கனத்த துயரங்களைச் சுமக்கும் இதயங்கள். நம்பிக்கையை இழந்த கண்கள். இடையிடையே எழுந்து ஓயும் கடந்தகால வதையின் பீதியுடன் நடுங்கும் உடல்கள் என, சந்தன வீரப்பன் தேடுதல் வேட்டையில் காவல் துறையின் கொடூரத்தால் சிதைக்கப்பட்டவர்களை தமிழக கர்நாடக மலை கிராமங்களில் நாம் காணலாம். வீரப்பன் தேடுதல் வேட்டையில் காவல் துறை வீரப்பனைப் பிடிப்பதாகச் சொல்லி, மக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்தியது. தமிழக கர்நாடக எல்லை கிராமங்கள் 500க்கும் மேற்பட்டவற்றில் மக்கள் மீது இத்தகைய கொடூரத் தாக்குதல்கள் அரங்கேறின.

STF's workshop சந்தேகப்படும் மனிதர்களை அதிரடிப்படை போலிசார், தங்களின் சித்திரவதை முகாம்களுக்குத் தூக்கிச் செல்வது; மாதக் கணக்கில் சட்டவிரோதமாகச் சிறைப்படுத்துவது; அம்மனிதர்களின் உடல் துவாரங்கள் உள்ள மென்மையான பகுதிகளில் மின் அதிர்வைப் பாய்ச்சுவது; தலைகீழாய் தொங்கவிட்டு அடிப்பது; பெண்கள் என்றால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது என வக்கிரமும் வன்முறையும் மக்கள் மீது ஏவப்பட்டன. அவ்வப்போது சட்ட விரோதமாகப் பிடித்து காவலில் அடைத்து, அவர்களுக்குப் பச்சை வண்ண உடை மாற்றி வனப்பகுதிக்குக் கூட்டிச் சென்று சுட்டுக் கொன்று, வீரப்பனுடன் நடந்த சண்டையில் கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக செய்திகளை ஊடகங்களில் வெளிப்படுத்திய அநீதியும் நடந்தேறின.

மொத்தத்தில், வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த தமிழக, கர்நாடக சிறப்பு அதிரடிப்படை காவலர்களிடம் குவிந்திருந்த எல்லையற்ற அதிகாரம், மக்கள் மீது அதிகார அத்துமீறலை நிகழ்த்தின. பல அப்பாவிகள் மீது வீரப்பனின் கூட்டாளிகள் எனப் பழி சுமத்தப்பட்டு, ‘தடா' வழக்குகளின் கீழ் பல ஆண்டுகள் சிறைப்படுத்திய துயரங்களைச் சொல்லி மாளாது. இச்சித்திரவதைகள் 1993 முதல் 1998 வரை நீண்டன. ஊடகங்கள் வீரப்பனின் தாக்குதலையும், காவல் துறையின் ‘மறுதாக்குதல்' என்ற போலி மோதல் சாவுகளின் பட்டியலையுமே வெளியிட்டு வந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு இயக்கங்கள்தான் இப்பிரச்சனைக்குக் குரல் கொடுத்து வந்தன.

தமிழகப் பழங்குடி மக்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம் போன்றவை, 1994 முதல் இப்பிரச்சினைகளைத் தீர்க்க சில முயற்சிகளை முன்னெடுத்தன. 1998 ஆம் ஆண்டு மக்கள் கண்காணிப்பகம், சோக்கோ அறக்கட்டளை, சிக்ரம் - பெங்களூர் ஆகியவற்றுடன் மேற்கண்ட இயக்கங்கள் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளுக்கான கூட்டு இயக்கமாக மாற்றப்பட்டது. கர்நாடக ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவா மற்றும் தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் சி.பி.அய். இயக்குநர் சி.வி. நரசிம்மன் ஆகியோர் கொண்ட விசாரணைக் குழுவை, தேசிய மனித உரிமை ஆணையம் அமைத்தது. இதன் விசாரணை, 2000 சனவரியில் தொடங்கியது. கூட்டு இயக்கத்தினர் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில், காவல் துறை அச்சுறுத்தலையும் மீறி விசாரணைக் குழுவில் பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சியமளித்தனர்.

விசாரணைக் குழுவின் இரண்டாம் அமர்வு விசாரணை, கொளத்தூரில் நடைபெற்றது. இவ்விசாரணையில் அதிரடிப்படைத் தலைவராக இருந்த தேவாரம் மீது பாலியல் வன்முறைப் புகார்கள் எழுந்தன. காவல் துறையினரின் பாலியல் வன்முறைகள் பதிவானது. விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட பலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இவ்விசாரணைக் குழு தன் மூன்றாவது அமர்வை கர்நாடக மாதேஸ்வரன் மலைப்பகுதியில் நடத்தத் திட்டமிட்டது. அப்போது, தேசிய மனித உரிமை ஆணையம் ஓராண்டுக்குள் நிகழ்ந்தேறிய மனித உரிமைப் புகார்களை மட்டுமே விசாரிக்க முடியும் என்று கூறி, கர்நாடக காவல் துறையினர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தடைபெற்றனர். இத்தடைக்குப் பிறகு விசாரணையில் ஓராண்டு கால தாமதம் ஏற்பட்டது. இறுதியில், முழு விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் சதாசிவா விசாரணைக்கு விதித்த தடையை விலக்கியது. அதன் பிறகு மாதேஸ்வரன் மலை, மைசூர், பெங்களூர் என விசாரணைகள் நடைபெற்றன. பாதிக்கப்பட்ட மக்கள், குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என மொத்தம் 192 சாட்சியங்கள் பதியப்பட்டன. இவ்விசாரணை முடிந்து நீதிபதி சதாசிவா விசாரணைக்குழு 2.12.2003 அன்று, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இறுதி அறிக்கையை அளித்து விட்டது. இவ்வறிக்கை குறித்து தங்களின் கருத்துகளைக் கூற தமிழக, கர்நாடக மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. ஆனால், தமிழக, கர்நாடக அரசுகள் இவ்வறிக்கை குறித்து எந்தப் பதிலையும் தெரிவிக்காமல் அமைதி காத்தன.

சந்தன வீரப்பன் சுடப்பட்ட பிறகு தமிழக அரசு, சதாசிவா விசாரணை முன்பு குற்றம் சுமத்தப்பட்ட தேவாரம் உள்ளிட்டப் பல நூறு காவல் துறையினருக்கு கோடிக்கணக்கான ரூபாய் பரிசுகளைக் கொடுத்துப் பெருமைப்படுத்தியது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்குப் பரிசும் பாராட்டும் அக்குற்றச்சாட்டு விசாரித்து முடிக்கப்படும் காலம் வரை தரக் கூடாது என்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலை தமிழக அரசு முற்றாகப் புறக்கணித்தது.

T.Raja with tribes in Delhi

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். பாலியல் வன்முறை, பொய்வழக்கு, சித்திரவதை, சிறை என அனுபவித்து இறுதியில் அப்பாவிகள் என விடுதலையாகி வந்த பல பெண்கள், தங்களின் சொந்த குடும்பத்தாராலேயே புறக்கணிக்கப்பட்டனர். மேட்டூர் வட்டம் மேட்டுப்பாளையூரைச் சார்ந்த வள்ளியம்மா, தன் கணவன் சாம்புவுடன் விசாரணைக்காக கர்நாடக காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டார். மாதேஸ்வரன் மலையில் உள்ள காவல்துறையின் கொடூர வதை முகாமான ‘ஒர்க்ஷாப்' என்ற இடத்தில் சித்திரவதை செய்யப்பட்டார். அவர் கண் முன்பே அவர் கணவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பிறகு வள்ளியம்மாள், காவல் துறையினரால் பலநாள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். இறுதியில், ‘தடா' வழக்கில் எட்டாண்டுகள் மைசூர் சிறையிலிருந்து வெளியே வந்தார். சிறைக்குப் பிறகு தன் குழந்தையைக் காண தாய் வீடு சென்றார். அங்கு அவரை அவரது தாய் ஏற்க மறுத்தார். ஓர் இடிந்த குடிசையில் ஆதரவின்றி தனித்து வாழ வேண்டிய அவல நிலைக்கு வள்ளியம்மாள் தள்ளப்பட்டார்.

தங்கம்மாள் பல நாட்கள் காவல் துறை உயர் அதிகாரியால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். சிறைத் தண்டனை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்த பிறகு, தன் சொந்த மகன் கூட தன்னைக் காண வருவதில்லை என கண்ணீர் சிந்துகிறார். தன் கணவன் முன்பே காவல் துறை அதிகாரியால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான குன்றியைச் சார்ந்த மஞ்சுளா, தன் கணவன் மற்றும் உறவினரால் கைவிடப்பட்டு, விரட்டப்பட்ட சோகத்தை முன் வைக்கின்றார். அதைப் போலவே கொடுமையான வதையின் காரணமாக முடமாக்கப்பட்ட ஆண்கள், தங்களின் குடும்பத்திற்குப் பாரமாக மாறிப்போயினர். பிறப்புறுப்புகளில் மின் அதிர்வுகள் வைக்கப்பட்டதால் ஆண்மை இழந்த பலர், தம் குடும்ப வாழ்வை இழந்து கூனிப்போகும் அவலமும், வேறு வகையான உறவுச் சிக்கல்களும் எழத் தொடங்கின.

வீரப்பன் தேடுதல் வேட்டையில் நடந்து முடிந்த அரச வன்முறையின் மனித உரிமை மீறல்கள், பல சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. இச்சூழலில், மறுவாழ்வு என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. மேலும், சித்திரவதையின் கணங்கள், இம்மக்களின் மனதில் ஆழமான உளவியல் பாதிப்பை உருவாக்கியுள்ளன. இதனைப் போக்க உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட வேண்டியது மிகமிக அவசியமானது. பாதிக்கப்பட்ட மக்களின் சமூகச் சூழல் பெரும் சோகத்தைத் தருவதாக மாறியுள்ள நிலையில், நீதிபதி சதாசிவா விசாரணைப் பரிந்துரைகள் ஒன்றே அவர்களுக்கு அணைந்து போன நம்பிக்கையை மீட்டுத் தருவதாக இருக்கிறது. ஆனால், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும் தேசிய மனித உரிமை ஆணையம், 2003 டிசம்பரிலிருந்து இவ்வறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிகழ்வுகளில் பங்கெடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலர் சி. மகேந்திரன், இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தையும், இப்போராட்டத்துடன் இணைத்து உதவினார். மதுரையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற இவ்வமைப்பின் மாநில மாநாட்டில் பங்கெடுத்த பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை எடுத்துக் கூறினர். இம்மாநாட்டில் பங்கெடுத்த அதன் பொதுச் செயலர் ஆனி ராஜா, இப்பிரச்சனையை டெல்லியில் எழுப்ப உறுதி கூறினார். இதன் தொடர்ச்சியாக, 14.10.2005 அன்று டெல்லியில் ஒரு பொது விசாரணைக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் கதவுகளைத் தட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மக்கள் கண்காணிப்பகம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், பி.யூ.சி.எல்., சோக்கோ அறக்கட்டளை, சிக்ரம் - பெங்களூர், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்பினருடன் பாதிக்கப்பட்ட 18 பேர் அடங்கிய குழு, அக்டோபர் 14 அன்று டெல்லி சென்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி சிவராஜ் பாட்டிலை முதலில் சந்தித்தது. நீதிபதி சிவராஜ் பாட்டிலின் சந்திப்பு, மக்களுக்கு நம்பிக்கை தருவதாக இருந்தது. துயரம் மிக்க இம்மக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கேட்டு வேதனையடைந்த நீதிபதி, தமிழக கர்நாடக அரசுகளின் பதிலுரைக்காக வெகுகாலம் தேசிய மனித உரிமை ஆணையம் காத்திருக்காது; மாற்றுத் தீர்வுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார். இறுதியில், ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஏ.எஸ். ஆனந்தையும் சந்தித்தனர்.

Tribes in Delhi அதே தினத்தன்று நடைபெற்ற பொது விசாரணையில், ஏராளமான பெண்கள் பங்கெடுத்தனர். மனித உரிமைப் போராளிகளான நீதிபதி ராஜேந்திர சச்சார், ரவி நாயர், உமா சக்ரவர்த்தி, லும்பா, பேராசிரியர் கமல் மித்ரா ஆகியோர் நடுவர்களாயிருந்தனர். தங்கள் மீது நிகழ்ந்தேறிய மனித உரிமை மீறல்களையும், கொலை செய்யப்பட்ட தங்களின் கணவர் மற்றும் குழந்தைகளின் மரணத்திற்கும் நியாயம் கேட்டனர். தங்கள் ஒரே குடும்பத்தில் ஏழு பேரை காவல் துறை சுட்டுக் கொன்ற அநீதியை முனியம்மாவும், பெரமாயியும் எடுத்துக் கூறினர். தமிழக கர்நாடக அதிரடிப்படை காவலர்களின் உண்மை முகம் ஊடகங்களில் அம்பலமானது.

காவல் படைகளின் வன்முறைக்குப் பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் பலியாக்கப்படுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதன் பிறகு 17.10.2005 அன்று, பிரதமர் மன்மோகன் சிங் தன் கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சூழலிலும் இம்மக்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கினார். பிரதமரிடம் இம்மக்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் து. ராஜா வழி நடத்தினார். பிரதமர் மன்மோகன் சிங், பெண்களின் பாதிப்புகளைக் கேட்டு வேதனையடைந்தார். தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கேட்பதாக உறுதியளித்தார். இது போன்ற சம்பவங்கள், எதிர்காலத்தில் நடைபெறாமால் இருக்க முயற்சி எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

நாடு முழுவதும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கென தனி நிதியம் ஏற்படுத்தவும், வீரப்பன் தேடுதல் வேட்டையில் மனித உரிமை மீறல் குற்றம் புரிந்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் பிரதமரிடம் கோரப்பட்டது. இது வரை பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாகச் சித்தரித்து, அவர்களின் வாழ்வில் இருளை உருவாக்கிய தமிழக, கர்நாடக அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக ‘பாதிக்கப்பட்டவர்கள்' என அங்கீகரித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரின் மனித நேயமிக்க அணுகுமுறை, அம்மக்களின் பாதிப்புகளுக்கு ஆறுதலாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தது.

மனித உரிமை மீறல் குற்றங்கள் நடைபெறும்போதெல்லாம் அதிகாரத்தைக் கைப்பற்ற போட்டிப் போடும் பெரிய அரசியல் கட்சிகள், தங்களுக்கு அப்பிரச்சனையில் துளியும் தொடர்பில்லாதது போல ஒதுங்கி நிற்கும் அவலம் தொடர்கிறது. ஆனால், அரசியல் கட்சிகளுக்கு மக்களின் கண்ணீரைத் துடைக்கும் கடப்பாடு உள்ளது. இப்போதாவது அவை பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்க முன் வரவேண்டும். ‘ஒர்க்ஷாப்' உள்ளிட்ட அதிரடிப்படையினரின் பழைய சித்திரவதை முகாம்கள், இட்லரின் நாஜி வதை முகாம்கள் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டது போல மாற்றப்பட வேண்டும்

Pin It