கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், வீராணம் ஏரிக்கரைப் பக்கம் நார்த்தங்குடி என்ற கிராமத்தில் வை. கணபதி, க. அலமேலு இவர்களின் மூத்தமகன் மணியரசன். இவரின் உடன்பிறந்தவர்கள் மருத்துவர் க. சம்பந்தம், ஆசிரியர் க. இளங்கோவன், க. பாண்டித்துரை மற்றும் சகோதரி, க. பூங்கோதை.

பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூகத்தில் வேளாண்குடியில் பிறந்த இவர்கள் வை. கணபதி அவர்களால் சுயமரியா தைக்காரர்களாக வளர்க்கப்பட்டனர். தந்தை பெரியார், வே. ஆனைமுத்து, திருவாரூர் கே. தங்கராசு போன்ற தலைவர்களின் உரையைக் கேட்பதற்காக, பூந்தோட்டம், ஓடாக்க நல்லூர், வாழைக்கொல்லை, வெய்யலூர், வாக்கூர் நார்த்தங்குடி மற்றும் சேத்தியாத் தோப்புப் பகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களுக்குத் தன் பிள்ளைகளை கணபதி அவர்கள் அழைத்துச் செல்வார்கள்.

1946 முதல் 1949 காலங்களில் வே. ஆனைமுத்து அவர்கள், இந்தப் பகுதியில் பல ஊர்களுக்குச் சென்று, சுயமரியாதைப் பரப்புரை செய்தார்கள். இவர்களுக்கு இப்பகுதியில் உள்ள வை. கணபதி அவர்களும் ஓடாக்கநல்லூர் இராமச்சந்திரன் அவர்களும் பெரிதும் உதவியாக இருந்தார்கள். வே. ஆனைமுத்து அவர்கள் 1946 முதல் 1948 வரையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்புப் பயின்று கொண்டு இருந்தார்.

26.07.1936-இல் பிறந்த மணியரசன் தொடக்கக் கல்வியை நார்த்தங்குடியிலும், அடுத்து 3 கிலோ மீட்டர் நடந்து சென்று தென்பாதியிலும் பயின்றார். பின்னர் சிதம்பரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பச்சையப்பன் பள்ளி அருகில் உள்ள வன்னியர் வளர்ச்சி கழகக் கட்டடம் நளன்புத்தூர் பதிவாளர், சு.பூவராகவன், அத்திப்பட்டு பெரியவர் நாராயணசாமி, பச்சையப்பன் பள்ளி ஆசிரியர் நா.வை. ராமசாமி மற்றும் பலரால் உருவாக்கப்பட்டது. மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு இது பெரிதும் உதவியாக இருந்தது. மணியரசனோடு அப்பகுதியில் உள்ள பலரும் அங்கு தங்கிப் பயின்றார்கள். அவரோடு தங்கிப் பயின்ற பலரும் இன்றைக் கும் நல்ல நிலையில் உள்ளார்கள். அவரோடு பயின்ற மாணவர்கள் தமிழகத்தில் நல்ல உயர் பதவிகளில் உள்ளார்கள். வன்னியர் வளர்ச்சிக் கழகக் கட்டடம் அனைவரும் தங்குவ தற்கும், படிப்பதற்கும், அன்றைக்கு மாணவர்களாக இருந்த திராவிடத் தலைவர்கள் கழகக் கட்டடத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

தந்தை பெரியார், மு. கருணாநிதி, ஏ. மதியழகன், பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன், வே. ஆனைமுத்து போன்றவர்கள் வன்னியர் வளர்ச்சிக் கழகக் கட்டடத்தில் தங்கிப் பல நாள்கள் கலந்துரையாடி இருக்கின்றார்கள். இன்றைக்கு அக்கட்டடம் புனரமைக்கப்படாமல் யாருக்கும் பயன்தராமல் இருக்கின்றது. கட்டடத்தைப் பயன்படுத்திப் படித்தவர் கள், அங்கு இருந்து அரசியல் நடத்தியவர்கள், இன் றைக்கும் பல பதவிகளில் உள்ளவர்கள், மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்கள் தங்கிப் படிப்பதற் கும் ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள். அன்றைய காலத்தில் பல பெரியோர்கள், வன்னியர் வளர்ச்சிக் கழகக் கட்டடத்தில் தங்கிப் படித்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கி இருக்கின் றார்கள்; பாராட்டுக்குரியது சிறப்புக்கு உரியது.

மணியரசன் அவர்கள் 1956-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்புப் படிக்கத் தொடங்கினார். அப்பொழுது பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் அவர்களின் நட்புக் கிடைத்தது. இருவரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சேக்கிழார் இல்லத்தில் தங்கிப் பயின்றார்கள்.

பல்கலைக்கழகத்தில், வெ.ப.கரு இராமநாதன், திரு.அ. சிதம்பரநாதன், திரு.சீனிவாசன், திரு.கோவிந்தன் ஆகியோர்களின் நன்மதிப்பை மணியரசன் பெற்றார்.

கே.ஏ.மதியழகன் அவர்கள் பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில், மாணவர்கள் கலவரத்தால் தாக்கப்பட்டார். அப்பொழுது மணியரசன், சிதம்பரம் வி.வி. சாமிநாதன் ஆகியோர் கே.ஏ. மதியழகன் அவர்களை 15 நாள்கள் வரை பாதுகாப்பாகச் சிதம்பரம் வன்னியர் வளர்ச்சிக் கழகக்கட்டத்தில் வைத்துப் பாதுகாத்தார்கள். 1957-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அன்றைய முதல் அமைச்சர் கு. காமராசர் வருகை தந்த பொழுது, சக மாணவர்களை அழைத்துச் சென்று மாலை அணிவித்துக் கோரிக்கை ஒன்றை வைத்தார் மணியரசன். அக்காலத்தில் தேர்வாணையத் தேர்வுக்கான வயது 25 என்று இருந்தது. அதை 28ஆக உயர்த்தித் தரும்படிக் கோரிக்கை வைத்தார். முதல்வர் கு. காமராசர் அவர்கள் அதை நிறைவேற்றித் தந்தார்.

மணியரசன் அவர்கள் 1959-இல் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் சென்னை மாநிலக் கல்லூரி யில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அப் பொழுது நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் கல்வித்துறை இயக்குநராகப் பணியாற்றினார். 1960-இல் பெரியார் அவர்களின் பரிந்துரையில், தன்னுடைய 32ஆம் வயதில் சென்னை அரசினர் கல்லூரியில் பௌதிகத் துறையில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இவர் கல்லூரி யில் பயிலும் பொழுதும், சென்னையில் பேராசிரிய ராகப் பணியில் இருந்தபொழுதும் இவருக்கு உள்ள அரசியல் தொடர்பால், இவர் உடன் பயின்றவர்கள் தங்கள் பகுதியில் உள்ளவர்கள் கல்லூரிப் படிப்பிற்கும் அரசுப் பணியில் சேருவதற்கும் பெரிதும் உதவியாக இருந்துள்ளார்.

மணியரசன் அவர்கள் தன் குடும்பத்தினருக்கு மட்டும் இல்லாமல் பலருக்கும் பல வகைகளில் நன்மைகள் செய்து வந்தார். பேராசிரியர் மணியரசன் அவர்கள் குறைந்த ஆண்டுகள் வாழ்ந்தாலும் தன் குடும்பத்தைச் சிறப்பாக வைத்துக் கொண்டார்.

இவருடைய குடும்பம் :

துணைவியர் - செண்பகவள்ளி.

மகன் -      உயிர் ஒளி கண்ணன் - அரசுப் பணியில் உள்ளார்.

மகன் -      இளம் ஞாயிறு மன்னன்-அரசுப் பணியில் உள்ளார்.

மகள் -      அருள்மங்கை (துணைவர் சோமசுந்தரம் சென்னை வழக்குரைஞர்).

மகள் -      அருள்பாவை (துணைவர் கிருபாகரன், உயர்நீதி மன்ற நீதிபதி).

பேராசிரியர் மணியரசன் அவர்கள் 37-ஆம் வயதில் 5 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி முடியும் நாளில், சிறுநீரகக் கோளாறு காரணமாகக் காலமானார். 12.11.1972 அன்று மருத்துவர் க.சம்பந்தம் அவருடன் குடும்ப உறுப் பினர்கள் அனைவரும் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பார்த்தும் பயன் அளிக்கவில்லை. கடைசி நிலை யில் மருத்துவர் க. சம்பந்தம் அவர்களைப் பார்த்துத் தன் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளுமாறு கண்சாடையில் காண்பித்து விடைபெற்றுக் கொண்டார்.

மருத்துவர் க.சம்பந்தம் சிதம்பரத்தில் தங்கி, பேராசிரியர் மணியரசன் பெயரில் மருத்துவமனை தொடங்கித் தானும், தன் துணைவியார், மகன், மருமகள், அனைவரும் சிறப்பாகப் பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகின் றார்கள். மருத்துவர் க. சம்பந்தம் அவர்கள் மருத்துவ ஆய்விற்காகச் சீனா மற்றும் பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். பேராசிரியர் மணியரசன் அவர்கள் 37 ஆண்டுகள் வாழ்ந் தாலும், பட்டுக்கோட்டை அழகிரி போல் தந்தை பெரியார் ஊட்டிய உணர்வால் தன் சமூகம் வாழ்வதற்கும், வளர்வதற்கும் உதவியுள்ளார். தன்னுடன் பயின்ற பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன், கே.ஏ.மதியழகன் போன்றோர்களைப் பயன்படுத்தித் தன் பகுதி மாணவர்கள் கல்லூரி படிப்பிற்கும் அரசுப் பணிக்குச் செல்வதற்கும் சென்னையில் இருந்த ஐந்து ஆண்டுகளில் பல வகையிலும் உழைத்தார். அவரைப் போல் நாமும் மக்கள் மேம்பாட்டிற்காக உழைக்க அவரது 84-ஆம் பிறந்தநாள் நினைவாக சபதம் ஏற்போம்.

- சிதம்பரம் மருத்துவர் க.சம்பந்தம்