somakasnatham 350கொள்கைக்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்தவர் பலர். நானும் தூக்குக் கயிற்றை முத்தமிடும் நாளை நெருங்கிக் கொண்டு இருக்கிறேன். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, தங்களின் செயலுக்கு மறுபிறப்பில் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். இந்தப் பிறவியில் மோட்சம் கிடைக்கும் என்று நம்பியும் தங்கள் உயிரைத் தர முன்வருவார்கள். நான் முழு நாத்திகன். கடவுள் நம்பிக்கையற்றவன், என் கழுத்தை தூக்குக் கயிறு இறுக்கியதும் என் உயிர் பிரிந்துவிடும் என்று எனக்குத் தெரிந்தே இருக்கிறது. என் மரணம், நாட்டின் விடுதலை உணர்வை உயிர்ப்பிக்கு மெனில், அதைவிட எனக்கு வேறென்ன பெருமை வேண்டும், என்றார். மரணதண்டனையை எதிர் நோக்கியிருந்த, விடுதலை வேட்கை கொண்ட 23 வயது நிரம்பிய இளைஞனின் புரட்சிக் குரல். இது!

பஞ்சாபில், லாகூர் நகருக்கு அருகில் லாயல்பூர் மாவட்டத்தில் பங்கா என்ற கிராமத்தில் சர்தார் கிஷன்சிங்-வித்யாவதி இணையருக்கு இரண்டாவது மகனாக அந்தப் புரட்சியாளன் பகத்சிங், 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27ஆம் நாள்,பிறந்தார்

அவன் பிறந்த போது அவன் தந்தை கிஷன்சிங், சிற்றப்பாக்கள் அஜித்சிங், ஸ்வரண்சிங் ஆகிய மூவரும் விடுதலைப் போரில் ஈடுபட்டார்கள் என்று, ஆங்கிலேய அரசு அவர்களைக் கைது செய்து பர்மாவின் மாண்டலே சிறையில் அடைத்து வைத்திருந்தது. மகன் பிறந்த சில தினங்களில், கிஷன்சிங் பிணையில் (ஜாமினில்) விடுதலையாகி இல்லம் வந்து தன் மகனைப் பார்த்தார்;  பகத்சிங் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்;

கிஷன்சிங் சகோதரர், அஜீத்சிங் விடுதலைபெற்ற பின் மாண்டலே சிறையிலிருந்து ஜெர்மனி சென்று விடுதலை இயக்கத்திற்கு ஆக்கம் தேடினார். அஜீத்சிங், பாஞ்சாலச் சிங்கம் லாலா லஜபதிராயுடன் நெருங்கிய தொடர்பு கொண்டி ருந்தார். மற்றொரு சகோதரர் சுவரண்சிங்க் 1907 ஆம் ஆண்டிலே சிறையிலேயே இறந்து போய்விட்டார்.

இத்தகைய நாட்டுப் பற்று மிக்க குடும்பத்தில் பிறந்த பகத்சிங்கின் குருதியிலேயே நாட்டுப் பற்று விதை விதைக்கப்பட்டிருந்ததில் வியப்பொன்றுமில்லை.

இளம் வயதில்

அவர் பிறந்த கிராமத்தில் இருந்த கால்ஸா பள்ளியில் தான் சீக்கியர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பது வழக்கம். ஆனால் அந்தப் பள்ளி வெள்ளையருக்கு அடிபணிந்து கிடப்பதால், நாட்டுப்பற்றும் முற்போக்கு எண்ணங்களும் கொண்டிருந்த பகத்சிங் தந்தை கிஷன்சிங், பகத்சிங்கை லாகூரில் உள்ள தயானந்தா பள்ளியில் கல்விகற்கச் சேர்த்து விட்டார்

லாகூர் சதி வழக்கு

இந்தப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் லாகூர் சதி வழக்கு நடந்து கொண் டிருந்தது. விடுதலைப் போராட்டத்தில்  ஈடுபாடு கொண்ட இயக்கம் கத் தார் இயக்கம். கத்தார் என்றால் அநீதியை எதிர்த்துப் போரிடுதல் என்று பொருளாகும். மதச்சார்பின்மை, தீண்டாமை ஒழிப்பு ஆகிய நோக் கங்களைக் கொண்டு இயங்கியது. கத்தார் இயக்கம் தொழிலாளர்களையும், விவசாயிகளையும்,  பொது மக்களையும் ஒன்று திரட்டி ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராகப்  போராடியது. அவ்வியக்கத்தின் தலைவர்கள் சர்தார்சிங் சாராபா, விஷ்ணுகணேஷ் பிங்களே ஆகியோர் ஆவர். அந்த இயக்கத்தினர் ஆங்கில ஆட்சியருக்கு எதிராகச் சதிவேலைகளில் ஈடுபட்டார்கள் என்று அரசு வழக்குத் தொடர்ந்தது. வழக்கின் இறுதித் தீர்ப்பில் 100 பேருக்குத் தூக்குத்தண்டனையும், 100 பேருக்கு அந்தமான் சிறையில் ஆயுள்  தண்டனையும் வழங்கியது. அந்த   இயக்கத்தின் தலைவர்களை 16-11-1915 இல் தூக்கி லிட்டனர் இந்த வழக்கை எதிர்த்து, சாராபா உயர் நீதிமன்றத் தில் வழக்காட மறுத்துவிட்டார்; தனக்கு ஒன்றிற்கு மேற் பட்ட உயிர்கள் இருந்திருக்குமானால் அவற்றையும் இந்த நாட்டின் விடுதலைக்காகத் தியாகம் செய்வதற்கே விரும்பினார் என அறிந்து வியக்கின்றோம்.

சர்தார்சிங்கின் துணிவும் தியாகமும் சிறுவன் பகத்சிங் உள்ளத்தில் நாட்டுப்பற்றை ஆழ விதைத்தது. அவரது புகைப்படத்தைத் தன் சட்டைப் பையில் எபொழுதும் வைத்துக் கொண்டிருப்பார்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை:- சீக்கியரின் புனித நகரத்தில், ஜாலியன்வாலாபாக் என்னுமிடத்தில் 13-4-1919 இல் ரௌலட் சட்டத்தை எதிர்த்து,  மாபெரும் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கூடியவர்களைக் கொன்று குவித்திட வேண்டுமென்று ஜெனரல் டயர் எண்ணி, காவலர் படையை அனுப்பினான்.அவர்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி அங்குக் குழுமியிருந்த மக்களை நோக்கி பல சுற்றுகள் தோட்டாக்கள் தீரும் வரை சுட்டனர். அப்பாவிமக்கள் அஞ்சிச் சிதறி ஓடினர்.379 பேர் உயிர் இழந்தனர், 1137 பேர் காயமுற்றனர். அந்தப் பூமியே இரத்தம் தோய்ந்து சிவப்பாயிற்று.

12 வயதான, பள்ளிமாணவன் பகத்சிங், இந்தப் படுகொலையைக் கேள்வியுற்று முகம் சிவந்தான்; எவரிடமும் பேசாது புகைவண்டி ஏறி அமிர்தசரஸ் சென்றான்; அந்தக் கோரக் காட்சியைக் கண்டான்; மனம் நெகிழ்ந்தான்; சீற்றம் கொண்டான். குருதிகலந்த மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டான். சிறிது மண்ணை கண்ணாடி புட்டியில் எடுத்துக் கொண்டான்;. இல்லம் திரும்பினான். மௌனமாகக் கண்ணீர் விட்டான். அன்று இரவு முழுதும் உறங்கவில்லை உணவும் உண்ணவில்லை. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடவும் உறுதி கொண்டான். தினம் தினம்  பூத்த மலர் களை அந்த மண்ணில் வைத்து வணங்கி “எழுச்சியைப் பெற்றுக் கொண்டிருந்தான். இந்நிலையில் “வந்தே மாதரம்” என்ற சுதந்திர முழக்கத்தை எழுப்புவதற்கு ஆங்கிலேய அரசு தடை விதித்திருந்தது. இதை எதிர்த்துப் பொது இடங்களிலும் காவலர்கள் முன்பும் வந்தே மாதரம் என்று முழக்கமிடுவதை விடுதலை வீரர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். தாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று பகத்சிங் நினைத்தார். இரவோடு இரவாக காகிதங் களில் “வந்தே மாதரம்” என்று எழுதி வீதிகளில் உள்ள சுவர்களில் ஒட்டி வைத்து விட்டார். பொழுது விடிந்ததும் அதை பார்த்துப் பதறிய காவல்துறையினர் பரபரவென கிழித்து எறிந்தனர். அவற்றை ஒட்டியவர் பகத்சிங் என்பதைக் கண்டறிந்து காவல்நிலையத்திற்கு இழுத்து போய் அடித்து உதைத்தனர். சிறுவனாக இருந்ததால் எச்சரித்து அனுப்பிவிட்டனர். இந்த சம்பவம் பகத்சிங்கை பயமுறுத்தவில்லை. மாறாக அவரது நாட்டுப் பற்றை இன்னும் கிளர்ந்தெழ வைத்தது.  இந்நிகழ்வும் அச் சிறு வனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அரசியல் களத்தில் செயல்பட ஆர்வம் கொண்டான். கல்வியில் நாட்டமில்லை என்ற போதிலும்  மெட்ரிகுலேசன்  வகுப் பில் தேர்வு பெற்றான்.

காந்தியடிகளின்  ஒத்துழையாமை இயக்கம்

ரௌலட் சட்டம்  மற்றும்  ஜாலியன் வாலாபாக் படு கொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும், 1919 இந்திய அரசுச் சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுப்புத் தெரிவிக்கவும் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இவ்வியக்கத்தைக் காங்கிரசின் பல மூத்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை. எனினும் இளைய தலைமுறை தேசியவாதிகளிடையே இது பெரும் ஆதரவைப் பெற்றி ருந்தது.

பள்ளியில் பயிலுங்காலத்தில் அவரைக் கவர்ந்த தலைவர் மகாத்மா காந்தி ஆவார். இயல்பாகவே நாட்டுப்பற்று மிக்கவராக இருந்ததால் காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த போதே காந்தி திடீரென்று இயக்கத்தை நிறுத்திவிட்டார்..பிப்ரவரி 5, 1922ல் உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் விடுதலை இயக்கத்தினருக்கும் காவல் துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. காவல் துறையினரின் செயல்பாட்டால் சில விடுதலை இயக்கத்தினர் மரணமடைந்தனர். இதனால் கோபம் கொண்ட மக்கள் காவல் நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவல்துறையினர் கொல்லப் பட்டனர். வன்முறை இந்தியாவின் வேறு சில பகுதி களுக்கும் பரவியது. அறவழியில் நடந்து வந்த இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதைக் கண்ட காந்தி அதிர்ச்சியடைந்தார். ஒத்துழையாமை இயக்கம் வன் முறை இயக்கமாக மாறுவதைத் தடுக்க, அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை  நடத்தினார்

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் திடீரென நிறுத்திய போது பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். வன்முறைச் செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தபோது, நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை; அரசின் வன் முறைக்கு எதிரான நடவடிக்கை என்று கருதினார் பகத்சிங். அகிம்சை வழியில் சென்றால் விடுதலை பெறமுடியாது.ஆயுதம் தாங்கிப் போராடினால் மட்டுமே விடுதலை பெறமுடியும் என்று முடிவு செய்தார்.

லாகூர் தேசியக்கல்லூரியில் பின் லாகூர் தேசியக்கல்லூரியில் 1924 இல் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்தார். பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயால் தொடங்கப்பட்ட அந்தக் கல்லூரி விடுதலைப் போராளிகளின்  பாடி வீடாக அமைந்திருந்தது இக்கல்லூரியில்தான் சுகதேவ், பகவதிசரண் வோரா, யஷ்பால் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. பாட நூல்களைத்தாண்டி பகத்சிங் படித்த வரலாறு,  அரசியல்,, பொருளாதார நூல்கள் அவரது அறிவை விரிவாக்கின. முற்போக்குச் சிந்தனைகளும் ஏற்பட்டன. நூல்கள் வாயிலாக அவருக்கு வெளிநாட்டுப் புரட்சியாளர்கள் அறிமுகம் ஆனார்கள்.

ரஷ்ய நாட்டில் 1917 சோசலிச புரட்சிக்குப் பின்னர் அனைத்து மக்களும் அனைத்து வளங்களையும் சரி சமமாகப் பகிர்ந்து கொண்டு வாழ்வதைப் பற்றி அறிந்தார். அதற்குக் காரணமான தலைவர் லெனின் பற்றியும் அறிந்தார். 1925க்குப் பின் தான் மார்க்சியம் இந்தியவுக்கு அறிமுகமானது. அதுவும் தலைமறைவு இயக்கமாக இருந்த காலகட்டத்தில் பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் தேர்ந்திருந்தார் பகத்சிங்.  சோஷலிச தத்துவத்தைத் தன் இலட்சியமாக ஏற்றார்.

பள்ளி, கல்லூரிகளில் இந்தி, ஆங்கிலம் பஞ்சாபி உருது சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். உள்ளம் உருகும் கவிதைகளை உருது மொழியில் படைத்தார். கல்வியைத்  தாண்டி நாட்டு விடுதலையும் கம்யூனிச சிந்தனைகளும் அவரை முழுமையாக ஆட்கொண்டன.

சுகதேவ், பகவதி சரண் வோரா, யஷ்பால் ஆகியோ ருடன் பகத்சிங், புரட்சிகரமான இயக்கங்களில் ஈடுபட்டு வந்தார். பகவதி சரண் வோரா இவர்கள் எல்லோரையும் விட செல்வம் படைத்தவர். அவருக்குச் சிறுவயதிலேயே துர்கா தேவியுடன் திருமணம் நடைபெற்றுவிட்டது.

.கல்லூரியில் பயிலுங்காலத்தில், பகத்சிங்கிற்கு திருமணம் செய்திட விரும்பி தந்தை, மகனுக்குத் கடிதம் எழுதினார். அதற்கு பகத்சிங் எனக்குத் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. நாடு என்னை அழைக்கிறது. நாட்டின் விடுதலை வேண்டி என் உயிரையும் தியாகம் செய்ய உறுதி கொண்டுள்ளேன். திருமணம் செய்துகொண்டு ஒருபெண்ணின் வாழ்வை சீரழிக்க விரும்பவில்லை, என்று பதில் எழுதிவிட்டு, படிப்பையும் பாதியிலேயே நிறுத்தி விட்டு, கல்லூரியை விட்டு நீங்கி லாகூரிலிருந்து கான்பூர் சென்று அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.

அந்நிலையில், பாட்டி உடல் நலம் குன்றியுள்ளார் என்று அறிந்ததும், பாட்டியின் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்த பகத்சிங் உடன் வீடு திரும்பி பாட்டியுடனிருந்து பணிவிடை செய்தார். பாட்டி நலம் பெற்று எழுந்ததும், மீண்டும் கான்பூர் சென்று இயக்கப் பணிகளை மேற்கொண்டார். ஆயுதப்புரட்சிக்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, கான்பூர், கங்கை வெள்ளத்தால் சூழப்பட்டது. இயக்கப்பணிகளை நிறுத்தி விட்டு  வெள்ள நிவாரணப்  பணிகளில் ஈடுபட்டார், மனிதாபி மானங் கொண்ட பகத்சிங்.

கான்பூரில் பகத்சிங், கணேஷ் சங்கர் வித்தியார்த்தி என்ற நண்பரின் வீட்டில் தான் தங்கினார். புரட்சியாளர் கள் சந்திக்கும் இடமாக வித்தியார்த்தி வீடு அமைந் திருந்தது. சந்திரசேகர ஆசாத், சிவவர்மா, பாதுகேஸ்வர் தத், ஜோகேஷ் சந்திர சட்டர்ஜி ஆகிய புரட்சியாளர்களைப் பகத்சிங் இங்குதான் சந்தித்தார். இங்குதான் மார்க்ஸின் மூலதனத்தை வாசித்து முடித்தார்.

இதழியல் பணிகள்

கான்பூரிலிருந்து புரட்சிகரமான துண்டு பிரசுரங்களை எழுதி மக்களிடையே வினியோகித்தார். கணேஷ் சங்கர் வித்தியார்த்தி நடத்திவந்த ‘பிரதாப்’ என்ற ஆங்கில வார இதழிலும் எழுத்துப் பணியாற்றினார். பாபா சோகன்சிங்க் ஜோஷ் இந்தியப் புரட்சியாளர்களின் தலைவர்களில் முக்கியமானவர். 23 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைவாசம் புரிந்தவர். அவர் கீர்த்தி என்ற பெயரில் ஓரிதழை நடத்தி னார். அதில் பகத்சிங் துணை ஆசிரியராகப் பணியாற்றி னார். தில்லியிலிருந்தபோது ‘அர்ஜுன்’ என்ற உருது இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார்.

இந்தியக் குடியரசுக் கழகம் (Hindustan Republic Association)

:- 1923ஆம் ஆண்டு, சுசீந்திரநாத் சன்யால், ராம் பிரசாத் பிஸ்மில் என்பவர்களால் தொடங்கப்பட்ட இந்தியக் குடியரசுக் கழகம் என்னும் அமைப்பில் பகத்சிங் இணைந்தார். இவ்வமைப்பின் கொள்கைகள் சுசீந்திரநாத் சன்யால் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்திய விடுதலையை ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் பெற்று, சாதி மத பேதமற்ற இந்திய ஐக்கிய சோஷலிசக் குடியரசை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது இவ்வமைப்பு. இந்த அமைப்பின் நோக்கங்கள் சந்திர சேகர ஆசாத்தை வெகுவாகக் கவர்ந்ததால் விளக்குத் தீயில் தன் கையை எரித்துத் தனது  நாட்டுப்பற்றை வெளிப் படுத்திய பின் இணைந்தார். அதன்பின் அந்த அமைப்பை வளர்ப்பதற்காக 1925 இல் காகோரி இரயில் கொள்ளை யில் ஈடுபட்டார். இது போன்று பல வழக்குகளில் தேடப் பட்டவர். இறுதியில் 1931 இல் அலகாபாத்தில் காவலர் களோடு போராடி மரணம் அடைந்தார்.

நவஜவான் பாரத சபை

கான்பூரிலிருந்து இலாகூருக்கு வந்து இந்தியக் குடியரசுக் கழகத்தின்  கிளையைத் தொடங்கினார் பகத்சிங். பின் 1926 இல்  நவஜவான் பாரத் சபா என்ற இளைஞர் அமைப்பை பகத்சிங் தன் தோழர்கள் பகவதிசரண் வோரா, சுகதேவ், ராம்கிஷன் ஆகியோரோடு இணைந்து தொடங்கினார். ராம்கிஷன் தலைவரகவும், பகத்சிங் செயலாளரகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்களிடையே மார்க்சியத்தை அறிமுகப்படுத்துவதும், அவர்களை நாட்டு விடுதலைக்கான ஆயுதப்புரட்சியில் ஈடுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயலாற்றியது.

பகத்சிங் மதவாத அமைப்புகளுடன் எவ்விதத் தொடர்பும் கூடாதென உறுதியுடன் செயல்பட்டார்.  மதம் மனிதனின் தனிப்பட்ட நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அரசியல் இயக்கங்கள் தங்கள் சுய லாபத்திற்குப் பயன் படுத்துவதை மறுத்தார், எதிர்த்தார். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம்  ஆபத்தானது, எனில் அதைவிட மதவாதம் மோச மானது, ஆபத்தானது என்று விளக்கினார். இறுதிவரை மதச்சார்பின்மைக் கோட்பாட்டை பகத்சிங் கடைப்பிடித்தார். போராளிகள்  ஒவ்வொருவரும் தனி மனித ஒழுக்கத்தில் இருந்து தவறக்கூடாது என்பதில் பகத்சிங் கண்டிப்பாக இருந்தார். ஒரு நாள் போராளி ஒருவர் குடித்து விட்டு வந்த போது அவரைக் கடுமையாகக் கடிந்து கொண்டார். அந்த இளைஞன் மன்னிப்புக் கேட்டு, குடிப்பழக்கத்தைக் கைவிட்ட பிறகே போராட்டச் செயல்பாடுகளில் ஈடுபட பகத்சிங் அனுமதித்தார்.

தீவிரவாத காங்கிசார் 1928 இல் இச் சங்கத்தில் இணைந் தனர். கீர்த்தி விவசாயிகள் கட்சியினர், கத்தார் கட்சியினர், பிரிட்டன் பொதுவுடைமை இயக்க ஊழியர் பிலிப் பராட் ஆகியோர் நவஜவான் பாரத சபையுடன் தொடர்பு கொண்டனர்.

நவஜவான் பாரத சபா சார்பில் இரஷ்ய நண்பர்கள் வாரம் எனக் கொண்டாடி இரஷ்யப் புரட்சியின் வரலாறு, அதனால் விளைந்த அரசியல் மாற்றங்கள், மக்கள் அடைந்த முன்னேற்றங்கள், மகத்துவங்கள் பற்றி நீண்ட உரையாற்றினார் பகத்சிங். அதற்குப் பின்னர் நவஜவான் பாரத சபா சார்பில் நடைபெற்ற கர்த்தார்சிங் சாரபா நினைவு நாள் கூட்டம், பகத்சிங்கின் மீதும், அவரின் தோழர்கள் மீதும், அரசிற்கு சந்தேகத்தை உருவாக்கிற்று.

சைமன் கமிஷன் எதிர்ப்பு

1927 நவம்பர் 8ஆம் நாள், இந்தியவிற்கு என்னென்ன சலுகைகள் தரலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க சர். ஜான் சைமன் தலமையில் குழுவினை அமைத்தது ஆங்கில அரசு. அக் குழுவில் இந்தியர் எவரும் இடம் பெறவில்லை. 2-2-1928 அன்று சைமன் கமிஷன் பம்பாய் வந்தது, அன்று இந்தியா முழுவதும் ஹர்த்தால்.இந்தியாவில் அனைத்துக் கட்சிகளும் சைமன் கமிஷனை எதிர்த்தனர். முஸ்லீம் லீக்கின் ஒரு பகுதியினரும், இந்து மகா சபையில் (இன்றைய ஆர்.எஸ்.எஸ்) பெரும்பாலோரும் கமிஷனை ஆதரித் தார்கள். சென்னை, கல்கத்தா, டெல்லி, லக்னோ, பட்னா என்று சைமன் சென்ற வழியெங்கும் மக்கள் “சைமனே திரும்பிப்போ” என முழக்கமிட்டு ஊர்வலம் நடத்தினார்கள். ஊர்வலத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தி னார்கள். லக்னோவில் நேரு தாக்கப்பட்டார்.

30-10-1928 லாகூர் வீதிகளில் பழம்பெரும் தலை வரான லாலா லஜபதிராய் தலைமையில் “சைமனே வெளியே போ” என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் துறை ஆணையர் ஸ்காட், ஆணையிட்டதனால் காவல்துறை தடியடியில் ஈடுபட்டது. துனை ஆணையர் சாண்டர் லாலா லஜபதிராயை மூர்க்கமாக மார்பில் தடியால் தாக்கினார். மயக்கமடைந்த பஞ்சாப் சிங்கம் லாலா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் அங்கே, சிகிச்சை பலனிளிக்காமல் 17-11-1928 இல் காலமானார். அது குறித்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை. போலீசார் என் மீது அடித்த ஒவ்வொரு அடியும் பிரிட்டிஷ் ஆட்சியின் சவப்பெட்டியில் அடித்த ஆணியாகும், என்றார் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய். சித்தரஞ்சன் தாஸின் மனைவி வீரவசந்தி தேவி பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் கொலைக்குப் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்னும் உணர்வைத் தூண்டும் வகையில் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

இந்திய சமரசக் குடியரசு இராணுவம் தோற்றம்

அதன் விளைவாக, உத்தரப்பிரதேசத்திலிருந்து சந்திரசேகர ஆசாத் லாகூர் வந்தார். அவரை பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் முதலியோர் சந்தித்தனர். அனைவரும் இணைந்து 1928 டிசம்பரில் இந்திய சமரசக் குடியரசு இராணுவம் என்னும் அமைப்பினை உருவாக்கினர். அவ்வமைப்பின் மத்தியக் குழு உறுப்பினர்களில் ஒருவராக பகத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்வமைப்பின் குழுவினர் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் கொலைக்குப் பழிக்கு பழி வாங்க முடிவு செய்தனர். ஜெயகோபால் காவல் நிலையத்தைக் கண்கானித்துத் தகவல் கொடுக்க மறைவாக நின்று கொண்டிருந்த பகத்சிங், ராஜகுரு, ஆசாத் மூவரும், காவல் நிலையத்திலிருந்து துணையானையர் சாண்டர்ஸ், தன் வாகனத்தில் கிளம்பியதை அறிந்தனர். முதலில் ராஜகுரு சாண்டர்ஸை நோக்கிச் சுட்டார். அடுத்து பகத்சிங் சுட்டார். சாண்டர்ஸ் உயிர் இழந்தார். 17-12-1928இல் இந்நிகழ்வு நடந்தது.

பின் மூவரும் தேசியக் கல்லூரி நோக்கிச் சென்றனர். ஒரு காவலர் பின் தொடர்ந்தார். ஆசாத் அவரை எச்சரித் தும் கேட்காமல் தொடரவே அவரை ஆசாத் சுட்டுக் கொன்றார். பின் மூவரும் நிதானமாகக் கல்லூரி விடுதி நோக்கிச் சென்றனர். மறு நாள் செய்தித் தாள்களில், லாலா லஜபதி ராயின் மரணத்துக்கு பஞ்சாப் இளைஞர்கள் பழிக்குப் பழி வாங்கிவிட்டனர் என்று செய்தி வெளியிடப்பட்டது. இந்திய தேசிய இராணுவம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஆங்காங்கே காணப்பட்டன.

லாகூரில் பல இளைஞர்களை காவல் துறை கைது செய்தது. எனினும் புரட்சியாளர்கள் மாறு வேடத்தில் ஊரைச்சுற்றி வந்தனர். இனியும் லாகூரில் தங்கியிருப்பது ஆபத்து என எண்ணி கல்கத்தா செல்ல நினைத்தனர்.

சந்திரசேகர ஆசாத் உ.பியைச் சேர்ந்தவர் என்பதால்  அவரை லாகூர் காவலர்களுக்கு அடையாளம் தெரியாது; அவர் எளிதில் தப்பிவிடலாம். ஆனால் பகத்சிங் ஊரிலுள் ளோர்க்கு நன்கு அறிமுகமானவர். ஆகவே, அவரைத் தப்புவிக்க ஆலோசனை நடந்தது. சுகதேவ்  பகவதிசரண் என்ற நண்பரைச் சந்தித்தார்; பகத்சிங் லாகூரிலிருந்து கல்கத்தா தப்பிச் செல்ல, பகவதிசரண் மனைவி துர்கா தேவியார், பகத்சிங்கின் மனைவியாக நடிக்க வேண்டும் என்று வேண்டினார். ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் பகவதிசரணும், துர்கா தேவியும் ஒப்புக்கொண்டனர்.

பகத்சிங் இருவரையும் வணங்கினார். மறு நாள் காலை 5 மணிக்கு, துர்காதேவி, பகத்சிங், ராஜகுரு, மூவரும் மாறு வேடத்தில் கல்கத்தா செல்லும் விரைவு தொடர்வண்டியில் கிளம்பிச் சென்றனர். ராஜகுரு லக்னோவில் இறங்கிக் கொண்டார். பகத்சிங், துர்காதேவி கல்கத்தா சென்றடைந் தனர். கல்கத்தாவில் பகவதிசரண் அவர்களை வரவேற் றார். கல்கத்தாவில் பகத்சிங் வெடிகுண்டு தயாரிப்பில் சிறந்த யதீந்திர நாத் என்பவரின் நட்பினைப் பெற்றார். பின்னர் இருவரும் ஆக்ரா சென்று ஒரு பாழடைந்த வீட்டிலிருந்து வெடிகுண்டுகள் செய்து எடுத்துக் கொண்டு ‘பகத்சிங் டில்லி சென்றார். அங்கு பூதேஸ்வர’தத் என்பவருடன் சிலகாலம் கழித்தார்.

நாடாளுமன்றத்தில் குண்டுவீச்சு

தொழிலாளர் இயக்கத்தை நசுக்கிடவும் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுத்திடவும் ஆங்கில அரசு இந்தியஉள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டமும், தொழில் தகராறு சட்டமும் என்று இரு சட்டங்களைக் கொண்டு வந்தது. இவ்வேளை யில், முக்கிய பொதுவுடைமைத் தலைவர்களையும் மீரத் சதிவழக்கில் ஆங்கில அரசு கைது செய்தது. இவை களைக் கண்டித்து இந்திய சமரசக் குடியரசு இராணுவ அமைப்பு நாடளுமன்றத்தில் குண்டு வீசுவதென முடிவு செய்தது. குண்டு வீச்சு எவரின் உயிரையும் பறிக்கக் கூடாது. குண்டு வீசியவர்கள் தப்பிக்க முயலக்கூடாது. கண்டிப்பாகக் கைதாவதை தவிர்க்கக் கூடாது. நீண்ட விவாதத்திற்குப்பின் பகத்சிங்கும், பாதுகேஷ்வர் தத்தாவும் இவ்வினையினை முடித்துக் கைதாவது என்று முடிவாகியது.

8-4-1929 அன்று பகத்சிங்கும், பாதுகேஷ்வர் தத்தாவும் இரண்டு குண்டுகளுடன் நாடாளுமன்றத்தின் பார்வையாளர்கள் அமரும் இருக்கையில் அமர்ந்திருந் தனர். அன்று நாடாளுமன்றத்தில் மோதிலாலும்.  வித்தல்பாய் படேலும், மதன்மோகன் மாளவியாவும் இருந்தனர். வைஸ்ராய் லார்டு இர்வினும் சர். ஜான் சைமனும் அருகருகே அமர்ந்திருந்தனர். தொழில் தகராறு சட்டம் இயற்றப்பட்டவுடன் இருவரும் நாடாளு மன்றத்தில் குண்டுகளை வீசினர். நாடாளுமன்றத்தை புகை சூழ்ந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலை தெறிக்க ஓடினர். பகத்சிங்கும், பாதுகேஷ்வர் தத்தாவும் குண்டுகளை வீசிவிட்டு, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்டுக் கையிலிருந்த துண்டுப் பிரசுரங்களையும் அவையில் வீசிவிட்டுத் தப்பிக்க முயற்சி செய்யாது நின்றனர், காவலர் அவர்களைக் கைது செய்தனர். அப்போது காவலர் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டார். கேளாக் காதினர் காதில் எங்கள் குரல் ஒலிக்க வேண்டும் அல்லவா? அதற்காக, என்றனர். 8-4-1929 அன்று இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு 2 மாதங்கள் கழித்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். கோர்ட்டில் பகத் சிங் கொடுத்த வாக்குமூலத்தின் ஒரு பகுதி:—

காது கேளாதோருக்கு (ஆங்கிலேய அரசு) உணர்த்த உரத்த குரல் எழுப்புகிறோம். தொழிலாளர்களை நசுக்கு வதற்காக தொழில் தாவா சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில் அதனை எதிர்த்து இத்தாக்குதலை நடத்தியுள் ளோம். நாடாளுமன்றத்தில் குண்டு வீசினோம். ஆனால் உறுப்பினர்களைக் கொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. நாங்கள் வீசிய குண்டுகள் மனிதர்களைக் கொல்லக் கூடியவை அல்ல. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கவனத்தைத் திருப்பி இந்தியர்களின் உணர்வுகளை அவர்களுக்கு உணர்த்தவே இந்த நடவடிக்கையில் ஈடு பட்டோம். அநீதியின் அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்டுள்ள ஏகாதிபத்திய அமைப்பை உடைத்தெறிவதே எங்கள் புரட்சியின் நோக்கம். நாங்கள் இழிவான கொடூரச் செயல் புரிபவர்கள் அல்ல என்று கூறிவிட்டு, இன்குலாப் ஜிந்தா பாத்-புரட்சி ஓங்குக என்று முழக்கமிட்டனர். 12-6-1929 அன்று தீர்ப்பு வந்தது: குண்டு வீசிய குற்றத்துக்காக பகத் சிங்குக்கும், பாதுகேஸ்வர தத்துக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

லாகூர் சதி வழக்கு:

காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்  சாண்டர்ஸ் கொலை வழக்கு 10-7-1929 அன்று லாகூரில் தொடங்கியது. 32 பேர் மிது குற்றப்பத்திரிக்கை  தாக்கல் செய்யப்பட்டி ருந்தது.

அவர்களில் பணிந்தர நாத்கோஷ், ஜெயகோபால், ஹன்ஸ்ராஜ் வோரா முதலிய எழுவர் அரசு தரப்பு சாட்சிகளாக மாறினர் (அப்ரூவர்).

ஆசாத், பகவதி சரண், யஷ்பால் முதலிய 9 பேரை காவல் துறையினரால் கைது செய்ய இயலவில்லை.

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு முதலிய 16 பேர் நீதி மன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்.

7-10-1030 அன்று வழங்கப்பட்ட  தீர்ப்பின்படி பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டது.

17-10-1930 அன்று தூக்குத் தணடனை நிறை வேற்றப்படவேண்டும் என்பது நீதிபதி ஆணை. ஆனால் காரணம் என்ன என்று அறியாமலேயே தண்டனை நிறை வேற்றப் படாமலேயே, தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

தந்தையின் பாசமும் தனயனின் சீற்றமும்

தந்தை பாசத்தால், தன் மகன் குற்றம் புரிந்தவன் அல்லன் என்றும், சாண்டர்ஸ் கொலைச் செயலில் அவன் ஈடுபட்டவன் அல்லன் என்றும் அவன் விஷயத்தில் அரசு கருணை காட்டவேண்டுமென்றும் கோரி கடிதம் எழுதியிருந்தார்.

இதனை அறிந்த பகத்சிங் கோபத்துடன் தந்தைக்குக் கடிதம் எழுதினான்.  நான்  சாவைக் கண்டு அஞ்சும் கோழை அல்லன். என்னை கோழையாக நீங்களும் வளர்க்க வில்லை. பின் ஏன் அரசுக்குக் கருணை மனு எழுதினீர் கள் நீங்கள் செய்த காரியம் காவலர் என்னை தடியால் தாக்கியதைவிடக் கொடுமையானது. என் முதுகில் குத்தியது போன்று உணர்கிறேன். தந்தை என்கிற பலவீனத்தில் நீங்கள் செய்த காரியத்தை வேறு யாராவது செய்திருந்தால் அதை நான் பச்சைத்  துரோகம் என்றே கூறுவேன். என எழுதினார்.

சிறையில் இருந்தபோது, பகத்சிங், என்னைத் தூக்கிலிடாதீர்கள் என்று அரசுக்குக் கடிதம் எழுதினார். எதற்கு? உயிர் பிச்சை கேட்டா? இல்லை. நான் அரசின் அடக்குமுறைக்கு  எதிராகப் படை சேர்த்து போரிட்டவன். அந்த வகையில் நான் போர்க் கைதி. மற்ற கைதிகளைத் தூக்கிலிடுவதைப் போல என்னையும் தூக்கிலிடாதீர்கள். என் உயிர் பிரியும் தருணத்தில், இந்த மண்ணுக்குச் சம்பந்தமில்லாமல் என் உடல் அந்தரத்தில் இருக்கக் கூடாது. எனவே, என்னை ஒரு போர் வீரனாகக் கருதி, உங்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள் என்ற பகத்சிங்கின் கோரிக்கை அரசை மிரட்டியது.

தூக்குத்தண்டனையை எதிர்கொள்ள தீரமுடன் காத்திருந்தனர் புரட்சியாளர்கள் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ். ஆனால் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இந்திய நாடே ஒருமித்த குரலில் கோரிக்கை எழுப்பியது. இலட்சக்கணக்கான கையெழுத்துக்கள் கொண்ட மனுக்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு வந்து குவிந்தன. அநேகம் பேர் இரத்தத்தினாலும் கையெழுத் திட்டு அனுப்பியிருந்தனர்.

அப்போது காந்தியடிகளுக்கும் வைஸ்ராய் இர்வினுக்கும் இடையே எட்டப்படவிருந்த காந்தி - இர்வின் ஒப்பந்தம் குறித்து ஆலோசனைகள் நடந்து கொண்டிருந்தன. எனவே ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் ஒன்றாக மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரசுக்குள்ளேயே எழுந்தது. காந்தியடிகள் நினைத்தால் இந்த மூன்று இளைஞர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று நாடே நம்பியது.

பகத்சிங்கின் உயிரைக் காப்பாற்றப்போகும் சமய சஞ்சீவியாக வருமென மக்களால் எதிர்பார்க்கப்பட்ட அந்த காந்தி - இர்வின் ஒப்பந்தமும் வந்தது. 1931 மார்ச் மாதம் 5ம் நாள் கையெழுத்திடப்பட்டது. ஆனால் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று இளைஞர்களின் தூக்குத்தண்டனை பற்றி அந்த ஒப்பந்தத்தில் ஒரு வார்த்தை கூட இல்லை. வன்முறை சாராத குற்றங் களுக்காக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மட்டுமே அவ்வொப் பந்தம் கூறியது. எனவே, தாய் நாட்டின் விடுதலைக்காக தங்களது இன்னுயிரை விடவும் தயாராக இருக்கும் அந்த மூன்று இளைஞர்களின் உயிரைக் காப்பற்ற காந்தியடிகள் தவறிவிட்டார் என்று மக்கள் கோபம் கொண்டனர். காங்கிரசில் இருந்த இளைஞர்கள் மட்டுமல்லாது பெரும்பான்மையானவர்கள் காந்தியடி களுக்கு எதிராக கொதித்தெழுந்தனர்.

காந்தி - இர்வின் ஒப்பந்தம் அந்த மாதம் இறுதியில் 1931 மார்ச் 29-இல் நடைபெறவிருந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டால்தான் அது செயலுக்கு வரும் என்ற நிலை இருந்தது. ஒருவேளை, பகத்சிங் உள்ளிட்ட மூன்று இளைஞர்களின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவேண்டும் என்ற சரத்து ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டால்தான் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வோம் என்று ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவர்களை ஆட்கொண்டது. 1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாள் வரை தூக்குத் தண்டனை ஆணை வரவில்லை. ஆனால்அவசர அவசரமாக கராச்சி மாநாட்டிற்கு முன்னதாக மார்ச் 23 ஆம் நாள் தான் அம்மாவீரர்களைத் தூக்கிலிட ஆணை பிறப்பிக்கப்படுகிறது. தண்டனையை அன்று மாலையே நிறைவேற்ற வேண்டும் என்பது அந்த ஆணையின் இன்னொரு பகுதியாகும். அன்றைய நாள் முதன்மை சிறைக் காவலர் சர்தார்சிங் என்பவருக்குப் பகலில் ஆணை வருகிறது. ஒரு புனித நூலை எடுத்துக் கொண்டு அவர் பகத்சிங்கிடம் வருகிறார். அன்று மாலையே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதால் புனித நூலைப் படித்து கடவுளிடம் பிரர்த்தனை செய்யுமாறு கூறினார். அதற்கு பகத்சிங், நான் விபரம் தெரிந்த நாள் முதல் நாத்திகனாகவே வாழ்ந்திருக்கிறேன். என் வாழ்வின் இறுதி நாளிலும் நான் நாத்திகனாகவே இருக்க விரும்புகிறேன். என்று அடக்கத்துடன் கூறி சிறைக் காவலரின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டார்.

மரண தண்டனையை  நிறைவேற்ற மாலை 7மணி அளவில் சிறைக் காவலதிகாரிகள் அழைத்தபோது, புரட்சியாளர் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் (ளுவயவந யனே சுநஎடிடரவiடிn) என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தார் பகத்சிங். ஒரு புரட்சியாளனை, இன்னொரு புரட்சியாளன் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கிறான். கொஞ்சம் பொறுங்கள். இன்னும் சில பக்கங்களேயுள்ளன. படித்துமுடித்துவிட்டு வந்துவிடுகின்றேன், என்றார். காவலதிகாரிகள் திகைத்துப் போயினர். உனக்கு மரணம் பற்றிய பயமே இல்லையா? என்று அவர்கள் கேட்டதும், அந்த மாவீரன், நான் வெளியே இருந்த போது இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கினேன். சிறைக் கம்பிகளுக்குப் பின்னால், இதோ,என் மரணம் நெருங்கும் தறுவாயில் புரட்சி ஓங்குக என்று நாடே சொல்கிறது. 24 வயதில் இதை விட நிறைவான வாழ்க்கை வேறு யாருக்குக் கிடைக்கும் என்று பெருமிதத்துடன் கூறினார். காவலர்களுடன் தூக்கு மேடைக்குச் செல்லுமுன் மூவரும் சிறை நடுக்குற இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கினர், அரிமா வென தூக்குமேடை நோக்கி நடந்தனர். அதிகாரிகள் மூவரையும் தூக்கு மேடையில் நிறுத்தினர். முகத்தை மறைக்க கட்ட வந்த கருப்பு துணியை நிராகரித்தனர். எங்கள் நாட்டு மண்ணைப் பார்த்துக் கொண்டே உயிர் விடுவோம் என்றனர். பின் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் உடலைப் பெற்றோரிடம் ஒப்படைக்காமல் அதிகாரிகள் தாங்களே கொண்டு போய் பெரோஸ்பூர் அருகில் சட்லெஜ் நதிக்கரையில் எரித்து மிச்சத்தை ஆற்றில் இழுத்து விட்டுவிட்டனர். மறுநாள் செய்தி தெரிந்து மக்கள் வெள்ளம்  எனக்கூடி சட்லெஜ் நதிக்கரையில் மிச்சமிருந்த அவர்கள் சாம்பலை எடுத்து வந்து ஊர்வலம் சென்றனர். கொதிக்கும் உள்ளத்தோடு. காந்தியடிகள் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டதால் மக்கள் அவருக்கு எதிராகப் போர்க் கோலம் பூண்டனர். அவர் கராச்சி மாநாட்டிற்குச் செல்லும் வழிநெடுகிலும் மக்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு முழக்கங்களும்  செய்து அவரை வரவேற்றனர். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் காந்தியடிகள் சந்தித்த முதல் மக்கள் எதிர்ப்பு இதுவாகும் இளம் வயதில் மரணத்திற்கு அஞ்சாத உறுதியே வரலாற்று நோக்கில் ஒருவருக்கு சிறப்பிடத்தை தந்து விடாது. ஏனெனில் காந்திஜியைச் சுட்டுக் கொன்று தூக்குமேடையேறிய கோட்சேயும் கூட மரணத்திற்கு அஞ்சாத இளைஞன்தான். உயிரை துறப்பதாலல்ல, உயிரைத் துறப்பதற்கான நோக்கத்திலே தான் வீரமும், தியாகமும் அடங்கியிருக்கிறது. பகத்சிங்கின் நோக்கமும், இலட்சியமும்தான் அவரது மரணத்தை வரலாறாக்கியது. இளைஞர்களை புரட்சிகர அரசியலுக் குக் கவர்ந்திழுத்தது; இன்றளவும் கவர்ந்திழுக்கிறது.

“இதந்தரு மனைநீங்கி

இடர்மிகு சிறைப்பட்டாலும்

பதந்திரு இரண்டுமாறி

பழிமிகுந் திழிவுற்றாலும்

விதந்தரு கோடியின்னல்

விளைந்தெமை அழித்திட்டாலும்

சுதந்திர தேவி - நின்னை

தொழுதிடல் மறக்கிலேனே!”      - பாரதி

அவரின் நினைவாலயம்

இந்திய அரசு பாகிஸ்தான் வசம் போய்விட்ட பெரோஸ் பூரில் அந்த இடத்தை வாங்கி அங்கோர் நினைவாலயம் 1950இல் எழுப்பினர்..

சிறையில் பகத்சிங். கடவுள், மதம் போன்ற தத்துவத் தளங்களிலும் பகத்சிங்கின் பக்குவம் போற்றத்தக்கது. நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்ற பகத்சிங்கின் புத்தகம் அதை நிரூபிக்கும்

சிறையில் பகத்சிங் எழுதிய மற்ற நூல்கள்: சோசலி சத்தின் கோட்பாடு, சுயமரியாதை, ஆகியவை. மதமும் சுதந்திரப் போராட்டமும், மதக்கலவரங்களும் தீர்வும், தீண்டாமைப் பிரச்சினைகள் போன்ற கட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றவை.