இடம் : பெரம்பலூர், நாள் : 17.09.2017 ம் நேர்காணல் : பூலாம்பாடி கு.வரதராசன்

கு. வரதராசன்  :  அய்யா வணக்கம்!

இளைய பெருமாள் செயபால்   :  வணக்கம், வாங்க!

கு.வ.   :  அய்யா, தங்கள் வயது என்ன?

இ.பெ.செ.  :  என் வயது 96. என் பிறந்த தேதி 17.10.1921. என் பெற்றோர் இராமசாமி - காளியம்மை இணையர். ஆதித்திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

கு.வ.   :  தங்கள் பணியைப் பற்றிக் கூறுங்கள்.

இ.பெ.செ. : நான் பி.ஏ., பி.டி., ஆசிரியர்; என் துணை வியார் திருமதி. சுகிர்தமணியும் ஆசிரியை. எங்களுக்கு 3 மைந்தர்கள். முதலாமவர் அறிவுடைநம்பி, எம்.ஏ., எம்.ஃபில்., சமூக வளர்ச்சி அலுவலர்; இரண்டாவமர் வள்ளுவன் நம்பி, பி.எஸ்ஸி., பி.எல்., வழக்குரைஞர்; மூன்றாமவர் அருள்நம்பி, பி.எஸ்ஸி. வேளாண்மை, கரும்பு ஆய்வாளர்.

கு.வ.  : தங்களுக்கு எந்த ஆண்டிலிருந்து தந்தை பெரியார் தொடர்பு?

இ.பெ.செ. : சுமார் 70 ஆண்டுகளாக என் மாணவப் பருவத்திலிருந்தே சுயமரியாதை இயக்க ஈடுபாடு. அக்காலத்தில் பெரம்பலூரில் உயர்நிலைப்பள்ளி இல்லை. பூவாளுர் சாமிக்கண்ணு ஆசிரியர் வீட்டில் தங்கி இலால்குடி உயர்நிலைப்பள்ளியில் பயின்றேன்.

பூவாளுர் சாமிக்கண்ணு ஆசிரியர் பெரியார் தொண்டு பற்றிக் கூறினார். ஒரு நாள் மாலை பூவாளுர் அ. பொன்னம்பலனார் தலைமையில் அக்கிரகார மைதானத்தில் தந்தை பெரியார் கூட்டம் நடைபெறும் என்ற விளம்பரம் கண்டு, கூட்டத்துக்குச் சென்று பெரியார் சொற்பொழிவைக் கேட்டேன். பெரியார் பேச்சு என்னைக் கவர்ந்தது. அன்று முதல் நான் பெரியார் பற்றாளன் ஆனேன். பூவாளுர் பெரியார் பற்றாளர்கள் பலர் என் நண்பராயினர். “குடிஅரசு”, “பகுத்தறிவு” படிக்க ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் “விடுதலை” நாளிதழ் உதயமாயிற்று.

கு.வ.  :  தங்கள் பள்ளித் தோழர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் யார்?

இ.பெ.செ. : இலால்குடி பள்ளியில் என் வகுப்புத் தோழர்கள் கனகசபை, சேவியர், அன்பில் பெ. தர்மலிங்கம் ஆவர். பூவாளுரில் பெரியார் படிப்பகம் ஒன்றை, பூவாளுர் நண்பர்களுடன் நிறுவினோம். இதனைப் பெரியாரைக் கொண்டே திறப்பு விழா நடத்தினோம். பெரியாரும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு எங்களைப் பாராட்டினார்; நன்கு படித்து நல்ல பொறியாளராகவும், மருத்துவர்களாகவும் ஆக வேண்டும். சமூகச் சீரழிவு நீங்கி, சமத்துவம் உண்டாகப் பாடுபடுங்கள் என வாழ்த்தினார்.

கு.வ.  : தங்கள் ஆசிரியப் பணியாற்றிய அனுபவங்களைக் கூறுங்கள்.

இ.பெ.செ. : பொன்பரப்பியில் 6 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினேன். அப்பொழுதுதான் என் திருமணம் நடைபெற்றது. அங்கிருந்து அரும்பாவூர் உயர்நிலைப் பள்ளிக்கு மாறுதல் பெற்றேன். அங்கு சிறுகனூர் ரெங்கசாமி ஆசிரியர் பணியாற்றினார். இவர் பெரியார் பற்றாளர். இங்குப் பணியாற்றிய போது அரும்பாவூர், அ. மேட்டூர் தோழர்கள் மே.இரா. சின்னசாமி, இவரது இளவல் மே.இரா. வெங்கடாசலம், கி.அரி இராமசாமி, முத்துசாமி, கிருஷ்ணசாமி, ந.உலகநாதன் இவர்கள் ஆதரவுடன், அரும்பாவூர் மேட்டூருக்கு தந்தை பெரியாரை அழைத்துப் பெரிய மாநாடு நடத்தினோம். திருச்சி வே.ஆனைமுத்து, அந்தூர் கி.இராமசாமி, கூடலூர் தி.க. சுப்பையா ஆகியோர் இம்மாநாட்டிற்குப் பெரும் பங்காற்றினார்கள்.

இதன் பின்னர் பெரம்பலூர் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு மாறுதல் பெற்றேன். இது வட்டத் தலைநகர், சுற்றுவட்டார கிராம மாணவர்கள் பலரும் சேர்ந்து நல்ல முறையில் கல்வி கற்றனர். இப்பள்ளியின் முன்னேற்றத்திற்குப் பெரும் பங்கு ஆற்றினேன். பெண்கள் சுயதொழில் கற்று முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் என் உறவினர் பாராளுமன்ற உறுப்பினர் இலாடபுரம் அய்யாக்கண்ணுவின் முயற்சியுடன் அரசு உதவி பெற்று பெண்களுக்கான இலவசத் தையல் பயிற்சிப் பள்ளியைத் துவங்கிப் பல பெண்களுக்குத் தையல் பயிற்சி, அரசு சான்றிதழ் வழங்கப்பட்டது. தூரத்து ஊர்ப் பிள்ளைகளுக்கு அரசு உதவியுடன் மாணவியர் விடுதியும் பெற்று, என் துணைவியார் சுகிர்தமணி ஊதியமில்லா விடுதிக் காப்பாளினியாக - சமூக சேவை செய்தார். பெரியார் கொள்கைப்படி விடுதியில் சாதி, மத வித்தியாசம் இன்றிச் செயல்பட்டதைப் பலரும் பாராட்டினர். ஒரு சமயம் அமைச்சர் பி.கக்கன் அவர்களைப் பார்வையிட அழைத்து வந்தேன். “உங்கள் விடுதிப்பிள்ளைகள் நெய்யில் பொரித்த பணியாரம் போல் இருக்கிறார்கள்” என்றார். “அப்படியென்றால் என்ன?” என அமைச்சரை வினவினேன். “பிள்ளைகளுக்கு சரிவிகித உணவு, சத்தான உணவு வழங்குகிறீர்கள் எனத் தெரிகிறது” என்றார். இது எங்கள் பணிக்குக் கிடைத்த சான்றாகும். இதில் பயின்ற பலரும் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளிகளிலும், புதுச்சேரியிலும் அரசு ஆசிரியர் பணி கிடைக்கப் பெற்று நல்ல ஊதியம் பெற்றுப் பயனடைந்தனர்.

கு.வ. : உங்கள் பிற சமுதாயப் பணிகளைக் கூறுங்கள்.

இ.பெ.செ. : பெரம்பலூர் வட்டம் வானம் பார்த்த பூமி ஆனமையால் கிணறு ஆழப்படுத்த நிதி வேண்டும் என வட்டாட்சியரிடம் உதவி கேட்டோம். பம்பாயில் உள்ள ஒரு நிறுவனம் அமெரிக்கா உதவியுடன் கிணறு ஆழப்படுத்த கோதுமை வழங்குகிறது என்றார். நாங்கள் ஒரு குழுவாக அந்நிறுவனத்துக்கு விண்ணப்பித்தோம். அந்நிறுவனம் அரியலூர் வழியாக கோதுமை மூட்டைகளை அனுப்பியது. இதனைப் பெற்று குரும்பலூர், பூலாம்பாடி, வாலிகண்டபுரம், பெரம்பலூர் பள்ளிகளுக்கு உதவி னோம். இது என்வழி பள்ளிகளுக்குக் கிடைத்த இலவச உதவியாகும்.

கு.வ. :   தாங்கள் ஆசிரியப் பணியில் சாதித்தவைகளைப் பட்டியலிடுங்கள்.

இ.பெ.செ. :  பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவராகப் பணியாற்றினேன். செல்லமுத்து-செயலர், இ. பெரியசாமி - பொருளாளர். ஒரு நாடகம் நடத்திப், பணம் சேர்த்து, சுற்று வட்டாரப் பள்ளி மாணவர்கள், தேர்ச் சிக்கு உதவிய ஆசிரியர்களுக்குப் பரிசும், பள்ளிகளுக்குக் கேடயமும் வழங்கிக் கல்வி கற்றிட ஊக்கப்படுத்தினோம். ஆண்டுதோறும் கல்வி அதிகாரிகளைக் கொண்டு பெரும் விழாவாக எடுத்தோம். பெரியார் கொள்கை உடைய ஆசிரியர்களான சிறுகனூர் ரெங்கசாமி, ச. செவ்வண்ணன், கு. பாலகிருஷ்ணன், நடன சிகாமணி, அத்தியூர் நித்தியானந்தம், மு. அழகப்பிள்ளை ஆகியோருடன் திருச்சி பெரியார் மாளிகைக்கு அடிக்கடி செல்வோம். அய்யாவின் கூட்டத்திற்கும் செல்வோம்.

கு.வ.  : தங்கள் செயல்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க செய்திகளைக் கூறுங்களேன்.

இ.பெ.செ. : பொன்பரப்பியில் உயர்நிலைப் பள்ளி கொண்டு வந்த பெருமைக்கு உரியவர் இலட்சுமண படையாட்சி என்பவராவர். இப்பகுதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு வழிகாட்டியாய் இருந்தார். பள்ளியில் ஆசிரியர் கழகச் செயலாளராக நான் இருந்தமையால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை அழைத்து வந்து பெருமைப்படுத்தினேன். புரட்சிக்கவிஞரை செயங்கொண்டம், செந்துறை, அரியலூர் உயர்நிலைப் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று சொற்பெருக்காற்றச் செய்தேன். புரட்சிக் கவிஞருடன் நெருங்கிப் பழகினேன். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று பேராசிரியர் க. அன்பழகனையும் அழைத்து வந்து இலக்கிய மன்றத்தில் சொற்பொழிவாற்றச் செய்தேன். சேலம் சென்று தேவநேயப் பாவாணரை அழைத்தேன். அவர் உடல்நலமின்மையால் கீழமாளிகை தமிழ்மறவர் புலவர் வை. பொன்னம்பலனாரை அனுப்பி வைத்தார்.

பொன்பரப்பி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் எனக்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டது. பள்ளி இலக்கிய மன்றத்திற்கு ஆசிரியர் தான் பொறுப்பு வகிப்பார்கள். நான் அந்தப் பள்ளியை விட்டுப் போகும் வரை நான் தான் செயலாளர். மேற்கண்ட முறையில் புலவர் வை. பொன்னம்பல னாரைப் பள்ளிக்கு அழைத்து வந்தபோது வரவேற்புப் பலகையில் “சத்தியமேவ ஜெயதே!” என்ற சமஸ்கிருத வாசகத்தைக் கண்டார். “இந்தப் பள்ளிக்குப் பார்ப்பான் தலைமை ஆசிரியனா?” என்று என்னைக் கேட்டார். “ஆம்” என்றேன். தலைமை ஆசிரியர் ஆதிசேஷன் வந்தார். (இவர் திருச்சி வே. ஆனைமுத்துவிற்கும் இலப்பைக்குடிகாட்டில் தலைமை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது). “இந்த ஊரில் எத்தனை பேருக்கு சமஸ்கிருதம் தெரியும்? வரவேற்பு வளைவில் சமஸ்கிருதம் அழைப்பா? பார்ப்பான் புத்தியைக் காட்டியிருக்கிறீரே!” எனக் கண்டித்துப் பேசிக்கொண்டு நுழைந்தார்.

“இந்நாட்டிற்குப் பிழைக்க வந்த பார்ப்பான் கோட்சே இனவெறி காரணமாக காந்தியைக் கொன்று விட்டான். சாதிவெறி கொண்ட நீங்களெல்லாம் இந்நாட்டுக்குப் பிழைக்க வந்த அந்நியரே!” இன்னும் எத்தனை காந்திகளை சாதிவெறி காரணமாய் கொல்லப் போகிறீர்கள்? அவர்களில் நானும் ஒருவன் பலியாகப் போகிறவனாக வந்திருக்கிறேன். நீங்கள் எல்லாம் சாதியை நிலைநாட்ட உள்ள கொலைகாரர்கள் எனக் கடிந்துரைத்துவிட்டு, இலக்கியமன்றக் கூட்டத்தில் விரிவாக உரை யாற்றினார். (என்னால் புலவர் வை. பொன்னம்பலனார் அழைக்கப்பட்டமையாலும், தலைமை ஆசிரியரை புலவர் கண்டித்தமையைத் தாங்கிக் கொள்ள இயலாத ஊர் மக்கள் சிலர், என் தலைக்கு ரூ.1000/- விலை வைத்ததாகப் பின்னாளில் அவ்வூரில் உள்ள ஒருவர் நேரில் வந்து என்னிடம் பச்சாதாபம் காட்டிப் பேசினார்).

ஆனால், இந்த நிகழ்வுக்குப் பின்னர் மூன்று மாதங்களில், கிறித்துவ ஆசிரியர் ஆரோக்கியசாமி மலேசியாவிற்கு ஆசிரியப் பணியாற்றச் சென்றபோது, ஊரே அவரது சேவையைப் பாராட்டி வாழ்த்திப் பரிசு அளித்துச் சிறப்பித்து அனுப்பி வைத்தனர். மாலை வேளைகளில் புதுப்புது விளையாட்டு களில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தேன். ஊர்ப் பொதுமக்கள் கண்டுகளித்து என்னைப் பாராட்டினர். ஊர்மக்களில் ஒருவனாக, என்னை, மாறுதல் பெற்றுவரும் வரை சிறப்பித்தனர்.

கு.வ.   :  தாங்கள் பணியாற்றிய பள்ளியில் எந்தப் பள்ளி தங்களுக்கு ஊக்கம் அளித்தது.

இ.பெ.செ.  : நான் முழுநேரப் பணியாகவும், கடுமையாகவும் உழைத்து மாணவர்கள் மற்றும் சமுதாயத்திற்கு பெரியார் வழியில் பாடுபட்டமையால் என்னை பொன்பரப்பி மக்கள் மிகவும் நேசித்தனர். சாதி பார்க்காமல் நல்ல வீடு அளித்தார்கள். ஊர்த்தலைவரும், பெரியதனக்காரர் தங்கவேல் முதலி யாரும் உதவினார்கள். வேறு பள்ளிக்கு என்னை மாவட்டக் கழகம் மாற்றிய போது, ஊர்மக்களே முயற்சித்து இந்த மாறுதல் ஆணையை இரத்துச் செய்து, திரும்பவும் பொன்பரப்பியிலேயே என்னை நிலைநிறுத்தினார்கள். ஊர் மக்கள் காட்டிய அன்பு அளவிடற்கரியது ஆகும். வயதான இந்தக் காலத்திலும் அக்காலம் பொற்காலம் என எண்ணி, எண்ணி மகிழ்வடைகிறேன்.

கு.வ.   : தோழர் திருச்சி வே. ஆனைமுத்து அவர்களைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.

இ.பெ.செ. : தோழர் வே. ஆனைமுத்து அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட “குறள்மலர்”, “குறள் முரசு” இதழ்கள், தற்பொழுது மாதந்தோறும் வெளியிடப்படும் “சிந்தனையாளன்” மாத இதழைத், இதழ் துவக்க நாளி லிருந்து பெற்றுப் படிக்கிறேன். சிந்தனையாளன் இதழ் ஒரு சிந்தனைக் கருவூலம். பெரம்பலூருக்கு வரும்பொழுதெல்லாம் என்னையும், என் துணைவியாரையும் என் மக்களையும் கண்டு நீண்ட நேரம் உரையாடுவார். அவரது பெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மை அறக்கட்டளைக்குக் கணிசமான தொகை அளித்துள்ளேன். அவர் நமது வட்டத்தைச் சேர்ந்தவர். நீண்டகால நண்பர். நாங்கள் இருவரும் ஒத்த வயதினர். பெரும் சாதனையாக “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” - என்று அய்யாவின் சொற்பொழிவு மற்றும் கட்டுரைகளைத் தொகுத்துள்ளார், இது அளப்பரிய சாதனையாகும்.

கு.வ.   :  அய்யா, தாங்கள் பெரியார் பணி பற்றி முடிவாக என்ன கூறுகிறீர்கள்?

இ.பெ.செ. : பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகளைத் தொகுத்து உலகுக்கு வழங்கியுள்ள தோழர் வே.ஆனைமுத்து அவர்கள், பெரியார் ஈ.வெ.ரா. வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறேன். இதனை முழுமையாக என் தோழர் ஆனைமுத்து அவர்களால் தான் திறம்படச் செய்ய இயலும் எனப் பெரிதும் நம்புகிறேன். இதனை அவர் விரைந்து எழுதி முடித்து வெளியிடப் பணிவுடன் அன்புக் கட்டளையாகக் கேட்டுக் கொள்கிறேன்.

கு. வரதராசன் :   அய்யா! தாங்கள் இந்த முதிர்ந்த அகவையிலும் தங்கள் அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி! வணக்கம்!

இளைய பெருமாள் செயபால்   :  வணக்கம்! நன்றி!

தொகுப்பு : கு. வரதராசன், பூலாம்பாடி, பெரம்பலூர் மாவட்டம்