மக்கள் நாயக அரசு என்பது என்ன என்கிற வினாவுக்கு, நேரடியாக விடை சொன்னவர் இங்கி லாந்தில் வாழ்ந்த ஜெர்மி பெந்தாம் (Geremy Bentham) என்கிற அரசியல் மேதை ஆவார்.

“ஓர் ஆட்சி நல்லதா, கெட்டதா என்பதற்கு இலக் கணம்-மிக அதிகபட்சமான மக்களுக்கு மிக அதிக பட்ச மகிழ்ச்சியைத் தர ஏற்ற ஆட்சியை அமைத்து நடத்துவதே ஆகும்” என்பதே அவர் தந்த விடை.(It is the greatest happiness of the greatest number that is the measure of right or wrong).

இந்தக் கோட்பாட்டை அவர் 1776ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்தக் கோட்பாட்டின் மூலக்கரு 1768இல் ஜோசப் பிரீஸ்டிலி என்பவர் தந்ததாகும்.

அத்துடன் ஆணுக்கும் பெண்ணுக்கும் முழு அளவில் சம உரிமை தரப்பட வேண்டும் (Complete equality between sexes) என்பதையும் மக்கள் நாயகத்தின் இரண்டாவது இலக்கணமாக அவர் சொன்னார்.

இந்தியாவில் இந்துக்கள் 80ரூ பேர் இருக்கிறார்கள். இஸ்லாம், கிறித்துவர், பவுத்தர், சமணர், பார்சி மதத்தினர் 20ரூ பேர் இருக்கிறார்கள்.

இந்திய அளவில் உழைக்கும் மக்களாக இருக்கிற கீழ்ச்சாதி மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு அதிகபட்ச நன்மை செய்யும் ஆட்சி-விடுதலை பெற்ற இந்தியா வில், எப்போதாவது நடந்ததா என்று நாம் ஒவ்வொரு வரும் சிந்திப்போம்.

சாதிய வாழ்க்கை முறையையே 1800 ஆண்டுகளாக மேற்கொண்டிருக்கிற மக்களை ஆளும் ஆட்சி யில், எல்லா வர்ண சாதி, எல்லா உள்சாதி வகுப்பு மக்களும் தங்கள் தங்கள் பங்கை எல்லாப் பொது அமைப்புகளிலும் பெற்றிருக்க வேண்டும் எனத் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. 1919 முதல் வரிந்து கட்டிக்கொண்டு பாடுபட்டார்.

அதாவது, ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளு மன்றம்; மற்றும் கட்சி அமைப்புகள், மாநில அரசுப் பணிகள், மத்திய அரசுப் பணிகள் எனப்படும் எல்லா வற்றிலும்-வெகுமக்களாக உள்ளவர்கள் உரிய அளவில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்க வேண்டும் என்பதே, 1919-1973ஆம் ஆண்டுகளில் பெரியார் கொண்டிருந்த மக்கள் நாயகக் கொள்கை ஆகும்.

மாமேதை அம்பேத்கர், சமதர்மவாதி ராம் மனோகர் லோகியா ஆகியோரின் அரசு பற்றிய - மக்கள் நாயகம் பற்றிய கோட்பாடுகளும் அத்தன்மை உள்ளவைகளே. இதை இறுதியில் பார்ப்போம்.

இந்திய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் எந்தெந்த மட்டத்தில் உள்ள பொது அமைப்பிலாவது இந்த மக்கள் நாயகக் கோட்பாடு இருந்ததா? இருக்கிறதா? என்பதை ஆர அமர நாம் எண்ணிப் பார்ப்போம்.

சுதந்தர இந்தியாவுக்கான நாடாளுமன்றம் - சுதந்தரம் வருவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னரே, 9.12.1946இல் தொடங்கப்பட்டது.

ஆனால் சுதந்தரம் என்பது 15.8.1947இல்தான் வந்தது. எல்லா மக்களுக்கும் வாக்குரிமை தந்த தேர்தல் 1952இல்தான் வந்தது.

அதற்கு முன் வெள்ளையர் காலத்தில், 1946இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியச் சட்டமன்றம் என்பதே - (Central Legislative Assembly) என்பதே நாடாளு மன்றமாக - அரசமைப்புச் சட்ட அவையாக (Constituent Assembly) மாற்றப்பட்டு, அந்த அவையால், இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

அந்த அவையைத் தேர்ந்தெடுத்த இந்திய வாக்கா ளர்கள் விழுக்காடு எத்தனை?

இந்திய சட்டமன்றத்துக்கு 1946 தேர்தலில் வாக்குப் போட உரிமை பெற்றிருந்தவர்கள் 4ரூ பேர்களே! மாகாணச் சட்டமன்றங்களுக்கு வாக்குப் போட உரிமை பெற்றிருந்தவர்கள் 12ரூ பேர்களே!

இது பச்சை மோசடி அல்லவா?

இதை மோசடி என்று அன்றே கண்டனம் செய்த ஒரே மனிதர் பெரியார் ஈ.வெ.ரா. தான்.

அன்று, மெத்தப்படித்தவர்கள் நிறைய பேர் இருந் தார்கள்.

அவர்கள் எல்லோரும் இந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டார்கள்.

சரி!

15.8.1947இல் விடுதலை வந்துவிட்டது. 1950இல், 21 வயது நிரம்பிய எல்லோருக்கும் வாக்குரிமை கிடைத்துவிட்டது.

1952இல்தான் முதலாவது பொதுத் தேர்தல் நடந்தது.

ஆனால் 1946இல் இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்ற பண்டித ஜவகர்லால் நேரு, 1964 வரை பிரதமராக இருந்தார். 1955லேயே தம் மகள் இந்திராகாந்தியை அனைத்திந்திய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படச் செய்தார்.

அதன்மூலம் நேருவின் மகள் இந்திராகாந்தியே இந்தியப் பிரதமராக வரக்கூடிய நிலைமை ஏற்பட்டது.

1966 முதல் 1977 வரையிலும் பின்னர் 1980 முதல் 1984 அக்டோபரில் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்படும் வரையிலும் அவரே பிரதமராக இருந்தார். 1984 நவம்பர் முதல் 1989 வரையில் நேருவின் பெயரனும், இந்திராகாந்தியின் மகனும் ஆன ராஜீவ் காந்தி இந்தியா வின் பிரதமர் ஆனார். நேருவின் குடும்ப ஆட்சிதானே,

1946 சூன் முதல் 1989 வரையில், 43 ஆண்டுக் காலம் நேருவின் குடும்பம் இந்தியாவை ஆண்ட தானது - மக்கள் நாயகமா? பார்ப்பனர் சாதி ஆதிக்க நாயகமா? நேருவின் குடும்ப ஆட்சியா?

அது எப்படி மக்கள் நாயகம் ஆகும்? அதாவது, 1952 முதல் தேர்தல் அரசியியலில் வெற்றி பெற முடிந்தால்தானே!

அதாவது, தேர்தலில் சாதியைச் சொல்லி, குடும்பப் பெருமையைச் சொல்லி, கைக்கூலியையும் கொடுத்து, தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே மக்கள் நாயகமா?

ஜவகர்லால் நேருவின் சமகாலத்தவர், ஜம்மு-காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லா. ஷேக் அப்துல்லா காலத்துக்குப் பிறகு தேசிய மாநாட்டுக் கட்சியின் பேரா லும், காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்தும் பரூக் அப்துல்லா ஆட்சி; பரூக் அப்துல்லா தில்லி அரசில் அமைச்சரா னால் - அவருடைய மகன் உமர் அப்துல்லா ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஆவார். இது மக்கள் நாயகமா?

சுதந்தர காஷ்மீரும் இன்றி, தன்னுரிமை காஷ்மீரும் இன்றி, இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய சனதா - மக்கள் நாயகக் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இது மக்கள் நாயக ஆட்சியா?

உத்தரப்பிரதேசத்தில் 1946 முதல் 1967 வரை - உத்தரகாண்டில் பிறந்த பார்ப்பனர்கள் மட்டுமே, காங்கிரசின் பேரால் முதலமைச்சர்கள் ஆனார்கள்.

1990க்குப் பிறகு மண்டல் பரிந்துரை அமலாக் கத்தின் உடனடி விளைவாகவும், உ.பி. ஆதித்திராவிட வகுப்பினர் கன்ஷிராம் - மாயாவதி தலைமையில் விழிப்புணர்ச்சி பெற்றதாலும் யாதவ் சாதிக் கட்சியான முலாயம் சிங் கட்சி - மாயாவதி கட்சி கூட்டணி ஆட்சி; பின் தனித்து மாயாவதியின் ஆட்சி; முலாயம் சிங் ஆட்சி; அவருடைய மகன் அகிலேஷ் சிங் யாதவ் ஆட்சி என, உ.பி.யில் சாதிவாத ஆட்சி நடந்தா? குடும்ப ஆட்சி நடந்தா? அதற்குப் பெயர் மக்கள் நாயகமா?

இப்போது இந்துத்துவ வெறியை ஊட்டி - பணத்தைக் கொட்டிப் பரப்பி பாரதிய சனதாக் கட்சி முழுப் பெரும் பான்மையுடன் சட்டமன்றத்தைக் கைப்பற்றி, உத்தரப் பிரதேசத்தில் மிகச் சிறுபான்மை வருண சாதியான - இரசபுத்திர சாதியான சத்திரிய சாதிக்காரர் யோகி ஆதித்ய நாத் முதலமைச்சராக ஆகி இருப்பது மக்கள் நாயகமா?

பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் குற்றவியல் தண்டனை பெற்றுச் சிறைக்குச் சென்றார்கள். அவரு டைய மனைவி முதலமைச்சர்.

2014இல் இவர்களின் இரண்டு மகன்கள் அமைச் சர்கள். இது மக்கள் நாயகமா?

அரியானா மாநிலத்தில் தேவிலால் என்கிற ஜாட் வகுப்பினரும், அவருஐடய மகன் சௌத்தாலா என்ப வரும் மாறி மாறி முதலமைச்சராக வந்த ஆட்சி, மக்கள் நாயக ஆட்சியா? ஜாட் சாதிநாயக ஆட்சியா?

மேற்கு வங்கத்தில் 1977 வரையில் பார்ப்பன சாதி ஆதிக்க ஆட்சியும், 1977க்குப் பிறகு - பொதுவுடை மைக் கட்சி என்கிற பேரால் ஜோதி பாசு என்கிற காயஸ்தர் (எ) போஸ் சாதி ஆதிக்க ஆட்சியும், முற்போக்குக் கூட்டணியின் பேரால் நடந்தது மக்கள் நாயக ஆட்சியா? பார்ப்பனர்-காயஸ்தர் கூட்டணி ஆட்சியா?

அசாமிலும், ஒரிசாவிலும் மாறி, மாறி பார்ப்பனர் ஆட்சி அல்லது பட்நாயக் என்கிற காயஸ்தர் சாதி ஆட்சி மாறி மாறி நடப்பது மக்கள் நாயக ஆட்சியா?

தென்னாட்டில் ஆந்திராவில் பார்ப்பனர் ஆட்சி ஆதிக்கம் ஒழிந்து, கோபால ரெட்டி, பிரமானந்த ரெட்டி, சஞ்சீவி ரெட்டி என்கிற ரெட்டி ஆதிக்கமும் - என்.டி. ராமராவ் என்கிற கம்மநாயுடு ஆதிக்க ஆட்சியும், அவருடைய மருமகன் சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் ஆதிக்க ஆட்சியும் நடைபெறுவது மக்கள் நாயக ஆட்சியா? ரெட்டி-நாயுடு சாதி ஆதிக்க ஆட்சியா?

கருநாடகத்தில் நிஜலிங்கப்பா காலம் முதல் இன்று வரையில் லிங்காயத்து சாதிக்காரர் ஆட்சியா, ஒக்கலிக சாதிக்காரர் ஆட்சியா என, காங்கிரசின் பேராலும், பாரதிய சனதாவின் பேராலும் மாறி மாறி ஆட்சி நடைபெற்றதும் - நடைபெறுவதும் மக்கள் நாயக ஆட்சியா? சாதிநாயக ஆட்சியா?

தமிழகத்தில் 1967இல் காங்கிரசு அடியோடு வீழ்ந்தது. 1969 ஆகத்தில் கலைஞர் கருணாநிதி - இந்திராகாந்தி ஒப்பந்தம் மூலம், காமராசரின் செல்வாக்கு ஒழிந்தது. அதன் பிறகும் காங்கிரசோடு தி.மு.க. உறவு, பாரதிய சனதாவோடு உறவு என - தி.மு.க. - அ.தி.மு.க. என்கிற திராவிடக் கட்சிகள் மாறி மாறிப் பதவிக்கு வருவது-கொள்கை வெற்றிக்காகவா? இல்லை தாங்கள் தாங்கள் அடிக்கும் கொள்ளைகளை மறைத்துக் கொள்வதற்காகவா? இதில் மக்கள் நாயகம் என்ன வாழ்கிறது?

தி.மு.க.விலும், அ.தி.மு.க.விலும் ஒரு குறிப்பிட்ட குடும்ப ஆதிக்க ஆட்சி இருப்பது ஊரறிந்த செய்தி யாகும்.

இரண்டு கட்சியினரும் ஊரார் அறிய, ஒரு கட்சியின் வண்டவாளத்தை இன்னொரு கட்சியினர் அம்பலப்படுத்துவதை மிக நன்றாகச் செய்கிறார்கள்.

ஊரும் உலகமும் அறிய, எம்.ஜி.ஆர். என்கிற ஒரு திராவிடர் - ஒரு மலையாளி தொடங்கிய ஒரு கட்சிக்கு - ஒரு பச்சை அய்யங்கார் பார்ப்பனப் பெண்மணி ஈடு இணையில்லாத தலைவராக ஏன் - எதனால் - எப்படி யெப்படி வரமுடிந்தது என்பதை - திராவிடர் இயக்க ஆய்வாளர்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டு ஆராய வேண்டும். நிற்க.

கேரளா, திரிபுராவுக்கு அடுத்து - கல்விச் சாதனை யில் முதலாவது மாநிலம் ஆகும்.

ஆனால் பொதுவுடைமைக் கட்சியினரும், காங்கிர சாரும் பதவிக்காகப் போட்டி போட்டுக் கொண்டு ஈழவர் - நாயர் - வெள்ளாளர் - பார்ப்பனர் மோதலை வளர்த் துக் கொண்டு, கேரளாவில் இந்துமத வெறியையும், சாதி வெறியையும் வளர்த்தெடுத்துவிட்டார்கள்.

பாரதிய சனதாக் கட்சி, ஓர் அறைகூவலாக அங்கே வளர்ந்து வருகிறது.

மக்கள் நாயகத்தில் உண்மையான பற்றுக்கோடு உள்ளவர்கள் - சாதியில் ஒரு காலையும் மதத்தில் இன்னொரு காலையும் ஊன்றிக் கொண்டு - அதன் பிறகு “மக்கள் நாயகம் காப்போம்” என்பது ஒரு ஏமாற்று என்பதை எல்லாரும் மனங்கொள்ள வேண்டுகிறோம்.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி மக்கள் நாயகம் பற்றி, இந்திய சமுதாய அமைப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, டாக்டர் ஆர்.எம். லோகியா பின்வருமாறு கூறினார்.

இந்தியாவில் ஆளும் வகுப்பு எது என்பதை எதை அளவுகோலாக வைத்துக் கண்டுபிடிப்பது?

1. மேல்சாதிக்காரராக இருப்பது, 2. பெருநில உடை மைக்காரராக இருப்பது, 3. உயர்ந்த ஆங்கிலக் கல்வி பெற்றவராக இருப்பது ஆகிய மூன்றில் - இரண்டு தகுதிகளைப் பெற்றவர்களே ஆளும் வகுப்புக்காரர் (Ruling Class) ஆவார் என்றார்.

அதன்படி, இந்த மூன்று தகுதிகளையும் ஒரு சேரப் பெற்றோர் பார்ப்பனர்களிலும், சத்திரியர் களிலும், வைசியர்களிலும் 50 விழுக்காட்டுக்குமேல் இருப்பர்; இரண்டு தகுதிகளை மட்டும் பெற்றவர்கள் 100க்கு 80க்குமேல் இருப்பர். 2017லும் இதுவே உண்மை.

ஆனால் மேலே சொன்ன மூன்று தகுதிகளையும் பெற்றோர் சூத்திர வகுப்பிலோ, ஆதி சூத்திர வகுப்பிலோ இன்றும் இல்லை என்பது கண்கூடு. மேல்சாதிக் காரராக ஆக்கிக்கொள்ள சூத்திரருக்கும், ஆதிசூத்தி ரருக்கும் ஒருபோதும் வாய்க்கப்போவது இல்லை; இல்லை; இல்லை.

பிறவி வருண சாதியும், பிறவி உள்சாதியும் மாற்றிக்கொள்ள முடியாதவை.

எனவே ஆளும் வகுப்பினராக (Ruling Class) சூத்திரர், ஆதிசூத்திரர் இருப்பது மிக, மிக அரிது. அந்த அரிதான இடத்தில் இன்று நரேந்திர மோடி உள்ளார் - பார்ப்பனர், சத்திரியர், வைசியர் மற்றும் வணிக முதலாளிகளின் தொழில் முதலாளிகளின் பச்சைக் கையாளாக - கைவாணமாக இன்று நரேந்திர மோடி உள்ளார்.

இனி, இந்திய சமுதாயத்தின் இருப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டு - அரசு - இந்திய அரசு என்பது இந்தியாவின் வெகுமக்களால் ஆளப்பட வேண்டும் என்பதைப் பின்வருமாறு, மேதை அம்பேத்கர், 1948இல் முன்மொழிந்தார். அது என்ன?

“இந்தியாவில் ஒரு பெரிய சிறுபான்மையராக இருக்கிற பிற்படுத்தப்பட்டோரும், ஒரு சிறுபான்மை யாக இருக்கிற ஆதித்திராவிடரும், இன்னொரு சிறு பான்மையாக இருக்கிற மதச் சிறுபான்மையினரும், மிகச் சிறுபான்மையினராக உள்ள பழங்குடி மக்களும் ஆகிய 85ரூ பேராக உள்ள நாம் ஓரணியாகத் திரண் டால் - உண்மையான அதிகாரம் தேங்கிக் கிடக்கிற இந்திய-தில்லி அரசை நாம் ஏன் கைப்பற்ற முடியாது என்பது பற்றி எண்ணிட எனக்கு வியப்பாக இருக் கிறது” என, ஒரு ஆதித்திராவிடர் மாநாட்டில் முன்மொழிந் தார். ((It is astonishing to me, why, we, the Backward Classes who are a bigger minority, the scheduled castes, another minority Schedules Tribes a small minority, the religious minorities, who form 85% of the population join together, cannot capture the real seat of power that lies at delhi!)) என நடைமுறைக்கு ஏற்ற-மக்கள் நாயக ஆட்சி இந்தியாவில் வர வழி சொன்னார்.

இதில் இரண்டு செய்திகள் அடங்கி உள்ளன.

1. முதலாவது செய்தி, இந்திய அரசு மட்டுமே முற் றுரிமை உள்ள அரசு; அதாவது எல்லா அதிகாரமும் உள்ளது இந்திய அரசு மட்டுமே ஆகும்.

2. இரண்டாவதாக, 85ரூ பேராக உள்ள சூத்திர - ஆதிசூத்திர - மதச்சிறுபான்மை மக்கள் மற்றும் பழங் குடிகள் ஒன்றுசேர்ந்து இந்திய அரசைக் கைப்பற்ற வேண்டும்; அது முடியும் என்பது ஆகும்.

இவற்றைப் பற்றி இந்தியா முழுவதிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோரும், மிகப் பிற்படுத்தப்பட்டோரும், பட்டியல் வகுப்பினரும், மதச்சிறுபான்மையினரும், பழங்குடியினரும் ஆக உள்ள இவ்வகுப்பு மக்களின் தலைவர்கள் முதலில் ஒன்றுகூடிப் பேசவேண்டும். அனைத்திந்திய அளவில், ஓர் குடை அமைப்பை (Umbrella Organisation) இவர்கள் உருவாக்க வேண்டும்.

இந்திய அரசைக் கைப்பற்றுவது என்று முடி வெடுத்து, அதை நோக்கி இவர்கள் பயணம் போக வேண்டும்.

இந்தியாவில் மக்கள் நாயகம் மலர இது ஒன்றே வழியாகும். மற்றவை, மக்கள் நாயக அரசை அமைக் கப் பயன்படமாட்டா.