நாடெங்கும் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டம், பெண்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுவரும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான போராட்டம், தமிழ்நாட்டில் தமிழ் மீனவர்களுக்குக் கேடு செய்யும் சிங்கள அரசை எதிர்த்த போராட்டம் ­இப்படியான போராட்டங்களுக்கு நடுவே, இந்தியாவின் பல்வேறு நகரங்களில்முத்தப் போராட்டம்’.

இந்தப் போராட்டம் காதலர் இருவர் தமக்கிடையே நடத்திக் கொள்ளும் முத்தப் போராட்டமாக மட்டும் நடைபெறவில்லை. தாய் குழந்தைக்கு முத்தம் தருவது, முதியோர் இளையோர்க்கு முத்தமிடுவது, ஆணும் ஆணுமாய் இணைந்தும், பெண் மற்றொரு பெண்ணை அனைத்தும் அன்போடு முத்தமிட்டுக் கொள்ளுவது போன்ற பல்வேறு காட்சிகளால் அரங்கேறியுள்ளது.

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதை நாம் அறிவோம். பல்வேறு அல்லல்களில் மக்கள் அலைந்து கொண்டிருக்க, தேவையில்லாமல் அங்கங்கே முளைப்பதேன் இந்த முத்தப் போராட்டங்கள்?

கேரளத்தில் உள்ள நகரம் கோழிக்கோடு. அங்குள்ள விடுதி ஒன்றில், ஒரு விடுமுறை நாளில் இளம் ஆண் களும் பெண்களுமாய்ச் சிலர் தம்முள் இணைந்து ஆடல்பாடல்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடுமென அங்கே நுழைந்தபாரதிய சனதா யுவமோர்ச்சார்என்னும் இந்துத்துவா அமைப்பு ஒன்று அந்த இளம் பெண்களையும் ஆடவரையும் கடுமையாகத் தாக்கி யது. விடுதியில் இருந்த மற்ற பொருள்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த அமைப்பினர்இதுபோன்ற முறையற்ற செயல்களை இனி எங்கும் நடக்க அனு மதிக்கமாட்டோம்என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மகாராட்டிரத்தில் செயல்படும் சிவசேனா அமைப்பும் இதுபோன்ற பாலியல் ஒழுக்கக் கேடுகள் கேரளாவைப் பாழாக்கும் எனத் தன் பங்குக்கு மிரட்டல் விடுத்தது. சிவசேனாவைத் தொடர்ந்து யுவமோர்ச்சா, அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி), பஜ்ரங்தள் போன்ற இந்து அமைப்புகள் மட்டுமல்லாமல், சமூக ஜனநா யகக் கட்சி என்ற முஸ்லீம் அமைப்பு ஒன்றும் மிரட்டல் கள் விடுத்தன. தலிபான் தீவிர அமைப்பு பெண்கல் விக்கு முன்முயற்சி எடுத்த மலாலாவையே தீர்த்துக் கட்ட முயன்றதை நாம் அறிவோம்.

கோழிக்கோட்டில் நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங் களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் திருவனந்த புரம், கொல்கொத்தா, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் முத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பெற்றது.

வெறுமனே காதலர்கள் முத்தமிட்டுக் கொள்ளும் போராட்டமாக மட்டும் இது நடத்தப்படவில்லை. தாய்மார்கள், சகோதரிகள், குழந்தைகள் ஒருவரை ஒருவர் தழுவி அணைத்து முத்தமிட்டுக் கொள்ளும் போராட்டமாகவும் இது நடத்தப்பட்டது. இதற்கு ஆதர வான அமைப்பினர் அன்பின் முத்தத்தால் ஆன சமூகம் (Kiss of Love Community) என்ற பெயரில் புதியதோர் முகநூலையும் தொடங்கிவிட்டனர்.

எந்த ஒரு சமூக மாற்றத்தையும் தீவிரமாக எதிர்ப்பது என்கிற கருத்துடைய மதப்பழமைவாதிகள் தங்களைப் பண்பாட்டுக் காவலர்களாகவும், ஒழுக்கக் காவலர்களாகவும் கருதிக் கொண்டு, சட்டம் ஒழுங்கைத் தம் கைகளில் எடுத்துக் கொள்வதால் நாடெங்கும் இந்த எதிர்வினை கள் எழுகின்றன. பண்பாடு பற்றியும், ஒழுக்கவாதம் குறித்தும் பேசும் இந்த மதவெறியர்கள், தம் முன் னோர்கள் பக்தி என்பதன் பெயரால் எழுதி வைத்துப் போன புராணக் கதைகளை முதலில் படிக்கட்டும். அவற்றில் ஒன்றுகூட அறிவுக்கு ஏற்றதாக, ஒழுக்க உணர்வை ஊட்டுவதாக இல்லை.

பார்வதி குளித்துக் கொண்டிருந்ததை எட்டிப் பார்க்கப் போன ஈசனை, விநாயகன் தட்டிக் கேட்ட தால், அவன் தலையை ஈசன் வெட்டிவிட்டதாய் ஒரு கதை. உடனே விநாயகனுக்கு யானையின் தலை ஒட்டப்படுகிறது. இந்தப் புத்திகெட்ட கதையைப் போற்றிப் புகழ்கிறார் தலைமை அமைச்சர் மோடி. எப்படி? அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவைக் கலை யை நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர் என வியந்து போகிறார் அவர்.

நம் ஊர்க் கோயில்களுக்குப் போனால் அங்குள்ள கோபுரங்களில் வடித்து வைக்கப்பட்டுள்ள சிலைகள் எவ்வளவு அருவருப்பு ஊட்டுபவை என்பதைச் சொல் லத் தேவையில்லை. கோபுரங்களிலும், தேர்களிலும் ஆணும் பெண்ணும் அம்மணமாக-நின்ற நிலையில் புணருவது போல, மரத்தாலான பொம்மைகளும், கல்லான பொம்மைகளும் இருக்கின்றன. பெண்களுக்கு ‘உடைக் கட்டுப்பாடு’ விதிக்கும் இந்தப் பிற்போக்காளர் கள், அந்தப் பெண்ணினத்தின் ஒரு பிரிவினைப் பொட்டுக்கட்டிக் கோயில்களில் விடுத்துத் தேவரடியார் கள் ஆக்கினர். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் திருவிதாங்கூர் பகுதியில் பெண்கள் மார்பை மறைக்குமாறு மாராப்புப் போடக் கூடாது எனத் தடைவித்தனர். தமிழ்நாட்டில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டம் பற்றி நாம் அறிவோம்.

‘இந்துப் பெரும்பான்மை’ என்கிற திமிர்த்தனம் இவர்களை எல்லையில்லாமல் ஆட்டம் போட வைக் கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் உத்தரப்பிரதேசம் முசாபர் நகரில் திட்டமிட்டு மதக்கல வரங்களை நிகழ்த்திய இவர்கள், அங்கு வாழும் முசுலீம்களுக்கு இழைத்த கேடுகள் அளவற்றவை. மீரட் காவல் நிலையத்தில் ஒரு இந்துப் பெண்மணி சிலர் தன்னைக் கடத்திவிட்டதாகவும், கூட்டாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுக் கெடுத்துவிட்டபின் தன்னை ஒரு முசுலீம் இளைஞர்க்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாயும் புகார் கொடுத்தார். உடனடியாக அங்குள்ள காவிக் கும்பல் ஒன்றுதிரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டது. அந்த முசுலீம் இளைஞனைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று கூச்சல் போட்டது. ஆனால் அடுத்த சில வாரங் களில் அதே பெண்மணி அந்த இளைஞனைத் தான் காதலித்து வந்ததாயும், தானே விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டதாயும் காவல் நிலையத்தில் கூறினார். அதற்குள்ளாகவே அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பா.ச.க. தலைவர் பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் குடும்பத் திற்குப் பணஉதவி செய்வதைப் போலப் படமெடுத்து ஊரெங்கும் விளம்பரப்படுத்திவிட்டார் (தி இந்து (ஆங்கில இதழ்) 9.11.14, பக்.12)

இந்த மதவெறியர்களுக்கு அற ஒழுக்கம் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

இவர்களின் கடவுளான கண்ணன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் உடைகளை யெல்லாம் எடுத்துக் கொண்டு மரத்தின் உச்சிக் கிளையில் போய் ஒளித்து வைத்துவிட்டு அவர்களை அம்மணமாக அழகுபார்த்தவன் அல்லவா? அந்தக் காட்சிப் படத்தைச் சட்டம் போட்டு வீடுதோறும் மாட்டி யிருக்கிற பக்தர்கள், தங்கள் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு அப்படி நேர்ந்தால் மகிழ்ச்சி அடைவார்களா?

இராமன், கிருஷ்ணன் ஒழுக்கக் கேடுகளைப் பற்றிப் பக்கம் பக்கமாய் எழுதுவார் அறிஞர் அம்பேத் கர். பெண்களைச் சதைப் பிண்டங்களாக மதித்த சமூகம் இந்துச் சமூகம். கேரளாவைச் சேர்ந்த கலை இலக்கியத் திறனாய்வாளர் சதானந்தன் என்பவர், ‘இந்தியாவில் உள்ள எந்த வைணவக் கோயிலுக்குப் போனாலும் அங்கே வரையப்பட்டுள்ள 12ஆம் நூற் றாண்டில் வாழ்ந்த கவிஞர் ஜெயதேவ் என்பவர் எழுதிய ‘கீத கோவிந்த்’ என்ற வடமொழி நூலின் சில வரிகளை பக்தி உணர்வுள்ள எந்தப் பெண்ணாலும் ஆணாலும் வாய்விட்டு உச்சரிக்கவே முடியாது. அந்த நூலில் ராதை, தன்னைக் காதலிக்க வருமாறு கண்ணனைக் கட்டாயப்படுத்தி அழைப்பாள் என்பார் சதானந்தன். வடமொழி நூலான காமசூத்திரம் சொல்லாத கதைகளா? நம்ம ஊர் ஜெயேந்திரர்களும், நித்யானந்தாக்களும், தேவநாதன்களும் செய்யாத ஒழுக்கக் கேடுகள் எத்தனை எத்தனை!

இந்த மதவெறியர்களுக்குக் காதல் பற்றியும் சமூக ஒழுக்கம் பற்றியும் பேச என்ன அருகதை உள்ளது? இவர்கள் கட்டிவைத்த கடவுளர் கதைகள் எல்லாமும் புழுத்து நாறும் புராணக் குப்பைகள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒருவர், மாணவிகள் எப்படி உடை உடுத்தி வரவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கிறார்.

அண்மைக் காலங்களாகக் கடைப்பிடிக்கப்படும் ‘காதலர் நாள்’ கொண்டாட்டங்கள் என்பவை, மனிதம் மறுக்கும் சாதியவாதிகளுக்கு எதிராய், மனம் ஒப்பி இணையும் காதல் மலர்களை ‘நாடகக் காதலர்கள்’ எனக் கேலி பேசுவோர்க்கு எதிராய் எழுந்துள்ள கலகப் போர்க்குரல். ‘காதலர் நாள்’ கொண்டாடும் அனைவரும் ஒழுக்கங்கெட்டவர்கள் அல்ல. முத்தப் போராட்டங் களை ஆதரிப்போர் அனைவரும் மன ஊனப்பட்டவர் களும் அல்ல.

“காதல் அடைதல் உயிர் இயற்கை - அது

கட்டில் அகப்படும் தன்மைய தோ?”

என வினவுகிறார். பாவேந்தர் ‘காதலர்களை’ எதிர்ப்பது என்ற பெயரில், தனிமையில் பேசிக் கொண்டி ருக்கும் ஓர் அப்பாவிப் பெண்ணையும் ஆணையும் அழைத்து, அவர்களை மிரட்டித் தாலிகட்ட வைக்கும் மதவெறியர்களின் போக்கை என்னென்பது?

‘யாயும் யாயும் யாராகியரோ?’ என்கிற குறுந்தொ கைப் பாடல் ஒலித்த மண் இது. பண்பட்ட காதலைப் போற்றுகின்றன நம் பழந்தமிழ் இலக்கியங்கள். ஆனால் இந்தக் காவிக் கும்பல் காட்டு விலங்காண்டிகள் மாட்டுக் கும் மனிதனுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். கழுதைக்கும் நாய்க்கும் கலியாணம் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட செயல்கள் வழியாக இந்தச் சமுதாயத்தில் எந்த ஒரு புரட்சிகர மாற்றத்தையும் அண்டவிடமாட் டோம் என்று சூலம் தூக்கி அறைகூவல் விடுக்கிறார்கள்.

‘காதல்’ என்ற பெயரில் வரம்பு மீறிய ஒழுக்கக் கேடுகளை, பாலியல் அத்துமீறல்களை நாம் வரவேற்பவர்கள் அல்ல. மாறாகக் கடுமையாக எதிர்க்கிறோம். ‘முத்தப் போராட்டம்’ என்ற பெயரில் கண்டகண்ட இடங்களில் கட்டிப் புரள வேண்டும் என்பதல்ல. மாறாக அத்தகைய வரம்பு மீறல் களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஆனால் கொலைகார மதவெறிக் கொடியவர்கள் மக்களினத்தைக் கூறுபோட ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம்.

மானுட நேயத்தை உயர்த்திப் பிடிப்போம்!

மதவெறிச் சக்திகளை விரட்டியடிப்போம்!

Pin It