தமிழ் வழியில் எல்லாக் கல்வியும் தரப்படவில்லை

தமிழ் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக இல்லை

பிரிட்டிஷ் இந்தியா என்பது 1801இல் உரு வானது. 1801 முதல் 1900 வரை மாகாண அளவில் பெரிய பதவிகள் மாவட்ட அளவில் பெரிய பதவிகள் இவற்றில் எல்லாம் பெரிதும் வெள்ளையர்களே அதிகாரிகளாக இருந்தார்கள்.

வட்டாட்சியர் போன்ற பதவிகளில் கையெழுத்துப் போடத் தெரிந்த, எழுதப்படிக்கத் தெரிந்த இந்தியர்கள் வரித்தண்டல் அதிகாரிகளாக அமர்த்தப்பட் டார்கள்.

1835இல்தான் பொதுப்பள்ளி என்பது நிறுவப் பட்டது. சென்னை மாகாணத்தில் 1835இல் பொதுப் பள்ளிகளில் 1 முதல் 5 வரை தமிழ்நாட்டில் தமிழ் வழியிலும் தெலுங்கு நாட்டில் தெலுங்கு வழியிலும் கர்நாடக நாட்டில் கன்னட வழியிலும் தொடக்கக்கல்விப் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

சென்னை மாகாண எல்லைக்குள் 6ஆம் வகுப்புக்கு மேல் 10ஆம் வகுப்பு வரையிலும் அதற்கு மேலும் எல்லாப் பாடங்களும் ஆங்கில வழியிலேயே கற்பிக்கப் பட்டன. தாய்மொழிப் பாடம் மட்டும் அவரவர் தாய்மொழியில் கற்பிக்கப்பட்டது. அப்போது மேல்சாதிகளைச் சேர்ந்த இந்துக்கள், கிறித்தவர்கள், இசுலாமியர்கள் கல்வி கற்றார்கள்; இந்துக்களில் பெரும்பான்மையோர் பார்ப்பனர்களாக இருந்தார்கள். அரசாங்க வேலைகளில் ஆவணங்கள் ஆங்கில மொழியில் எழுதப்பட்டன.  சென்னை மாகாணத்தில் 1865 முதல் ஆங்கிலம் ஆட்சிமொழி ஆயிற்று. அது வரையில் 10ஆம் வகுப்புப் படித்தவர்கள் எல்லோரும் கீழ் வகுப்பு (Lower grade) அரசுப் பணிகளில் அமர்த்தப்பட்டனர். அதாவது கீழ்நிலை அரசுப் பணிகளில் எல்லாம் மேல்சாதிக்காரர்களே இருக்கும் நிலை அப்போதுதான் ஏற்பட்டது. இது 1910ஆம் ஆண்டு வரை நீடித்தது. அபபோதுதான் சென்னை மாகாணத்தில் பெரும்பாலானவர்களாக இருக்கிற பார்ப்பனரல்லாத சூத்திர மக்கள் விழிப்படைந்தார்கள்.

1891இல் ஆதித்திராவிட மகாசன சபையைப் பண்டித அயோத்திதாசர் அமைத்தார். இரட்டைமலை சீனிவாசன் தீண்டப்படாத மக்களிடத்தில் விழிப்புணர்வை உண்டாக்கினார். சென்னை மாகாண வருவாய்த் துறையில் இருந்த சூத்திரச் சாதிகளைச் சேர்ந்த அலுவலர்கள் மெட்ராஸ் யுனைடெட் லீக்(Madras United League)  என்பதை 1912இல் நிறுவினார்கள். அதனுடைய நோக்கம் அரசு அலுவலகங்களில் உள்ள பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்ப்பதே ஆகும். அவர்கள் டாக்டர் நடேச முதலியார் என்பவரிடம் ஆலோசனை பெற்றார்கள். ஆப்போதுதான் மெட்ராஸ் யுனைடெட் லீக் என்பது  Dravidian Association  எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் சார்பில் சென்னையில் தங்கிப் படிக்க வரும் சூத்திர வகுப்பு மாணவர்கள் தங்கிப் படிக்க வசதியாக (Dravidian Students’ Home) திராவிடர் மாணவர் விடுதி தொடங்கப்பட்டது.

அத்துடன், இங்கிலாந்தில் கல்வி பெற்ற டி.எம்.நாயர் அவர்களும், தேவாங்கர் வகுப்பைச் சேர்ந்த நெசவுப் பட்டறை உரிமையாளர் பி.ஏ. பட்டம் பெற்ற தியாகராயச் செட்டியாரும் பார்ப்பனரல்லாதார் நலன் பற்றி அக்கறையுள்ளவர்களாக இருந்தார்கள். இவர்கள் தனித்தனியே நகரவைத் தேர்தல் போன்றவற்றில் ஈடுபட்டார்கள். இவர்களை ஒன்றாக இணைக்க எல்லா முயற்சிகளையும் செய்தார் டாக்டர் சி.நடேச முதலியார். அதற்காக சென்னையில் 1916இல் நவம்பரில் (South Indian Publishing House) தென்னிந்திய வெளியீட்டுச் சங்கம் தொடங்கப்பட்டது. அதையொட்டி தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) என்கிற அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டது.

அந்த அரசியல் அமைப்பின் நோக்கம் கல்வியிலும் அரசு வேலையிலும் பார்ப்பனரல்லாதார் எல்லோருக்கும் உரிய பங்கு பெறுவதே ஆகும்.

அப்போது இந்திய அளவில் இந்தியச் சட்டசபை என்று ஒன்று இருந்தது. படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. சென்னை மாகாணச் சட்ட சபையிலும், இந்திய அளவிலான டில்லி சட்டசபையிலும் சென்னை மாகா ணத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெரும்பா லோர் பார்ப்பனர்களாகவே இருந்தார்கள். இதை முறியடிக்க ஒரே வழி சென்னை மாகாணச் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களில் பார்ப்பனரல்லாதாருக்கு, என்று தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று, இலண்டனில் மக்களவையில் பிரிட்டிஷ் அரசுக்கு டாக்டர் டி.எம்.நாயர் கோரிக்கை வைத்தார்.

1909க்குப் பிறகு இரண்டாவது அரசியல் சீர்திருத்தம் என்பதை வெள்ளையர்கள் 1919இல் செய்தார்கள். அந்தச் சட்டத்தில் சென்னை மாகாணச் சட்டசபைக்குத் தேர்ந் தெடுக்கப்பட வேண்டிய இடங்களில் 98 இடங்கள் பார்ப்பனரல்லாதார் மட்டுமே போட்டியிடுவதற்குரிய இடங்கள் என பிரிட்டிஷ் அரசாங்கம் ஒத்துக் கொண்டது. 1919ஆம் ஆண்டினுடைய இந்திய அரசாங்கச் சட்டம் என்பது அந்தச் சட்டத்தின் பெயர்.

1920 நவம்பரில் அந்தச் சட்டத்தின்படி பொதுத்தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம், தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய இடங்களுள் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.

அந்த உறுப்பினர்கள் சார்பில் 3 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள். அவர்கள் அதிகாரம் மாற்றப்பட்ட துறைகள் (Transferred subjects)  என்கிற துறைகளை மட்டும் நிர்வகித்தார்கள். ஒதுக்கப்பட்ட துறைகள் (Reserved subjects)  என்கிற மூன்றையும் பிரிட்டிஷ்காரர்கள் நிர்வகித்தார்கள். முதலாவது பார்ப்பனரல்லாதார் அமைச்சரவை  17.12.1920இல் பொறுப்பேற்றது.  அவர்கள் கல்வியிலும் வேலையிலும் மொத்தம் உள்ள 100 இடங்களையும் பங்கு போட வேண்டும் என்று தீர்மானித்து அதற்கான ஆணைகளை 1921இல் வெளியிட்டார்கள். ஆனால் பார்ப்பனர்கள் அந்த ஏற்பாட்டைக் கட்டுப்பாடாக எதிர்த்தார்கள்.

1923ஆம் ஆண்டு இரண்டாவது பொதுத் தேர்தல் நடந்தது. அதுவரை அந்த ஆணையை நடப்புக்குக் கொண்டுவர முடியவில்லை. 1923ஆம் தேர்தலிலும் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தார் வெற்றி பெற்றனர். அப்போதும் அந்த ஆணையைப் பார்ப்பனர் எதிர்த்தனர்.

 இரண்டாவது அமைச்சரவையில் இந்துமத அறநிலையப் பாதுகாப்புச்சட்டம் என்பதை முதலமைச்சர் பனகல் அரசர் நிறைவேற்றினார். எனவே மூன்றாவதாக 1926இல் நடந்த தேர்தலில் பார்ப்பனர்கள் கட்டுப்பாடாக இருந்து தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தைத் தோற்கடித்தார்கள். எதிர்பாராதவிதமாக பார்ப்பனரல் லாதார் நலனில் அக்கறையுள்ள டாக்டர் ப.சுப்பராயன்-தோற்றுப்போன நீதிக்கட்சிக்காரர்களையும் சுயேச்சை களையும் இணைத்துக் கொண்டு சுயேச்சை அமைச் சரவை ஒன்றை அமைத்தார். அந்த அமைச்சரவையில் பத்திரப்பதிவு அமைச்சராக இருந்த எஸ்.முத்தையா முதலியார் 100 இடங்களையும் அனைத்து வகுப்புக ளுக்கும் பங்குபோடும் அந்த வகுப்புவாரி ஆணையை நடப்புக்குக் கொண்டு வர முயற்சித்தார்.

1919 முதல் 1925 நவம்பர் வரையில் தமிழ் மாகாணக் காங்கிரசின் எல்லாக் கூட்டங்களிலும் பார்ப்பனரல் லாதாருக்கு 50 விழுக்காடு இடங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டுபோய் தோற்றுப் போன ஈ.வெ.ரா., 22.11.1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறினார்.

1926இல் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின் வேட்பாளர்களை ஆதரித்துப் பெரியார் பரப்புரை செய்தார். அந்த அமைச்சரவைதான் 1927இல் 100 விழுக்காடு இடங்களையும் பங்கு போடுகிற வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணையை முதன்முதலாக நடப்புக்குக் கொண்டு வந்தது.

1925இல் சர்.பி.தியாகராயர் மறைந்தார். 1919இல் டாக்டர் நாயர் மறைந்தார். 1928இல் பனகல் அரசல் மறைந்தார். அதன் பிறகு முதல் அமைச்சராக வரக்கூடிய வாய்ப்பு பொப்பிலி அரசருக்குக் கிடைத்தது. நீதிக்கட்சி அமைச்சரவை 1937 வரையில் நீடித்தது.

1937 தேர்தலில் காங்கிரசு முதல் தடவையாக வெற்றி பெற்றது. சி.இராசகோபால ஆச்சாரியார் பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லையென்றாலும், பட்டதாரித் தொகுதியில் போட்டியிட்டு மேலவை உறுப்பினராகி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் 21.4.1938இல் இந்தியை உயர்நிலைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக அறிமுகப் படுத்தினார். தமிழறிஞர்களும் தமிழ்ப் பேரறிஞர்களும் பெரியார் ஈ.வெ.ரா.வும் இணைந்து இந்தி கட்டாயப் பாடம் என்பதை எதிர்த்துப் போராடி னார்கள். ஆனாலும் இந்தி கட்டாயம் என்னும் ஆணையை நீக்காமலேயே ஆச்சாரியார் 1939இல் பதவி விலகினார்.

எந்த ஆச்சாரியார் இந்தியைக் கட்டாயப்பாட மாகத் திணித்தாரோ, அவர்தான் 1939இல் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலும் ஆங்கிலம் வழியாகக் கல்வி அளிக்கப்பட்டதை நீக்கினார். அதாவது 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்புவரை உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் மட்டுமே கற்பிக்கப்பட்டதை அடியோடு நீக்கி, தமிழ்நாட்டில் தமிழ் வழியிலும் தெலுங்கு நாட்டில் தெலுங்கு வழியிலும் மலையாளத்தில் மலையாள வழியிலும் கர்நாடகத்தில் கன்னட வழியிலும் உயர் நிலைப் பள்ளியில் கல்வி கற்பிப்பதைத் தொடங்கி வைத்த பெருமை இராசகோபால ஆச்சாரியாரைச் சேரும். இதுவரையில் இது சரி.

உயர்நிலைப் பள்ளிகளில் 1835இல் தொடங்கப்பட்ட ஆங்கிலம் வழிக் கற்பித்தல் ஒழிந்து, 1939 முதல் அவரவர் தாய்மொழியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைக் கற்பிக்கும் வாய்ப்பு சென்னை மாகாணத்தில் வந்தது.

1956இல் சென்னை மாகாணம் மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சி ஆட்சி 1967 வரையில் நடைபெற்றது. காங்கிரசு ஆட்சி 1937 முதல் 1967 வரையில் தொடர்ந்து இருந்ததாக நாம் கொள்ளலாம். அந்த நெடிய காலத்தில் 11ஆம் வகுப்புக்கு மேற்பட்ட கல்லூரிக் கல்வியை எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பிக்கிற கொள்கையை காங்கிரசு ஆட்சி நிறைவேற்றவில்லை. அதாவது தமிழ்நாட்டில் பட்ட வகுப்பு, பட்டமேல் வகுப்பு, மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை முதலான தொழில் படிப்புகள் தமிழ்வழியில் கற்பிக்க மாற்றப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் செய்யாதது மிகப்பெரிய வஞ்சகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

காங்கிரசு ஆட்சிக் காலத்தில் பட்ட வகுப்புகளில் வணிகவியல், வரலாறு, கணிதம், சமூகவியல் முதலான கலைப் பாடங்களை தமிழில் கற்பிக்கின்ற பணிகள் செய்யப்பட்டன. ஆனால், அறிவியல் துறையான மருத்துவப் படிப்பிலோ மற்ற தொழிற் படிப்புகளிலோ தமிழில் கற்பிக்கிற ஏற்பாட்டைச் செய்யவில்லை. இது உறுதி.

அடுத்து 6.3.1967 முதல் 28.2.2019 முடிய (52 ஆண்டுகளாக) ஆள்கிற திராவிடக் கட்சிகள் என்ன செய்தன. நீண்டநாள் கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் நலமாக நம்முடன் இருக்கிறார். கலைஞர் மு.கருணாநிதி 7.8.2018இல் மறைந்தார். இவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் எல்லாத் துறைகளின் கல்வியையும் தமிழ்வழியில் கற்பிக்க ஏன் முயற்சிக்கவில்லை? இது தமிழர்களுக்குத் திராவிடக் கட்சிகள் இழைத்த அநீதி அல்லவா? இது மட்டுமல்ல.

இந்தியாவில் எந்த மொழிக்காரரும் தன் சொந் தத் தாய்மொழியில் மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை முதலான உயர்படிப்புகளில் 2019 வரையில் கற்க வாய்ப்பு உண்டாக்கப்படவில்லை. அதனால்தான் இந்தியாவில் எந்த அறிவியல் துறையை எடுத்தாலும் வெளிநாட்டைச் சார்ந்தே நிற்க வேண்டியுள்ளது.

ஒரு இந்தியன், ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்கா, செர்மனி, இரஷ்யா, சீனா முதலான அயல்நாடுகளுக்குச் செல்கிறான். மேலே சொன்ன எந்த அயல்நாட்டுக்குப் போனாலும் அந்தந்த நாட்டின் தாய்மொழியைத்தான் அவன் ஓராண்டுக்குக் கற்க வேண்டும். அதன் பிறகுதான் உரிய பாடங்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழி வழியில் படிக்க வேண்டும்.  இதன் பொருள் என்ன?

இந்தியாவை 1946 முதல் ஆட்சி செய்த மெத்தப் படித்த பண்டித நேரு, காசியில் படித்த லால் பகதூர் சாஸ்திரி, இங்கிலாந்தில் படித்த இந்திராகாந்தி, டூன் பள்ளியில் படித்த இராஜீவ் காந்தி, பன்மொழி கற்ற பி.வி.நரசிம்மராவ், பொருளாதார நிபுணர் டாக்டர் மன்மோகன் சிங் ஆகிய இத்தனை காங்கிரசுப் பிரதமர் களுக்கும் இது புரியாமல் போனது ஏன்?

ஜனதா கட்சியைச் சேர்ந்த மொரார்ஜி தேசாய், சரண்சிங், வி.பி.சிங், பா.ச.க.வைச் சேர்ந்த வாஜ்பாய், நரேந்திரமோடி ஆகிய பிரதமர்களுக்கும் இது புரியாமல் போனது ஏன்?

அதேபோல் தமிழகத்தை ஆண்ட கு.காமராசர், மு.பக்தவத்சலம், அறிஞர் சி.என்.அண்ணாதுரை, கலைஞர் மு.கருணாநிதி, நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய திராவிடக் கட்சித் தலைவர்களுக்கு இதில் பொறுப்பில்லையா?

நாம் இவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஓரணியில் திரண்டு முதலில் ஆங்கில வழிக்கல்வியை எதிர்க்க வேண்டும். இரண்டாவதாக இந்தியை விருப்பப் பாடமாகவோ கட்டாயப் பாடமாகவோ ஆட்சிமொழியாகவோ வரப் போவதை எதிர்த்துப் போராட வேண்டும்.

மூன்றாவதாக பாலர் வகுப்பு முதல் பல்கலைக் கழகப் படிப்பு வரையில் தாய்மொழியான தமிழ் வழியில் மட்டுமே கற்பிக்கப்பட இந்தத் தலை முறையில் வழி காண வேண்டும்.

இந்தியாவிலும், தமிழகத்திலும் எல்லா மக்களும் 21.2.2019 வியாழன் அன்று “உலகத் தாய் மொழிநாள்” கொண்டாடினோம். இது வெறும் சடங்காக, இனியும் இருக்கக் கூடாது.