இந்தியாவில் காலங்காலமாக மனுஸ்மிருதி போன்ற இந்துமத சாத்திரங்களின் பேரால் கல்வி என்பது பார்ப்பனர்களின் முற்றுரிமையாக இருந்து வந்தது. வெகுமக்களான சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் கல்வி பெறும் உரிமை மறுக்கப்பட்டு வந்தது.

ஆங்கிலேய அரசு 1835இல், மெக்காலே கல்வித்திட்டத்தின் மூலம் அனைத்துப் பிரிவினரும் கல்வி வாய்ப்பைப் பெறுவதற்கான பொதுப்பள்ளி முறையைக் கொண்டுவந்தது. ஆயினும், 1950 வரையில் பார்ப்பனரும் மேல்சாதியினருமே கல்வி - வேலை வாய்ப்புகளை முழுவதுமாகக் கைப்பற்றி வந்தனர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், அது நடைமுறைக்கு வந்த 1950ஆம் ஆண்டிலிருந்து பத்தாண்டுகளுக்குள் 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் இலவயக் கட்டாயக் கல்வி வழங்கிட அரசு முயற்சிக்க வேண்டும் என்று எழுதப்பட்டது. அப்போது, கல்வித் துறை அதிகாரம் முழுமையும் ‘மாநில அரசு அதிகாரங்கள்’ (State List) பட்டியலில் இடம்பெற்றிருந்தது. தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர்த்து, பெரும்பாலான மாநிலங்கள் 8ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியை அளிப்பதில் அக்கறை காட்டவில்லை.

இந்திய அரசு 1966இல் அமைத்த கோத்தாரி கல்விக்குழு, கல்வியைப் பரவலாக்கிட பல சிறந்த பரிந்துரைகளைக் கூறியது. ஆனால், எந்த ஒரு அரசும் அவற்றைச் செயல்படுத்த முனையவில்லை. இன்றும் இந்திய அளவில் 14 அகவைக்கு மேற்பட்டோருள் 30 கோடிப் பேருக்கு மேல் எழுத்தறிவற்றவர்களாக வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திராகாந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது நெருக்கடிநிலை காலத்தில் 03-01-1976இல் கொண்டுவந்த 42ஆவது அரசமைப்புச்சட்டத் திருத்தத்தின்படி மாநில அரசு அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வித்துறை அதிகாரம் முழுமையும் இந்திய நடுவண் அரசுக்கே முற்றுரிமை வழங்குகின்ற பொது அதிகாரப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்டது.

அதுமுதல், மாநில அரசுகளின் எல்லாக் கல்வித் துறை அதிகாரங்களும் படிப்படியாக இந்திய அரசால் பறிக்கப்பட்டு வருகின்றன.

1986இல் இராசீவ்காந்தி பிரதமராக இருந்தபோது நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை பிற தேசிய இனங்களின் தாய்மொழிகளைப் புறக்கணித்து இந்தி, ஆங்கில வழியில் கல்வி கற்பதை ஊக்குவித்தது; கல்வி வணிகமயம் ஆவதற்கு வித்தூன்றியது.

1999-2004இல் ஆட்சியிலிருந்த பா.ச.க. தலைமையிலான வாஜ்பேயி அரசு வேதக் கல்வியைப் பள்ளிப்பாடம் முதல் பல்கலைப்படிப்பு வரை அறிமுகப்படுத்தியது. பா.ச.க ஆட்சிக் காலத்தில்தான் ‘கல்வி நிறுவனங்களைத் தனியார் நடத்துவது என்பது இந்திய அரசமைப்புச் சட்ட விதி 19(1)(ப)-இன் கீழ் தொழில் செய்யும் அடிப்படை உரிமை போன்றது; எனவே அரசுகள் இதில் தலையிட முடியாது’ என்று ஒரு கேடான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதுமுதல், தனியார் கல்வி நிறுவனங்கள் உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டி வருகின்றன.

புதிய கல்விக் கொள்கை - 2016

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 30-06-2016இல் வெளியிட்டுள்ள ‘தேசியக் கல்விக் கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள்’ எனும் அறிக்கை, மாநிலங்களின் தேசிய மொழிகள், உரிமைகள், ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் கல்வி உரிமைகள் ஆகியவற்றுக்குப் பல வகையிலும் தீங்கு விளைவிப்பதாகவே அமைந்திருக்கிறது.

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத மாநில மக்களின் தாய்மொழி வழியில் பயிலும் உரிமையைப் பறிக்கிறது.

ஊர்புறங்களிலும் நகரப் பகுதிகளிலும் வாழும் கீழ்ச்சாதி - ஏழை மாணவர்களிடையே அதிக அளவில் இடைநிற்றலை ஏற்படுத்தி, அவர்களை 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத அவலநிலைக்கு ஆளாக்க முற்படுவதுடன் அவர்களின் குலத்தொழிலுக்குத் தள்ளும் மறைமுகமான குலக்கல்வித் திட்டமாகும்.

இந்தியாவில் நிலவும் பன்முகத்தன்மையைக் குழிதோண்டிப் புதைக்க முயல்வதுடன், இந்துத்துவ நஞ்சை மாணவர் நெஞ்சில் விதைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் ‘ஏ’, ‘பி’ என இரண்டு வகையான தேர்வுகளை நடத்தும் வடிகட்டல் முறையின் மூலம், பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட - பழங்குடி வகுப்பு மாணவர்களின் உயர்கல்வி உரிமையை மறுக்கிறது.

தகுதி - திறமை எனும் மோசடியின்பேரால் பார்ப்பன - மேல்சாதியினரின் பிள்ளைகளே உயர்கல்வி பெறவும், உயர் அதிகாரப் பதவிகளைக் கைப்பற்றவும் வழிவகுக்கிறது.

கல்வி தொடர்பான முடிவுகளை எடுக்கும் முற்றுரிமை இந்திய நடுவண் அரசிடமே குவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுகளை எந்த உரிமைகளுமற்ற இந்திய அரசின் எடுபிடிகளாக ஆக்குகிறது.

இடஒதுக்கீடு குறித்த எந்த விளக்கமும் இந்த வரைவில் இல்லாமலிருப்பது, இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற பா.ச.க.வின் கொள்கையை நிலைநாட்டுகிறது.

பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களும் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் கல்வி - வணிகக் கொள்ளையடிக்க அனுமதிக்கிறது.

இந்தியாவிலுள்ள மொழித் தேசிய இனங்களின் உரிமைகளைப் பறிக்கின்ற, வெவ்வேறுபட்ட பண்பாடுகள், மொழிகள் ஆகியவற்றை அழிக்கின்ற, இந்தியா முழுவதிலுமுள்ள எல்லாக் கல்வி நிலையங்களிலும் சமற்கிருத மொழி, இந்தி மொழி, வேதக் கல்வி ஆகியவற்றைக் கட்டாயப் பாடங்களாக ஆக்கிட முயல்கின்ற தேசியக் கல்விக் கொள்கை - 2016ஐ எதிர்த்துப் போராடுவோம்.

மருத்துவக் கல்விக்கான அனைத்திந்தியப் பொது நுழைவுத்தேர்வு (NEET)

2010இல், காங்கிரசுத் தலைமையிலான இந்திய அரசு இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அனைத்திந்தியப் பொது நுழைவுத்தேர்வு எழுதவேண்டும் என ஆணை பிறப்பித்ததது. அதனைப் பல்வேறு மாநில அரசுகள் எதிர்த்தன; இந்திய உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில், 3 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு, பொது நூழைவுத்தேர்வு வேண்டாம்; கூடாது என்று 2013 சூலையில் தீர்ப்பு அளித்தது.

2014இல், ஆட்சிப் பொறுப்பேற்ற பா.ச.க. அரசு மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்திட முடிவு செய்தது. 2013 சூலையில் வழங்கிய தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுஆய்வு செய்திடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தது. அந்த அமர்வு 28-04-2016இல் வழங்கிய தீர்ப்பில், மருத்துவப் படிப்பில் சேர விரும்புகிற எல்லா மாணவர்களும் பொது நுழைவுத் தேர்வு எழுதவேண்டும்; அதனடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறி பாரதிய சனதா அரசின் முடிவுக்குப் பச்சைக்கொடி காட்டியது.

இந்த ஆண்டில் இரண்டு கட்டமாக நுழைவுத்தேர்வு நடைபெற்றிருந்தாலும் தமிழ்நாட்டுக்கு மட்டும் இந்த ஆண்டுச் சேர்க்கைக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில், 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச்சாளர முறையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களும், அரசின் தொகுப்புக்கு அளிக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்களும் இடஒதுக்கீட்டின்படிப் பிரித்தளிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

ஆனால், தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிருவாக ஒதுக்கீட்டு இடங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களும் அனைத்திந்தியப் பொது நுழைவுத்தேர்வின் தரவரிசைப்படி நிரப்பப்படவில்லை. இந்த இடங்கள் எல்லாம் அதிக தொகைக்கு ஏலம் கேட்ட மாணவர்களுக்கே அளிக்கப்பட்டன என்பது மாபெரும் வெட்கக்கேடு. இந்திய அரசும் நீதித் துறையும் ஆதிக்க வர்க்கமும் போட்ட தகுதி - திறமை எனும் கூப்பாடு காற்றோடு போயாச்சு!

இந்நிலையில், அடுத்த ஆண்டில் (2017-18) மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நடந்தால் தமிழ்நாட்டின் நிலை என்ன?

தமிழ்நாட்டு அரசின் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களில்,

அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு எழுதிய தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டும் சேர்க்கப்படுவார்களா? அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பிற மாநில - பிற மொழி பேசும் மாணவர்கள் சேர்ந்திட விரும்பினால் அதைத் தடுக்க முடியுமா?

பிற மாநிலங்களின் மாணவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்பில் சேரும் நிலையில் தமிழ்நாட்டு மாணவர்கள் தற்போது பெற்றுவரும் 69 இடஒதுக்கீடு என்னவாகும்?

பிற மாநில மாணவர்களின் மருத்துவப்படிப்புக்காகத் தமிழ்நாட்டு அரசு தமிழ் மக்களின் வரிப்பணத்தைப் பெருஞ்செலவு செய்து மருத்துவக் கல்லூரிகளை ஏன் நடத்தவேண்டும்?

தமிழ்நாட்டில் பயிலும் பிறமொழி மாணவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவம் செய்யாமல் அவர்களின் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதைத் தடுக்கமுடியுமா?

மருத்துவத் துறையில் சமூக நீதிக்கு எதிரான - மேல்சாதி ஆதிக்கத்தினைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளும் தீய உள்நோக்கத்துடன் பல்வேறு குளறுபடிகளைக்கொண்ட, மாநிலங்களின் உரிமையை மறுக்கின்ற - கீழ்ச்சாதி ஏழை எளிய ஊர்ப்புற மாணவர்களின் நலன்களுக்கு எதிரான மருத்துவப் படிப்புக்கான தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வை முழுமூச்சில் எதிர்த்து வீழ்த்திடுவோம். கல்வித் துறை அதிகாரம் முற்றுரிமையும் அந்தந்த மாநில அரசின் அதிகாரப் பட்டியலுக்கு மாற்றக் கோரிப் போராடுவோம்.

இந்தி மொழி ஆதிக்கம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஆட்சி மொழி குறித்த 17ஆம் பகுதியில் ``தேவநாகரி வடிவிலான இந்தி, இந்தியாவின் அலுவல் மொழியாக இலங்கும்'' என்றும், 26-1-1950இலிருந்து ``15 ஆண்டுகளுக்கு ஆங்கிலமும் அலுவல் மொழியாக இருக்கும்'' என்றும் தெளிவாக எழுதப் பட்டுள்ளது. 1965 சனவரி 26 முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழி ஆவதை எதிர்த்து, 1963இல் தமிழ்நாட்டில் மாணவர்கள் பேரெழுச்சியோடு போராடியதன் விளைவாக அப்போதையப் பிரதமர் நேரு, இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக நீடிக்கும் என்று வாக்குறுதி அளித்தார்.

ஆனால், 1950க்குப் பிறகு இந்தியாவை ஆண்ட காங்கிரசும், பா.ச.க.வும் இந்தி மொழி இந்தியர் அனைவருக்குமான பொது மொழி - தேசிய மொழி என்பதுபோன்ற ஒரு மாயக் கருத்தை மக்களிடம் திணித்து வருகின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் மத்திய அரசு அலுவலகங்களில் இன்றளவும் இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழியாக இருப்பது தழிழரையும் - தமிழையும், இந்தி பேசாத பிற தேசிய இன மக்களையும் - மொழிகளையும் இழிவுபடுத்துவது ஆகும்.

இதற்கு ஒரே தீர்வாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ``இந்தி, இந்தியாவில் அலுவல் மொழியாக இலங்கும்'' என்னும் சொற்கோவை எந்தெந்த விதிகளில் இடம்பெற்றுள்ளதோ அந்தச் சொற்கோவைகளை ``இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எட்டாம் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள எல்லா மொழிகளும் இந்தியாவின் அலுவல் மொழிகளாகும்'' என்று இடம்பெறும் தன்மையில் எல்லா விதிகளும் திருத்தப்பட வேண்டும் என இந்திய அரசைக் கோரி இந்தி பேசாத பிற தேசிய இன மொழி மக்களை இணைத்துப் போராடுவோம்.

சமற்கிருதத் திணிப்பு

இரண்டாயிரமாண்டுகளாக இந்து மதத்தின் கடவுளர் மொழியாக - தேவபாஷையாக -கோயில்களில் வழிபாட்டு மொழியாக - இந்துக்களின் வீடுகளில் பார்ப்பனர்கள் நடத்தும் சடங்குகளின் மொழியாக - வேத மொழியாக சமற்கிருதம் இருக்கிறது. இந்த இழிநிலையை எல்லா இந்துக்களும் உணர்ந்தோ உணராமலோ ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு இந்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவில் இந்திய மொழிகள் உருவாவதற்கு ஊற்றுக் கண்ணாக இருந்ததுடன் அவற்றின் வளர்ச்சிக்கும் அரிய பங்களிப்பு செய்து வரும் சமற்கிருதத்தின் தனிச் சிறப்பை உணரவும், இந்தியக் காலாச்சார ஒற்றுமைக்கு அது ஆற்றி வரும் அருமையை உணரவும் பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரையில் சமற்கிருதம் கற்பிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது ஆர்.எஸ்.எஸ்.-ன் ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே கலாச்சாரம் எனும் கொள்கையைத் திணிக்கும் செயலாகும். மேலும், பார்ப்பனர்கள் பிறவியால் உயர்ந்தோர் என்பதை நிலை நிறுத்தவும், தேசிய இனங்களின் மொழிவழிப்பட்ட உணர்வுகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் மதச் சிறுபான்மையினரின் தனித்த கலாச்சாரத்தையும் ஒடுக்கி இந்துத்துவ மயமாக்கும் முயற்சியாகும்.

வழிபாட்டு மொழி, வாழ்வியல் சடங்கு மொழி என்கிற உச்சாணிக் கொம்பிலிருந்து சமற்கிருதத்தை வீழ்த்துவோம் !

கல்வி காவிமயமாவதைத் தடுத்து நிறுத்துவோம் !

தாய்மொழி - தமிழ்வழிக் கல்வியை நிலைநாட்டுவோம் !

இந்தி ஆதிக்கத்தை - சமற்கிருதத் திணிப்பை வேரறுப்போம் !

மொழிவழிப்பட்ட தேசிய இன உரிமைகளை வென்றெடுப்போம் !