விடிந்தது காலை; வீதியைப் பார்த்தேன்!

கடிகா ரத்தின் நொடிமுள் போலே

படபடப் போடு நடந்தார் சிலரும்!

உப்பிய தொப்பையை எப்படி யேனும்

குறைத்திட வேண்டி விறைப்புடன் ஓடிய

குண்டு மனிதரும் கண்டேன்! ஆங்கே

ஒட்டிய வயிற்றின் பட்டினி ஓட்டிட

ஓட்டமும் நடையுமாய் உழைப்பா ளர்சிலர்

செல்வதும் கண்டேன்! செல்வர், ஏழை

இருவர் கவலையும் இருக்கும் ‘வயி’றா?

குறைப்பதற் கொருவன், நிறைப்பதற் கொருவன்

ஓடும் கொடுமையின் வேடிக்கை எண்ணிணேன்!

படைப்பு நிகழ்த்திய பாரபட்ச த்தால்

உடைந்தது நெஞ்சம்; ‘விடிய’லும் என்றோ?

Pin It