திருச்சிராப்பள்ளியில், 1961இல் குடியேறிய நான், உறையூரில் குடியிருந்தேன். எனக்கு உற்ற துணை கோ. முத்துகிருஷ்ணன், இரா. கலியபெருமாள், சின்ன பக்கிரி ஆகிய பெரியார் தொண்டர்கள். மற்றும் சீனி வாசன், அய்யாக்கண்ணு, பெரிய பக்கிரி ஆகியோர் நல்ல நண்பர்கள்.

சு. நீலமேகம், இரா. கலியபெருமாள் இருவரும் என் உடன்பிறவாத் தம்பிகள்.

நான் ஊரில் இல்லாவிட்டாலும், இருந்தாலும் என் வீட்டில் எல்லோரோடும் பழகிடவும், எல்லா உதவி களையும் செய்திடவும் ஆர்வத்தோடும் அன்போடும் இருவரும் துறுதுறுவென நிற்பர். நிற்க.

நான் கோவையிலிருந்து 20.8.2016 சனி காலை 5 மணிக்கு திருச்சி சந்திப்பை அடைந்தேன். வெளியே வந்து தானியில் ஏறியுடன், “நம்ப நீலமேகம் படுத்த படுக்கையாக இருக்கிறார். காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, நாம் உடனே அவரைப் பார்க்க வேண்டும்” என்றார், தோழர் இரா.கலியபெருமாள். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

பேருந்தில் ஏறி, நீலமேகம் வீட்டுக்குப் போனோம். நீலமேகம் மருமகள் ஓடோடி வந்து, அழைத்து உட்கார வைத்து, “மாமா-ஒருவாரமா கிறித்துவ மிஷன் ஆஸ்பத் திரியிலே இருக்கிறார்” என்றார். அங்கிருந்து தானியில் மருத்துவமனைக்குப் போனோம். மகன் நீ.சுப்பிரமணியம், நீலமேகம் இருக்கும் அறைக்கு அழைத்துப் போனார். கட்டிலில் சுருட்டி முடக்கிக் கொண்டு படுத்திருந்தார், நீலமேகம். நான் ஒரு குரல் கொடுத்தவுடன், கண் விழித்தார்; ஒருமணித்துளி என்னை உற்றுப் பார்த்தார். தாளமுடியாமல் கண்ணை மூடிக்கொண்டு முடங்கினார்.

“அப்பா, வந்திருக்கிறது யார் தெரியுதா” என்று மகன் கேட்டவுடன், ‘ஆனைமுத்து அய்யா’ என்று கூறிவிட்டு, மீண்டும் முடங்கினார்.

1973 முதல் 1982 வரையில் நான் திருச்சி நகரத் தொடர்வண்டி நிலையத்தருகில் குடியிருந்தேன். மாடி யுடன் கூடிய மிகப் பெரிய வீடு; அங்கேயே அச்சகம்; அங்கேயே “பெரியார் சிந்தனைகள்” நூல் பெட்டி களின் அடுக்குகள்; அங்கேயே குடியிருப்பு. அதுசமயம் கலியபெருமாள் அரசுப் பணியிலிருந்தார். எனவே எந்த நாளில், எந்த வீட்டுப் பணி என்றாலும் அதை யெல்லாம் செய்தவர் தம்பி சு. நீலமேகம் தான்.

நீலமேகம் ஒடித்துக் கட்டக்கூடிய உடல்; ஓயாத - வாய்பேச்சுக் கொடுக்காத கடும் உழைப்பாளி; என்ன கேட்டாலும் வாய்நிறைய சிரித்துக் கொண்டே, வாயோடு விடை; மிகவும் மரியாதை-மிகவும் அன்புடன் என் னோடும் என் குடும்பத்தாரோடும் பழகியவர், உறையூர் தம்பி சு. நீலமேகம்.

அந்த அன்புத் தம்பி நீலமேகம் 24.8.2016 புதன் காலை 6.00 மணிக்கு, 76 ஆம் வயதில் மறைந்துவிட்டார் என்பதை அறிந்து மிக வருந்துகிறேன்.

என் சார்பிலும், என் துணைவியார், என் மக்கள் சார்பிலும், மா.பெ.பொ.க. சார்பிலும் ஆழ்ந்த வருத்தத் தை, தம்பி நீலமேகத்தின் துணைவியார் பெரியக் காள், மகன்கள் இராசமாணிக்கம், சுப்பிரமணியன், ஆறுமுகம், மகள் செல்வி மற்றும் மருமகள்கள், பெயரக் குழந்தைகள் உறவினர்கள் ஆகியோர்க்கும் மனங் கசிந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க, வாழ்க சு. நீலமேகம் புகழ்!