governor surbabu 450பன்வாரிலால் புரோகித் 2017 அக்டோபர் 6 அன்று தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். ஆளுநர் மாநிலத்தின் செயல்தலைவர் (Executive headof the State)  என்று சொல்லிக் கொண்டு ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டப்படி விதிக்கப்பட்டுள்ள அதிகார வரம்புகளையும்; இதுவரையில் பின்பற்றப்பட்டு வந்த மரபுகளையும் மீறுகின்ற வகையில் பன்வாரி வால் புரோகித் செயல்பட்டு வருகிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டு அரசைவிட, குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட தனக்கு அதிக அதிகாரம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கட்டமைக்கும் வகையில் ஆளுநர் அத்துமீறிச் செயல்பட்டு வருகிறார்.

ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல் மாவட்டங்களுக்குச் சென்று மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறைத் தலைவர் அடங்கிய மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகிறார். இதற்குமுன் தமிழ்நாட்டில் இருந்த எந்தவொரு ஆளுநரும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியதில்லை.

இந்திய அளவிலும் எந்தவொரு மாநிலத்திலும் ஆளுநர்கள் மாவட்டங்களுக்குச் சென்று மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியதில்லை. பா.ச.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட ஆளுநர்கள் இதுபோன்ற கூட்டங்களை நடத்துவதில்லை.

பன்வாரிலால் புரோகித் மாவட்டங்களில் அதிகாரிகள் கூட்டங்கள் நடத்துவதை அ.தி.மு.க., பா.ச.க. தவிர்த்து மற்ற கட்சிகள் கண்டித்து வருகின்றன.

அண்மையில் “தி இந்து” ஆங்கில நாளேட்டுக்கு ஆளுநர் அளித்த நேர் காணலில், “நீங்கள் தனியாக ஒரு அரசு நிர்வாகத்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறதே” என்ற வினாவுக்கு, “ஆளுநர் என்பவர் மாநில அரசின் செயல் தலைவர். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் உடையவர் என்ற உண்மையைத் தெரியாதவர்கள் என் செயல் பாடுகளை விமர்சிக்கிறார்கள்” என்று விடை கூறியிருக்கிறார்.

இதற்காக தமிழ்நாட்டு அரசின் தலைமைச் செயலாளருக்கு இணை யான தகுதிகொண்ட பார்ப்பனரான இராசகோபால் என்பவரை ஆளுநர் அலுவலகச் செயலாளராக அமர்த்திக் கொண்டார்.

அப்படியானால், தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்ற பெயரில் பன்வாரிலால் புரோகித் படித்தது அவர் எழுதியதா? முதல மைச்சர் பணித்த அரசு அதிகாரிகால் எழுதப்பட்டு, முதலமைச்சர் பழநிசாமியால் ஒப்புதல் அளிக்கப் பட்ட அறிக்கையைத்தானே பன்வாரிலால் படித்தார்! மாநில அரசின் செயல்தலைவர் நான்தான் என்று சொல்லிக் கொள்ளும் பன்வாரிலால் ஆளுநர் உரையை அவரே ஏன் எழுதவில்லை? அவ்வாறு எழுதிப் படிப்பதற்குச் சட்டத்தில் இடம் இல்லை. இந்திய அரசின் முப்படைகளின் தலைவர் குடி யரசுத் தலைவர் என்று சட்டத்தில் உள்ளது. அதனால் குடியரசுத் தலைவர் முப்படைத் தளபதிகளை அழைத்து, பாக்கித்தான் மீது படையெடுங்கள் என்று ஆணை யிட முடியுமா?

ஒன்றரை ஆண்டுகள் அசாம் மாநிலத்தின் ஆளுராக இருந்த போது மாவட்டங்களுக்குச் சென்று அதிகாரிகள் கூட்டங் களைப் பன்வாரிலால் புரோகித் நடத்தியிருக்கிறார்; அறிவு ரைகளை வழங்கியிருக்கிறார்; அங்கு அதை யாரும் எதிரிக்கவில்லையே என்று தமிழ்நாட்டில் பா.ச.க.வினர் கேட்கின்றனர். தமிழ்நாடு சுயமரியாதையும், தன்னாட்சி உரிமை வேட்கையும் கொண்டது என்பதால் ஆளுநரின் மரபு மீறிய செயல்பாடுகளைத் தமிழக மக்கள் எதிர்க் கிறார்கள்.

முதலமைச்சருக்கும் மற்ற அமைச்சர்களுக்குப் பதவிப் பிராமணம் செய்து வைப்பது, பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழாக்களின் பங்கேற்பது, குடியரசு நாளில் கொடியேற்றுவது, சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரின் முதல்நாளில் உரை நிகழ்த்துவது, தேவைப்படும்போது, முதலமைச்சர் மற்ற அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், பிற துறைகளின் செயலாளர்கள் ஆகியோரை அழைத்து அரசின் செயல்பாடுகளைக் கேட்டறிந்து ஆலோசனை வழங்குவது (கட்டளையிட முடியாது) பொதுவான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என ஆளுநரின் பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஆனால் பன்வாரிலால் புரோகித் இதுவரையில் தமிழ்நாட்டில் எந்த ஆளுநரும் மேற்கொள்ளாத வகையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி வருகிறார். அவை ஆய்வுக் கூட்டங்கள் அல்ல; அக்கூட்டங்களின் போது அதிகாரிகளுக்கு எந்தவகையான கட்டளையும் இடுவதில்லை; மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது மட்டுமே கேட் டறிந்து கொள்ளப்படுகிறது. அதிகாரிகளைக் கடிவது இல்லை. அதிகாரிகள் ஊழல் செய்யக்கூடாது. ஊழல் பணம் குடும்பத்துக்குக் கேடு தரும். கடவுளிடம் நம் பிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது என்ற ஆளுநரும் ஆளுநர் சார்பிலும் விளக்கமளிக்கப் படுகிறது.

அரசின் திட்டச் செயல்பாடுகளை அறிந்துகொள்ள முதல மைச்சரையோ, மற்ற அமைச்சர்களையோ, தலைமைச் செயலாளரையோ, துறைகளின் செயலாளர்களையோ அழைத்துக் கேட்டறிந்து கொள்வதே மரபாக இருந்து வந்தது. இந்த மரபுகளை ஆளுநர் மீறி நடக்கிறார். குடியரசுத் தலைவர் நடுவண் அரசின் திட்டச் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக அதிகாரிகளின் கூட்டத்தை நடத்த மோடி அரசு அனுமதிக்குமா?

முன்னாள் முதலமைச்சர் செயலலிதா மறைந்த பின் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. அரசு, பதவியில் தொடர்ந்து நீடித்து இருப்பதற்காகவே, நடுவண் அரசுக்கு அடிபணிந்து கிடக்கிறது. அதனால் பன்வாரிலால் புரோகித் மாவட்டக் கூட்டங்கள் நடத்துவதை அமைச்சர்கள் ஆதரித்துப் பேசு கின்றனர். “முதலமைச்சர் பழநிசாமி நான் மாவட்ட அதிகாரிகள் கூட்டம் நடத்துவதை ஏற்றுக்கொண்டுள்ள போது, நான் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடி காட்டுவது பற்றி நான் கவலைப்பட வில்லை. இவ்வாறு கருப்புக்கொடி காட்டுவது ஆளுநரை அவமதிப்பதாகும். இது ஒரு குற்றச் செயலாகும். அவர் களைக் கைது செய்ய முடியும். ஆனால் அவர்களை நான் புறக்கணித்து விடுகிறேன்” என்று பன்வாரிலால் ஆணவத்துடன் பேசியிருக்கிறார். ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்குக் கருப்புக் கொடி காட்டு வது என்கிற தி.மு.க.வின் நிலைப்பாடு சரியானதே ஆகும்.

தமிழ்நாட்டின் சமூக நீதிகோட்பாட்டுக்கும், தமிழர் களின் உரிமைக்கும் எதிரான வகையில் பன்வாரிலால் துணைவேந்தர்களை நியமித்துள்ளார். தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்துக்குக் கேரளத்தைச் சேர்ந்த பரிமளாதேவி என்பவரையும், அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஆந்திரத்தைச் சேர்ந்த ஆர்.எஸ் .எஸ் . பார்ப்பனரான சூரியநாராயண சாஸ் திரி என்பவரையும், இந்திய அளவில் பல்கலைக் கழங்களின் தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ள சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்குக் கன்னட ரான எம்.கே.சூரப்பா என்பவரையும் துணைவேந் தர்களாக ஆளுநர் நியமித்துள்ளார்.

துணைவேந்தரை நியமிப்பதற்கான தெரிவு செய்யும் குழுவால் இறுதி செய்யப்படும் மூவர் கொண்ட பட்டியலில் யாரை நியமிப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் செயலலிதா காலம் வரை முதலமைச்சரிடமே இருந்தது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது வழக்கம். ஆனால் இப்போது, இறுதியாக யாரைத் துணைவேந்த ராக நியமிப்பது என்பது குறித்து தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல், பன்வாரிலாலே முடிவு செய்துள் ளார். தமிழக அரசு எந்த அளவுக்குச் சப்பாணியாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

கல்வியைக் காவிமயாக்கும் மோடி அரசின் கொள் கையை ஆளுநர் பன்வாரிலால் செயல்படுத்தியிருக் கிறார். தமிழர்களில் தகுதியானவர் எவரும் இல்லை என்று தமிழர்களை இழிவுபடுத்தும் தன்மையில் துணைவேந்தர்களின் நியமனங்கள் அமைந்திருப்ப தாகக் தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துக்கான இறுதிப் பட்டியலில் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த பொன்னுசாமி என்கிற தமிழரின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆளுநரின் தமிழர் இனவிரோத எண்ணத்தாலேயே, காவிரி ஆற்று நீருக்கான போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த போது, கன்னடரான சூரப்பாவைத் துணைவேந்த ராக நியமித்தது தமிழர் நெஞ்சில் வேலைப் பாய்ச்சியது போன்றதாகும். மோடி, ஆட்சிக்கு வந்த பின் நிறுவப்பட்ட 16 மத்தியப் பல் கலைக்கழங்களுக்கு நியமிக்கப்பட்ட துணைவேந்தர் களில் ஒருவர்கூட தமிழர் இல்லை. தமிழர்கள் இந்திய ஆளும்வர்க்கத்தால் திட்டமிட்டே புறக்கணிக்கப்படு கின்றனர்.

governor chelladurai 600அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியர் நிர்மலாதேவி அக்கல்லூரியில் பயிலும் மாணவிகளை “மேலிடத்தில்” உள்ளவர்களுடன் பாலியல் உறவு கொள்வதற்காகத் தூண்டும் உரையாடலில் ஆளுநர் பெயரும் இடம் பெற்றிருந்தது. 16.4.18 அன்று நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். மதுரை காமராசர் பல் கலைக்கழகத் துணைவேந்தர் அன்றே அய்ந்துபேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார். அடுத்த நாள் 17.4.18 அன்று ஆளுநர், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சந்தானம் தலைமையில் தனிநபர் விசாரணைக் குழுவை அமைத்தார். குற்றச்சாட்டில் தன் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில் பன்வாரிலால் விசாரணைக் குழுவை அமைத்தது எந்த வகையில் நியாயம்? துணை வேந்தர் அமைத்த குழு கலைக்கப் படுவதாகத் துணைவேந்தர் அறிவித்தார். தமிழ்நாடு அரசு நிர்மலாதேவி மீதான குற்றச்சாட்டைத் தமிழ்நாட்டு அரசின் புலனாய்வுத்துறை விசாரிக்க ஆணையிட்டது.

நிர்மலாதேவி கைது செய்யப்பட்ட அடுத்த நாளே ஆளுநர் மாளிகையில் செய்தியாளர் கூட்டத்தை ஆளுநர் கூட்டினார். ஆளுநர் மாளிகையில் இதுபோல் செய்தியாளர் கூட்டம் நடப்பது இதுவே முதல் தடவையாகும். அக் கூட்டத்தில் காமராசர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னய்யா ஆகியோரை உடன் வைத்துக் கொண்டே ஆளுநர் பேசியது முறை கேடானதாகும்.

வேந்தர் என்ற முறையில் பல்கலைக்கழகம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே உண்டு என்றும் இதில் விசாரணைக் குழு அமைக்கும் அதிகாரம் தமிழ்நாட்டு அரசுக்கு இல்லை என்றும் ஆளுநர் கூறினார். மானங்கெட்ட தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் ஆளுநரின் அடாவடிப் பேச்சுக்கு இன்று வரை பதில் சொல்லவில்லை.

எல்லா வகையிலும் தமிழர்களின் உரிமைக்கும், நலனுக்கும், எதிராகக் செயல்படும். பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழர்கள் தொடர்ந்து போராட வேண்டும்.