உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தக்க முகாந்திரங்கள் உள்ளன

1991-1996ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டு முதலமைச்சராக விளங்கினார், செல்வி செ. செயலலிதா. அந்த அய்ந்தாண்டுகளில் தவறான வழிகளில் பணச் சொத்தும், அசையாச் சொத்தும் தம் வருமானத்துக்கு மீறிய அளவில் குவித்துக் கொண்டார் என்பதும், அவரோடு இருந்த மூவருக்கும் அச்சொத்துக் குவிப்பில் பங்கு இருந்தது என்பதுமே வழக்கு.

அவ்வழக்கைத் தொடுத்தவர் சுப்பிரமணிய சாமி. அவர் அப்போது ஒரு தனிக்கட்சியின் தலைவராக இருந்தார்.

அந்த வழக்கு தமிழகத்தில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் போது விசாரிக்கப்பட்டால், நேர்மையான விசாரணை நடைபெறாது என்பதால், கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது.

அவ்வழக்கில் தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகனும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டார்.

அவ்வழக்கை நடத்தும் பொறுப்பு முழுவதும் கர்நாடக அரசுக்குப் போய்விட்டது.

சிறப்புக் கீழ்நீதிமன்றத்துக்கு நீதிபதியை அமர்த்து வது, வாதியின் சார்பில் வாதாட வழக்குரைஞரை அமர்த்துவது என்கிற அதிகாரம் கர்நாடக அரசுக்கே உண்டு.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்டம்பரில், செயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளி கள் என்றும், ஒவ்வொருவரும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், செயலலிதா 100 கோடி ரூபா தண்டமும் மற்ற மூவரும் தலா 10 கோடி ரூபா தண்டமும் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார். தீர்ப்பு அன்றே அனை வரும் கருநாடகத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

கீழ்நீதிமன்றத்தில் முதலில் பி.வி. ஆச்சாரியா என்பவர் வாதி சார்பில் வழக்காடினார். அவர் அச்சுறுத் தலுக்கு ஆளாகிப் பதவி விலகினார். அவருக்கு மாற்றாக பவானி சிங் வழக்குரைஞராக அமர்த்தப்பட்டார்.

கர்நாடக உயர்நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்ய மறுத்ததால், உச்சநீதிமன்றத்தை நால்வரும் அணுகி, பிணையில் விடுதலை பெற்றனர்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வாதாட பவானி சிங் அமர்த்தப்படுவது எதிர்க்கப்பட்டது. அதை உச்சநீதி மன்றம் விசாரித்து, அவர் நீடித்து வாதாட முடியாது என்று அறிவித்தது.

கருநாடக அரசு மீண்டும் பி.வி. ஆச்சாரியாவை உயர்நீதிமன்றத்தில் வாதாட அமர்த்தியது.

இருதரப்பு வாதங்கள் முடிந்த பின்னர் தீர்ப்புக் கூறும் நாள் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், “தீர்ப்பு மே 12க்குள் வழங்கப் பட வேண்டும் என்றும், அத்துடன் உயர்நீதிபதிக்கு ஓர் அறிவுரையாக, கையூட்டுப் பெறுவது அரித்துத் தின் னும் நச்சுப் போன்றது என்றும்; மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் நீதிபதி எழுத்து வடிவில் உள்ள ஆவணங்களை முழுவதுமாக ஆய்வு செய்ய வேண் டும் என்றும், நீதிபதி தம்முடிவை ஆணித்தரமாக எழுதவேண்டுமென்றும் ((resolutely expressed) இந்தக் குறிப்பிட்ட தன்மையில் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்துக்கு எவரேனும் கூறியிருக் கக் கூடுமோ என்று பிரதிவாதிகள் நெஞ்சில் கவலை கொள்ள நேரிடும் என்றும்” உச்சநீதிமன்றம் குறிப் பிட்டுள்ளது.

இது ஏன் என்பது ஒரு வினா.

இதற்கு உச்சநீதிமன்றம்தான் விடை கூற முடியும். நிற்க.

கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் தம் தீர்ப்பின் தொடக்கத்திலேயே,

1.“இந்தக் குற்றவியல் வழக்கு அரசியல் காழ்ப்புணர் வோடு தொடுக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட் டுள்ளார். இது, இவ்வழக்குப்பற்றி அவர் முற்றூட்டு எண்ணம் (prejudiced view) - தவறான எண்ணம் கொண்டிருந்தார் என்பது ஆகாதா? இது சரியா? இது சரி இல்லை.

2. கீழ்நீதிமன்ற நீதிபதி, சொத்துக் குவிப்புப் பற்றிக் கணக்கிட்டது தவறு என்றும், அவர் குறிப்பிட்டுள் ளது போல், அது ரூபா 53.60 கோடி அல்ல வென்றும், வெறும் 2.82 கோடி ரூபா மட்டுமே என்றும்; 4 குற்றவாளிகளின் ஒத்துக்கொள்ளப்பட்ட - வெளிப்படையான வருமானமான ரூபா 34.76 கோடியைவிட 8.12 விழுக்காடு அளவு மட்டுமே அதிகம் என்றும் உயர்நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

3. மேலே 2-இல் நாம் சொன்ன செய்திக்கு ஆதார மாக, ‘உண்மையான வருமானத்துக்கு அதிகமாக 10 விழுக்காடு கூடுதலான - Excess வருமானம் பெற்றிருந்தால், அது தண்டனைக்கு உரிய குற்றம் ஆகாது’ என்று, 1977இல் கிருஷ்ணானந்த் அக்னி ஹோத்ரி என்பவர் தண்டிக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளதை சட்ட மேதைகள் என்போர் 11-5-2015 அன்றே எடுத்துக் கூறத் தலைப்பட்டனர்.

நாம் கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதியின் பேரில் எந்த மாசையும், உள்நோக்கத்தையும் கற்பிக்கவில்லை.

ஆனால் அவருடைய முடிவு தவறானது என்பதை நாம் உறுதிபடச் சொல்கிறோம்.

இந்தத் தீர்ப்பின் பேரில் உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்திட (1) சுப்பிரமணியசாமிக்கு முழு உரிமை இருக்கிறது. (2) வழக்கைப் பொறுப்பேற்று நடத்திய கருநாடக அரசுக்கும் உரிமை இருக்கிறது. (3) பேராசிரியர் க.அன்பழகன் மேல் முறையீடு செய்ய உரிமை இருக்கிறது.

“எவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ளவர்களை விடவும் மிக உயர்ந்தது, உண்மையான தீர்ப்பை அளிக்கும் நீதிமன்றமே ஆகும்.”