வணக்கம்!

சூன் 11ஆம் தேதியோடு எனது புதல்வன் பேரறிவாளனை அரசு சிறையிலடைத்து 27 ஆண்டுகள் முடியப் போகிறது. அவரோடுள்ள ஏனைய அறுவரும் அவ்வாறே!

எங்கள் வாழ்நாளுக்குள் எம் ஒரே புதல்வன் பேரறிவாளன் விடுதலையாகி வருவாரா எனும் அச்சம் மிகுகிறது! ஏன் கொலைக் குற்றம் சுமத்தினார்கள்? ஏன் தண்டித்தார்கள்? ஏன் 27 ஆண்டுகளாகச் சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள் என்று புரியவில்லை!

arpodammal 350ஒப்புதல் வாக்குமூலம் எழுதிய சி.பி.ஐ. அதிகாரி திரு. தியாகராசன், ஐ.பி.எஸ். அவர்கள்தான் தவறாக எழுதி விட்டதாக உச்சநீதிமன்றத்திலேயே முறையிட்டும்,

தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் மேதகு. தாமஸ் அவர்கள், தான் தவறான தீர்ப்பளித்து விட்டதாக வருத்தம் தெரிவித்ததுடன், விடுதலை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்து ஊடகங்கள் வழியேயும், சோனியா அம்மையாருக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாகவும் கருத்தறிவித்த பின்னரும்-அதை உச்சநீதிமன்றமும் நடுவண் அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் செயலலிதா அம்மையார் அவர்கள் விடுதலை செய்யும் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆமோதித்து சட்டப் பேரவையிலேயே நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பியும் நடுவணரசு பாராமுகமாக இருந்து வருகிறது!

தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களும் விடுதலை செய்யக் குரல் கொடுத்தும் கேளாக் காதினராக இருந்து வருகிறது நடுவணரசு! சட்ட நீதிப்படியும் இத்தண்டனை முரணானது - அரசியல் நாகரிகத்தின் படியும் ஞாயமற்றது என்று மக்கள் உணர்ந்து கொண்டதால் பல்வேறு வடிவங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஏழு தமிழர் விடுதலைக்கு முயற்சிக்கலாயினர்!

உச்சநீதிமன்றம் கடந்த 23.01.2018 அன்று நடுவண் அரசு எழுவர் விடுதலை குறித்தான மாநில அரசின் முடிவு குறித்து மூன்று திங்களுக்குள் முடிவு அறிவிக்க உத்தரவிட்ட பின்னரும் காலம் கடத்துகிறது நடுவண் அரசு!

அன்புக்குரியவர்களே!

தாங்கள் ஏழு தமிழர்களுக்காக மகத்தான பணியாற்றியதை நான் மட்டுமல்ல உலகே அறியும். அந்த உழைப்பும் முயற்சியும் விழலுக்கிறைத்த நீராக வீண் தானோ என்றும்; தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் கொச்சைப்படுத்தப்பட்டு விடுமோ என்றும் எண்ணிச் சோர்வடையச் செய்கிறது!

எனக்கு வயது 71; என் துணைவருக்கு 77! நான் மகனை மீட்க முடியாமல் இருப்பதை எண்ணி அழுவதா; எனக்குள்ள நோய்கள் தரும் வலியைத் தாங்க முடியாமல் அழுவதா; என் முதுமையால் அலைந்து திரிய இயலாமையை எண்ணி அழுவதா; இறுதிக் காலத்தில் நோய்களாலும் முதுமையாலும் அல்லல்படும் என் துணைவருக்கு உதவிடாது அவரைப் பிரிந்து இருக்க வேண்டியதை எண்ணி அழுவதா; என்னால் இயலவில்லை! மீண்டும் உங்களை நாட வேண்டியுள்ளமைக்கு வருந்துகிறேன்.

பல்வேறு போராட்டங்கள் உங்களைச் சூழ்ந்து கொண்டுள்ளதை அறிவேன். ஒன்றின்மேல் ஒன்று வந்து முதலாவதை மறக்கடிக்கச் செய்யும் என்பதை அறிவேன்.

நாம் அவ்வாறு மறக்க வேண்டும் என்பதுதான் சூழ்ச்சியின் எதிர்பார்ப்பு, எங்கள் கண்ணீரைத் துடைக்க உங்களைத் தவிர வேறு எவருள்ளார்! விரைந்து தங்கள் கவனத்தை எங்கள் பக்கமும் திருப்பிட வேண்டுகிறேன். விடுதலை செய்வித்து எங்களைக் காத்திட வேண்டுகிறேன். நன்றி!

மிகவும் எதிர்பார்ப்புடன்,

தங்கள் அன்பின்

தி. அற்புதம்