தமிழகத்தில் வாய்கிழியப் பேசும் அரசியல்வாதிகள் நடத்தும் கல்விக் கொள்ளை பினாமி நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. ஏழை மக்களுக்குக் கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளது. வேலியே பயிரை மேய்வது போல் எந்த ஒரு அரசும் அதிரடியாக அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் கைப்பற்றி அரசே நடத்த முன் வரவில்லை. காரணம், பாதிக்கப்படுபவர்கள் பொது மக்கள் என்பதால் எப்படிப்போனால் என்ன என்று கண்டு கொள்ளாமல் உள்ளனர் அரசியல்வாதிகள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்தும் கட்டணத்தைப் பார்த்தால் உழைத்துச் சேமித்த தொகை முழுவதும் கல்விக்கே செலவு செய்ய வேண்டியுள்ளது. பட்ட கடனுக்காகக் கிடைத்த சம்பளத் துக்கு வேலை செய்ய வேண்டியுள்ளது.

மழலையர் பள்ளிகள் (Pre Kg.) ஒரு குழந்தைக்கு ரூ.20,000 முதல் ரூ.1,00,000 வரை கட்டணமாக பில் போடாமல் வசூலிக்கின்றனர். 3 வயது குழந்தைக்கு L.K.G and U.K.G கட்டணமாக ஆண்டுக்கு ரூ.30,000 முதல் ரூ.1,00,000 வரை வசூல் செய்கின்றனர். 5 வயது குழந்தைக்கு முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மொத்தச் செலவாக ரூ.12 இலட்சம் முதல் ரூ.20 இலட்சம் வரை ஆகிறது.

ஒரு வகுப்பில் 40 முதல் 50 மாணவர்கள் உள்ளனர். முதல் வகுப்பு என்றால் 3 முதல் 5 பிரிவுகள் உள்ளன. இப்படிக் கட்டணம் கட்டிப் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்பிக்கப்படுவதில்லை. காரணம், குறைந்த சம்பளத்தில் தரமற்ற ஆசிரியர்களைக் கொண்டு நடத்துவதால் இப்படி நேர்ந்துள்ளது.

பிள்ளைகளுக்குப் பதிலாகப் பெற்றோர்கள் படிக்க வேண்டும். பெற்றோர்களின் எதிர்காலக் கனவுகளைக் கல்விக் கொள்ளையர்கள் தகர்த்துவிடுகின்றனர். தாய்மொழி வழியில் கற்பதுதான் தலைசிறந்த கல்வி. பிறமொழிகளைத் தேவைக்குப் படித்துக் கொள்ளலாம்; திணிக்கக்கூடாது.

சமச்சீர் கல்வி, அனைத்துக் கல்வியும் அரசே ஏற்று நடத்த வேண்டும். தனியாரிடம் கல்வி நிறுவனங்களைக் கொடுத்துள்ள அரசு கையாலாகாத அரசாகும். மாணவர்களுக்குத் தேவையான அளவுக்குக் கணினி வகுப்பு, விளையாட்டு வகுப்பு, பயிற்சிக் கூடங்கள், தரமான ஆசிரியர்கள், போதிய அளவு வகுப்பறைகள், கட்டடங்கள் அரசே கொடுக்க வேண்டும். கொடுக்கத் தவறும் அரசு மக்கள் விரோத அரசேயாகும். வாக்குக் கேட்க வரும் அரசியல்வாதிகளை விரட்டியடியுங்கள்.