தந்தை பெரியார் காலத்திலிருந்து தமிழகத்தில் பகுத்தறிவாளர் என்றால் கடவுள் நம்பிக்கையற்றவர் என்று பலரும் குறிப்பிட்டுப் பேசுவார்கள், பகுத்தறிவாளர் என்றால் நாத்திகர்; மதக்கொள்கைக்கு விரோதி; சாதி பார்க்காதவர்; பெண்களுக்குச் சம உரிமை கொடுப்பவர்கள்; அரசியலில் அனைவர்க்கும் நன்மை கிடைக்கும் கொள்கை கொண்டவர்கள்; அனைத்துச் சாதியினருக்கும் பொதுவான கல்விக்கூடம்; வழிபாட்டுத் தலங்கள், இடுகாடுகள் இருக்க வேண்டும் என்ற சம உரிமைக் கொள்கை உடையவர்கள்; ஒரு நாடு என்றால் மதத்திற்காக சட்டம் கூடாது; தனி மதச்சட்டத்தை ஒழிக்க வேண்டும்; அனைவருக்கும் பொதுச் சட்டம் வேண்டும்; அனைத்திலும் அனைவருக்கும் சம உரிமை வேண்டும் முன்னேறாத சமுதாயத்திற்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும் என்று கேட்பவர்கள் பகுத்தறிவாளர்களே. இவர்கள் மட்டும் பகுத்தறிவாதிகள் என்றால், மற்றவர்கள் யார்?

பகுத்தறியும் எண்ணம் மனிதனுக்கு மிகச்சிறந்த அறிவு. ஆண்-பெண், தாய்-தந்தை, உழைப்பு-உயர்வு, ஏற்ற பருவ காலம், திறமைசாலி, பொய்மை - உண்மை, பணம் - பேப்பர் போன்ற பல சிந்தனைகளைப் பகுத்தறிந்து சிந்திக்கக் கூடியவர் அனைவரும் பகுத்தறிவாளர்களே.

கடவுள் என்று ஒன்றுமில்லை; இயற்கை வளங்களைக் காக்க வேண்டும்; கல்லால் செய்யப்பட்ட பொம்மைகளினால் ஒரு நன்மையும் இல்லை. மனம் அமைதியானாலே நல்ல சிந்தனையும் நன்மையும் கிடைக்கும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் பகுத்தறிவாளர்களே.

உழைத்தால்தான் உயர முடியும். பலர் உழைப்பை ஒரு முதலாளி பறித்துக் கொண்டால் உழைப்பவர்க்கும் உயர்வு கிடைக்காது. ஒருவர் மற்றவர் களின் உழைப்பைச் சுரண்டினால் நிறுவனமோ அமைப்பு களோ நீண்டநாள் நீடிக்காது.

அனைத்தையும் பகுத்தறிந்து சிந்தித்துச் செயல்படுவது தான் பகுத்தறிவு. இப்பொழுது மாநிலக் கட்சிகளிலும் தேசியக் கட்சிகளிலும் உள்ள அனைத்து அரசியல் முன்னோடிகள் அய்யா, அம்மா, தலைவா என்று தூபம் போட்டால்தான் கட்சியில் நீடிக்க முடியும் என்று கருதி முழக்கமிடுதல், கைதட்டுதல், காலில் விழுதல் போன்ற இழிவான எண்ண மென்று அறிந்தும் பதவி சுகத்திற்காகவும் சுகவாழ்க்கைக் காகவும் செயல்படுவதும் ஒருவகை பகுத்தறிவே. அனைத் தையும் பகுத்தறிந்துதான் அனைவரும் நல்லதையும், கெட்டதையும் செய்கின்றனர்.