கம் தரப் பட்டுள்ளது. அதே பக்கத்தில் இவற்றுக்கு எதிர்ப்புறத்தில் (வலது பக்கம்) அந்த பத்திரிகான விளக்கங்கள் தரப் பட்டுள்ளன.

அறிக்கையின் கடைசி வரிசை எண்.203 ஆகும். அதில் அனைத்து நாட்டுப் பாட்டாளிகளே, ஒன்று சேருங்கள்! அதற்கு அடுத்தவரியாக Working men of all countries unite! என்றும் அடுத்த வரியாக Proletarians of all countries unite என்றும் அச்சிடப்பட்டுள்ளது.

இதற்கு வலதுபுறத்தில் வரிசை எண்.203க்கான விளக்கம்: ‘அனைத்து நாட்டுப் பாட்டாளிகளே, ஒன்றுசேருங்கள்’ என்னும் சொற்றடர் பற்றி ஹால் ட்ரேப்பர் கூறுகிறார் : இது, ஜெர்மன் மூலத்தில் தனிப்பத்தியாக அமையவில்லை என்றாலும் வசதி கருதித் தனிப் பத்தியாகக் கொள்ளலாம். இந்த முழக்கம் முதன்முதலில் கம்யூனிஸ்ட் கழகம் கொண்டுவர முடிவு செய்த Communist Journal என்னும் ஏட்டின் முதல் இதழின் (அந்த ஒரே இதழுடன் அந்த ஏடு நின்றுவிட்டது)-1847 செப்டம்பரில் வெளிவந்த இதழின் முகப்பில் அச்சிடப்பட்டது. கம்யூனிஸ்ட் கழகத்தின் முன்னோடியான நீதியாளர் கழகத் தின் முழக்கமாக இருந்த ‘அனைத்து மக்களும் சகோதரர்களே’ என்பது கைவிடப்பட்டு இந்த முழக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஏறத்தாழ இதே காலத்தில் (அதாவது 1847 செப்டம்பர் 20இல்) இலண்டனில் நடந்த ஜெர்மன், பிரெஞ்சு, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த ஜனநாயகவாதிகளின் கூட்டத்தில் ‘தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அனைத்து நாட்டுப் பாட்டாளிகளும் ஓர் சமூகமாக ஒன்றுசேரட்டும்’ என்னும் முழக்கம் எழுப்பட்டதாக இத்தாலிய ஆராய்ச்சியறிஞர் ஆண்ட்ரியாஸ் கூறுகிறார்.

இந்த முழக்கத்தை முதன்முதலில் உருவாக்கியவர் எங்கெல்சுதான் என்றும் அவர் கூறுகிறார். ஆனால் இந்தக் கூற்றுக்கான வலுவான சான்றுகள் இல்லை (Hal Draper (HD)) 332-333).

ஆனால் இந்த முழக்கத்தை உருவாக்கியவர் அல்லது உருவாக்குவதில் முக்கியப் பாத்திரம் வகித்தவர் எங்கெல்ஸ்தான் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

இலண்டனிலிருந்த நீதியாளர் கழகம் மார்க்சும் எங்கெல்சும் அதில் சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தது. தாங்கள் விதித்த நிபந்தனைகளை அது ஏற்றுக்கொண்டதாலேயே மார்க்சும் எங்கெல்சும் அதில் சேர்ந்தனர்.

1847 சூலையில் நடந்த அதன் முதல் மாநாட்டில் எங்கெல்சு கலந்துகொண்டார். அந்த மாநாட் டில்தான் ‘நீதியாளர் கழகம்’, ‘கம்யூனிஸ்ட் கழகம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன் அதற்கான புதிய விதிகள் வகுக்கப்பட்டன.

அந்த விதிகள், ‘அனைத்து நாட்டுப் பாட்டாளிகளே ஒன்றுசேருங்கள்’ என்னும் முழக்கத்துடன் தொடங்குகின்றன. (மார்க்சு எங்கெல்சு தொகை நூல்கள் (MECW) பாகம் 6, பக்கம் 585). மேற்சொன்ன கம்யூனிஸ்ட்ட ஏட்டின் (Communist Journal) ஆங்கில மொழியாக்கத்தில் இந்த வாசகம், ‘‘Working Men of all Countries, Unite’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. (D. Ryaznnoff (DR)) கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கு எழுதிய முன்னுரையில் இடம்பெற்றுள்ள விளக்கக் குறிப்பு).

இந்த முழக்கத்தை உருவாக்கியவர் மார்க்ஸே என்பது ரையாஸானோவின் கருத்து (DR : 20).

அறிக்கையின் ஜெர்மன் மூலத்தில் ‘அனைத்து நாட்டுப் பாட்டாளிகளே ஒன்றுசேருங்கள் (Proletarier Aller Lander Vereinigt Euch!) என்றே கூறப்பட்டுள்ளது என்பதுடன் வரிசை எண்.203க்கான விளக்கக் குறிப்புரை முடிகிறது. எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக் கத்தின் ஒப்பரிய சிறப்பை அறியும் பொருட்டே இந்த நீண்ட விளக்கக் குறிப்பு நூலிலிருந்து இங்கே தரப்பட்டுள்ளது.

மார்க்சு எங்கெல்சால் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஜெர்மன் மொழியில் முதன்முதலாக 1848 பிப்ரவரியில் இலண்டனில் உள்ள கம்யூனிஸ்ட் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது என்பதே பொது வான கருத்தாக இருந்து வருகிறது. ஆனால் எஸ்.வி.ஆர்.

ஹால் ட்ரேப்பரை மேற்கோள்காட்டி, 1848இல் வெளி வந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் எந்த இடத்திலும் கம்யூனிஸ்ட் கழகத்தின் பெயர் ஏன் குறிப்பிடப்பட வில்லை என்பது இன்றுவரை விடைகாணாத சிக்க லான கேள்வியாகவே இருந்துவருகிறது; மேலும் கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதியவர்கள் பெயர்கள்கூட அதில் குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளார்.

கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்த 25 ஆண்டு களுக்குப்பிறகு தான் அதற்கான முதல் முன்னுரை (Preface) - 1872ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கான - மார்க்சு எங்கெல்ஸ் ஆகியோரால் எழுதப்பட்டது. அதில் அவர்கள் கூறுகின்றனர் :

“சர்வதேசத் தொழிலாளர் அமைப்பான கம்யூனிஸ்ட் கழகம் அன்றிருந்த நிலைமைகளில் இரகசியமாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் இலண்டனில் நடைபெற்ற பேராயத்தில், வெளியீட்டுக்காகக் கட்சியின் விரிவான தத்துவ ரீதியான, நடைமுறை சார்ந்த வேலைத் திட்டத்தை வரையும் பொறுப்பைக் கீழே கையெழுத்திட்டுள்ளோரிடம் (மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆகியோரிடம் - எஸ்.வி.ஆர்.) அக்கழகம் ஒப்படைத்தது.”

இதற்குமுன்பே - 1847 சூன் மாதம் இலண்டனில் நடந்த நீதியாளர் கழகத்தின் பேராயத்தின் போதுதான் இந்த அமைப்பின் பெயர் கம்யூனிஸ்ட் கழகம் என்று மாற்றப்பட்டது. இதில் எங்கெல்சு மட்டும் பாரிசிலிருந்து வந்து கலந்துகொண்டார்.

கையில் பணம் இல்லாத தால் மார்க்சால் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடிய வில்லை. இப்பேராயத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் படி எங்கெல்சு கம்யூனிசத்தின் குறிக்கோள்கள் என்ற ஆவணத்தை வினா-விடை வடிவில் எழுதினார்.

1847 நவம்பரில் நடந்த பேராயத்தில் மார்க்சும் எங்கெல்சும் கலந்துகொண்டனர். அப்போது எங்கெல்சு எழுதிய வினா-விடை ஆவணமும், பிற ஆவணங்களும் மார்க்சிடம் அளிக்கப்பட்டன.

எனவே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முழுவதும் மார்க்சாலே எழுதப்பட்டது. ஆயினும் அறிக்கையில் இருவரின் கருத்தும் இடம்பெற்றிருந்தது என்பது உண்மை. கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதிய போது மார்க்சு 30 அகவையினர்; எங்கெல்சுக்கு 28 அகவை.

எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்க நூலில், “அறிக்கையின் இன்றையப் பொருத்தப்பாடு பற்றி நான் இந்நூலில் எங்கும் எழுதவில்லை. அதுபற்றி எழுதுமாறு கோவை ஞானி வற்புறுத்தினார். அப்படி எழுதத் தொடங்கி னால், அது தனி நூலாகவே விரியும். அதற்கான உடல் தெம்போ, கால அவகாசமோ எனக்கு இருப்பதாகத் தோன்றவில்லை.

எனினும் ‘உலகமயமாக்கல்’ என்று சொல்லப்படும் இன்றைய உலகளாவிய முதலாளித் துவப் பொருளாதாரத்தைப் பார்க்கையில், இத்தகைய போக்குபற்றி ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஏதோ, ‘ஆருடம்’ கூறுவதுபோல் மார்க்சும் எங்கெல்சும் எழுதியிருப்பதைக் கண்டுவியக்காமல் இருக்க முடியவில்லை.

‘உலகமயமாக்கல்’ காலகட்டத்தில் பாட்டாளி வர்க்கம் மறைந்துவிட்டது என்றோ, அதன் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது என்றோ கூறுபவர்கள், பெரும்பாலும் ஆலைகளில் சீருடையணிந்த ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களை மட்டுமே கருத்தில் கொள்கிறார்கள்.

உழைப்புச் சக்தியைக் கூலிக்கு விற்பவர்கள் எண்ணிக்கை இன்று பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதைப் பார்ப்பதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய உலகமய முதலாளிய ஏகாதிபத்தி யத்தை இயங்கியல் நோக்கில் புரிந்துகொள்வதற்கு, எஸ்.வி. ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ள கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நூல் உற்ற துணையாக - வழிகாட்டியாக விளங்கும் என்பது திண்ணம்.

இந்நூலின் முன்னுரையின் இறுதியில், “இந்த மொழியாக்கப் பணி மார்க்சியம் தொடர்பாகத் தமிழில் செய்ய வேண்டிய பணிகள் மலையளவுக்கு இருப்பதை உணரவைத்தது. எனது பங்களிப்பு கடுகளவு; நான் பெறும் உவகையோ உலகளவு” என்று எஸ்.வி.ஆர். கூறியிருக்கிறார்.

உழைக்கும் மக்களின் விடுதலை யை - வர்க்க பேதமற்ற சமதர்ம சமூகத்தை அமைப்பதைக் கொள்கையாக ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு வரும் இப்பணியைக் கடமையாக மேற்கொள்வோம்.

முகம் பதிப்பகத்தின் முயற்சி பாராட்டத்தக்கதாயினும், இந்நூலின் சிறப்புக்கு ஏற்ற தன்மையில் நூல் கட்டமைக்கப்படவில்லை.

2014 மே மாதம் நியூ செஞ்சரி புக் ஹவுஸ் இதே நூலை வெளியிடுகிறது.

நூல் பெற:முகம், எண்.20/37, 13ஆம் தெரு, அய்யர் மனைப்பிரிவு, சிங்காநல்லூர், கோவை-5.

தொ.பே. : 0422-253938

விலை : ரூ.500/-  பக்கம் : 481

Pin It