இந்து மதத்தின் புதிர்கள் (Riddles in Hinduism) என்ற அருமையான ஆய்வு நூலை அறிஞர் அம்பேத்கர் உலகிற்கு வழங்கினார். தொடக்க நிலையிலிருந்து இந்து மதம் சாதியக் கட்டமைப்பு, மூடநம்பிக்கைகள் தீண்டாமை போன்ற மானுடத்திற்கு எதிரான கருத்துகளையே திணிக்கிறது என்று தனக்கே உரித்தான ஆளுமையோடு அம்பேத்கர் விளக்கியுள்ளார். 21ஆம் நூற்றாண்டிலும் மதபோதையில் தள்ளாடும் மோடியின் எடுபிடிகள் பசுவைக் கொல்லாதே எனக் கூக்குரலிடுகின்றனர். பசு இறைச்சியை உண்பது இந்து மதத் தர்மத்திற்கு எதிரானது என்று கூறி இதற்கு ஆதாரமாக இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 47ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொதுவாக ஒரு நாடு தனது ஆட்சியை மக்களின் நன்மைக்காகச் சிறந்த முறையில் மேலாண்மை செய்யுமானால் அந்த நாட்டில் அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு அப்பாலும் நல்ல ஆட்சியியலைக் காண முடியும். சரியான அரசமைப்புச் சட்ட விதிகள் அமைந் தாலும் மக்களுக்கு எதிரான நிர்வாக நடவடிக்கைகளால் துன்பமான ஆட்சியியலைத்தான் பார்க்க முடியும். ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பெரும்பான் மையான பிரிவுகள், பெரும்பான்மையான மக்களுக்கு எதிராக ஆதிக்கச் சக்திகளால் உருவாக்கப்பட்டன. நீதி, நிர்வாகம், சட்டம் இயற்றும் அதிகாரம் ஆகியன எதிர் மறையாகக் கடந்த 65 ஆண்டுகளாகச் செயல்பட்டதால் நாடும் கெட்டு விட்டது. மக்களும் கேடுகளைத்தான் சந்தித்து வருகின்றனர். இதை அறிஞர் அம்பேத்கர் குறிப்பிட்டது போன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் புதிர்கள் எனலாம்.

குறிப்பாக மோடி 2014இல் பிரதமர் பதவியேற்ற பிறகு இந்துத்துவ சங்பரிவாரங்கள் ஆடும் ஆட்டங்களும் போடும் கொட்டங்களும் எண்ணிலடங்கா. தற்போது வேளாண் நிலங்களை ஏழை சிறு, குறு விவசாயிகளி டமிருந்து பறிப்பதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மோடி அரசு துடியாய்த் துடிக்கிறது. நிலத்தைப் பறிகொடுத்தவர்கள் நீதிமன்றத்தை நாட முடியாது என்கிற புதிதாக இணைக்கப்பட்டுள்ள விதி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளைத் தகர்ப்பதாக உள்ளது. ஒரு பக்கத்தில் உள்நாட்டுப் பெரு முதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் ஏழைகளின் நிலங்களைப் பிடுங்கிக் கொடுத்துக் கொண்டே மறு பக்கத்தில் ஏழைகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் உண்ணும் உணவையும் தட்டிப் பறிக்கிறது மோடி அரசு. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள், அரசிற்கு வழி காட்டும் நெறிகள் அடிப்படைக் கடமைகள் என மூன்று முதன்மையான, சட்டப் பிரிவுகள் உள்ளன. பிரிவு 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகளையும் பிரிவு 36 முதல் 51 வரை வழிகாட்டும் நெறிமுறைகளையும் பிரிவு 51ஏ அடிப்படைக் கடமைகளையும் வலியுறுத்துகின்றன. ஆனால் நடைமுறையில் ஆட்சியாளர்களால் மக்களின் நன்மைக்கு எதிராக அச்சட்டப்பிரிவுகள் வளைக்கப்படுகின்றன. இதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சமூக அரசியல் பொருளாதார நீதிகள் புதைக்குழிக்கு அனுப்பப்படு கின்றன. மேலும் நூறு முறைக்கு மேல் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்ட விதி திருத்தங்கள் ஆதிக்கச் சக்திகளிடம் அதிகாரக் குவிப்பை தில்லியில் ஏற்படுத்துகின்றன.

அரசமைப்புச் சட்டத்தில் சொத்துரிமை, அடிப் படை உரிமையாக முதலில் இருந்தது. பின்பு சாதாரண உரிமையாக மாற்றப்பட்டது. இன்றோ அந்தச் சாதாரண உரிமையும் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தால் பறிக்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமையின் பிரிவு-17 தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கிறது. தீண்டாமையைக் கடைபிடிப்பவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நாள் தோறும் நாட்டில் குறைந்தது 100 தீண்டாமைக் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தாழ்த் தப்பட்டோர்க்கும் மலைவாழ் மக்களுக்கும் சட்டப் பாதுகாப்புகள் இருப்பினும் அவர்களின் வாழ்நிலை மிகமிக மோசமாக உள்ளது. வறுமைக்கோட்டிற்குக் கீழே இந்தியாவில் 40 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்றால் அதில் 30 கோடி மக்கள் இந்தப் பிரிவினரே என்று சமூக ஆய்வாளர்களால் குற்றம் சாட்டப்படுகிறது.

அரசமைப்புச் சட்டம் எவ்வாறு வளைக்கப்படுகிறது என்பதற்கு மற்றொரு தலைசிறந்த சான்று அடிப்படை உரிமையின் 18ஆவது பிரிவாகும். எவ்விதப் பட்டங் களையும் யாருக்கும் வழங்கக் கூடாது என்பதுதான் இச்சட்டப்பிரிவின் ஆழ்ந்த கருத்தியலாகும். ஆனால் பாரதரத்னா, பத்மபூஷண் போன்ற பட்டங்கள் தேசிய விருதுகள் என்ற பெயரில் ஆளுங்கட்சியினருக்குச் சாமரம் வீசுபவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற் றைப் பற்றி விளக்கம் அளிக்கும்போது இவை தேசிய விருதுகள்தான்; பட்டங்கள் அல்ல என்று விளக்கப் படுகிறது. இதன் காரணமாகத்தான் அரசு அளிக்கிற இந்த விருதுகளைப் பாரதரத்னா பெறுகிறவர் தன் பெய ருக்கு முன்போ பின்போ குறிப்பிட முடியாது என்றும் குறிப்பிடப்படுகிறது. 18ஆவது பிரிவின் 2ஆவது விதியில் எந்த ஒரு இந்தியக் குடிமகனும் வெளிநாட்டிலிருந்து பட்டங்களைப் பெறக் கூடாது என்று வலியுறுத்துகிறது. ஆனால் இலங்கையிடம் தமிழர்களைக் காட்டிக் கொடுத்த பல லங்கா ரத்னாக்கள் இன்றும் இந்தியாவில் வலம் வருகிறார்கள். இது போன்று இந்திய அரசமைப் புச்சட்ட விதிகள் நாள்தோறும் சிதைக்கப்படுகின்றன.

அரசிற்கு வழிகாட்டும் நெறிகள் சுவிட்சர்லாந்து நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் கருத்தியலிலிருந்து எடுத்து இந்திய அரசமைப்புச்சட்டத்தில் இணைக்கப் பட்டன. ஆனால் எந்தக் குடிமகனும் இதில் குறிப் பிடப்பட்டுள்ள பல உயர் நெறிகளை மக்களின் நன் மைக்காக அரசுப் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றத் தில் வழக்குத் தொடர முடியாது. சான்றாகக் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது உழைப்புக்கு ஏற்ற ஊதியம், வேலைவாய்ப்பு உரிமை, கட்டாயப் பள்ளிக் கல்வி, உணவு, ஊட்டச்சத்து, உடல் பாதுகாப்பு போன்று பல நெறிகள் இதில் குறிப்பிடப் பட்டுள்ளன. இந்நெறிகளைக் கடந்த 65 ஆண்டுகளாக ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பின்பற்றியிருந் தால், கொடுமையான வறுமையின் பிடியில் இருந்து மக்கள் விடுப்பட்டு குறைந்தபட்ச நல்வாழ்வையாவது பெற்றிருப்பார்கள். ஆனால் குறிப்பிட்ட சில விதிகளின் சில பிரிவுகளை எதிர்மறையாகப் பொருள் கொண்டு இந்துத்துவா பாசிசச் சக்திகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுகின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற நோக்கோடு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அரசமைப்புச் சட்ட விதிகள் சீரமைப்புத் தேசிய ஆணையம் (2000) நீதிபதி வெங்கடாச்சலய்யா தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் இந்தியாவின் தலைசிறந்த நீதிபதிகளும் சட்ட வல்லுநர்களும் இடம் பெற்றனர். குறிப்பாக இந்த ஆணையம் வேளாண்மைத் தொழிலைத் திறன்மிக்க தொழிலாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுதல், தோட்டக்கலையை வளர்த்தல் கால்நடை பராமரிப்பைச் சிறந்த முறையில் வளர்த்தெடுத்தல், காடுகளை வளர்த் தல், நிலம் நீர் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மையைப் போற்றுதல், தனிமனித சுகாதார உரிமையளித்தல், வறுமையிலிருந்து விடுபட உணவு, உடை, வீடு வழங்குதல், கல்வியை அனைவருக்கும் வழங்குதல் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தல் போன்ற கடமைகளை அரசு உடனடியாக நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.

கல்வியை எல்லோருக்கும் வழங்குவதற்குத் தேசிய கல்வி ஆணையம் ஒன்றை உருவாக்க வேண்டும். நிதிக்குழு போன்று 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட வேண்டும்; கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் செயல் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. வழிகாட்டும் நெறிகளில் உள்ள பிரிவு 47 உடன் துணைப்பிரிவாக 47ஏ-வை இணைத்துக் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டது. மாறாக வடநாட்டிலுள்ள இந்து சாமியார்களும் சங்கராச்சாரியர்களும் அய்ந்து குழந்தைகளைப் பெற வேண்டும் என்று பரப்புரை செய்கிறார்கள்.

ஆனால் இந்த ஆணையம் 44ஆவது விதியில் சுட்டப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் பற்றி எவ்வித கருத்தையும் குறிப்பிட வில்லை. அதே போன்று பசுவதைத் தடைச்சட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடவில்லை. ஆனால் மோடி அரசு அமைந்த பிறகு பசுவதையைத் தடை செய்வதற்குப் பல மாநில அரசுகள் குறிப்பாக மராட்டிய மாநிலம் மிகக் கடுமையான தண்டனைச் சட்டத்தை இயற்றி உள்ளது. அதே போன்று சங்பரி வாரங்கள் இந்து, இசுலாமிய, கிறித்தவர்களுக்குப் பொது வான சிவில் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்து கின்றன. இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதன் தொடர்ச்சியாகத்தான் பசு புனிதமானது; அதைக் கொல்வதைத் தடை செய்ய வேண்டும் என்கிறார்கள். இதற்கு முன்னோடியாக மராட்டியம் மற்றும் அரியானா மாநிலங்கள் பசுவைக் கொல்லக்கூடாது என்ற கடுமையானச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளன.

இந்தியாவினுடைய வறுமையை முதன்முதலாகப் புள்ளிவிவரங்களோடு கணக்கிட்ட மறைந்த பேராசிரியர் தண்டேகர் 1964இல் உலகளவில் புகழ் பெற்ற பல பொருளாதார அறிஞர்களை அழைத்துப் பசுவைக் கொல்லக்கூடாது என்ற சட்டமும் கொள்கையும் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது என்று பல தரவுகளுடனும் மெய்ப்பித்துக் காட்டினார். அறிஞர் தண்டேகர் மராட்டிய மாநிலப் பார்ப்பனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்காலக்கட்டத்திலேயே பயனற்ற பசுக்களின் எண்ணிக்கை பெருகி வருவதாகவும் அவற்றை வைத்துப் பாதுகாப்பதினால் வேளாண் பயிர் களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டார். அரை நூற்றாண்டு கடந்த பிறகு தற்போது வேளாண் விளை நிலமும் மேய்ச்சல் நிலமும் மேலும் குறைந்து வரு கின்றன. இச்சூழலில் பசுக்கொலைத் தடைச்சட்டத்தைக் கொண்டு வந்தால் அறிவியல்பூர்வமாகத் தரமான பசுக்களைப் பாதுகாத்துப் பால் உற்பத்தியைப் பெருக்க முடியாது. சான்றாக எருமை பசு மாடுகளால் பால் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளது. அது போன்றே நெய் உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது. 2012-13 ஆம் ஆண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி மதிப்பு 2 இலட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது அரிசி கோதுமை கரும்பு உற்பத்தி மதிப்பின் அளவைவிட அதிகமானது. குறிப்பாகக் கால்நடை வளத்தை மதக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல், அறிவியல் கண் ணோட்டத்தோடு பார்த்து வளர்த்தெடுத்தால் வேளாண் தொழிலில் காணப்படும் பொருளாதாரத் தேக்க நிலையும் நீங்கும்.

இந்தியப் பசுவின் பால் உற்பத்தித்திறன் ஆண்டிற்குச் சராசரியாக 1284 கிலோ என மதிப்பிடப்பட்டுள்ளது. அய்ரோப்பிய ஒன்றியத்தில் ஒரு பசு 6212 கிலோ பாலைச் சராசரியாகவும் அமெரிக்காவில் சராசரியாக 9117 கிலோவாகவும் வழங்குகின்றது. இந்திய ஒட்டு மொத்த நாட்டு வருமானத்தில் கால்நடைத் துறையின் பங்கு 24.8 விழுக்காடு ஆகும். பால் பொருள்கள் உற்பத்தி ஒரு கோடியே எண்பது இலட்சம் மக்களுக்கு வேலையை வழங்குகிறது. பெரும்பாலும் சமுதாயத் தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நிலமற்ற குறுவிவசாயிகளுமே இந்தத் தொழிலால் பயன்பெறு கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நோய்வாய்பட்ட பயனற்ற பசுக்களை வைத்துக் கொண்டு, சித்ரவதை செய்வதைவிட, பயனற்ற பசுக்களைக் கொல்வதே சிறந் தது என்று பல அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. வரலாற்றைச் சரிவரப் படிக்காமல் நடைமுறையில் இயங்கி வருகின்ற பொருளா தாரத்தைப் புரிந்து கொள்ளாமல் பசுவைக் கொல்லாதே என்ற கண்மூடித்தனமான கூச்சல் வறுமையைப் பெருக்கிவிடும்.

தண்டேகர் அவர்கள் முற்போக்கான கால்நடை அறிவியல் கொள்கைக்குத் தடையாக இருப்பவர்கள் இந்துமதவாதிகள்தான் என்றும் குறிப்பிட்டார். வேத காலத்தில் பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை உண்டார் கள் என்பதை வரலாற்று ஆய்வாளர் டி.டி.கொசாம்பி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோரும் குறிப் பிட்டுள்ளனர். டி.டி.கொசாம்பியின் தந்தை தர்மானந்த கொசாம்பி சமண புத்தத் துறவிகள் மாட்டிறைச்சி உண்டார்கள் என்பதைப் பல தரவுகளுடன் மெய்ப்பித் துள்ளார். இதன் ஆதாரங்கள் தர்மானந்த கொசாம்பி யின் ‘இன்றியமையாதக் கருத்துகள்’ (Dharmanand Kosambi - The Essential Writings, ed. By Mira Kosambi) என்ற நூலில் இடம் பெற்றுள்ளன. மேலும் அண்ணல் அம்பேத்கர் பலவிதத் தரவுகளுடன் ரிக்வேத காலத்தி லிருந்து பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை உண்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். உலகின் ஒரு இந்து நாடாகக் கருதப்பட்ட நேபாளத்தில் ஆண்டுதோறும் நடைபெற்ற அரசர் பதவியேற்பு நாளில், கொழுத்தப் பசுக்கள் வளர்க்கப்பட்டு அவற்றின் இறைச்சி விருந்தினர்களுக் குப் படைக்கும் மரபு நேபாளம் மதச்சார்பற்ற நாடாக (2006) அறிவிக்கும் வரையில் தொடரப்பட்டது. இது போன்ற எண்ணற்ற வரலாற்று சான்றுகள் உள்ளன.

மேலும் உணவு உட்கொள்வது ஒரு தனிநபரின் உரிமையாகும். உணவு உரிமை பண்பாட்டு உரிமை யாகவும் போற்றப்படுகிறது. ஓர் ஆண்டில் இந்தியாவில் பிறக்கின்ற இரண்டு கோடியே அறுபது இலட்சம் குழந்தைகளில் ஒரு கோடியே எண்பத்து மூன்று இலட்சம் குழந்தைகள் பிறந்த ஐந்தாவது நாளில் இறந்து விடுகின்றன. பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட குடும்பங் களில் பிறக்கும் எழைக் குழந்தைகள்தான் இவ்வாறு இறக்கின்றன. இந்நிலையில் மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்று சட்டம் வந்தால் கிலோ 450 ரூபாய்க்கு விற்கப்படும் ஆட்டிறைச்சியை ஏழை எளியோர் எப்படி உண்ண முடியும். தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் 2013 புள்ளிவிவரப்படி தென்னாட்டில் 92.2 விழுக்காட்டி னர் இறைச்சியை உண்கிறார்கள். இந்தியா முழுவதும் 64 விழுக்காடு மக்கள் இறைச்சியை உண்கிறார்கள். குறைந்த விலையில் கிடைக்கின்ற மாட்டிறைச்சியில் புரதச் சத்தும் அதிகம் கிடைக்கிறது. இத்தகைய பின்னணியோடு பார்க்கத் தவறுகின்ற இந்துத்துவ சங்கபரிவாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சில விதிகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எனவே இது போன்ற பல அரசமைப்புச் சட்ட முரண் பாடுகளைக் களைவதற்குப் பல புதிய முற்போக்கான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். தற் போதுள்ள இந்திய அரசமைப்புச் சட்டம் இந்திரா காந்தி ஆட்சியின்போது (1975) அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் சட்டமாக மாறியது. தற்போது இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளுக்கு இடமளிக்கும் சட்டமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. மாநிலங்களின் உரிமைகள் மக்களின் வாழ்வா தாரங்களை உறுதிப்படுத்துகிற கூட்டாட்சி சமதர்ம மக்கள் குடியரசு அரசமைப்புச்சட்டத்தை உருவாக்குவது தான் நல்ல தீர்வாக அமையும்.