“பெரியார் பிறந்த நாளில், பெரியார் அன்பர்களின் பார்வைக்கும் சிந்தனைக்கும்” என்ற தலைப்பில் ஏற் கெனவே மூன்று கட்டுரைகளை எழுதினேன்.

இது அவ்வரிசையில் நான்காவது கட்டுரை; கடை சிக் கட்டுரையும் கூட.

இந்தியாவிலுள்ள முற்போக்குச் சிந்தனையாளர்கள், “இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசு” என்றே நம்புகிறார்கள்; அப்படியே எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள்.

பெரியார் அன்பர்கள் மதச்சார்பற்ற இந்திய அரசு விநாயகர் சதுர்த்திக்கும் தீபாவளிக்கும் விடுமுறை தரலாமா? அமைச்சர்கள் தேர்வடம் பிடித்து இழுக்க லாமா? என்றெல்லாம் வினாக்களை எழுப்புகிறார்கள்.

இந்திய அரசு பற்றி ஏன் அப்படி நினைக்கிறார்கள்?

1.            1950இல் நடப்புக்கு வந்த சட்டத்தில், விதி 25(2) (அ) (ஆ) என்கிற உட்பிரிவுகள் பின்வருமாறு கூறு கின்றன.

25(2) இந்த விதியில் சொல்லப்பட்டுள்ள எதுவும் நடப்பில் உள்ள சட்டத்தின் அமலாக்கத்தைப் பாதிக்காது. அல்லது

(அ)       மதத்தைப் பின்பற்றுவது தொடர்பான பொருளா தார, நிதி, அரசியல் அல்லது மதச்சார்பற்ற நடவடிக்கையை மேற்கொள்வதைத் தடுக்காது;

(ஆ)      சமூகநலனுக்கு உகந்த நலத்திட்டங்களை மேற் கொள்வதையோ அல்லது சீர்திருத்துவதையோ, இந்துக்கள் எல்லோருக்குமான பொது இடங் களை இந்துக்களின் எல்லாப் பிரிவினரின் புழக் கத்துக்கும் திறந்து விடுவதையோ தடுக்காது என்பவையே அவ்விதியிலுள்ள செய்திகள்.

அதாவது மதத்தைப் பின்பற்றுவது தொடர் பான செயல்பாடுகளை நிதி, பொருளாதாரம் இவற்றைக் கெட்டியாகக் காப்பாற்றுவது;

பொதுத்தன்மை வாய்ந்த மத நிறுவனங்களை இந்து மதத்தின் எல்லாப் பிரிவினருக்கும் திறந்து விடுவது என்பவற்றை மட்டுமே இந்த விதி குறிக்கும்.

இந்த விதியைப் பற்றி நீண்ட விவாதங்கள் அரச மைப்பு அவையில் நடைபெற்றன.

அதை உன்னிப்பாகக் கவனித்தவர்கள் இரண்டு பேர்கள்.

ஒருவர் பெரியார் ஈ.வெ.ரா.

இன்னொருவர் காஞ்சி சங்கரமடத்துப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி.

உடனே, காஞ்சிப் பெரியவர் உரிய தடுப்பு வேலை யைச் செய்தார்.

அண்மையில் 102 அகவையில் மறைந்த அக்னி ஹோத்ரம் இராமாநுச தாத்தாச்சாரியார் என்ற வேதம் படித்த பார்ப்பனரைப் பிடித்து, புதுதில்லிக்கு அனுப்பி னார்; பிரதமர் பண்டித நேரு மற்றும் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உறுப்பினர்கள் எல்லோரையும் கண்டு பேசச் செய்தார்.

எது பற்றி பேசச் செய்தார்?

மேலை நாட்டார் பின்பற்றுகிற, “மதச்சார்பு அற்ற கோட்பாடு” என்பது, அரசமைப்புச் சட்டத் தில் இடம்பெறக்கூடாது என்பதை எடுத்து எல் லோருக்கும் கூறும்படிச் செய்தார்,

மேலை நாட்டு ‘மதச்சார்பற்ற கொள்கை’ என்ன கூறுகிறது?

1.            மதம் என்பதைப் பொதுக் கல்வியிலிருந்து பிரிக்க வேண்டும்.

2.            அரசு, மதத்தைப் பின்பற்றக் கூடாது.

3.            ஒழுக்கம் என்பதை மதத்தோடு பிணைக்கக் கூடாது என்பதே மேலை நாட்டு மதச்சார்பு இன்மை.

அதாவது மதம் இருக்கும். ஆனால் மத நம்பிக்கை களையும் கோட்பாடுகளையும் எல்லாத் தரப்பு - எல்லா மத - எல்லா மொழி மக்களுக்குமான பொதுக் கல்வித் திட்டத்தில்-பாடநூல்களில் இடம்பெறச் செய்யக்கூடாது. மதக்கல்வி கற்பிப்பதற்கு என்று அந்தந்த மதத்தி னரின் தனிக் கல்விக்கூடம் வைத்துக் கற்பிக்கலாம்; பரப்பலாம். அது பொதுக் கல்வியில் சேராது.

2.            அரசுத் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தும் போது எந்த மதச் சடங்கையும் அரசு செய்யக்கூடாது.

இதை மாற்றிச் சாதித்தவர் பெரிய சங்கராச்சாரியார்.

அதனால்தான், இந்தியா முழுவதிலும் தமிழகத்தி லும் அரசுத் தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளி கள், கலைக்கல்லூரிகள் எல்லாவற்றிலும் - பொதுப் பள்ளிகள் என்கிற அரசுப் பள்ளிகளிலும், அரசு அனுமதி யும் நிதி உதவியும் பெறும் எல்லாப் பள்ளிகளிலும் மற்றும் அரசுப் பாடத்திட்டத்தை அப்படியே கற்பிக்கிற தனியார் பள்ளிகளிலும் - இராமாயணம், வில்லிபார தம், நைடதம், தேவாரம், திருவாசகம்; இராமாநுசர், சங்கரர், மத்துவர், வள்ளலார், முகமது நபி, இயேசு கிறித்து கொள்கைகள் நேரடியாகக் கற்பிக்கப்படு கின்றன.

17 அகவையில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிற எல்லாப் பிள்ளைகளுக்கும் எல்லாப் பொதுப் பள்ளி களிலும் இவை கற்பிக்கப்படுகின்றன. பெரியார் அன்பர் கள், அம்பேத்கர் அன்பர்கள், மார்க்சிய வாதிகள்; இந்துக்களின் - இஸ்லாமியர்களின் - கிறித்துவர்களின் குழந்தைகள் எல்லோரும் படிக்கிற பொதுக்கல்வி நிறுவனங்களில் இவையெல்லாவற்றையும் அரசே கற்பிக்கிறது.

அப்படி இருக்கும் போது - இந்திய அரசு எப்படி மதச்சார்பற்ற அரசு ஆகும்? தமிழ்நாட்டு அரசு எப்படி மதச்சார்பற்ற அரசு ஆகும்?

இதை விளக்கிக் கூறவந்த பெரியார், இரண்டு விளக்கங்களைத் தெளிவாகத் தந்தார்.

“மதச்சார்பற்ற அரசு” என்னும் தலைப்பில் தந்தை பெரியார் 1968இல் தந்த தெளிவான விளக்கம், இதோ:

1.            இவர்கள் எந்த நாட்டைப் பார்த்து, எந்த மொழியில் ‘செக்குலர் ஸ்டேட்’ என்று குறிப்பிட்டார்களோ அந்த நாடுகளில் அந்த மொழிக்கு ‘செக்குலர்’ என்பதற்கு என்ன பொருள் இருக்கிறதோ-அவர்கள் எந்தப் பொருளில் அதைப் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அந்தப் பொருளில் தானே நாமும் பயன்படுத்த வேண்டும்? அதைவிட்டு விட்டு, சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு, ‘செக்குலர் என்றால்-மதச்சார் பற்றது என்று பொருளல்ல; எல்லா மதங்களையும் ஒன்று போலக்கருத வேண்டும் என்றுதான் பொருள’ என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்.

2.            பெண்கள் ஒரு மாநாடு நடத்துகிறார்கள். அந்த மாநாட்டில் உள்ள பெண்கள் அத்தனை பேரும், ‘பெண்கள் பதிவிரதைகளாக நடந்துகொள்ள வேண்டும்’ என்று தீர்மானித்துவிட்டு, - ‘பதிவிரதை என்றால் எல்லா ஆண்களையும் தங்கள் கணவனைப் போல் கருதி நடந்து கொள்ள வேண்டும். அதுதான் பதிவிரதைத்தன்மை’ என்று அர்த்தம் சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனமோ, அதைவிட அயோக்கியத்தனமாகும்-‘மதச்சார்பற்ற’ என்பதற்கு எல்லா மதங்களையும் ஒன்று போல் கருவேண்டுமென்பது! எனவே, ‘மதச்சார்பற்ற’ என்றால், ‘எந்த மதத்தையும் சாராத’ என்பதுதான் பொருள். (“பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்”, பக்கம் 884-885, 1974 பதிப்பு)

தத்துவ மேதை என்று புகழப்பட்ட சர்வபள்ளி இராதா கிருஷ்ணன், பிரதமர் இந்திரா காந்தி இவர்களுக்கு விடைகூறும் தன்மையில்தான் தந்தை பெரியார் ஓங்கி அடித்து இப்படிக் கூறினார்.

அவரவர் மதத்தைக் கற்பித்திட-வேதபாடசாலைகள், இறை இயல் கல்லூரிகள், அரபிக் கல்லூரிகள் இருக் கின்றன. அரசுக்கும் அவற்றுக்கும் தொடர்பு இல்லை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

கி.பி.1860களில், பிரிட்டிஷ்காரரான ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக் (George Jacob Holyoke) என்பவர் தான் “மதச்சார்பற்ற” SECULAR, SECULARITY, SECULARISM என்ற சொற்கோவைகளை உருவாக்கினார். அவர்தான் “பொதுக் கல்வியிலிருந்து மதத்தைப் பிரி”; “அரசு நடப்பிலிருந்து மதத்தைப் பிரி”; “ஒழுக்கம் என்பதிலிருந்து மதத்தைப் பிரி” என்று முதன்முதலாகச் சொன்னவர்.

1973 வரை வாழ்ந்த பெரியார் மட்டுமே இவற்றை அறிந்து சொன்னார்.

ஹோலியோக் பொறுப்பேற்றுச் செயல்பட்ட இலண்டன் பகுத்தறிவுப் பதிப்புக் கழக அலுவலகத்தை - (Rationalist Press Association) என்னும் இடத்தை, 1932-இல் நேரில் பார்த்து வந்தார், ஈ.வெ.ரா.

அப்போது முதல் “பகுத்தறிவுக் கழகம்”, “தாராள சிந்தனையாளர் கழகம்” என்கிற அமைப்புகளைத் தமிழகமெங்கும் நிறுவினார்.

ஈரோட்டில், அப்போது, தொடங்கப்பட்ட “பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம்” என்பதைத் தொடர்ந்து இயக்கி னார். நிற்க.

பெரியார் மறைவுக்குப் பின்னர், 1976இல் நிறை வேற்றப்பட்ட இரண்டு சட்டத் திருத்தங்கள் 3-1-1977 இல் நடப்புக்கு வந்தன.

1.            அரசமைப்புச் சட்ட முகவுரையில், “தன்னாதிபத் திய மக்கள் நாயகக் குடிஅரசு” SOVEREIGN DEMOCRATIC REPUBLIC என்று 1976 வரையில் இருந்த விளக்கம் - “தன்னாதிபத்திய சமதர்ம மதச்சார்பற்ற மக்கள் நாயகக் குடிஅரசு” (Sovereign Socialist Secular Democratic Republic) என மாற்றப்பட்டு, 3-1-1977 முதல் நடப்புக்கு வந்தது.

ஆனால் “சமதர்மம்”, “மதச்சார்பற்ற” என்னும் சொற்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் எந்த இடத்திலும் விளக்கம் இல்லை.

ஊரையும் உலகத்தையும்த ஏமாற்றிட, இந்திரா காந்தி மாட்டிக்கொண்ட கவர்ச்சியான முகமூடி அது.

அத்துடன் விதி 51அ என்று ஒரு புதிய விதி, அரச மைப்பில், 1976இல் சேர்க்கப்பட்டது.

51அ(ஏ), 51அ(எச்) விதிகளில் என்கிற விதியில் “அறிவி யல் மனப்பான்மையை வளர்க்கவும், மானிட உணர்வு, ஆராய்ச்சி உணர்வு, சீர்திருத்த உணர்வு இவைகளை வளர்க்கவும் ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்ட வன்” என்பதும், 3.1.1977 முதல் நடப்புக்கு வந்தது.

இது ஒரு கோவணம் போன்றது. கோவணம் மலத்தைத் தாங்காது.

எதனால்?

வழக்கச் சட்டம் என்பது எழுதப்பட்ட சட்டத்தைக் காட்டிலும் வலிமையானது (“Custom outweighs the written text of the law”) என்கிற - இலண்டன் பிரிவு கவுன்சில் தீர்ப்பு, இந்திய அரசமைப்பின் கடைசி விதியான 395இன்படி, 2014லும் செல்லும். 2054-இலும் இது மாற்றப்படாமல் இருந்தால், செல்லும்.

மார்க்சிய - பெரியாரிய - அம்பேத்கரிய அன்பர்கள் அனைவரும் இவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள்; புரிந்து கொள்ளுங்கள் மாற்றிட முன்வாருங்கள் என அன்பு டன் வேண்டுகிறேன்.

- வே. ஆனைமுத்து

Pin It