பெரியார் சமஉரிமைக் கழகம் 8.8.1976இல் நிறுவப்பட்டது. அதன் பெயர் 1988இல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என மாற்றப் பட்டது.

சிந்தனையாளன், கிழமை இதழாக 17.8.1974இல் தொடங்கப்பட்டது. அது, நான் தொடங்கிய மூன்றாவது கிழமை இதழாகும். இப்போது சிந்தனையாளன் 43 ஆண்டுகளையும் 10 மாதங்களையும் 2019 ஏப்பிரல் வரை முடித்துள்ளது. இவ்வளவு செய்திகளையும் நாம் ஒரு சேர எண்ணிப் பார்க்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் வகுப்புவாரி உரிமை, நால்வருண ஒழிப்பு, சமதர்ம ஆட்சி அமைப்பு என்பவை ஆகும்.

நாம் சீர்காழியில் கட்சியை அமைத்தபோதே, ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டோம். தந்தை பெரியார் அவர்களின் வேலைத் திட்டங்களுள் “வகுப்பு வாரி உரிமை” என்கிற வேலைத் திட்டத்தையாவது அனைத்திந்திய அளவில் பரப்புரை செய்து வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்தோம்.

நம் கட்சிக்கு வழிகாட்டிகளாக அமைந்த சேலம் அ.சித்தய்யன், 1929 முதல் தந்தை பெரியாரின் தொண்ட ராகப் பணியாற்றிப் பயிற்சி பெற்றவர். தாதம்பட்டி ம.இராசு பெரியாரின் தமையனாருடைய மருமகனாவார். இவர்களின் நீங்காத் துணை நமக்கு இவ்இருவரின் மூச்சடங்கும் வரை கிடைத்தது.

பெரியாரின் வகுப்புரிமைக் கோரிக்கை வேண்டுகோள் விண்ணப்பத்தை ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அறிக்கையாக அச்சடித்துக் கொண்டு, 29.4.1978இல் நானும், சீர்காழி மா.முத்துச்சாமி, சேலம் ம.இராசு ஆகிய மூவரும் தில்லியை அடைந்தோம்.

இப்பயணத்தைத் திட்டமிட்டபோது வாழப்பாடி கூ.இராமமூர்த்தி அவர்கள் மக்களவையின் உறுப்பினராக இருந்தார். அவருடைய இல்லத்தில், நாங்கள் எப்போது தில்லி சென்றாலும், 1992 வரை தங்கிக் கொண்டோம். இது நம் பணிக்கு மிகவும் வசதியாக அமைந்தது.

தில்லியில், 30.4.1978 முதல் அன்றாடம் 10 முதல் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து நம் கோரிக்கையை அவர்களுக்கு விளக்கினோம்.

29.4.1978இல் பி.பி.மண்டல் அவர்களைத் தில்லி யில் சந்தித்துப் பேசினோம். மண்டல் அவர்களின் ஆலோ சனையின் பேரில், 6.5.1978 மாலை இராம் அவதேஷ்சிங் என்கிற மக்களவை உறுப்பினரைச் சந்தித்தோம். அவர் 7.5.1978இல் முசாபர் நகரில் நடைபெற்ற “உத்தரப் பிரதேசப் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுக்கு” எங்களை அழைத்துச் சென்றார். அந்த மாநாட்டில் 1944ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்களை, கான்பூருக்கு அழைத்து “அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர் லீக் மாநாட்டை” நடத்திய சிவ் தயாள் சிங் சௌராசியா அவர்களின் அறிமுகமும், 1959இல் லக்னோவுக்கு தந்தை பெரியாரை அழைத்த செடிலால் சாத்தி அவர்களின் அறிமுகமும் எனக்குக் கிடைத்தன. வடமாநிலங்களில் நாங்கள் செயல்பட இவர் களின் துணை நன்கு பயன்பட்டது.

8.5.1978இல் மக்களவை உறுப்பினர் வாழப்பாடி கூ.இராமமூர்த்தி, வே.ஆனைமுத்து, ம.இராசு, சீர்காழி மா.முத்துசாமி ஆகிய நால்வரும், அன்றைய குடிஅரசுத் தலைவர் நீலம் சஞ்சீவிரெட்டி அவர்களைச் சந்தித்து நீண்ட நேரம் நம் கோரிக்கை குறித்து விவாதித்தோம். அவர், நாங்கள் கொடுத்த கோரிக்கை ஆவணத்தை முழுவதும் படித்தார். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறுவதை அவர் விரும்பவில்லை; வேறு சிக்கலுக்கு எங்களுடைய கவனத்தைத் திருப்பினார். “நான் இந்தியில் பேச வேண்டு மென்று வடநாட்டுக்காரர்கள் வற்புறுத்துகிறார்கள். நீங்கள் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு  மாநாடு போடுங்கள், நான் வந்து பேசுகிறேன்” என்று அவர் எங்களை திசை திருப்பினார்.

11.5.1978இல் அன்றைய உள்துறை இணை அமைச்சர் தணிக் லால் மண்டல் அவர்களை அவருடைய இல்லத் தில் சந்தித்தோம். அவர் பொறுமையாக எங்களுடைய கோரிக்கையைப் படித்துவிட்டு, “நான் நூற்றுக்கு நூறு இதை ஒப்புக் கொள்கிறேன்” என்று மகிழ்ச்சியாகக் கூறினார். உடனே சென்னை கே.சுப்பிரமணியன் மூலம், நாங்கள் சென்னையில் 24.6.1978இல் நடத்த இருக்கும் அனைத் திந்தியப் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டினை அவர் தொடங்கி வைத்திட ஒப்புதல் பெற்றோம்.

இவ்வளவு பயணச் செய்திகளையும் தமிழ்நாட்டில் பரப்பியது சிந்தனையாளன் ஏடு மட்டுமே.

அடுத்து, சென்னை மாநாட்டுச் செய்திகளையும், கேரளச் சுற்றுப்பயணம், கருநாடகச் சுற்றுப் பயணம் இவற்றைப் பற்றியும், 19.8.1978இல் அமைக்கப்பட்ட அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் பேரவையின் செய்திகளையும் பரப்பியது சிந்தனையாளன் ஏடு மட்டுமே.

சென்னை மாநாட்டின் முடிவை ஒட்டியும், பேரவை அமைப்பின் முடிவை ஒட்டியும் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பரப்புரைக் குழுவினரை இராம் அவதேஷ் சிங் பீகாருக்கு அழைத்தார். வே.ஆனைமுத்து, சீர்காழி மா.முத்துச்சாமி, வேலூர் நா.ப.செந்தமிழ்க்கோ, திருச்சி து.மா.பெரியசாமி ஆகிய நால்வர் அடங்கிய பயணக்குழுவினர் 16.9.1979 காலை பீகார் தலைநகர் பாட்னா போய்ச் சேர்ந்தோம். அப்போதைய பீகார் மாநிலத்தின் 31 மாவட்டங்களில் 31 நாள்களில் நாங்கள் தொடர்ந்து பரப்புரை செய்தோம். அக்டோபர் 10ஆம் நாளுக்குப் பிறகு பிரதமர் மொரார்ஜி தேசாய் எங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்தார். அவரை பீகாரில் எங்கும் பேசவிடாமல் மக்கள் தடுத்துவிட்டனர்.

இதனாலும், பீகாரில் இரண்டு தொகுதிகளில் நடை பெற்ற இடைத்தேர்தலில் ஜனதா கட்சிக்கு எதிராக ஆள்களை நாங்கள் நிற்க வைத்ததாலும், பிரதமர் தேசாய் நல்ல பாடம் கற்றார்.

நாங்கள் பாட்னாவில் காந்தி மைதானத்தில் அக்டோபர் 19 முதல் 3 வரை நடத்திய போராட்டத்தில் 10 ஆயிரம் பேர் சிறைப்பட்டனர். இந்த மூன்று காரணங்களால்தான் சனதா கட்சி அரசாங்கம் “இரண்டாவது அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அரசு அமைக்கும்” என்று பிரதமர் தேசாய் 20.11.1978இல் நாடாளுமன்றத் தில் அறிவித்தார். அதேபோல் பிந்தேசுவரி பிரசாத் மண்டல் அவர்களை மேற்படி ஆணையத்துக்குத் தலை வராகப் பிரதமர் நியமித்தார்.

நம் கோரிக்கையின் முதல் பகுதி இப்போது நிறை வேற்றப்பட்டுள்ளது.

அடுத்து 23.3.1979இல் தில்லியில் பெரியார் நூற் றாண்டு விழாவையும், டாக்டர் லோகியாவின் 80ஆம் பிறந்த நாள் விழாவையும் தில்லியில் நடத்தினோம். தமிழ்நாட்டிலிருந்து குடும்பம் குடும்பமாக 200 பேர் கலந்து கொண்டனர். பீகார், இராசஸ்தான், உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப், கேரளா, ஆந்திரா, கருநாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து 27 ஆயிரம் பேரும், பழைய தில்லி பெரோஷா கோட்லா மைதானத் திலிருந்து 8 கி.மீ., நடந்து அவரவர் மொழியில் இடஒதுக்கீடு கோரிக்கை முழக்கத்தை முழங்கிக் கொண்டு பகல் 2 மணிக்கு போட் கிளப் மைதானத்தை வந்தடைந்தோம். அங்கு நடந்த விழாவுக்கு வே.ஆனைமுத்து தலைமை ஏற்றார்; இராம் அவதேஷ்சிங் வரவேற்புரை ஆற்றினார். துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்; முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜ் நாராயண் பெரியாரின் எழுத்தும் பேச்சும் அடங்கிய இந்தி மொழியாக்க நூலை விழாவில் வெளியிட்டார்.

இவ்வளவு செய்திகளையும் சிந்தனையாளன் ஏடு பரப்பியதால்தான் இப்படிப்பட்ட அடிப்படைப் பணிகளை நாம் செய்திட முடிந்தது. ஆங்கிலத்திலும் Periyar Era என்கிற மாத ஏட்டையும் தொடங்கி நடத்தினோம்.

தமிழ்நாட்டில், பிற்படுத்தப்பட்டோருக்கு இடையூறு செய்யும் தன்மையில், “9 ஆயிரம் வருமான உச்ச வரம்பு ஆணையை” முதல்வர் எம்.ஜி.ஆர்.அரசு 1979 இல் வெளியிட்டது. எல்லாக் கட்சிகளும் அந்த வருமான வரம்பு ஆணையை எதிர்த்தன;

மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி மட்டும். அந்த ஆணையை எதிர்த்ததுடன் மட்டும் நில்லாமல், முதன்மையான ஒரு செய்தியை விளக்கித் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையை ஆவணமாக அச்சிட்டு அளித்தது. அந்தச் செய்தி வருமாறு:

1976இல் உச்ச நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு முர்த்துசா பசல் அலி அவர்கள் பின்வருமாறு (State of kerala Vs. N.M. Thomas, AIR 1976, SC 40)  தீர்ப்பில் குறிப்பிட்டி ருந்தார். அதாவது “ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வர்கள் 80 விழுக்காடு இருப்பார்களானால் - அந்த மாநில அரசு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு விதி 16(4)இன்படி 80 விழுக்காடு வேலையில் இடஒதுக்கீடு வழங்கலாம் அல்லவா? அப்படிச் செய்வதை விதி 16(4) தடுக்காது” என்று குறிப்பிட்டார்.

ஏற்கெனவே தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோருக்கு மொத்தம் 31 விழுக்காடு மட்டும் இடஒதுக்கீடு 1971இல் வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் எல்லோரும் அதில் இடம்பெற முடியாது என்று அரசு கருதினால், அவர்களுக் குரிய இடஒதுக்கீட்டின் அளவை அவர்களுடைய மக்கள் தொகையைக் கணக்கெடுத்து உயர்த்தி வழங்க வேண்டும். அதை விட்டுவிட்டு 31 விழுக்காட்டை உயர்த்தாமல், வருவாய் குறைந்தவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு கொடுப்பது அநீதியாகும்.

இந்தச் செய்திகளை அன்றைய தமிழக அமைச்சர் பண்ருட்டி ச.இராமச்சந்திரன் மூலம் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் புரிய வைத்தோம். அதனால்தான் எம்.ஜி.ஆர். அவர்கள், 1.2.1980இல், 31 விழுக்காட்டுடன் 19 விழுக்காட்டைச் சேர்த்து தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தினார்.

இது நம் சாதனை.

2019 சூன் மாதம் சிந்தனையாளன் ஏடு 43ஆம் ஆண்டுகளை முடித்து, சூலை மாதம் 44ஆம் ஆண்டின் முதல் இதழ் வெளிவரும்.

நம் தோழர்கள் தொடர்ந்து கட்டுரை எழுதி வரு கின்றனர். மேலும் பலர் வருந்தி முயன்று கட்டுரைகள் எழுதி, அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் உடல் நலிவுற்ற நிலையில், சொந்தமாகக் கட்டுரை எழுத முடியாத நிலையில் துன்பப்படுகிறேன்.

நம் துணைப் பொதுச் செயலாளர்கள், துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர்கள், அருள்கூர்ந்து வருந்தி முயன்று சிந்தனையாளன் படிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக்கும் தன்மையில் முயன்று ஓர் ஆண்டு-மூன்றாண்டு-வாழ்நாள் எனப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்குமாறும் உறுப்பினர்களை சேர்க்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.