1850 ஆம் ஆண்டிற்குப் பிறகு அளவிடப்பட்ட கணக்கீடுகளின்படி புவியின் வெப்பம் 1998, 2005, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில்தான் அதிகமாக இருந்ததாம். இந்த மூன்று ஆண்டுகளிலும் கூட 2010 ஆம் ஆண்டில் பதிவான புவியின் வெப்பம்தான் மிக உயர்ந்த அளவு என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை. புவிவெப்ப உயர்வு மனிதர்களின் செயல்பாடுகளால் நிகழ்ந்தது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு புவியின் வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதாம்.

rain_321கரீபியன் தீவுகளில் ஒன்றான கான்குன் தீவில் புவிவெப்பமடைவதை தடுப்பது எப்படி என்பது குறித்து கடந்த மாதம் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் 200 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டில் கோபன்ஹேகனில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் சீனாவும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் தாங்கள் வெளியிடும் வெப்ப அளவை 2 டிகிரி செல்சியஸ் குறைப்பதற்கு முயற்சி எடுப்பதாக வாக்களித்தன. இரண்டு வல்லரசுகளும் உண்மையிலேயே 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை குறைத்தாலும்கூட ஒட்டுமொத்தமான புவியின் சராசரி வெப்பநிலையில் எந்த பெரிய மாற்றமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்கிறது கான்குன் அறிக்கை.

உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி 1961 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் புவியின் நீர், நில பரப்புகளின் வெப்பசராசரி 14 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. 2010 ஆம் ஆண்டின் புவிவெப்ப சராசரி 14.55 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்திருக்கிறது. 2001 முதல் 2010 வரையிலான பத்தாண்டுகளில் 2010ல்தான் மிக அதிக வெப்பம் பதிவாகியிருக்கிறது என்கிறது அந்த அறிக்கை. வனவளத்தைப் பெருக்குவது ஒன்றுதான் மாற்றுவழி என்கிறது ஐ.நா.வின் அறிக்கை. வெள்ளம், வறட்சி, விளைநிலம் பாலையாதல், கடல்மட்டம் உயருதல் என்பவையெல்லாம் புவிவெப்ப உயர்விற்குப் பிறகு நாம் சந்திக்கும் பேரழிவுகள்.

1942க்குப் பிறகு பாகிஸ்தான் வளிமண்டலத்தின் சராசரி வெப்பம் 53.5 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்ததும், அண்மையில் அந்நாடு மிகப்பெரிய வெள்ள அழிவை சந்தித்ததும் சரித்திர பதிவுகள். ஆப்பிரிக்கா, ஆசியாவின் சில பகுதிகள், ஆர்க்டிக் ஆகிய இடங்களில் புவிவெப்ப உயர்வு அதிகமாக இருப்பதாக உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் மனிதகுலத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பவேண்டும் என்கிறது கான்குன் மாநாட்டின் அறிக்கை.

இன்னும் படிக்க:http://www.newsdaily.com/stories/tre6as05m-us-climate-temperatures/
தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It