முதல் ‘இந்தி’ எதிர்ப்புப் போர்

வரலாற்றில் ‘இந்தியா’ என்கிற நாடு என்றைக் கும் ஒரே நாடாக இருந்தது இல்லை. அரசர்கள் காலங்களில் பல்வேறு தனித்தனி நாடுகளாகவே இருந்தன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சேர, சோழ, பாண்டியர்களும் பல்லவர்களும் ஆட்சி செய்து வந்தனர்.

இந்தியாவைப் பேரரசாக ஆண்ட ஒளரங்கசீப் ஆட்சியில்கூடத் தமிழகம் இணையவில்லை; தனித்தே இருந்தது.

ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ‘இந்தியா’ என்கிற ஒரு கட்டமைப்பை உருவாக்கி னார்கள். முதலில் கிழக்கிந்தியக் கம்பெனி சில பகுதி களையும், சிற்றரசர்கள் சிலப் பகுதிகளையும் ஆண்டு வந்தனர்.

முதல் சுதந்தரப்போர் என அழைக்கப்படும் இராணுவப் புரட்சிக்குப் பிறகு, 1857இல் பிரிட்டிஷ் அரசு தங்களுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியா வைக் கொண்டு வந்தது. அப்போது ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருந்தது.

இந்தியத் தேசிய காங்கிரஸ் என்கிற கட்சி 1885இல் தோற்றுவிக்கப்பட்டது. தொடக்கக் காலங்களில் அதன் மாநாட்டு நடவடிக்கைகள் ஆங்கிலத்திலேயே இருந்தன.

இந்தியாவுக்கு இந்திதான் பொதுமொழியாக வர வேண்டுமென திலகர் தலைமையிலான தீவிரவாத காங்கிரசார் அறிவித்தனர். அப்போது அந்த அமைப் பில் இருந்த சி.சுப்பிரமணிய பாரதியார் இந்தி பொது மொழியாக வரவேண்டியதின் அவசியம் பற்றி ‘இந்தியா’ ஏட்டில் எழுதினார்.

1919 முதல் இந்தியத் தேசிய காங்கிரசில் காந்தி யின் சகாப்தம் தொடங்கியது. அதுவரையில் தமிழகத்தில் இந்தி மொழிக்கான பள்ளி எதுவும் இல்லை. சமஸ்கிருதத்திற்கு வேதபாடசாலைகள் இருந்தன.

காந்தி குசராத்தி மொழி பேசுபவர். அவருடைய ‘யங் இந்தியா‘ இதழின் தலையங்கங்கள், கட்டுரைகள் முதலானவற்றை குசராத்தி மொழியிலேதான் எழுதிக் கொடுத்தார். அவை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டன. இந்தியாவை ஒரே தேசிய இன மாகக் கட்டமைக்க விரும்பினார். அதனால் ‘நாம் இந்தியத் தேசிய இனம்’, ‘நாம் அனைவரும் இந்தியர்கள்’ என்ற உணர்வு வரவேண்டுமென்பதற்காக இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டும்; அது இந்தி மொழி யாகத்தான் இருக்கவேண்டும் என்று திட்டம் தீட்டினார்.

இஸ்லாமியர்களைத் திருப்திபடுத்துவதற்காக சமஸ்கிருதம் கலந்த இந்தியாக இல்லாமல் உருது கலந்த இந்தியான ‘இந்துஸ்தானி’ மொழியையே முன்னி லைப்படுத்தினார்.

1919இல் சென்னையில் இந்திப் பிரச்சார சபை ஒன்றை உருவாக்கினார். சென்னையில் இந்தி பிரச் சார சபைக்குக் காந்தியாரால் பணம் வசூலிக்க முடிய வில்லை. எனவே வடஇந்தியாவில் குசராத்திகள், மார்வாடிகளிடம் பணத்தைத் திரட்டி வந்து 1920இல் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஒப்புதலைப் பெற்று ரூ.50,000த்தை இந்திப் பிரச்சார சபைக்கு அளித்தார்.

1918இல் கும்கோணத்தைச் சேர்ந்த 18 பார்ப்பன வழக்குரைஞர்களும் சில பார்ப்பனப் பட்டதாரிகளும் தாங்கள் இந்திப் பள்ளிக்கூடம் தொடங்கத் தயாரா யிருப்பதாகவும் இந்தி சொல்லிக்கொடுக்க ஆசிரியர் யாரும் இல்லையே என்றும் காந்திக்குக் கடிதம் எழுதினர். காந்தி தன் மகன் தேவதாஸ் காந்தியை இந்தியைச் சொல்லித்தரும் ஆசிரியராக அனுப்பி வைத்தார். (The Political Career of E.V. Ramasamy Naicker, Dr. E.Sa. Viswanathan, p.p.193)காந்தி ஒவ்வொருமுறையும் தமிழகத்திற்கு வரும் போது இந்தியின் தேவையை வலியுறுத்தி எல்லாக் கூட்டங்களிலும் பேசிவந்தார். ஆனால் இங்கு திராவிடர் இயக்கம் வளர்ந்து ஓங்கி இருந்த காரணத்தால் காந்தியின் பேச்சு எடுபடவில்லை. 1926 வரை இந்திப் பிரச்சாரசபைக்கு காந்தி வடஇந்தியாவில் இருந்தே நிதி திரட்டிக் கொடுத்தார்.  

காங்கிரசுக் கட்சி தமிழகத்தில் இந்தி மொழிக்குச் செல்வாக்கு வளரத் தொடர்ந்து பாடுபட்டு வந்தது. நீதி கட்சி ஆட்சியில் இருந்த 1936 வரை காங்கிரசாரின் முயற்சி பலிக்கவில்லை.

காந்தி இதோடு விடவில்லை. அகில இந்தியக் காங்கிரசு மாநாட்டு நடவடிக்கைகள் 1924 வரை ஆங்கிலத்திலேயே நடைபெற்று வந்ததை மாற்றினார். 1925இல் கான்பூரில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரசு மாநாட்டில், காங்கிரசுக் கட்சியின் விதி 33இல் திருத்தம் செய்து, இனி காங்கிரசு மாநாட்டின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியிலோ (அ) மாகாண மொழிகளிலோதான் இருக்க nண்டும் என்று ஏற்பாடு செய்துவிட்டார். ஆனால் பெரும்பாலும் இந்திமொழியிலேயே நடைபெற்று வந்தது.

இந்த நிலையில்தான், நீதிகட்சி தோல்வியுற்று 1937இல் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட இராசாசி, தமிழகத்தின் உயர்நிலைப் பள்ளிகளில் ‘இந்தி’ கட்டாயப் பாடமாக்கப்படும் என்று 10-8-1937இல் அறிவித்தார்.

27-8-1937இல் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில், கட்டாய இந்தியின் கொடுமையை விளக்க மாபெரும் கூட்டம் நடத்தப்பட்டது. நீதிகட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் தா.வே.உமாமகேசுவரம் பிள்ளைதான் இச்சங்கத்தின் நிறுவனர் ஆவார்.

29.08.1937இல் திருவையாற்றுச் செந்தமிழ்க் கழகத்தின் சார்பில் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடந்தது. அரசர் கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் பொதுமக்களும் இதில் கலந்து கொண்டனர்.

5.09.1937இல் சென்னை சௌந்தர்ய மகாலில் ‘தமிழர் கூட்டத்தில்’ நாவலர் சோமசுந்தர பாரதியார் எம்.ஏ., பி.எல்.,-(இவர் மறைமலையடிகளின் ஆசிரியர் சூளை சோமசுந்தர நாயகரின் உறவினர் ஆவார்.) மிகச் சிறந்த வழக்குரைஞரான இவர் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ப தற்காக வழக்குரைஞர் தொழிலை விடுத்து, அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார். இந்தி எதிர்ப்புப் போராட் டத்தின் போது முதலமைச்சர் இராசாசிக்கு இந்தி கட்டாயப்பாடம்; தேவையா என்ற நீண்ட மடல் எழுதி விட்டு, பல்கலைத் தமிழ்த் துறைத்தலைவர் பதவி யையும் உதறிவிட்டு, இந்தி எதிர்ப்பு போரில் களம் புகுந்தார். இத்தனைக்கும் இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார் இவருடைய பூவாளூர் தலைமையில் தா.வே. உமாமகேசுவரம் பிள்ளை கே.எம்.பாலசுப்பிரமணியம், சி.என்.அண்ணாதுரை ஆகியோர் உரையாற்றினார்.

4.10.1937 அன்று சென்னை கோகலே மண்டபத்தில், மறைமலையடிகள் தலைமையில், சோமசுந்தர பாரதியார் இந்தி வேண்டாம் என்பதற்கான காரணங் களை விரிவாக விளக்கினார். 12.10.1937 அன்று திருநெல்வேலியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் ‘ஜஸ்டிஸ்’ ஆங்கில ஏட்டின் ஆசிரியர், ‘Ravana The Great’, ‘History of Tamil Literature’, ‘Tamil India’ உள்ளிட்ட-தமிழனின் பெருமையைப் பாருக்குப் பறை சாற்றும்-27 ஆங்கில நூல்களை எழுதிய மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, ‘கட்டாய இந்தி தொலைக’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.  

மாவட்டந்தோறும் இந்தி எதிர்ப்பு மாநாடுகளை சுயமரியாதை இயக்கம் நடத்தியது.

7.11.1937இல், சேலம் மாவட்ட சுயமரியாதை மூன்றாவது மாநாடு தலைவர் தி.பொ. வேதாசலம் தலை மையில் நடைபெற்றது. இம்மாநாட்டை கி.ஆ.பெ. விசுவநாதம் தொடக்கி வைத்தார். இம்மாநாட்டில் கட்டாய இந்தியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8.11.1937 இராசிபுரம் வட்டார மூன்றாவது சுயமரியாதை மாநாடு எம்.என்.நஞ்சையா தலைமையில் நடை பெற்றது, இம்மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தினர் இந்தியை எதிர்த்து உரையாற்றினர்.

14.11.1937இல் வடஆர்க்காடு மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாடு ஆம்பூரில் நடைபெற்றது. கான் பகதூர் கலிபுல்லா தலைவர், என்.சிவராஜ், பி.ஏ., பி.எல்., கே.எம்.பாலசுப்பிரமணியம் சி.என்.அண்ணா துரை ஆகியோர் உரையாற்றினர். கட்டாய இந்தியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

12.12.1937இல் நாமக்கல் வட்டார சுயமரியாதை இயக்க மாநாட்டுக்கு அண்ணாதுரை தலைமை ஏற்றார். கே.எம்.பாலசுப்பிரமணியம், கி.ஆ.பெ.விசுவநாதம், பூவாளூர் அ.பொன்னம்பலனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பல மாவட்டங்களில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாவட்ட மாநாடுகளில் இந்தியை எதிர்த்து வீரமுழக்கம் செய்யப்பட்டது.

26.12.1937இல், இந்தியை எதிர்க்க தமிழகம் தழுவிய அளவிற்கு ஒரு குடை அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக, கி.ஆ.பெ.விசுவநாதம் முயற்சி யால் ஒரு பெரிய மாநாடு கூட்டப்பட்டது. கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் 1917 முதல் நீதிகட்சியில் உறுப்பினராய் இருந்தவர், தந்தை பெரியார் 1926இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கியவுடன் அதன்பால் ஈர்க்கப்பட்டவர்.

கி.ஆ.பெ. விசுவநாதம் 1938 முதல் 1942 வரை நீதிக்கட்சிக்குப் பொதுச் செயலாளராய் இருந்தவர். 1944 திராவிடர் கழகம் பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநாட்டுக்குப் பிறகு, பி.டி.இராசன் அவர்களுடன் பிரிந்து சென்றவர். 1948 தமிழர்கழகம் என்ற அமைப்பையும் ‘தமிழர் நாடு’ என்ற இதழையும் சில காலம் நடத்தி, சில ஆண்டுகளில் நிறுத்திவிட்டு, தமிழ், தமிழன் என்ற உணர்வோடு செயல்பட்டு வந்தார். தமிழ்த் தேசியவாதிகளில் பலரும் கி.ஆ.பெ. தனிநபர் போலவும், அவர் கூட்டிய திருச்சி மாநாட்டுக்குப் பெரியார் வேடிக்கைப் பார்ப்பதற்காகச் சென்றதாகவும் இதழ்களில் தவறான செய்திகளை எழுதுகின்றனர். இவர்களின் கூற்று பொய்யானது.

கி.ஆ.பெ. திராவிட இயக்கத்திலிருந்து வெளியேறிய பின்புகூட, அவர் பெரியாரைக் கன்னடியர் என்ற பார்வையில் என்றுமே விமர்ச்சித்தது இல்லை.

இனி திருச்சி இந்தி எதிர்ப்பு மாநாட்டைப் பற்றிச் சற்றுப் பார்ப்போம்.

அன்று காலை திருச்சியில் மாபெரும் ஊர்வலம் நடந்தது. சுமார் 10,000 பேர் கலந்து கொண்டனர். 500 தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர், நான்கு யானைகள் ஊர்வலத்தில் முன்சென்றன. ‘தமிழ் வாழ்க, கட்டாய இந்தி ஒழிக’ தமிழர்கள் வாழ்க, என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.

மாநாட்டில் புலவர் கா.சுப்பிரமணியப்பிள்ளை சிறப்புரையாற்றினார். தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை வரவேற்புரையாற்றினார். நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையுரையாற்றினார். பெரியார் சிறப்புரையாற்றினார்.

காங்கிரஸ் காலிகள் இந்த மாநாட்டைக் களைக்க கல்லெறிந்து கலகங்களை விளைவித்தனர். மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

*     இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அதனால் தமிழ்க் கலை அழிந்துவிடுமென்று கருதுகிறது.

*     தமிழ் மாகாணம் ஒன்று தனியாகப் பிரிக்கப்பட வேண்டும்.

*     தமிழ் வளர்ச்சிக்காகத் தனியாக ஒரு தனிப் பல் கலைக்கழகம் ஏற்படுத்தவேண்டும் என்று அரசின ரைக் கேட்டுக் கொள்கிறது.

*     இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதால் தமிழர்க்கு ஏற்படும் தொல்லைகளைக் கவர்னரிடம் நேரில் எடுத்துரைக்க எஸ்.எஸ்.பாரதியார், பெரியார், உமாமகேசுவரனார் தலைமையில் குழு அமைக் கப்பட்டது.

கவர்னர் மீது நம்பிக்கை இல்லை என்ற தீர்மானத் தைப் பெரியார் கொண்டு வந்தார். தலைவர் சோம சுந்தர பாரதியார் இதை ஏற்றுக் கொள்ளாததால், பெரியார் தன் தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

(“தமிழன் தொடுத்த போர்”- மா. இளஞ்செழியன், பக்.73-75)

(தொடரும்)

Pin It