தற்போதைய கணக்குப்படி உலக மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டிவிட்டது. இவர்களுள் நூறு கோடிக்கும் மேலானோர் வறுமையின் பிடியி லுள்ளனர். அதாவது எழுவருள் ஒருவர் - 15 விழுக் காட்டினரின் நிலை இதுதான். பண்பாட்டின் உச்சத் தைத் தொட்டுவிட்டது உலக சமூகம் எனப் பீற்றிக் கொள்ளும் வளர்ந்த முதலாளிய நாடுகள் உள்ள உலகத்தின் அவலம் இது. இங்குதான் உலகின் மொத்தச் சொத்துடைமை மதிப்பில் 50 விழுக்காட்டிற்கும் மேல் வெறும் 100 பேர்களின் உடைமையாக இருக்கின்றது. 1990களின் தொடக்கத்தில் வறுமை, பட்டினியால் மடிவோரை மீட்டு இக்கொடுமையைக் குறைக்க வேண்டுமென உலகளவில் அய்.நா. மாநாடு நடத்தப் பெற்றது. அதில் கலந்துகொண்ட கியூபாவின் அன்றைய மக்கள் தலைவர் பிடல் கேசுட்ரோ மாநாட்டு ஏற்பாட்டாளர்களை நோக்கி அறைகூவல் விடுத்தார். பட்டினிச் சாவை முற்றிலும் ஒழிப்போம், ஒரு கால வரைக்குள் என்று கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத வர்களாக உள்ளோமே என்று எள்ளி நகையாடினார். அவருள் பொங்கிய மாந்தப் பற்று, மக்கள்நேயம் தோய்ந்த இக்கூற்று வளம் கொழித்து, செழித்து வாழும் வளர்ந்த நாடுகளின் சுரண்டும் வல்லாண் மையைக் கடுமையாகச் சாடுவதாக அமைந்தது.

வள்ளுவம் சொல்லும் “உள்ளுவதெல்லாம் உயர் வுள்ளல்” எனும் உயர் நெறியை உரைப்பதாக அவர் சூளுரைத்தார். “இது என்ன பட்டினிச் சாவைக் குறைப்பது. இதிலுமா உங்களின் குறுகிய உள்ளம் கொண்ட கோணல் நெறி, பட்டினிச் சாவை முற்றிலும் ஒழிப்போம் என்ற எல்லையை எட்டுவோம் என்ற உயர்நெறித் திட்டத்தை இலக்காகக் கொள்வோம். அதை நோக்கிப் பயணிப்போம்.” வல்லரசுகளெல் லாம் அவரின் அறைகூவலைக் கேட்டு வெட்கி நாணி நின்றன. வெறும் ஒரு கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒரு சிறிய கியூபா நாட்டின் மக்கள் தலைவ ரான அம்மாமனிதரின் திண்மை இவ்வாறான சம்மட்டி அடி அறைகூவலை உலகுக்குக் குறிப்பாக வளம் கொழுத்த நாடுகளுக்குக் கொடுக்க முடிந்தது. உலக மாந்தர் அனைவரின் வளத்துக்காக இதுபோன்ற உயர் குறிக்கோள் முன்வைக்கப்பட்டது போல் சாதி வெறியை ஒழிப்போம் என்ற குறுகிய கால இலக்கின்றி சாதியை ஒழிப்போம், மதநல்லிணக்கம் காண்போம் என்பதிலிருந்து மதங்களை ஒழிப்போம், உலக மக்கள் ஒன்றிணைவோம் என்பன போன்ற இலக்கினை குறிக்கோளாகக் கொள்வோம். இதே தன்மையில் அறுபது அகவை அடைந்தோர் அனைவரும் அரசு வாழ்வூதியம் பெறச் செய்வோம். மதிப்புடன் வாழ வைப்போம். எப்படி என்பதைக் கீழே காண்போம். இருப்பை எழுதுகிறேன். எண்ணிப்பார்க்க.

நாட்டின் அரசமைப்புச் சட்டம், 21ஆம் விதி எந்த ஒரு மனிதனின் உயிர் வாழ்வையும், அவரின் தனிப் பட்ட விடுதலை உணர்வையும் மறுக்கக்கூடாது என அடிப்படை உரிமையாக விதித்துள்ளது. ஒரு மனித னின் வாழ்வு என்பது அவர் வெறும் உயிருடன் பிழைத் திருப்பது என்பது அல்ல. அவர் தன்மானத்துடனும், தன் மதிப்புடனும் வாழ்வதைக் கட்டாயம் உறுதிசெய்ய வேண்டுமென்றுதான் பொருள் என்பதை பல நேரங் களில் உச்சநீதிமன்றம் கடுமையாக வலியுறுத்திச் சொல்லிவருகிறது. இவ்வகையில் ஒவ்வொருவருக்கும் சரியான போதுமான உணவு, கல்வி, உறைவிடம், மருத்துவம் கிடைக்கப் பெற்றால்தான் நன்மதிப்புடன் வாழமுடியும். இவற்றையெல்லாம் வெறும் பிச்சையாக அரசு கொடுக்க முன்வந்தாலும், அது உண்மையில் மக்கள் தன்மானத்தைப் பறிப்பதற்கு ஒப்பாகும் என்பதால், அவர்களுக்குப் போதிய வருவாய் ஈட்டும் வகையில் தன்மானத்துடன் கூடிய நல்ல வேலை செய்யும் வாய்ப்பை வழங்குவதற்கு அரசு உறுதி செய்திடல் வேண்டும். அப்போதுதான் அவர் முழுத் தன்னுரிமை பெற்று சுதந்தரமாகவும் தன்மானத் துடன் வாழும் தகுதி படைத்தவராகக் கருதப்படுவார்.

இவ்வளவு முதன்மை வாய்ந்த சிறப்புடைய தன்மை வாய்ந்தது அரசமைப்புச் சட்ட விதி 21 என்பதை இந்நாட்டில் நாட்டை ஆள்வோர் உட்பட்ட அரசியல் பிழைப்பாளிகள், அரசு பிற அலுவலகங்களிலுள்ளோர், படித்தோர், கல்வியாளர்கள், மருத்துவர்கள், பொறிஞர் கள், ஏன் நீதிபதிகள் உள்ளிட்ட வழக்குரைஞர்கள், இவர்களுள் எவ்வளவு பேர் உணர்ந்திருப்பார்கள் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக இருக்கும் போது படிப்பறிவே மறுக்கப்பட்டவர்களாக உள்ள 30 கோடிப் பேர்களும் அரைகுறை படிப்பாளிகளாக உள்ள 30-40 கோடிப் பேரும், இன்னும் படிப்பிருந்தும் ஆங்கிலப் புரிதல்லாதவர்களாக (அரசமைப்புச் சட்டம், சட்டங்கள் இன்னும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டும் தான் அங்கீகரிக்கப்பட்டுள்ள தன்மையில் இருக் கின்றன - அரசமைப்புச் சட்ட 8ஆம் அட்டவணையில் சொல்லப்பட்ட வட்டார மொழிகளாக உள்ள 23 மொழிகளிலும் அரசால் முறையாக அங்கீகரிக்கப்படாத நிலைதான் இன்னும் நீடிக்கிறது என்பது ஒரு பேர வலம், இழிவு) உள்ளவர்களும் மேற்சொன்ன தன் மையில் உணர்ந்துகொள்ளக் கூடியவர்களாக இல்லை எனக் கொள்ளலாம்.

இந்தப் பின்னணியில் நாட்டில் 30-35 கோடி மக்களை வறுமையில் வைத்துக் கொள்வதற்கு இந்த நாட்டை ஆளும் நடுவண், மாநில அரசுகள் சற்றும் கவலையுடன் கணக்கிலோ கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்பதுதான் இழிவான, கேடான இருப்பு நிலை. இவர்கள் வாழ்வு மறுக்கப்பட்டவர்களாக ஏதோ பிழைத்துக் கொண்டி ருப்பவர்களாக வைக்கப்பட்டுள்ளவர்கள். இன்னும் 30 கோடிப் பேருக்கு மேல் வேலை மறுக்கப்பட்டவர்களாக ஈனச் சம்பளம்/ஊதியம் பெறுபவர்களாக வைக்கப்பட்டு அவர்களும் ஏதோ வாழ்ந்து கொண்டோ, பிழைத்துக் கொண்டோ இருக்கிறார்கள். இவர்களுள் யாரறிவார் சட்டத்தை.

அரசமைப்புச் சட்டத்தை அதிலும் வாழ்வுரிமை தன்னுரிமை ((Personal Liberty) வழங்கும் விதி 21ஐ இவர்களுக்குத் தன்உரிமையையும், தன்மான வாழ்வையும் மறுத்துத் தன்மதிப்பற்றவர்களாக வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக அரசுகள் இலவச உணவு, இலவச உணவுப் பொருள்கள், ஆடைகள். சலுகை விலையில் உணவுப் பொருள்கள் என்றெல்லாம் போக்குக்காட்டிவிட்டு அவர்களை ஒரு வகையான போதையில் - நாடெல்லாம் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களும்கூட தட்டுப்பாடற்று தாராளமாகப் பெற்றுக் கொள்ளும் வகையில் சாராயக் கடைகள் நீக்கமற பரவி, விரவி (தமிழ்நாட்டு அரசால்) கொஞ்ச மும் மானமற்றத் தன்மையில் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கல்வியும், மருத்துவமும் கடைச்சரக் காய் வணிகப் பொருளாய்த் தனியாரின் கையில் எதிர்மறையாக ஆழ்த்தி வைத்துள்ளன என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது.

மேலும் இந்நிலை நீடித்து நிலைத்துத் தொடர்ந்து கொண்டிருப்பதற்குக் கல்வியில் இவை பற்றிய உள்ளீடு ஏதுமில்லாமல் இவ்வரசுகளும் பல்கலைக்கழகங்களும் கருத்துடன் கவனித்துக் கொள்கின்றன என்பதுடன் ஆயிரமாண்டுகளுக்கு மேலாக இங்கு நிலவும் வருணாசிரம சமூக அமைப்பு நிலை இவர்களின் மனத்தில் உரமிட்டு உறைய வைக்கப் பட்டுவிட்டதும் மானமிழந்து வாழ்வதை மனங்கொள் ளாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் என்றெண்ண வேண்டியுள்ளது. தன்மானம் இல்லாது இழிவாக வாழ்வதை வாழ்நெறி என்றுதானே வருணாசிரம இந்து மதம் புகட்டுகின்றது. அதைக் காந்தி முதற் கொண்டு கட்டிக்காத்திட வேண்டுமென்று சொல்லிச் சென்றுவிட்டார் என்பது இங்குள்ள ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கும்பலுக்கும், அது போன்றேயுள்ள பெரும் பாலான அரசியல் கழிசடைகளுக்கும் ஏழ்மையை எளியோர் மேல் ஏற்றி அவர்களை அடிமையாக, இழி வாழ்வில் இன்பம் கொள்ளலாமென்ற எண்ணத்தை நிலைக்க வைத்திட ஏதுவாகவல்லவோ போய்விட்டது.

இதில் குறிப்பாக அறுபது அகவை மிகுந்த முதியோரின் வாழ்க்கை நிலையைச் சற்று பார்க்கலாம். நாட்டில் இவர்கள் 10 விழுக்காட்டுக்குள்தான் இருப்பர். அதன்படி 5-6 கோடி பேருக்குள்தான் இருப்பர். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை 50-55 இலக்கம் பேராகத் தான் இருப்பர். இவர்களுள் ஓய்வூதியம் பெற்றுவரும் அரசுப் பணியாற்றியோர், பிற நிறுவனங்களில் பணிபுரிந்தோர் என 20-25 இலக்கம் பேர் இருக்கக் கூடும். மீதியுள்ளோர் 25-30 இலக்கம் பேர்தான்.

மேலே கணக்கிடப்பட்ட 30 இலக்கம் பேர்களுள் பலர் முதுமை காரணமாகவும், அவர்களின் பிள்ளை களின் புறக்கணிப்பாலும் அவர்களின் பிழைப்பு நிலை மிகவும் இரங்கத்தக்கதாகவும், இழிவுக்குள்ளாக்கப் பட்டதாகவும் இருந்து வருவது நாட்டுக்குப் பெருத்த அவமானம் என்பதை உணர வேண்டும். அவர்கள் இந்நிலைக்குத் தள்ளப்பட்டதிற்கு அவர்கள் இழைத்த கொடுஞ் செயல்கள் என்னென்ன என்பதைப் பட்டிய லிடுவோம்.

*             சிறு உழவராக, உழவுத்தொழில் கூலியாகத் தம் அரும் உழைப்பை ஈந்து விளைபொருள்களை ஈட்டி 125 கோடி மக்களுக்கு உணவிட்டவர்கள்.

*             மானமுடன் வாழ துணிகளை ஆடைகளை உற்பத்தி செய்பவராக இருந்த நெசவாளிகள், நெசவுத் தொழிலாளிகள்.

*             நாட்டில் இப்போதுள்ள நீர்வளத்தைத் தக்க வைப்பதற்குப் பலப்பல அணைகளை அமைத்திட அயராது உழைப்பை ஈந்தோர்.

*             அடிப்படைத் தேவையான வீடுகள், பள்ளிகள், ஆலைகள், தொழிலகங்கள் என இவற்றிற்கான கட்டடங்கள் அமைக்க தம் கடும் உழைப்பைத் தந்தோர்.

*             மக்கள் அடிப்படைத் தேவைக்கான இன்னும் பலப்பல பொருள் உற்பத்திக்கு உற்ற உழைப்பை அளித்தோர்.

*             சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதற்கும் துப்புர வுப் பணிகள் மேற்கொண்டோர்.

*             நாட்டில் சாலைப் போக்குவரத்து, தொடர்வண்டி அமைத்தோர் போக்குவரத்துக்குப் பாதைகள் அமைத்தோர்.

*             இன்னும் அளவிலா, கணக்கிட இயலாப் பல்வேறு பணிகளுக்குத் தம் உழைப்பைச் செலுத்தி நாட்டி லுள்ள ஏனைய செல்வங்களையெல்லாம் உரு வாக்கியோர். இவர்களின் முதிய அகவை வாழ்க் கை கேள்விக்குறியாக வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சற்று ஒப்புமைக்காக ஓய்வூதியம் பெற்று வருவோரின் பணிக்காலப் பங்களிப்பை நினைவுகூர வேண்டியுள்ளது. இவர்கள் போன்றோர் மானமுடனும் தன்மதிப்பிடனும் முதியகாலத்தில் வாழ்க்கையை நடத்திட வேண்டும் என்பதற்காகவும், நாட்டில் செல் வம் சட்டப்படியாகக் கொள்ளை கொள்வதை நியாயப் படுத்தும் வகையில் நாட்டைக் குடியேற்ற நாடாக்கி ஆளவந்த ஆங்கிலேயர்கள் பணிக்காலத்தில் நாட்டின் செல்வத்தைப் பல வழிகளில் கொள்ளை கொண்டது போகப் பணிநிறைவுக்குப் பின்னும் தொடர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம்தான் ஓய்வூதியம் என்று நாம் சொல்லவில்லை. இந்நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தோம் எனப் பீற்றிக் கொள்ளும் காங்கிரசுக் கட்சி விடுதலை பெறும் காலம் வரையில் சொல்லியவை மட்டுமல்ல; இத்திட்டத்தை நாடு விடுதலையடைந் ததும் ஒழிப்போம் எனவும் பேசிவந்தது. இதனை அப்போதைய பார்ப்பனக் காங்கிரசுக் கட்சி சொல்லி வந்ததைக் கல்கி தன் கதையின் பார்ப்பனப் பாத்திரத் தின் வாயிலாகத் தெரிவிக்கின்றார். “ஏய், புள்ளாண்ட எங்க போறான் தெரியுமா? விடுதலை பெற்றதும் ஓய்வூதியத்தை ஒழிப்போம் எனச் சொல்லிடும் காங்கிர சுக் கட்சி கூட்டத்திற்குப் போறாண்டி” எனத் தன் மனைவியிடம் சொல்வதாக அக்கதையில் இக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

சரி வாங்கிக் கொள்ளட்டும். விடுதலை பெற்ற பின்னும் இதை நீட்டித்துத் தங்களைக் காப்பாற்றிக் கொண்ட பார்ப்பனர்களை அடியொற்றி அவர்கள் வழியில் பணிகள் மேற்கொண்ட உழைப்புச் சாதி மக்களும் அதை நத்தியே தக்கவைத்துக் கொண்டனர். அப்படியென்ன அவர்கள் ஆற்றிய அரசுப் பணிகள் வெறும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டவையா? இல்லை. அதற்குப் பெரும் தொகையை சம்பளம் என்ற பெயரில் ஈட்டிக் (திருடிக்) கொண்டனர். எவ்வாறு?

*             அனைத்திந்தியப் பணியிலுள்ளோர் நாளொன் றுக்கு ரூ.4000, ரூ.5000-க்கும் மேலாகத் திங் களுக்கு ரூ.1.5 இலக்கம் எனச் சம்பளம் பெற்றுக் கொள்கின்றனர்.

*             இத்தன்மையினரே உயர்நீதித் துறையிலுள்ள நீதியாளர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்கள்.

*             இவைபோன்றே அரசு பங்கேற்கும் பல நிறு வனங்களில் பணிபுரியும் உயர் அலுவலர்கள்.

*             நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டோர் என உயர் பதவியிலுள்ளோர்.

இவர்கள் பெரும் சம்பளம் பெற்றனர் என்பதன்றி இவர்களுக்குக் குறிப்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கும், அவர்களைப் போன்றோருக்கும் கணக்கிலடங்கா படிகள். இன்னும் பெருமதிப்புடையதுமான ஏந்துகள், வசதிகள், பெரும் வீடுகள், அவற்றைக் காத்திடக் காவலாளிகள், காவல் துறையினர், உதவியாளர்கள், உழைப் பாளிகள், மகிழுந்துகள் (அதற்கான ஓட்டுநர்கள் சம் பளம் உள்ளடக்கியது. பணிகளுக்கன்றிச் சொந்தப் பயன்பாட்டுக்கும்தான்). இவையெல்லாம் நாட்டைக் குடியேற்ற நாடாக வைத்துச் சம்பளம் என்ற பெயரில் வெகுமக்களைச் சுரண்டிக் கொள்ளையடித்த ஆங்கிலே யர்களுக்குச் சரி என வாதிடலாம். ஆனால் நாடு விடு தலை அடைந்ததும், அந்நியக் கொள்ளையர்களின் வழியை அச்சுப் பிறழாமல் உள்நாட்டுக் கொள்ளை யர்கள் கொள்ளை கொள்வது தொடர்வது என்றால் அதற்கெதற்கு நாட்டுக்கு விடுதலை. அதன் அடிப் படைக் கூறுயென்னவெனில், மனுநீதிப்படி சூத்திர உழைப்புச்சாதி உயர்சாதியினருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பது நியதி என்ற கோட்பாட்டை கடை பிடிப்பது என்றாகிறது. இவர்களைப் போன்று மேலே சொன்ன பல்வகை உழைப்பைத் தந்து நாட்டின் செல்வங்களை உருவாக்கியவர்களுக்கு அதே அளவில் இல்லாவிட்டாலும், இன்னும் ஈனச் சம்பளம் - இன் னும் திங்கள் சம்பளம் சில ஆயிரங்கள் மட்டுமே என்ற நிலை பல இலக்கம் பணியாளர்களுக்குத் தரப்பட்டு இந்து மதத்தின் படிநிலைச் சமூக அமைப்பு முறை அரசு, பிற பணிகளிலும் கடைபிடிக்கப்படுவதைக் கடுகளவேனும் உணர்வோ, கவலையோ கொள்ளா மல் தன்மானமில்லாமல் பிழைத்துக் கொண்டிருப்பது அவமானம்.

இன்னும் இவர்களுக்குக் கணினிகள், தொலைக் காட்சிப் பெட்டிகள், இன்னும் தகவல் தொழில்நுட்பத் துணைக் கருவிகள் எனப் பல இலக்க ரூபாய் மதிப்பில் (இவை யாவும் இவர்களின் பணிக்கு உறுதுணை யாகுமென்ற நம்பிக்கை - நடப்பில் கேளிக்கைக் காட்சி களையும், பணித் தன்மைக்குப் பொருந்தாத பொரு ளற்ற காட்சிகள், திரைப்படங்கள், தொடர்கள், விளை யாட்டுப் போட்டிக் காட்சிகள் என்பதற்காக மட்டுமே பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வருகின் றன). இவ்வாறெல்லாம் பணிக்காலத்தில் பெரும் பயன் களைப் பெற்றுவிட்டுப் பணிநிறைவுக்குப் பின்னும் அவர்கள் தன் மதிப்பு, வாழ்வு தொடரவேண்டுமென் பதற்காக ஓய்வூதியமாக ரூ.75 ஆயிரம் என்ற அள வில்கூட பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். சரி. தம் போன்று நாட்டின் உற்பத்தி உழைப்புச் சக்தியாகத் திகழ்ந்த அறுபது அகவை அடைந்த அனைத்து உழைப் பாளி மக்களுக்கும் பயன்கிட்ட வேண்டாமா? முற்றும் உடைமையற்றோர், நாதியற்றோர், புறக்கணிக்கப்பட் டோர் என ஒரு சிலருக்கு மட்டும் வாழ்வுறுதி ஊதியமாக ரூ.500/-, ரூ.1000/- ஒன்று கொடுத்தால் தான் போதுமா?

ஆனால், இவற்றில் மாற்றம் தேவை. அதாவது தாழ்நிலை ஊதி யம் பெறுபவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் அளிக் கப்பட வேண்டுமென்ற நிலை ஏற்பட வேண்டும். இவர்களுக்கெல்லாம் இவ்வாய்ப்புக் கிட்டியமைக்குக் காரணம் இவர்கள் அமைப்புசார் பணிகளில் இருந்த வர்கள். இவர்கள் போராடும் வலிமை பெற்ற கூட்டத் தினராக அமைந்துவிட்டனர் என்பதேயன்றி, வேறு நியாயமான காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், நாம் மேற்சொன்ன, தொழிலாளி, பாட்டாளி மக்கள் அமைப்புசாராப் பணிமேற்கொண்டவர்களாக ஈனச் சம்பளம் பெற்றவர்களாகவும் கூட்டமாக அணி திரண்டு போராடும் திறன்பெற வாய்ப்பற்றவர்களாக வைக்கப்பட்டுவிட்டனர் என்பதுதான் அவர்கள் 60 அகவைக்குமேல் ஈனப் பிழைப்புக்கு ஆளாக்கப்பட்டு இன்னலுற்று வருகின்றனர். இதை மாற்றிட வேண்டும், ஓரளவுக்கேனும்.

நாம் கணக்கிட்டவாறு இவர்கள் 30 இலக்கம் பேர் என்ற அளவுக்கு மிகாமலிருப்பர். இவர்கள் வாழ்வூதி யம் பெறக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரே ஒரு தகுதி 60 அகவை என்பது மட்டும்தான். வேறு ஏதும் தேவையில்லை. இதனால் உரியோருக்குக் கிடைப் பதில் தடையோ இடையூறோ இல்லாதொழியும் என்பது தான் அடிப்படை. இருப்பினும் இதனால் பெரும் வசதி படைத்தோருள் சிலரும் இப்பலனை அடைய நத்துவர். அது இழிவே எனத் தள்ளிவிட்டு அதைப் பொருட்படுத்தாது விட்டுவிடுவது தான் சிறப்பு.

ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.100 என்ற அளவில் திங்களுக்கு ரூ.3000 என்று கணக்கிட்டால், ரூபாய் ஒரு இலக்கம் கோடிக்கு மேல் நிதி வரவு-செலவு செய்யும் தமிழக அரசுக்கு இதற்காக அதாவது முதியோரின் அடிப்படை நலனுக்காக வெறும் ரூ.900 கோடி மட்டுமே செலவிட முன்வருவது ஒரு பொருட்டே இல்லை என்றுதான் கொள்ள வேண்டும். இதன் பயன் பண்பு அளவு சிறப்புமிக்கது. அதாவது மனி தனின் - முதியோரின் மாண்பை, மதிப்பை, தன்மான வாழ்வை ஓரளவுக்கு உறுதி செய்வதாக அமைப்பதே அரசுக்குச் சிறப்பாகும்.

அதற்கான நிதி ஆதாரத்தை எளிதில் அடையாளம் காணமுடியும். வீண் செலவுகளை வெட்டினாலே போதுமானதாகும்.

*             அரசுத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவது அவற் றை பெறுவோரின் வாழ்வை வளப்படுத்துவதாக அமையவில்லை. அவர்கள் ஈட்டிவரும் குறை வான வருவாயையும் பாதிக்கும் வகையில் அவர் களைத் திங்கள் தோறும் தொடர் செலவினத்தை ஏறக்குறைய ரூ.100 - ரூ.250 என பெருக்குவ தாக அமைவதுடன் அவர்களின் பெரும் நேரத் தைக் கொள்ளைக் கொள்ளும் கருவியாக அமைந்து சமூக உறவுகளை வெறுமையாக்கிவிடும். வாழ்க் கைத் தரத்தை உயர்த்தப் பயன்படாது என்பது டன் அவர்களுக்கு வீண் செலவினத்தை ஏற் படுத்துகிறது. இதனால் அரசுக்கு ஏறத்தாழ ரூ.3000 கோடிக்குமேல் செலவாகும்.

*             சமையல் எரிவாயு உருளை இணைப்பு என ஒரு கோடி குடும்பத்திற்கு எனக் கணக்கிட்டுப் பல ஆயி ரம் கோடி ரூபாயை அரசு செலவு செய்து அம் மக்களுக்குத் திங்கள்தோறும் தொடர் செலவாக ரூ.400 என்றாக்கிவிட்டது. இம்மக்கள் குறிப்பாக உழவர் பெருமக்கள் இயற்கையாகவே கிட்டும் வேளாண் கழிவுகளை எரிபொருளாக்கிக் கொண் டிருந்ததை மாற்றி உருளைக்காகச் செலவு செய்வ துடன் அலையவும் விட்டுவிட்டனர்.

*             மடிக்கணினி 10 இலக்கத்திற்கும் மேற்பட்ட மேனி லைப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தரப் படும் திட்டம், ஒன்றின் விலை ரூ.15,000 என்று கணக்கிட்டாலே, அதற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்படும். இவற்றைப் பயன்படுத்து வதற்கான பயிற்சி, அதைப் பாதுகாக்கும் முறை கள் ஏதுமறியா மாணவர்களிடம் கொடுப்பது முற்றி லும் வீண் செலவாக மட்டும் முடியும். இதையும் கல்விக்கு என்று பயன்படுத்துவது என்று சொல்லப் படாமலும் அவ்வகையில் அவை பயன் அடை வதே இல்லை என்பதுடன் தவறான வழிகளைக் கடைபிடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பதுதான் உண்மை நிலை. மேலும் பயன்படுத் தத் தெரியாமையால் அவை முழுவதுமாக பழுத டைந்து பயனற்ற டப்பாகளாகிவிடும். எனவே இது கைவிடப்படவேண்டிய திட்டம். அதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவைத் தவிர்க்கலாம்.

*             அரைப்பான், விசிறி என மின் கருவிகள் வழங்கு வதும் அதன் பயன்பாடு மிகக் குறுகிய கால மாகத்தான் அமைந்துவிடும். அவை விரைவில் பழுதுபட்டு, பயனற்றுப் போவதன்றி எளிய மக்களை அதற்காகப் பெரும் செலவை ஏற்படுத்துவதாகி விடும்.

நல் வருவாய் பெறும் வகையிலான நல்ல வேலை கள் செய்பவர்களாக மிகவும் குறைவான பயனாளிகளே இருப்பர் என்பதால், பெரும் பகுதிப் பயனாளிகளுக்கு இவை அவர்களின் ஈன வருமானத்தைக் கொள்ளை கொள்வதாக அமைந்துவிடும்.

இவ்வாறான வீண் திட்டங்களையெல்லாம் மறு சீராய்வுக்கு உட்படுத்தி இதனால் ஏற்படும் பல பத்தா யிரம் கோடி ரூபாய் விரயமாவதைத் தவிர்த்து நற் பயன்தரத்தக்க வகையில் முதியோரின் வாழ்வை ஒரு பொருளுள்ள தன்மான மிக்க தன்மதிப்புடன் கூடிய குடிமக்களாக உயர்த்துவதற்குப் பயன்படுத்துவது நல்லரசின் பண்பாகும்.

மேலும் இதன் நல் பக்கவிளைவாக அரசுக்குப் பெருமளவு செலவு குறையும். இதனால் பெறப்படும் மிகை நிதியைக் கொண்டு அரசு நடத்தும் சாராயக் கடைகளின்வழி வரும் வருவாயைப் புறந்தள்ளி வெகு மக்களின் வாழ்வைப் பலியாக்கும் அரசுச் சாராயக் கடைகளுக்கு முற்றிலுமாக மூடு விழா நடத்தி அவர்களின் வாழ்வில் கேடு விளைவிக்கும் இக்கொடுமை களைக் களைந்து, நல்வாழ்வுக்கு வழிகாட்டலாம்.

இதனால் வரும் நிதியிழப்பை ஈடுசெய்வதற்கு நடுவணரசிடமிருந்து வலியுறுத்தி நிதியுதவி பெறலாம். இன்னும் பல வழிகள் அரசுக்குத் தெரியும் என்பது உறுதி. இம்மூடுவிழாவால் அவற்றில் பணிபுரியும் பல பத்தாயிரம் பணியாளர்களில் 99 விழுக்காட்டினர் பட்டப்படிப்புப் பெற்றவர்களாக உள்ளனர். உரிய தரமான பயிற்சி அளித்து அரசுப் பணிகளில் உள்ள பல பத்தாயிரம் பணியிடங்களில் பணியமர்த்திடலாம். இதனால் அப்பணியாளர்கள் சமூகத்திற்கு முற்றிலும் கேடானப் பணியில் இருந்து விடுபட்டவர்களாக மன நிறைவு கொள்வர். அரசும் சமூகத்தை ஓர் இழிபடு குழியில் தள்ளி மாறாத கேடுவிளைவிக்கும் கொடுஞ் செயலிலிருந்து விடுவிப்பதாக நிறைவு கொள்ளலாம்.

கட்சி, அமைப்பு என்று வேறுபாடு கருதாது அனைவரும் ஒருங்கிணைந்து அரசுக்கு நெருக்கடியைத் தந்து அறுபது அகவையினர்க்கு வாழ்வுறுதி ஊதியம் வழங்கிடும் திட்டத்தை விரைவில் அரசு செயல்படுத்திட ஆவனவெல்லாம் செய்வோம்!

Pin It