ஒரு பேராதிக்கத் தலைநகராகப் பல நூறு ஆண்டுகளாகத் தில்லி பல இன மத மக்களை அடக்கி ஆண்டு வருகிறது என்பது வரலாற்று உண்மையாகும். பல படையெடுப்புகள் பல இன மதக்குழுக்களின் போர்களைக் கண்ட ஆதிக்க நகரம் தில்லி. 2600 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் குடியிருக்கும் பகுதியாக இருந்து வந்துள்ளது. தில்லியில் உள்ள சிவபுரியில் கண்டெடுக்கப்பட்ட அசோகர் காலக் கல்வெட்டுகளில் தில்லி 8 சிறிய நகரங்களாக இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. தொமரா என்ற இனக்குழுவினர் எட்டாம் நூற்றாண்டில் தில்லியைக் கைப்பற்றி சில காலம் ஆட்சி புரிந்துள்ளனர். பின்பு 12ஆம் நூற்றாண்டில் பிருதிவிராஜ் சௌகான் என்ற மன்னனை ஆப்கன் நாட்டின் தஜிக் இனத்தைச் சார்ந்த முகமது கோரி தோற்கடித்து தில்லியைக் கைப்பற்றினார். அதன் பிறகு 200 ஆண்டுகள் ஆப்கன் நாட்டிலிருந்து படையெடுத்த பல குழுக்கள் ஆட்சி செய்தன. பாபர் தொடங்கி 300 ஆண்டுகள் மொகலாயர் ஆட்சி நடைபெற்றது. பின்பு ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழும ஆட்சியும் 200 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்தன. 1947ஆம் ஆண்டு முதல் விடுதலைப் பெற்ற இந்தியாவின் மக்களாட்சி-குடியரசு ஆட்சி நடைபெற்றாலும் கடந்த 68 ஆண்டுகால அரசியல் நிகழ்வுகள் மேற்குறிப்பிட்ட பல ஆட்சிகளைவிட முறைப்படுத்தப்பட்ட அதிகாரக் குவியலும் பெரும்பான்மையான மக்களைக் கொடுமையான முறையில் அடக்கி ஆளுகின்ற சட்டங்களையும் கொண்ட உயர்குடி வர்க்கத்தின் மேலாதிக்க ஆட்சி யைத்தான் டெல்லியில் நாம் காண முடிகிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்பு ஆடம்பர ஆடைப்பிரியர் மோடி தலைமையில் பதவியேற்ற பிறகு கோட்சேவிற்குச் சிலை கோல்வால்கருக்கு நினைவுச் சின்னம், இந்துராஷ்டிராவை அமைப்போம் என்ற முழக்கங்களுக்கு இடையே கிறித்தவ இசுலாமிய மக்களை அச்சுறுத்தும் தாக்குதல்கள் போன்ற இந்துப் பாசிசமும் இந்து தில்லிப் பேராதிக்க ஆட்சியோடு இன்று இணைந்து கொண்டுள்ளன.

இந்தச் சூழலில்தான் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமாவைப் பல நூறு கோடி ரூபா செலவில் ஆடம்பரத் திருவிழாவாக நடைபெற்ற குடியரசு நாள் கொண்டாட்டத்திற்கு மோடி அழைத்தார். தில்லி அடிமைகள் அமெரிக்க ஆண்டடைகளைக் கண்டால் மகிழ்ச்சி துள்ளலின் உச்சிக்கே சென்று விடுவார்கள். மாவீரன் அலெக்சாண்டரிடம் போரில் தோற்ற போரஸ் மன்னன் நாட்டைத் திரும்பப் பெற்ற பூரிப்பைவிட மேலோங்கியிருக்கும். எனவேதான் நரேந்திர தாஸ் மோடி, தங்கச் சரிகையால் வேயப்பட்ட கவர்ச்சிமிக்க ரூ.10 லட்சம் மதிப்பு மிக்க ஆடையை அணிந்து கொண்டு மொகலாயப் பேரரசர்களைக் காட்டிலும் ஆடம்பரத்தின் உச்சத்திற்குச் சென்று ஒபாமாவோடு தில்லியில் உலா வந்தார். இளமைப் பருவத்தில் தனது கையில் தேநீர் டப்பாவைச் சுமந்து தெருத் தெருவாகச் சிறு வணிகம் செய்தவருக்கு ஏழை எளிய மக்கள் அளித்த மக்களாட்சிப் பரிசை நன்றியால் மக்களுக்குத் திரும்பச் செலுத்த வேண்டாமா? எனவேதான் மோடி விலைஉயர்ந்த ஆடையை அணிந்தார் என்று சங்பரிவார்கள் சப்பை கட்டலாம். வாழ்க இந்தியக் குடியரசு, சனநாயகம்! அய்தராபாத் இல்லத்தில் விருந்து; பிறகு ஒபாமாவும் மோடியும் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு, அணுசக்தி ஒப்பந்தத்தில் கையொப்பம் எனப் பாசக அரசின் சாதனைப் பட்டியல் களைத் தில்லி ஊடகங்கள் ஓங்கி ஒலித்தன. இறுதி நாளில் ஒரு பொது நிகழ்ச்சியில் மதச்சார்பின்மைக்கு இந்தியா வில் அண்மைக்காலமாக ஆபத்து பெருகி வருகிறது என்று ஓர் அறையைத் தில்லி ஆட்சியாளர்கள் முகத்தில் கொடுத்தார் ஒபாமா. காந்தி இருந்தால் இந்த மதவாதத் தாக்குதல்களைக் கண்டு வருத்தப்படுவார் என்று மீண்டும் மோடி அரசுக்குச் சூடு கொடுத்தார். சிலர் சிரிப்பார் சிலர் அழுவார். நாங்கள் அழுது கொண்டே சிரிக்கின்றோம் என்று இந்தக் கருத்துக்கு மறுப்பு என்ற பெயரில் ராஜ்நாத்சிங்கும் சங்பரிவாரங்களும் அலறின.

ஓபாமா-மோடி சந்திப்பு வித்தைகளைப் பெரிதாகச் சித்தரித்துத் தில்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற ஆணவ மிதமிதப்பில் பாசகவினர் அரசியலில் உலா வந்தனர். ஆனால் தில்லி தலைநகர் மக்கள் ஆண்ட- ஆளுகின்ற காங்கிரசு-பாசக ஏகாதிபத்திய சக்திகளுக்குச் சட்ட மன்றத் தேர்தலில் பெருத்த அடியை வழங்கினர். சும்மாவா? துடைப் பத்தால் அல்லவா தலையைத் தட்டியுள்ளனர். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக இன்றைய தில்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவாலை எதிர்மறையாகச் சித்தரிப்பதில் பாஜகவும் அதன் ஆதரவு ஊடகங்களும் களம் இறங்கின. ஆனால் இதற்கு மாறாக மக்களுக்கு அளிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் துண்டு அறிக்கைகள் ஆக்கபுர்வமாக அமைந்தன. கெஜ்ரிவாலின் தொடர் போராட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்றனர் ஆம் ஆத்மி கட்சியினர்.

கரக்புர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திர பொறியியல் பட்டம் பெற்ற கெஜ்ரிவால் பின்பு 1989ஆம் ஆண்டு டாடா எஃகு தொழிற்சாலையில் பணி சேர்ந்தார். டாடா குழுமத்தில் பணியாற்றிய போதும் ஊழியர்களின் நலனில் பங்கு கொண்டார். அந்நிறு வனத்தின் சமூக நலத்துறையில் இணைந்து ஊழியர் களுக்குப் பணிபுரிய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். டாடா குழுமம் மறுக்கவே அப்பதவி யிலிருந்து விலகினார். சில ஆண்டுகள் கொல்கத்தாவில் தங்கி இந்திய ஆட்சிப் பணித் தேர்விற்குப் பயிற்சி மேற்கொண்டார். அக்காலக்கட்டத்தில் அன்னை தெரசாவைச் சந்தித்தார். அத்தொண்டு நிறுவனத்தில் பங்கு கொண்டு சில பணிகளுக்கு உதவி புரிந்தார். பிறகு நேரு இளைஞர் அமைப்பிலும் வட கிழக்கு மாநிலத்தில் அமைந்துள்ள இராமகிருஷ்ணா தொண்டு நிறுவனத் திலும் சில மாதங்கள் பணிபுரிந்தார்.

இத்தகைய பின்னணியோடுதான் இந்திய வருவாய் பணியில் வெற்றி பெற்று 1995ஆம் ஆண்டு பணி சேர்ந்தார். இத்துறையில் மலிந்து காணப்பட்ட ஊழல்களுக்கு எதிராகக் களம் கண்டார். ஊழலின் ஊற்றாக இருந்த உயர் அலுவலர் வர்க்கம் இதைக் கண்டுப் பொறுக்காமல் பல மாறுதல்களை அவருக்கு அளித்துத் தொல்லைகள் தந்தனர். ஊழலுக்கு எதிராக ஒரு தொடர் போராட்டத்தை நடத்துவதற்கு இன்றைய துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுடன் இணைந்து மாற்றம் (இந்தியில் பிரிதான்) என்ற அமைப்பை உருவாக்கினார். தில்லியில் உள்ள உணவு வழங்கல் பொதுப்பணி குடிநீர் வழங்கல் துறைகளில் காணப்பட்ட ஊழல்களை வெளிக் கொண்டு வந்து எளிய மக்களுக்கு உதவிகள் புரிந்தார்.

பொது மக்கள் தொண்டினை மேற்கொள்வதற்கு 2011ஆம் ஆண்டு அரசுப்பணியிலிருந்து விலகினார். தன்னுடன் பணிபுரிந்த பெண்ணைக் காதலித்துச் சாதி மறுப்புத் திருமணம் செய்தார். இவ்வித ஆக்கப்பூர்வமான பணிகளைக் கருத்தில் கொண்டுதான் 2006ஆம் ஆண்டு மக்சேசே விருதினைப் பிலிப்பைன்சு நாடு கெஜ்ரிவாலுக்கு அறிவித்தது. இப்பரிசுத் தொகையினைப் பொதுமக்களுக்கான ஆய்வு மையம் என்ற அமைப்பிற்குக் கொடுத்துவிட்டார். இவ்வாறு ஊழலுக்கு எதிராகவும் ஏழை மக்களுக்கு ஆதரவாகவும் போராடிக் கொண்டிருந்த காலத்தில் 2011ஆம் ஆண்டில் அன்னா அசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து நடுவண் அரசு தில்லி மாநில அரசுகளுக்கு எதிராகப் போராடினார். 2012இல் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுக் காங்கிரசு ஆதரவுடன் சிறு பான்மை அரசை அமைத்தார். இருப்பினும் காங்கிரசு முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்திற்கு எதிராக ஊழல் வழக்கு களைத் தொடர்ந்தார். இந்த ஊழல் வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில் ஷீலா தீட்சித்தை ஆளுநராகக் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி உட்கார வைத்தார். ஊழலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு உள்ளது என்பதை அறிந்துதான் இந்த நெறி சார்ந்த முடிவை(?) எடுத்து மன்மோகன் சிங்கும் பிராணப் முகர்ஜியும் சனநாயகத்தின் தரத்தைத் தாழ்த்தினர்.

தில்லிப் பள்ளிகள் நடத்திய கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தினார். குடிநீர் மின் கட்டணங்களையும் குறைத்தார். இருப்பினும் அம்பானி செய்த ஊழல்களை வெளிப்படுத்தினார். வழக்குத் தொடர்ந்தார். முற்போக்கான ஊழல் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் விலகினார். முதல்வர் பொறுப்பிலிருந்து விலகியதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோரினார். ஆனால் பாசகவின் தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தில்லியில் தாங்கள் பெற்ற வெற்றியின் செருக்கிலேயே இருந்தனர். கெஜ்ரிவாலின் சாதியைக் குறிப்பிட்டனர். காரணம் 20 விழுக்காடு தில்லிவாழ் பார்ப்பனர் வாக்குகள் தங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும் என்பதற்காக இந்த சாதித் தந்திரத்தைப் பயன்படுத்தினர். 170 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவண் அரசின் அமைச்சர்கள் பிரதமர் மோடி என அனைவரும் களம் இறங்கினர். ஏறக்குறைய திருவரங்கத் தேர்தல் நாடகம் தில்லியில்தான் முதலில் ஒத்திகை பார்க்கப்பட்டது.

மூன்று சட்டமன்ற உறுப்பினர்களைப் பாசகவிற்கு அளித்து அரங்கநாதப்பட்டை நாமத்தை தில்லி மக்கள் போட்டு விட்டார்கள். காங்கிரசுக் கட்சிக்கோ 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் காப்புத் தொகைக்கும் வேட்டு வைத்து அதற்குமேல் ஒரு இடத்தில்கூட வெற்றிதராமல் அவர்களை வெத்துவேட்டாக ஆக்கி விட்டார்கள். வெற்றி பெற்ற கெஜ்ரிவால் சனிக்கிழமை பதவியேற்றுள்ளார். சென்ற ஆண்டு பதவி விலகிய நாளிலேயே பதவி ஏற்றுள்ளார். நாள், நட்சத்திரம் பார்க்கவில்லை. நல்ல தொடக்கம். இருப்பினும் கெஜ்ரிவால் சந்திப்பதற்குப் பல அறைகூவல்கள் உள்ளன. இடஒதுக்கீடு, சாதி மறுப்பு போன்ற முற்போக்குப் பொருளாதார நடவடிக்கை களைக் கெஜ்ரிவால் பின்பற்றவில்லை என்பது அவரின் ஆளுமையில் காணப்படும் பெருங்குறையாகும்.

குறிப்பாகத் தில்லி மாநகருக்கு மாநில உரிமை வழங் கும் இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் 69ஆவது பிரிவு பல மோசமான முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. அச்சட்டத் திருத்தத்தின் கொள்கை அறிவிப்பில் கூட்டாட்சி நடைமுறையைப் பின்பற்றி மாநிலம் வடிவமைப்புச் செய்யப்படுவதாகக் குறிப்பிட பட்டாலும் எல்லா முதன்மையான அதிகாரங்களும் நடுவண் அரசிற்கே அளிக்கப்பட்டுள்ளது. 1969ஆம் ஆண்டு நீதிபதி ராஜமன்னார் 1983ஆம் ஆண்டு சர்க்காரியா குழுக்களின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களின் அதிகார எல்லைகள் தொடர்பான முற்போக்கான கருத்துகளையும் இச்சட்டத் திருத்தத்தில் காணவில்லை. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் 1919ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தில் கடைபிடிக்கப்பட்ட இரட்டை ஆட்சி முறையை ((Dual Rule) அப்படியே எடுத்துக்கொண்டு உள்ளது நடுவண் அரசு. இது ஒரு சட்டத்திருட்டு ((lagiarism of Law) என்றால் அது மிகையாகாது.

இச்சூழலில் கெஜ்ரிவாலின் முழு மாநில உரிமை அளிக்கும் கோரிக்கையை ஏற்று உரிய சட்டத்திருத்தங்களை நடுவண் அரசு மேற்கொள்ளுமா? புதுச்சேரி உட்பட, தில்லி ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் முழுமையான கூட்டாட்சி இயலை ஏற்றுக் கொள்கிற அரசமைப்புச் சட்டத் திருத்தம் மேற்கொண்டால்தான் தில்லி மக்களின் பெரும்பான்மையான தீர்ப்பு பொருள் பொதிந்ததாக அமையும். இதை உணர்ந்து மாநிலக் கட்சி களும் இடதுசாரிக் கட்சிகளும் உண்மையான கூட்டாட்சி இயல் மலர்வதற்கு உறுதுணை புரிய வேண்டும். தில்லி பேரா திக்கத்திற்கு மக்கள் கொடுத்த அடியை ஆக்கப்பூர்வமாக இந்திய அரசியல் தலைமை ஏற்று நல்ல அரசியல் மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்க வேண்டும். செய்வார்களா?

Pin It