முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி உயரத்தை எட்டி அங்கே தண்ணீர் தளும்புகிறது. இச்செய்தியைக் கேட்ட தமிழர் மனங்களில் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் நிரம்பித் ததும்புகிறது. மக்கள் பற்றாளர் மறைந்த குன்னிபெக் யார் பெற்ற பிள்ளையோ? ஆனால் அந்த மாமனிதரைத் தமிழர்களால் மறக்க முடியுமா? ஊர் சொத்தைக் கொள்ளையடிக்கும் இன்றைய ஊழல் அரசியல்வாதிகள், அதிகார வகுப்பார் நடுவே, தன்னிடம் இருந்த அத்தனை சொத்தையும் விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிமுடித்து, மக்கள் நெஞ்சில் அழியாக் காவியமானார் பென்னிகுயிக். அவர் அன்று கட்டி முடித்த முல்லைப் பெரியாறு அணை தமிழகத் தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராம நாதபுரம் உள்ளிட்ட அய்ந்து மாவட்ட மக்களுக்கு வற்றாத தாய்முலைப் பாலாய் நீர்சுரந்தது அம்மண்ணை வாழ் வித்தது.

Pennycuickவெள்ளையனிடமிருந்த விடுதலை வாங்கித் தந்த கட்சி என்று வெளிச்சம் போட்டுக் கொள்ளும் காங்கிரசு, மொழிவழி மாநிலங்கள் பிரிந்தபின் வடிகட்டிய முதலாளியக் கட்சியாகத் தன்னை முற்றிலுமாய் தகவமைத்துக் கொண்டது. தேசிய இனங்களின் தன்னுரிமையைக் காலில் போட்டு மிதித்தது. அந்தந்த நாட்டின் மக்களின் உரிமை உணர்வுகளை நசுக்கியது. 1967 பொதுத் தேர்தல் வரை அதன் ஒற்றை அதிகாரப் பதவி வெறி, பல தேசியப் பன்மைச் சமூகக் கருத்தியலைப் பாழ் படுத்தியது. இதற்கு முன்பே மாநில மக்களிடையே வேற்றுமை எண்ணங்கள்-பகையுணர்வுகள் விதைக் கப்பட்டுவிட்டன.

வந்தாரை வாழ வைத்த தமிழ்நாடு அடுத்தவரை நம்பி மோசம் போனதுதான் அவலம். இந்தக் கேடு முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் 1960ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அணை வலுக் குன்றிப் போய்விட்டதாக அப்போது முதலே கேரள மாநில அரசு அரற்றத் தொடங்கிவிட்டது.

எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளர்கள் மாநில மக்கள் நலனில் ஒன்றுபட்டு நின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் கருணாநிதி - எம்.ஜி.ஆர். இடையே ஏற் பட்டுப்போன அரசியல் பிளவு, மாளாத கொடுந்துய ராய் இன்றுவரை தமிழக மக்களை அலைகழிக்கிறது. வலுமிக்க தி.மு.க., அ.தி.மு.க அணிகள் தமிழ்நாட்டில் இரண்டுபட்டு நின்றதால் 1979ஆம் ஆண்டிலேயே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

அணை வலுக்குன்றிப் போனது என்ற கேரள அரசின் சொத்தை வாதத்தை ஏற்று, அணையை வலுப்படுத்தும் பணியைத் தமிழக அரசு 1993ஆம் ஆண்டில் செவ்வனே செய்து முடித்தது. முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தியது போன்றே, அதில் உள்ள பேபி அணையை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது கேரள அரசு அம்முயற்சி யைத் தடுத்தது. 1998இல் தமிழக அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இந்திய அதிகார வகுப்பார், ஆட்சியாளர்கள், நீதித் துறையோர் என்கிற எல்லாத் திருடர்களும் எப்போதும் தமிழர்க்கெதிரான நச்சு எண்ணத்தில் நீச்சலடிக்கிறார் கள். இக்கேடு இன்றுவரை தொடர்கிறது.

கரவான எண்ணத்துடன் கண்ணாமூச்சு காட்டும் உச்சநீதிமன்றம் இருமாநில முதல்வர்களையும் பேச்சு வார்த்தை நடத்தச் சொன்னது. உடன்பாடு எட்டப்பட வில்லை. இறுதியில் 2000ஆம் ஆண்டு சூன் 14 அன்று அணையின் வலுப்பற்றி ஆய்வு நடத்த ஒரு நடுவண் வல்லுநர் குழுவை அமைத்தது. இக்குழுவி னர் அணையை ஆய்வு செய்து, அணை வலுவாக உள்ளதாயும் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அறிக்கை அளித்தனர். அதை எதிர்த்துக் கேரளமும் எத்தனையோ சண்டித்தனங்கள் செய்து வழக்கை இழுத்தடித்தது.

என்றாலும் 27.2.2006 அன்று உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது. உடனே கேரள அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக ‘முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புச் சட்டத்தை’ இயற்றிக் கொண்டது. இதனைத் தட்டிக் கேட்டுத் தலையில் கொட்ட முன்வராத உச்சநீதிம ன்றம் ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் மற்றுமோர் வல்லுநர் குழுவை அமைத்து வம்படி செய்தது.

எத்தனை பித்தலாட்டங்கள் செய்தாலும் உண்மை பின் ஒளியை மறைக்க முடியுமா? முடியாது. அது 7.5.2014 அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பாக வெளிப் பட்டது. அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று கூறிய துடன் கேரள அரசு நிறைவேற்றிக் கொண்ட அணைப் பாதுகாப்புச் சட்டத்தையும் செல்லாது என அறிவித்து விட்டது. தமிழக மக்களின், உறக்கம் கொள்ளாத உழவர் களின், உறுதியான போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி இது.

இந்நிலையில்தான் அண்மையில் இயற்கை அன் னையின் அருட்கொடையாகப் பெய்த மழைப்பொழிவு அணையின் நீர்மட்டம் 142 அடியைத் தொட அடிகோலியுள்ளது.

ஆனாலும் பணக்காரர்களின்-பன்னாட்டுக் கொள்ளை யரின் பாதத்தாங்கிளாக உள்ள மத்திய மாநில அரசு கள், மக்களின் வாழ்வுரிமையைக் காவு வாங்கு கின்றன. ஏற்கெனவே முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பணக்கொள்ளையடித்துப் பங்கு போட்டுக் கொண்ட ஆட்சியாளர்களும் அதிகார வகுப்பாரும் உழவர்களின் வயிற்றிலடிக்கின்றனர்.

கேரளாவிலிருந்து தற்போது புதிய தலைவலி தொடங்கியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்கும், குடி நீருக்கும் முதன்மை நீராதாரமாக உள்ளது பாம்பாறு. கேரள அரசு பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டத் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே கேரளத் தனியார் தேயிலைத் தோட்ட முதலாளிகள் பாம்பாற்றை ஒட்டிய ஓடைகளின் அருகே தடுப்பணைகள் கட்டி தமிழகத் திற்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவைத் தடுத்து வருகின்றனர். இதனால் தனது மாநில மக்களுக்குச் சிக்கல் இல்லை என்பதால் தேயிலை முதலாளிகளின் தீய நோக்கங்களைக் கேரள அரசு கொண்டுகொள் ளாமல் உள்ளது.

மேலும் அமராவதி ஆற்றின் அருகில் அதிகாரிகளின் துணையுடன் பன்னாட்டு நிறுவனங்களின் நிதி உதவி யோடு இயங்கும் தனியார் குடிநீர் நிறுவனம், நாளொன்றுக்கு 5 இலட்சம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி வருவதால் அப்பகுதி முழுவதும் பாலையாகி வருவதைக் கண்டு உள்ளூர் உழவர்கள் பதறுகிறார்கள். 150 கி.மீ. தொலைவுள்ள அமராவதி ஆற்றின் இரு கரைகளிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் மின்மோட்டார்கள் மூலமாகப் பல ஆண்டுகளாக நீர்த்திருட்டு நடைபெற்று வருகிறது. இது அதிகாரிகளுக்குத் தெரிந்தே நடக்கும் அழிச்சாட்டியம் ஆகும்.

2010ஆம் ஆண்டு முதலே பாம்பாற்றில் அணை கட்டுவது என்ற முடிவில் கேரள அரசு பிடிவாதம் காட்டி வருகிறது. 2012 சூன் 24ஆம் தேதியன்று பாம் பாற்றின் குறுக்கே அடிக்கல் நாட்டுவிழா நடத்த முனைந்தது. அப்போது எழுந்த கடும் எதிர்ப்புக் காரண மாகத் தன் முயற்சியில் கேரள அரசு பின்வாங்கியது.

கேரளத்திலிருந்து 2 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. ஆனால் முல்லைப் பெரி யாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நீரைத் தராமல் கேரளம் முரண்டு பிடிக்கிறது. அண்மையில்கூட இடுக்கி சட்டமன்றப் பெண் உறுப்பினர் ஒருவரும் சில அடியாட்களும் சட்ட மரபுகளை மீறித் தமிழகப் பொறியாளரைத் தாக்கி அட்டூழியம் செய்தனர். இதன்மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் கேரளக் காவல்துறை எட்ட நின்று வேடிக்கை பார்த்தது.

இந்நிலையில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்தின் ஒரு பகுதி பாலைவனமாகும். 1959ஆம் ஆண்டு தன் மின் தேவைக்காக அமரா வதித் திட்டம் மூலம் தமிழகம் மின் உற்பத்தி செய்ய முயன்றபோது வனத்துறையும் சுற்றுச்சூழல் துறையும் அனுமதி மறுத்தன. இப்போது யாரிடமும் அனுமதி பெறாமல் கேரள அரசு தடாலடியாக அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் அமைப்புகளும், தமிழ்த் தேசிய இயக்கங்களும், சில அரசியல் கட்சிகளும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளன.

ஏறக்குறைய காவிரி நீர்ச் சிக்கலிலும் இதே கழி விரக்கமான நிலைதான். முல்லைப் பெரியாறு நீர் உரிமைக்காகத் தமிழர்கள் நடத்திய போராட்டத்தை விடப் பெரியது காவிரி நீர் உரிமைக்கான போராட்டம். பல பேரின் உயிரிழப்புகளும் பல கோடி ரூபாய் உடைமை இழப்புகளும் இப்போராட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ளன. இதையொட்டி பெங்களூருவில் அவ்வப்போது நடந்த இனக்கலவரங்களில் தமிழர்கள் தாங் கொணாத் துன்பங்களை அனுபவித்தனர். ‘ஒரு சொட்டு நீரும் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம்’ என்று கர்நாட கத்தில் உள்ள இனவெறிக் கட்சிகளும் அமைப்புகளும் இன்றுவரை ஊளையிட்டுக் கொண்டுள்ளன. காவிரி நீர்த் தகராறு வழக்கிலும் தில்லியின் நடுவண் அரசும், நேர்மை தவறிய உச்சநீதிமன்றமும் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்தன. இதன் வரலாறு நீண்டது. ஏற்கெனவே தமிழ் மக்கள் அறிந்தது. இப்போது கர்நாடகத்திலிருந்தும் புதிய தலைவலி எழுந்துள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 2500 ஏக்கர் பரப்பளவில் இரு புதிய அணைகள் கட்டத் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றிக் கிருஷ்ணராசசாகர், கபினி, ஆரங்கி, ஏமாவதி ஆகிய அணைகளின் அருகில் நான்கு தடுப்பணைகள் கட்ட வும் முடிவு செய்துள்ளது.

Nehru at mullai periyar dam

மேகதாதுவின் குறுக்கே கட்டப்படும் இரு அணை கள் துணையோடு தேவையான நீர்மின் நிலை யங்கள், பெங்களூரு, மைசூரு நகரங்களுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், கர்நாடகத்தின் மாண்டியா மாவட் டத்தில் கரும்பு விளைச்சலுக்கான நீர்த் தேவைகள் ஆகியவற்றை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டமிட்டுள் ளது. இதற்குமுன் இருந்த ஆட்சியில் அதாவது கடந்த 2007ஆம் ஆண்டிலேயே காவிரி நீர்ப் பாசன மேம்பாட்டுக் கழகம் இதற்கான ஆய்வுப் பணிகளைத் தொடங்கிவிட்டது. இப்போது அமைந்துள்ள சித்தராமய்யா தலைமையிலான காங்கிரசு அரசும் புதிய விசையுடன் களமிறங்கிவிட்டது.

 கேரளமாயினும் கர்நாடகமாயினும் தத்தம் மாநிலம் சார்ந்த மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களில் கட்சி வேறுபாடுகள் காட்டுவதே இல்லை. ஒற்றுமை யாய் இருந்து ஒரே குரலில் முழங்குவார்கள். தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை. ஒப்பாரி வைப்பதில் கூட ஒன்றுபடமாட்டார்கள். தனித்தனியாய் அழுது தலையில் அடித்துக் கொள்வார்கள். யாரால் யார் கெட்டது, எவர் காலை எவர் முதலில் வாருவது என்பதில் மட்டுமே இங்குப் போட்டி உண்டு. சீரழிந்த திராவிட அரசியல் கட்சிகளின் மாறவே மாறாத மாபெரும் அரசியல் ‘பண்பு’ இது.

மேகதாது அணைகள் முழுமையாகக் கட்டி முடிக் கப்பட்டால் அவை கிருஷ்ணராசசாகர் அணையின் நீர்க் கொள்ளளவைவிட அதிகமானதாக இருக்கும்.

இப்போதே இந்த அணைக்கான திட்ட வரைவுப் பணிகள் தொடங்கிவிட்டன. உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஒரு அமெரிக்க நிறுவனம் உள்ளிட்ட 14 நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் கர்நாடக அரசிடம் ஒப்பந்தப் புள்ளிகளைத் தந்துள்ளன.

கர்நாடக அரசின் அணைத் திட்டங்களுக்குத் தமிழக அரசு தன் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்திலும் முறையீடு செய்துள்ளது. ஆனால் கர்நாடக அரசின் நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பட்டீலும் சட்டத்துறை அமைச்சர் டி.பி. செயச்சந்திரா வும் தில்லியில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்து விட்டனர். (இவர்தான் தன் ‘வாதத் திறமை யால்’ தமிழக முன்னாள் முதல்வர் செயலலிதாவுக்கு உச்சநீதிமன்றத்திலிருந்து பிணை விடுதலை ஆணை பெற்றுத் தந்தவர்).

“காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படியே கூட இப்புதிய அணைத் திட்டங்கள் புறம்பானவை அல்ல. தமிழக அரசாலும் இப்பணிகளைத் தடுத்து நிறுத்த முடியாது” என உறுதிபட அவர் உரைத்ததாகக் கர்நாடக அமைச்சர்கள் கூறுகின்றனர்.

இப்போதைக்கு மேகதாது அருகே கூட்டுக் குடிநீர்த் திட்டம் மட்டும் நிறைவேற்றப்படும். அதுவும் நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கர்நாடகாவுக்குக் கிடைத்த நீரைக் கொண்டே மட்டுமே திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். நாங்கள் தமிழகத்துக்குரிய நீரைப் பயன்படுத்தமாட் டோம். எங்கள் நிலைப்பாட்டைத் தமிழக அரசோ, நடுவண் அரசோ எதிர்த்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லை எனக் கர்நாடக நீர்ப் பாசனத் துறை அமைச்சர் அதிரடி யாக அறிவித்துள்ளார். வழக்கைச் சட்டப்படி சந்திப்போம் என்கிறார் கர்நாடக முதல்வர்.

காவிரி ஆற்று நீர் உரிமையில் தில்லியில் அமைந்த எந்த நடுவண் அரசும் தமிழர்களுக்குரிய நீதியை வழங்கியதில்லை. தமிழ் நாட்டுப் பக்கம் நின்றதில்லை. உச்சநீதிமன்றமும் சப்பையான தீர்ப்புகளையே வழங்கிக் கர்நாடகத்துச் சார்பாகவே நடந்து கொண்டுள்ளது. ஆந்திர அரசும் தன் பங்குக்குப் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டித் தமிழகத்தை வம்புக்கு இழுக் கிறது. கடைமடைப் பகுதியில் சிக்கிக் கொண்ட தமிழ் நாட்டைக் காப்பாற்ற எப்போதும் கேடான இந்தியத் தேசியம் கிஞ்சித்தும் உதவியதில்லை.

தமிழ்நாட்டு உழவர் அமைப்புகளும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும், வணிகர் சங்கங்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் அடுக்கடுக்கான போராட் டங்களை அறிவித்து நடத்தி வருகின்றன. நாடகமாடும் நடுவண் அரசையும், தமிழ் நாட்டையே பாலைவன மாக்கத் துடிக்கும் கர்நாடக அரசையும் அடிய பணிய வைக்கும் ஆற்றல் உழைக்கும் மக்களின் உறுதியான ஒற்றுமையால் மட்டுமே வாய்க்கும். அதற்கான பணிகளுக்கு அணியமாவோம்.

Pin It