இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தொடக்கம்

1925ஆம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்த இந்திய கம்யூனிஸ்டுகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது, இதன் பயனாக, ‘இந்தியக்குழு’ (Indian Bureau) எனச் சொல்லப்பட்ட ஒரு குழு உருவானது, கிளிமென்ஸ்தத் (ரஜினிபாமிதத்தின் சகோதரர்) ஏ.சி. பானர்ஜி, கான், உபாத்தியாயா ஆகியோர் 1925ஆம் ஆண்டில் தீவிர உறுப்பினர்களாக அக்குழுவில் இருந்தனர். ஆக்ஸ் போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் படித்துவந்த இந்திய மாணவர்களிடையே சித்தாந்தப் பிரச்சாரத்தை இக்குழு செய்தது. இக்குழுவின் பணி யானது இந்தியக் கம்யூனிச இயக்கத்துக்கு 1930களில் சிறந்த தலைவர்களை உருவாக்கிக் கொடுத்தது.

ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறப்பட் டிருந்த நிலையில், காங்கிரசு இயக்கமானது சட்ட சபைப் பணிகளில் மட்டுமே மூழ்கி, மக்களைத் திரட்டத் தவறியது. ஆனால் ஏகாதிபத்தியவாதிகளின் அடக்குமுறை அதிகரித்தது. இந்திய நாட்டின் இளைஞர்கள் இந்திய விடுதலைக்கான சரியான பாதை பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். ஒரு பகுதியினர் கம்யூனிசத்தால் கவரப்பட்டனர்; மறு பகுதியினர் பயங்கரவாதத்தின் பக்கம் தங்கள் சிந்தனையைச் செலுத்தினர், 1925 சூலை மாதத்தில் ‘வங்காளப் புரட்சி இளைஞர் அமைப்புக்கு’ கம்யூனிஸ்ட் அகிலத்தின் இளைஞர் பிரிவாகிய இளம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக் குழு விடுத்த ஓர் அறிக்கையைக் குறிப்பிடு வது பொருத்தமாக இருக்கும், இந்தியாவில் ஆங்கில ஏகாதிபத்தியத்தினை நடுங்க வைத்தது பயங்கரவாத நடவடிக்கைகள் அல்ல; மாறாக விவசாயக் கிளர்ச்சி களும், தொழிலாளர் வேலைநிறுத்தங்களுமேயாகும் என்பதால், மக்களைத் திரட்ட வேண்டியதன் அவசியத் தைச் சுட்டிக்காட்டியது.

இத்தகைய சூழ்நிலையில்தான் ஒரு கம்யூனிஸ்ட் மாநாடு கான்பூரி நகரில், சத்யபக்தா என்பவர் விடுத்த அழைப்பையொட்டி, 1925 திசம்பர் 26, 27, 28 ஆகிய நாள்களில் நடைபெற்றது. கான்பூரில் கம்யூனிஸ்ட் சதி வழக்கு நடந்துகொண்டிருந்தபோது, கம்யூனிசக் கருத்துகளில் நம்பிக்கைக் கொண்டிருப்பது என்பது சட்டப் படி குற்றமில்லை என அவ்வழக்கில், அரசு தந்த விளக்கத்தைக் கேட்ட சத்யபக்தா, அப்படியென்றால், இந்தியாவில் ஏன் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்கக் கூடாது எனக்கருதி, 1925 செப்டம்பர் 1ஆம் தேதி ‘சுஜ்’ எனும் பத்திரிகையில் ‘இந்தியர் கம்யூனிஸ்ட் கட்சி’ (Indian Communisit Party) என்று ஒன்று கான்பூரில் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் அறிக்கை விடுத்தார். சத்யபக்தா, பாட்டாளி வர்க்கச் சர்வதேசியத்தில் நம்பிக்கை கொண்டவர் அல்லர். கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தொடர்பு கொள்வதை எதிர்த்தவர். தனது கட்சிக்கும் கம்யூனிஸ்ட் அகிலத் துக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபிக்கவே, தனது கட்சியின் பெயரை “இந்தியர் கம்யூனிஸ்ட் கட்சி” என்று வைத்துக் கொண்டார்.

இம்மாநாட்டுக்கு வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தவர் ஹஸரத் மொஹானி. இம்மாநாட்டில் எஸ்.வி. காட்டே, ஜானகி பிரசாத், பாகர் கட்டா, சிங்காரவேலர், கே.என். ஜோக்லேகர், ஆர்.எல். நிம்கர், அயோத்தியா பிரசாத், சி. கிருஷ்ணசாமி, அர்ஜூன்லால் சேத்தி, குமாரானந்தா ஆகியோரைத் தான் சந்தித்ததாக முசாபர் அகமது குறிப்பிட்டுள்ளார்.

மாநாடு 1925 திசம்பர் 25ஆம் நாள் தொடங்கியது. 300 பிரிதிநிதிகள் கலந்துகொண்டதாகக் ‘கிருதி’ பத்திரிகை கூறியது. மாநாட்டைத் துவக்கி வைக்க அழைக்கப்பட்ட இங்கிலாந்து கம்யூனிஸ்ட்டாகிய சக்லத்வாலா வராத காரணத்தால், அவரது வாழ்த்துச் செய்தி, மாநாட்டின் தொடக்கத்தில் படிக்கப்பட்டது. சிங்காரவேலர் அம்மாநாட்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிங்காரவேலர் தனது தலைமை உரையில், சிறை யில் வாழும் தோழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, பெர்லினில் கொலை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் ரோசாலக்சம்பர்க், காரல்மார்க்சின் சீடர் கார்ல் லீபனிக்ட் ஆகியோரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். கம்யூனிசம், மார்க்சியக் கம்யூனிசம் ஆகியவற்றிற்குத் தனது பாணியில் விளக்கம் கொடுத்தார். இந்தியக் கம்யூனிஸ்டுகளின் இலட்சியங்கள், உடனடி நோக்கம், வழிமுறை முதலியன பற்றி உரையாற்றினார். 1925 திசம்பர் 26 இல் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கட்சிக்கு ஒரு மத்திய அலுவலகமும், காரியங்கள் புரிய இரு செயலாளர்களும் இருப்பார்கள். மாகாண அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 உறுப்பினர் களைக் கொண்ட மத்திய நிர்வாகக் குழு இருக்கும். மத்திய நிர்வாகக் குழு, தலைவர் உள்ளிட்ட ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு செயற்குழுவைக் கொண்டிருக்கும். முடிவில் ஓரளவு விரிவான அமைப்புச் சட்டம் ஒன்றும் ஏற்கப்பட்டது.

1925 திசம்பர் 27 அன்று மத்திய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் திசம்பர் 28 அன்று நடைபெற்றது. கீழ்க்கண்ட நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்திற்குத் தோழர் சிங்காரவேலு தலைமை வகித்தார். தோழர்கள் ஹஸரத் மொஹானி, ஆஸாத் ஷோபானி, எஸ், சத்யபக்தா, எஸ்.டி. ஹாசன், முசாபர் அகமது, கே.என். ஜோக்லேக்கர், எஸ்.வி. காட்டே, பாகர் கட்டா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தோழர் கிருஷ்ணசாமி சென்னைப் பகுதிக்கும், எஸ். சத்யபக்தா கான்பூர் பகுதிக்கும், முசாபர் அகமது கல்கத்தா பகுதிக்கும், எஸ்.டி. ஹாசன் லாகூர் பகுதிக்கும் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

கட்சியின் மத்திய அலுவலகத்தை பம்பாய்க்கு மாற்றுவதென முடிவு செய்யப்பட்டது. தோழர் காட்டேவுக்கு மாதம் ரூ.60 வழங்கப்பட்டு, அவர் பம்பாய் மத்திய அலுவலகப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் பத்திரிகைகளுக்கான செய்திக் குறிப்பில், முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டின் விளைவாகத் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்தியர் கம்யூனிஸ்ட் கட்சி கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில், முறையானதொரு கட்சி அமைக்கப்பட்டுள்ளது என்று வெளியிடப்பட்டிருக்கிறது.

கான்பூர் மாநாட்டில் கட்சிக்கென உடனடித் திட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை.

ஏகாதிபத்திய எதிர்ப்புக்கழகம், விவசாயிகள் - தொழிலாளர்கள் அமைப்புகள் தோற்றம் :

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கான்பூர் மாநாட்டினைத் தனது தொடக்கமாகக் கொள்கிறது. ஏனெனில் அதுவரை ஆங்காங்கே குழுக்களாக இயங்கி வந்த தற்குப் பதிலாக ஒரு முறையான அகில இந்தியக் கட்சியாக இயங்கும் கட்டத்தை இந்தியக் கம்யூனிச இயக்கம் அடைந்துவிட்டது என்பதனால்! ஆனால், “கம்யூனிஸ்ட் அகிலம் - சுருக்கமான வரலாறு” என்னும் நூலில்,

“1925-33இல் யதார்த்தத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மையத் தலைமை இல்லாதிருந்தது” என்று கூறப்பட்டுள்ளது. முசாபர் அகம்மதுவின் கருத்துப்படி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப் பெற்ற ஆண்டு, தாஷ்கண்டில் கட்சி உருவாக்கப்பட்ட ஆண்டாகிய 1920 ஆகும். ஆனால், தாஷ்கண்டில் துவங்கப்பட்ட கட்சியானது அமைப்பு ரீதியாகத் தொடர்ந்து முறையாக இயங்க வில்லை; அல்லது இயங்க முயலவில்லை. தாஷ் கண்டில் அமைக்கப்பட்ட கட்சியின் இயக்கம், பெரும்பாலும் எம்.என். ராய், அவரது துணைவியார் மற்றும் முகம்மது அலி என்கிற மூவரின் இயக்க மாகவே இருந்தது.

1926ஆம் ஆண்டு மத்தியில், ரஜினிபாமிதத் எழுதிய ‘நவீன இந்தியா’ (Modern India), எம்.என்.ராயின் ‘இந்திய அரசியலின் எதிர்காலம்’ (Future of Indian Politics) என்ற இரு முக்கிய கம்யூனிச நூல்கள் வெளி யிடப்பட்டன. ரஜினிபாமிதத் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கி லாந்து கம்யூனிஸ்ட் ஆவார். இவர் 1940களில் எழுதிய ‘இன்றைய இந்தியா’ எனும் நூல் சரித்திரப் பிரசித்தி பெற்ற பெட்டகமாகும். இந்த இரு நூல்களும் இந்தியா விற்கான பூரண விடுதலையைத் துல்லியமாக முன் வைத்தன. அனைத்திற்கும் மேலாக உழைக்கும் மக்களின் வெகுஜனக் கட்சி யொன்றினைக் கட்டியமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின.

அப்படி அமைக்கப்படுகின்ற கட்சி, காங்கிரசுக் குள்ளேயே அதன் ஓர் அங்கமாக அமைக்கப்பட வேண்டுமா அல்லது அதற்கு வெளியே மற்றொரு அரசியல் கட்சியாக அமைக்கப்பட வேண்டுமா என் பதற்கு ஒரு திட்டவட்டமான பதில் கூறப்படவில்லை.

1926ஆம் ஆண்டில் நடைபெற்ற கௌஹாத்தி காங்கிரஸ் மாநாட்டில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு முன்பு அகமதாபாத் காங்கிரசு மாநாடு (1921), கயா மாநாடு 1922, பெல்காம் மாநாடு (1924) ஆகியவற் றில் எல்லாம் எம்.என். ராய் போன்றவர்களின் கை யொப்பம் இருந்த நிலைமாறி, கௌஹாத்தி மாநாட்டுக்கு விடப்பட்ட அறிக்கையில்தான், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை” என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்திய வம்சாவளியைச் சார்ந்தவரும், இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுள் ஒருவரும், அந் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஷப்பூர்ஜி சக்லத்வாலா 1927 சனவரி 14இல் பம்பாய் வந்து சேர்ந்தார். சக்லத்வாலா பம்பாய் நகரத்துப் பணக் காரப் பார்சி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாய் ஜே.என். டாட்டாவின் (இந்தியாவில் முதல் உருக்கு ஆலையை நிறுவியவர்) சகோதரி ஆவார்.

தந்தை பம்பாய் நகரின் பிரபலமான வர்த்தகர் சக்லத்வாலா. மாஞ்செஸ்டர் நகரில் டாட்டா நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் பணியாற்றுவதற்காக அனுப்பி வைக்கப் பட்டார். சில நாள்களுக்குப் பிறகு இலண்டன் நகரக் கிளை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். டாடா கம்பெனியார் இவரை லிபரல் கட்சியில் உறுப்பின ராகச் சேர்வதற்கு அனுமதித்தனர். 1910இல் லிபரல் கட்சியிலிருந்து விலகி, சக்லத்வாலா சுயேச்சை தொழிற் கட்சியில் சேர்ந்தார். இக்கட்சியிலிருந்து விலகி, 1921 சனவரியில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந் தார். எனவே சக்லத்வாலாவும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார்.

சக்லத்வாலாவின் வருகையையொட்டி, இந்தியாவி லிருந்த முக்கியமான கம்யூனிஸ்டுகள் பம்பாயில் கூடி னர். முசாபர் அகமது, எஸ்.வி. காட்டே, ஆர்.எஸ். நிம்கர், எஸ்.டி. ஹாசன், கிருஷ்ணசாமி, ஜானகி பிரசாத் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டம் 1927 சனவரி 16-18 தேதிகளில் நடந்தது. மற்றும் இந்தியாவி லிருந்தபோது, சக்லத்வாலா பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டார். பம்பாய், அகமதாபாத், கல்கத்தா, சென்னை, டெல்லி, கராச்சி ஆகிய நகரங்களில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்கத்தா, ஹெளரா, சென்னை நகராட்சிகள் சார்பில் வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிக்கப்பட்டன.

சக்லத்வாலா, காந்தியாரை நாகபுரியில் நேரில் சந்தித்து இந்தியத் தொழிலாளர்களையும், விவசாயி களையும் அமைப்பு ரீதியாகத் திரட்ட உதவுமாறு கேட்டுக் கொண்டார். ஏ.ஐ.டி.யூ.சி.யின் ஏழாவது மாநாட்டிலும் தில்லியில் 1927 மார்ச்சு 12, 13 ஆகிய நாள்களில் கலந்துகொண்டார்.

இந்த மாநாட்டிற்கு இரு தினங்களுக்கு முன்புதான் வங்காள - நாக்பூர் இரயில்வேத் தொழிலாளர்களின் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டிருந்தது. மொத்தத் தொழிலாளர்கள் 60,000 பேரில், 40,000 பேர் பங்குகொண்டு, போராட்டம் உச்சக்கட்டத்தி லிருந்தபோது, எந்தவிதக் கோரிக்கையும் ஏற்கப்படா மல், வி.வி.கிரி போன்ற தலைவர்களால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்தக் காலக் கட்டத்தில் தான் “ஏகாதிபத்திய எதிர்ப்புக் கழகம்” (League Against Imperialism) காலனிய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் முற்போக்குவாதிகளின் முன் முயற்சியால் உருவானது. இக்கழகத்தின் அமைப்பு மாநாடு 1927 பிப்பிரவரியில் பெல்ஜியம் நாட்டில் பிரஸ்ஸெல்ஸ் நகரில் நடை பெற்றது.

இம்மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதிகளாக ஜவஹர்லால் நேரு (இந்திய தேசிய காங்கிரஸ்), பேராசிரியர் எம். பர்க்கதுல்லா (ஹிந்துஸ்தான் கேதன் கட்சி), வி. சட்டோபாத்யாயா (அய்ரோப்பாவில் உள்ள இந்தியப் பத்திரிகையாளர் சங்கம்), டாக்டர். தத் (இந்தியத் தொழிலாளர் நலச் சங்கம், இலண்டன்), ஏ.சி.என். நம்பியார் (சென்னை ‘ஹிந்து’வின் பிரதிநிதி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

அச்சமயம் நாட்டின் பல பாகங்களில் தொழிலாளர் - விவசாயிகள் கட்சி அமைக்கப்பட்டு, தீவிரமான தொழிற்சங்க இயக்கம் உருவாகி, ‘கணவானி’, ‘கிரந்தி’, ‘கிருதி’, ‘மேநாட்கள்’ போன்ற பத்திரிகைகள் கம்யூ னிஸ்டுகளால் நடத்தப்பட்டன. இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையாய் அமைந்தது.
(தொடரும்)