7.4.2017 அன்று தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையின் பின்புறம் உள்ள சாலையோரத் தேநீர் கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்தேன். அப்பொழுது இரு காவல்துறையினர் பேசிக் கொண்டி ருந்தனர்.

முதல் காவலர் பேசியது : “நேற்று அந்த மீஞ்சூர் பார்ட்டியின் உடலை 20 இலட்சம் பாக்கி பணம் கட்டிவிட்டுதான் வாங்கவேண்டும் என்று அவருடைய உறவினர்களிடம் அப்பல்லோ மருத்துவமனையில் கூறி விட்டனர். அதற்கு மீஞ்சூர்காரர்கள், “காப்பாற்றுவதாகக் கூறிவிட்டு இப்போது சாகடித்துவிட்டுப் பணம் கேட்கிறீர்கள். நாங்கள் சும்மாவிடமாட்டோம். மருத்துவமனை மீது வழக்குப் போடுவோம் என்றனர்” என்று முதல் காவலர் கூறினார்.

அதற்கு இரண்டாம் காவலர், “நமக்கு ஏன் வம்பு. நம்ம டிபார்ட்மெண்ட் பேர் கெட்டுவிடக்கூடாது. நாம் எல்லாம் பொது மக்களுக்கும் காவலர்கள்; நமக்குக் கொடுக்கும் சம்பளத்திற்கு நாம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும்” என்றார்.

முதல் காவலர் : “யோவ் நீ ஏன் இப்படிப் பேசுகிறாய்? மறைந்த முதல்வர் செயலலிதா அவர்கள் இறப்பைப் பற்றி வெளிப்படையாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிடவில்லை. பணத்திற்காக மூடிமறைத்துள்ளது. கிடைத்த வரைக்கும் இலாபம். பொது மக்களாவது மண்ணாவது” என்றார்.

இரண்டாம் காவலர் : “நீ திருந்தமாட்ட. தென்மாவட்டத் தினர் இப்படித்தான் இருப்பீர்களா? நாமும் நல்லவர் களுக்குப் போராடுவோம். பொதுப் பிரச்சனைக்காகப் போராடுவோரை மிகவும் மரியாதையுடன் நடத்த வேண்டும். பிரச்சனைகளைக் கவனித்து தீர்வுகாண வேண்டும்.

முதல் காவலர் : கட்சிக்காரர்கள் அடிக்கும் கொள்ளையைவிட நாம் பெரிதாகச் செய்யவில்லை. ஆட்சியாளர்கள் யோக்கியனாக இருந்தா, நாமும் யோக்கியனாக இருக்கலாம். இன்னொரு செய்தி, மீஞ்சூர் பார்ட்டியின் உறவினர் உடலை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றிவிட்டார்களாம். அப்பல்லோ நிர்வாகம் எப்படி தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது பார்த்தியா? பெரிய, பெரிய மருத்துவமனைகள் உயிரைக் காப்பதை விட பணத்தை வாங்குவதில் குறியாக உள்ளன. வா போகலாம். ஏ.சி. தேடுவார் என்றார்.

நானும் குடித்த தேநீருக்குக் காசு கொடுத்துவிட்டு புறப்பட்டேன். அவர்கள் குடித்த தேநீருக்கு காசு கொடுக்காமல் புறப்பட்டனர்.

- உழவர் மகன் ப.வ.