நடுவண் அரசின்கீழ் இந்தியா முழுவதும் சிறந்த கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 1,125 கேந்திர வித்யாலயா பள்ளிகள் இயங்குகின்றன. அண்மையில் திருத்தியமைக்கப் பட்ட விதிகளின்படி இப்பள்ளிகளில், “எல்லா மத நம்பிக்கை கொண்ட மாணவர்களும் காலையில் நடைபெறும் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொண்டு, இறை வணக்கப் பாடலைப் பாடவேண்டும். ஆசிரியர்கள் தம் பொறுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தொழுதகையுடன் கண்களை மூடியவாறு இறைவணக்கப் பாடலைப் பாடுவதைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். இவ்வாறு இறை வழிபாட்டில் பங்கேற்கத் தவறும் மாணவர் மற்ற மாணவர்களின் முன்னிலையில் தண்டிக்கப்படுவார்” (விதி 92) கூறப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியா முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் சமற்கிருதத் திலும் இந்தியிலும் இந்துக் கடவுள்கள் பற்றிய பாடல்களை மாணவர்கள் பாடி வருகின்றனர். இந்த இந்து மதத் திணிப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று விநாயக் ஷா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். “அரசமைப்புச் சட்டத்தின் விதி 19 வழங்கியுள்ள கருத்துச் சுதந்தரத்துக்கும் பேச்சு சுதந்தரத்துக்கும் இது எதிரானது. மேலும் விதி 28(1) அரசின் நிதி உதவியுடன் இயங்கும் கல்வி நிறுவனங்களில் மத போதனை செய்யக்கூடாது என்று கூறப் பட்டுள்ளது” என்று விநாயக் ஷா தன் விண்ணப்பத்தில் குறிப் பிட்டுள்ளார்.

கேந்திர வித்யாலயா பள்ளிகள் நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சரைத் தலைவராகக் கொண்டு, நடுவண் அரசின் நிதியுடன் கடந்த அய்ம்பது ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மொழி பேசுகின்ற, பல்வேறு கலாச்சாரங்களும் மரபுகளும் கொண்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரோகின்டன் நாரிமன், “தண்டிக்கப்படுவோம் என்கிற அச்சுறுத்தலின்கீழ், சிறுபான்மை மதத்தவர், கடவுள் பற்றிய கவலையில்லாதவர்கள் (Agnostic) பகுத்தறிவாளர்கள், பல்வேறு மத நம்பிக்கைக் கொண்டவர்களின் குடும்பங்களின் பிள்ளைகள் இந்துமதக் கடவுளர் பற்றிய பாடல்களைப் பாடவேண்டும் என்று கட்டாயப் படுத்துவது என்பது மேலும் விரிவான ஆழ்ந்த விசாரணைக்கு உரியதாகும். எனவே இந்த வழக்கை அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரிப்பதற்குப் பரிந்துரைக்கிறேன்” என்று 28-1-2019 அன்று அறிவித்தார்.

பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் உள்ளத்தில் இந்துமத வெறியை ஊட்டி, இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதையும் இந்தியா ஒரே கலாச்சாரத்தைக் கொண்டது என்பதையும் நிலைநாட்ட முயலும் நரேந்திர மோடி தலைமை யிலான இந்துத்துவப் பாசிச ஆட்சியை வீழ்த்துவோம்.