கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

உலகில் 100 கோடி மக்கள் 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு வறுமையின் கோரப் பிடியில் இருந்து விடு பட்டுள்ளனர் என்று, அண்மையில் ‘பில்மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனையில் இந்தியா வும் சீனாவும் பெரும் பங்கு வகித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

சீனாவின் மக்கள் தொகை சுமார் 141.5 கோடி. இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 135.4 கோடி. உலக மக்கள் தொகையான 760 கோடியில் இந்த இரு நாடுகளின் மக்கள் தொகை மட்டுமே 36.2 சதவீதம். எனவே, இந்த இரு நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் இத்தகைய சாதனை நிகழ்த்தப்பட முடியாது.

வறுமை ஒழிப்பில், சுகாதாரமும் கல்வியும் முக்கியப் பங்கு வகிப்பதை அந்த அறிக்கை தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது. மனித மூலதனத்துக்காக, சுகாதாரம் மற்றும் கல்விக்கு அரசுகள் போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளது. மக்களின் திறமை, அறிவு, சுகாதார அளவீடு இவற்றின் கூட்டுத் தொகையையே மனித மூலதனம் என்று பொருளா தார வல்லுநர்கள் வரையறுக்கின்றனர்.

கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் வறுமையை ஒழித்த இந்தியாவை, சகாரா பாலை வனத்துக்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகள் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கை அறிவுறுத்தி உள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக மகிழ்ச்சி அடைவதை விட, சுகாதாரத்தையும் கல்வியையும் மேம்படுத்தும் முனைப்பு, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, எதிர்பார்த்த பலனுக்கும், கிடைத்த பலனுக்கும் உள்ள இடைவெளி ஆகியவை குறித்து சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது. குறிப்பாக, செலவழிக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப பலன் கிடைக்காதது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவில் சுகாதாரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.3 சதவீதம் தான் செலவழிக்கின்றன. ஆனால், சர்வதேச நாடுகள் சராசரியாக 6 சதவீதம் ஒதுக்கு கின்றன. சுகாதாரத்துக்கு 2025-க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும் என 2017-இல் வெளியிடப்பட்ட தேசிய சுகாதாரக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சராசரியை நெருங்குவதற்கு நம்மிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதையே இது வெளிச்ச மிட்டுக் காட்டுகிறது. டாக்டர் கே. ஸ்ரீநாத் ரெட்டி தலை மையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது மூன்று சதவீத மாவது சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று 2011-இல் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத்துக்காக அரசு மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கும் நிலையில், 70 சதவீதம் பேர் தங்கள் உடல் நலத்தைக் காக்க, தாங்களே செலவழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவாக ஒவ்வோர் ஆண்டும் ஏழு சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்படுகிறார்கள்.

தேசிய மாதிரி ஆய்வுகளின் அறிக்கை சில அதிர்ச்சி கரமான தகவல்களைத் தெரிவிக்கிறது. ஊரகப் பகுதி களில் 72 சதவீதம் பேரும், நகரப் பகுதிகளில் 79 சதவீதம் பேரும் தனியார் மருத்துவமனைகளில் தான் சிகிச்சை மேற்கொள்கின்றனர். ஊரகப் பகுதிகளில் 58 சதவீதம் பேரும், நகரப் பகுதிகளில் 68 சதவீதம் பேரும் உள்நோயாளிகளாக தனியார் மருத்துவமனைகளிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். பல்வேறு மருத்துவ நலத் திட்டங்களை அரசுகள் செயல்படுத்தினாலும் ஊரகப் பகுதிகளில் 86 சதவீதம் பேரும், நகரப் பகுதிகளில் 82 சதவீதம் பேரும் இதுபோன்ற எந்தத் திட்டத்திலும் இடம்பெறவில்லை. ஊரகப் பகுதிகளில் 20 சதவீதம் குழந்தைகளும், நகரப் பகுதிகளில் 11 சதவீதம் குழந் தைகளும் மருத்துவமனைகளில் பிறப்பதில்லை என்பது கவலை அளிக்கும் தகவலாகும்.

மொத்த மக்கள் தொகையில், ஊரகப் பகுதிகளில் 7.7 சதவீதம் பேரும் நகரப் பகுதிகளில் 8.1 சதவீதம் பேரும் முதியோர் ஆவர். இவர்களில் ஊரகப் பகுதி களில் 82 சதவீதம் பேரும், நகரப் பகுதிகளில் 80 சதவீதம் பேரும் பொருளாதார ரீதியாகத் தங்கள் வாரிசுகளைச் சார்ந்துள்ளனர். இயற்கையாகவே, தங்கள் பெற்றோரின் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல், குறைந்த வருவாய்ப் பிரிவினர் தவிர்த்து வருகின்றனர். நோயின் தீவிரத்தைக் காட்டிலும் நோயாளிகளின் செலவழிக்கக் கூடிய திறன் மீதே இரக்கமற்ற மருத்துவமனைகளின் கவனம் உள்ளது. பணக்காரர்களும் காப்பீடு செய்தவர்களும் மட்டுமே அங்கு முக்கியத்துவம் பெறுகிறார்கள். ஏழைகளுக்கும் காப்பீடு செய்யாதவர்களுக்கும் தரமான சிகிச்சை எட்டாக் கனியாகவே உள்ளது.

பெரிய மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள், மருத்துவர்களுக்கு இடையிலான கூட்டு, ஒவ்வோர் ஆண்டும் பல இலட்சம் இந்தியர்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 3.5 கோடிப் பேர் மருத்துவச் செலவுகளினால் கடன் சுமைக்கு ஆளாகின்றனர்.

நாடு முழுவதும் சுமார் 10.4 இலட்சம் சிறிய, பெரிய மருத்துவமனைகள் உள்ளன. பொருளாதார ரீதியாகப் பார்த்தால், 2017-இல் மருத்துவமனைகள் சுமார் 16,000 கோடி டாலர் வருவாய் ஈட்டி உள்ளன. இது 2020-இல் 28,000 கோடி டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறையில் 2000 முதல் 2017 வரை 434 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2015இல் இந்தியாவில் சிகிச்சை பெற வெளிநாடுகளில் இருந்து 1.30 இலட்சம் பேர் வந்துள்ளனர். அதுவே 2016-இல் இரண்டு இலட்சமாக அதிகரித்துள்ளது.

மருத்துவத் துறையின் இப்போதைய சூழலை மாற்றவும், சுகாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் ‘பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா-ஆயுஷ்மான் பாரத்’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி தொடக்கி வைத் துள்ளார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சமூக, பொருளாதார, சாதி ரீதியாகப் பின்தங்கிய 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி பேர் இந்தத் திட்டத்தால் பயன் அடைவார்கள். இந்தத் திட்டத்தில் 1,300 நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும். ஒவ் வொரு குடும்பமும் ரூ.5 இலட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெறமுடியும்.

இப்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து இது வேறுபட்டாலும், ‘அனைவருக்கும் சுகாதாரம்’ என்ற இலக்கை இந்தத் திட்டத்தால் சாதிக்க முடியுமா என்பது கேள்விக்குரியதே. ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத் தைவிட, தங்கள் மாநிலங்களில் ஏற்கெனவே அமல்படுத் தப்பட்டுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் சிறந்த தாக உள்ளன என்று கூறி, இந்தத் திட்டத்தை தெலங்கானா, ஒடிசா, தில்லி, கேரளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஏற்க மறுத்துவிட்டன.

ஒருவர் கடும் நோய்க்கு ஆளாகி, அதிக செலவுகளால் கடனாளியாகும் நிலை ஏற்பட்டாலும்கூட, அவர் ஏழை அல்ல எனக் கூறி, இந்தத் திட்டத்தில் இணைக்க மறுப்பதால் பெருமளவிலான மக்கள் இதனால் பயனடைய முடியாத நிலை உள்ளது. எனவே, இந்தத் திட்டத்தையும் ‘அனைவருக்குமான மருத்துவக் காப் பீட்டுத் திட்டம்’ என்று கூற முடியாது.

மறுபுறம், ஒவ்வோர் ஆண்டும் கல்வித் துறைக் கான அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்து கொண்டே வருகிறது. சுகாதாரத் துறையைவிட அதிக வேகத்தில் கல்வித் துறையின் தரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. கல்வித் துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2012-13-இல் 3.1 சதவீதமும், 2014-15-இல் 2.8 சதவீதமும், 2015-16-இல் 2.4 சதவீதமும், 2016-17-இல் 2.6 சதவீதமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்வித் துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1985-86-க்குள் 6 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என கோத்தாரி கமிஷன் 1966-லேயே பரிந்துரைத் திருந்தது.

கல்வித் தரம் ஆண்டுதோறும் வீழ்ச்சி அடைந்து வருவதை ‘கல்வித் தர ஆண்டறிக்கை’ படம்பிடித்துக் காட்டி உள்ளது. 14 முதல் 18 வயது வரை உள்ளவர் களில் சுமார் 25 சதவீதம் பேரால், தங்கள் தாய்மொழி யில் சரளமாகப் பேச முடிவதில்லை. சுமார் 57 சதவீதம் பேருக்கு, மூன்று இலக்க எண்ணை ஓர் இலக்க எண்ணால் வகுக்கத் தெரியவில்லை.

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலுக்கு சமூகப் பொருளாதாரக் காரணங்களும் இருக்கலாம். ஆனால், அதற்கு ஆசிரியர்களும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. பெரும்பாலான ஆசிரியர்கள் தகுதியற்றவர்கள் என்பது மட்டுமல்ல, மாணவர்களிடம் கொடூரமாகவும் நடந்து கொள்கின்றனர். மாணவர்களிடம் ஆசிரியர்கள் நட்பு ரீதியாகப் பழகுவதில்லை என ‘கல்வி தர அறிக்கை’யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சிறார் பாதுகாப்பு - ஆசிரியர்களுக்கான கையேடு’ என்ற நூலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வெளியிட்டள்ளது. பள்ளிகளில் அளிக்கப்படும் கொடூரமான தண்டனைகள் காரண மாகவே, சிறார்கள் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிடுவதுடன் வீட்டைப் விட்டும் வெளியேறி விடு கின்றனர் என அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துக்கும் கல்விக்கும் அரசுகள் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தருணம் இதுவே. இந்த இரு துறைகளும் மேம்பட்டால்தான் வறுமை ஒழிப்பு சாத்தியமாகும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

நன்றி : தினமணி, 9.10.2018