உலகம் தொடங்கிய காலம் முதல் 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முடிய கடலில் அதாவது அட்லாண்டிக் கடலில் மேற்கொள்ளப்பட்ட கடற் பயணங்கள் தொடர்பாக அரிதான வரலாற்று ஆவணம் ஒன்றை 15-ஆம் நூற்றாண்டுகளில் புத்தகமாக வெளியிட்டவர் Antonio Galvano. இந்த பெயரில்தான் அவரை ஆங்கிலேயர்களுக்குத் தெரியும். அவருடைய பெயர் António Galvão. அந்த புத்தகத்தின் பெயர் Treaty of Discovery.

AntonioGalvaoபோர்ச்சுகீசிய நாட்டைச் சேர்ந்தவர். போர்ச்சுகீசிய படை வீரராக தன் வாழ்வைத் தொடங்கி போர்ச்சுகீசிய அரசாங்கத்தின் சார்பில் Maluku தீவுகளின் அதிகாரியாக உயர்ந்தவர். சிறந்த வரலாற்று தேடல் மற்றும் அறிவு படைத்தவர். இதன் வெளிப்பாடே அன்றைய கடற் பயணங்கள் குறித்த மிக விரிவான அதே சமயத்தில் ஒரு முழுமையான வரலாற்று புத்தகத்தை இவரால் வெளியிட முடிந்தது. பின்நவீனத்துவ காலத்தின் சிறந்த வரலாற்று ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.

இவருக்கும் கொலம்பசுக்கு என்ன தொடர்பு? இருவருக்கும் நேரடித் தொடர்பு என்று எதும் இல்லை. கொலம்பஸ் புதிய உலகம் தேடி புறப்பட்ட 1492-ல் கால்வனோ இரண்டு வயது சிறுவன். விசயம் கால்வனோ எழுதிய புத்தகத்தில்தான் இருக்கிறது. கால்வானோ தன்னுடைய வரலாற்று புத்தகத்தில் உலக வரை படம் ஒன்றைப் பற்றிப் போகிற போக்கில் குறிப்பிட்டுச் செல்கிறார். போகிற போக்கில் என்று நாம் சொல்லிவிட்டாலும் உண்மை நிலவரம் அதுவல்ல.

அன்றைய மேற்குலகின் பொக்கிசம் அந்த உலக வரை படம். துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிலை இழுத்து மூடிய பிறகு மேற்குலம் இந்தியாவிற்கான கடல் வழியைத் தேடி நாயாய் பேயாய் அடித்துக்கொண்டு திரிந்த காலகட்டங்களில் இத்தகைய ஒரு உலக வரைபடம் பொக்கிசமாகத்தானே இருக்க முடியும். அதிலும் ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையான Cape of Good Hope-க்கும் தென் அமெரிக்காவின் தென் கோடி முனையில் இருக்கும் Strait of Megallan-க்குமான கடல் வழிப் பயணப் பாதையை அந்த வரைபடம் துல்லியமாக கொடுத்தால் கேட்கவா வேண்டும்!

கால்வானோ குறிப்பிடும் இந்த உலக வரை படத்தின் அதி முக்கியத்துவத்தையும் கொலம்பசின் புதிய உலக கண்டுபிடிப்பு திட்டம் உண்மையில் அவருடையதுதானா என்பதைப் பற்றியும் முழுதும் புரிந்துகொள்ள நமக்கு அன்றைய மேற்குலகின் வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. வரலாறு என்றால் வாயைப் பிளந்து கொட்டாவி விடும் அளவிற்கான நீண்ட நெடிய வரலாறெல்லாம் இல்லை. ஒரு சில விசயங்களைத் தெரிந்துக்கொண்டால் போதுமானது.

மேற்குலகம் இந்தியாவுடன் தரைவழியாக வணிகம் செய்ய பெரிதும் நம்பியிருந்தது கான்ஸ்டாண்டி நோபிலை. இன்றைக்கு இது துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் நகரம். துருக்கியர்கள் இந்த நகரைப் பிடிப்பதற்கு முன்பு வரை அதாவது 1453-களுக்கு முன்பு வரை மேற்குலகத்தினர் இந்தியாவிற்கான கடல் வழி பற்றிப் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. அப்படி ஒன்று இருக்கக் கூடும் என்கிற எண்ணம் கூட அவர்களைப் பொருத்தவரை வேலையத்த வேலை.

இத்தகைய ஆண்டுகளில் எந்த உலக வரை படம் எந்த நாட்டிற்கான கடல் வழியைப் பற்றி குறித்தாலும் மேற்குலகத்தினரைப் பொருத்த வரைக்கும் அது ஒப்புக்குப் பெறாத விசயம். அதை வைத்துக்கொண்டு நாக்கை கூட வழித்துக்கொள்ள முடியாது என்றே அவர்கள் பெரும்பாலும் சொல்லியிருப்பார்கள். ஆனால் துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிலை கைப்பற்றி மேற்குலகத்திற்கும், இந்தியாவிற்குமான வணிக வழியை அடைத்துவிட்டப் பிறகு நாக்கு வழிக்க கூட பயன்படாது என்று கருதிய சிறு சிறு கடல் வழி பயண வரை படங்களுக்கு எல்லாம் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்தியாவிற்கான கடல் வழிப் போட்டியில் முதலில் காலை வைத்து வெற்றி பெற்றது போர்ச்சுகீசிய நாடு. ஸ்பெயின் நாட்டிற்குள் இருக்கும் தம்மாத்துண்டு நாடு போர்ச்சுக்கல். பெரிய பெரிய சாம்பவான் நாடுகளான இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி போன்றவைகள் கண்ணைக் கட்டி, கடலில் விட்ட கதையாக இந்த கடல் வழி இந்தியாவுக்குப் போகுமோ, அந்தக் கடல் வழி சீனாவுக்கும் போகுமோ என்று தடவிக்கொண்டு இருக்க, போர்ச்சுகீசிய மாலுமிகள் மட்டும் கடலில் இறங்கி, இந்தியாவிற்கான கடல் வழித் தேடலில் கில்லியாக வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

போர்ச்சுகீசிய மாலுமிகள் கடல் வழிப் பயணங்களில் சொல்லியடித்த கில்லி வெற்றிகளுக்குக் காரணம் கால்வானோ குறிப்பிடும் அந்த உலக வரை படம். துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிலை மூடுவதற்கு முன்பே அதாவது 1453-களுக்கு முன்பே இந்த உலக வரை படம் போர்ச்சுகீசியர்களின் கைகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் இந்த வரைபடத்தின் முக்கியத்துவம் நாம் மேலே பார்த்தபடி அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த அதி முக்கிய உலக வரைபடத்தை போர்ச்சுக்கலுக்கு கொண்டு வந்து சேர்த்தவர் Dom Pedro. இவர் Henry the Navigator என்று மிகவும் புகழ்பெற்ற போர்ச்சுகீசிய இளவரசரின் தம்பி. Pedro ஊர் சுற்றித் திரிவதில் விருப்பம் உடையவர். அதேபோல Henry-க்கு கடலில் சுற்றுவது என்றால் விருப்பம். Pedro இப்படி இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ரோம் என்று ஊர் சுற்றித் திரும்பும் வழியில் இந்த உலக வரைபடத்தை பார்த்திருக்கிறார். (இவைகளை கால்வானோ தன்னுடைய வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்).

அவர் இந்த வரைபடத்தை எங்கு பார்த்தார் என்பதைப் பற்றிய தகவல் இல்லை. ஆனால் இந்த உலக வரை படத்தில் பல புதிய நாடுகளுக்கு அதுவரை மேற்குலகம் அறிந்திராத நாடுகளுக்கு எல்லாம் பெயரும், கடல் வழியும் குறிக்கப்பட்டிருந்ததால் தன் சகோதரனுக்கு இந்த வரை படம் மிகவும் பிடிக்கும் என்று Pedro இந்த வரை படத்தை Henry-க்காக எடுத்து வந்தார். இந்த உலக வரை படம் போர்ச்சுகலுக்கு வந்து சேர்ந்த பிறகே போர்ச்சுகீசியர்களின் கடல் பயணங்களில் புதிய மாற்றம் தொடங்கிவிட்டது. ஒருவேளை இந்த உலக வரை படமே Henry-க்கு The Navigator என்கிற பட்டத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கலாம்.

கான்ஸ்டாண்டி நோபில் மூடப்பட்டதும் உடனடியாக இந்த உலக வரை படத்தின் முக்கியத்துவம் போர்ச்சுகீசிய அரச பீடத்திற்கு புரிந்துவிட்டது. மிகப் பெரிய புதையல் பொக்கிசமே தங்களின் கைகளில் சர்வ சாதாரணமாக இருப்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள அவர்களுக்கு கிளி சோசியமெல்லாம் பார்க்க வேண்டியிருந்திருக்காது. போர்ச்சுகீசிய அரசு உடனடியாக இந்த வரை படத்தை அரசாங்க இரகசியங்களில் ஒன்றாக்கிவிட்டது. போர்ச்சுகீசிய அரசர்களின் இரகசிய நூலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது.

கான்ஸ்டாண்டிநோபில் மூடப்படும் காலத்திற்கு முன்பு வரை இந்த வரை படத்தை வைத்துக்கொண்டு கடலில் உல்லாசப் பயணம் போய் வந்து கொண்டிருந்த மாலுமிகளுக்கு எல்லாம் வாய்ப்பூட்டு போடப்பட்டுவிட்டது. இந்த வரை படத்தைப் பற்றி வாயைத் திறந்தால் ஒரேயடியாக வாயைப் பிளந்துக்கொண்டுவிட வேண்டியதுதான். அப்படி மீறி செய்தால் செய்பவருக்கு போர்ச்சுகீசிய அரசாங்கமே அதன் சொந்த செலவில் மூன்றாம் நாள் பாலை ஊற்றிவிடும்.

போர்ச்சுகீசிய அரசாங்கமே நம்பகமானவர்களைத் தேந்தெடுத்து இந்த வரை படத்தில் கண்டிருக்கும் நாடுகளின் வழியாக இந்தியாவிற்கான கடல் வழிப் பாதையை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒப்படைத்தது. போர்ச்சுகீசிய மாலுமிகளுக்கு இருந்த வேலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அந்த வரை படம் சுட்டிக்காட்டும் வழியாக எப்படியாவது செல்வது. புதிதாக எதையும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. இங்கேதான் கொலம்பஸ் வருகிறார். கொலம்பஸ் பிறந்தது இத்தாலியில் உள்ள ஜெனிவாவில். ஆனால் அதுவே சர்ச்சைக்குரிய விசயம் என்பது வேறு விசயம். இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும் இப்பொழுது புதுசாக கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு கொலம்பசின் பிறப்பு குறித்த அவசியம் இந்தக் கட்டுரையில் இல்லாததால், அதைவிட்டு விட்டு கொலம்பசின் விருப்பத்தைப் பற்றிப் பார்ப்போம். கொலம்பசுக்கு கடலில் சுற்றித் திரிவது என்றால் கொள்ளை ஆசை. கடலே அவரது வீடு. கடலின் மீதிருந்த அவருடைய காதலே அவருக்கு மிக இளம் வயதிலேயே மிகச் சிறந்த கடலோடி என்கிற புகழை பெற்றுத் தந்தது. இந்தப் புகழை வைத்துக்கொண்டு எப்படி பணம் ஈட்டுவது என்பதிலும் கொலம்பசுக்கு ஒரு தெளிவு அந்த வயதிலேயே வந்துவிட்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் சிறந்த கடலோடி ஆக வேண்டும் என்றால் கடலின் போக்கை மிகத் துல்லியமாக உள் உணர்வின் மூலம் கணிக்கும் இயல்பு பெற்றிருக்க வேண்டும்.

அவர் இந்தப் புகழுடன் போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பேனில் (Lisbon) 25 வயதில் தன்னுடைய சகோதரனுடன் வந்து குடியேறினார். லிஸ்பேனில் அவருக்குக் கிடைத்த வேலை என்ன தெரியுமா? உலக வரை படங்களை படியெடுப்பது. போர்ச்சுகல் அரசாங்கம் தன் கையிருப்பில் வைத்திருக்கும் உலக வரை படங்களை படியெடுத்து மாலுமிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த வேலையில்தான் கொலம்பஸ் போய் உட்கார்ந்தார்.

ஆனால் கொலம்பஸ் இந்த வேலைக்கு வரும் காலத்திற்கு முன்பே போர்ச்சுகல் அரசாங்கம் அந்த அதி முக்கியமான உலக வரைபடத்தை இராணுவ இரகசிய ஆவணமாக பதுக்கிவிட்டிருந்தாலும், கொலம்பஸ் அதை மோப்பம் பிடித்திருக்கிறார். அந்த சமயத்தில் இள வயதும், திறமையும், அறிவும் ஒன்றாகப் பெற்றிருந்த கொலம்பஸ் போன்ற ஒருவருக்கு அதுவரையில் புழக்கத்திலிருந்து திடீரென்று பதுக்கப்பட்டுவிட்ட ஒரு வரை படத்தின் முக்கியத்துவம் குறித்து அனுமானிப்பது பெரிய விசயமாக இருந்திருக்காது. அதுவும் அந்தத் துறையிலேயே வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவருக்கு.

columbusஅந்த அதி முக்கியமான வரை படத்தின் பிரதியை கொலம்பஸ் பெற்றுக்கொண்டதில்தான் அவருடைய சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது. இது சாமர்த்தியமா, பிராடுத்தனமா என்பது வாசகரின் பொறுப்பிற்கே விடப்படுகிறது. அந்த வரை படத்தை கொலம்பஸ் எப்படி பெற்றார் என்பது இன்றைக்கும் நீடிக்கும் மர்மங்களில் ஒன்று. கால்வனோவின் வரலாற்றுப் புத்தகம் அந்த வரை படம் போர்ச்சுகீசியர்களிடம் எப்படி வந்து சேர்ந்தது என்பதை மட்டுமே சொல்கிறதே தவிர இதைப் பற்றி வாய் திறக்கவில்லை.

இதில் உச்சம் போர்ச்சுகீசிய அரசாங்கம் பதுக்கிய கடல் வழிப் பயணத்தின் வரை படத்தை பின் பக்க வழிகளில் பெற்றுக்கொண்ட கொலம்பஸ் அதில் தன்னுடைய சரக்கையும் சேர்த்துக்கொண்டு - அதாவது அட்லாண்டிக் பெருங்கடலை குறுக்காகக் கடந்தால் மலாக்கா (Malacca இன்றைய Malaysia தீவுக் கூட்டங்கள்) வழியாக இந்தியாவிற்கு சென்றுவிடலாம் என்பது – போர்ச்சுக்கீசிய அரசாங்கத்திடமே போய் நின்றதுதான்.

போர்ச்சுகீசிய அரசு குழம்பிப் போய்விட்டது. கொலம்பஸ் சொல்லும் இந்தியாவிற்கான கடல் வழிப் பயணம் ஏறத்தாழ தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் வரை படத்தை ஒத்திருந்தாலும் கொலம்பஸ் தன்னுடைய திட்டத்திற்குள்ளே சேர்த்திருந்த அவருடைய கைச் சரக்கு அவர்களை தலை சுற்றவிட்டது. அவர் தங்களுடைய வரை படத்தை திருடிவிட்டார் என்று தண்டிக்கவும் முடியாதபடி இருந்தது கொலம்பசின் கடல் வழிப் பயணத் திட்டம்.

இதில் மேலும் நோண்டினால் மேற்குலகின் மற்ற நாடுகளின் கவனத்தையும் அது ஈர்த்துவிடும் என்பதால் கொல்பசின் திட்டத்திற்கு ஆதரவு தர முடியாது என்று சொல்லி கொலம்பசை அனுப்பிவைத்துவிட்டது போர்ச்சுகீசிய அரசு. கொலம்பசின் அடுத்த சாமர்த்தியம் அவர் ஸ்பெயின் நாட்டை அணுகியதில் இருக்கிறது. ஸ்பெயின் அன்றைய நாட்களில் போர்ச்சுகலின் கடல் பயண வெற்றிகளைக் கண்டு லேசான வயிற்றெரிச்சலில் இருந்தது.

கொலம்பஸ்தான் சூழ்நிலைகளை மோப்பம் பிடிப்பதில் வல்லவராயிற்றே! ஸ்பெயினின் பொறாமை புகைச்சல் வாடையை மோப்பம் பிடித்து ஸ்பெயின் நாட்டு இளவரசர் (Ferdinand) மற்றும் இளவரசிக்கு (Isabella) முன்பு போய் நின்றுவிட்டார். இளவரசரைவிட இளவரசி Isabella-விற்கு கொலம்பசின் கடல் வழிப் பயணத் திட்டம் பிடித்துப் போய்விட்டது. கொலம்பசின் பயணத்திற்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

கொலம்பஸ் தர்மத்திற்காக இந்த காரியத்தை ஸ்பெயினுக்கு பண்ணித்தர ஒப்புக்கொள்ளவில்லை. பெரும் பணத்திற்குத்தான். தான் கண்டுபிடிக்கும் நாடுகளில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்குப் பெறப்படும் தங்கம், வெள்ளி மற்றும் இதரப் பொருட்களின் வருவாயில் பத்தில் ஒரு பங்கை அவருக்குக் கொடுத்துவிட வேண்டும், அவர் கண்டுபிடிக்கும் நாடுகளுக்கு ஆளுநர் என்கிற வகையில் அவருடைய பெயரைச் சூட்ட வேண்டும், இனி வரும் காலங்களில் அவர் கண்டுபிடித்த கடல் வழிப் பயணத்தை உபயோகப்படுத்தி ஸ்பெயின் எந்த வகையில் பொருள் ஈட்டினாலும் அதிலும் பத்தில் ஒரு பங்கை ராயல்டியாக அவருக்கும், அவருடைய சந்ததிகளுக்கும் தந்துவிட வேண்டும். இவைகள் அவர் கடல் வழிப் பயணத்திற்கு புறப்படுவதற்கு ஸ்பெயின் நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள்.

யாரோ உயிரைப் பணயம் வைத்து உழைப்பைக் கொட்டிக் கண்டுபிடித்த இந்தியாவிற்கான கடல் வழிப் பயண வரை படத்தை வைத்துக்கொண்டு, போர்ச்சுகீசியர்களும், கொலம்பசும் பணம் பார்த்ததும், புகழைத் தேடிக் கொண்டதும் சமார்த்தியமா, பிராடுத்தனமா என்கிற தார்மீக விவாதங்கள் மறைக்கப்பட்டு, சாதனைகளாக பொது சனப் புத்தியில் பதியவைக்கப்பட்டிருக்கிறது. இந்த அழகில் தன்னம்பிக்கை கட்டுரைகளிலெல்லாம் கொலம்பஸ் போன்றவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் உதாரணங்களாக வேறு எடுத்தாளப்படுகிறது.

அது சரி, இந்தத் தகவல்களையெல்லாம் கால்வனோ எங்கிருந்து பெற்று தன்னுடைய வரலாற்று நூலில் எழுதினார் என்றால், கால்வினோ இந்த தகவல்களை Francis de Sousa Tavares என்பவரிடமிருந்து 1528-ல் பெற்றதாக சொல்கிறார். Tavares 1520-களில் போர்ச்சுகீசிய அரசரின் வாரிசான Dom Fernando-வின் நெருங்கிய நண்பராக இருந்தவர். Dom Fernando-வே இரகசிய நூலகத்திருந்து அந்த உலக வரைபடத்தை தன்னிடம் எடுத்துகாட்டியதாக Tavares கால்வினோவிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் Fernando, Tavares-க்கு அந்த இரகசிய வரை படத்தை காட்டிய 1520-களில், அந்த வரை படம் தன்னுடைய சிறப்பை இழந்துவிட்டிருந்தது. காரணம் 1498-ல் அந்த வரை படத்தின் துணை கொண்டு வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல் வழியைக் கண்டுபிடித்ததும் அந்த இரகசியம் மேற்குலகத்திற்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந்தியாவிற்கான கடல் வழி பொது சொத்தாகிப் போனது.

நாம் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் ஒன்றை குறிப்பிட்டிருந்தோம், Dom Pedro போர்ச்சுகலுக்கு கொண்டுவந்த கடல் வழி வரை படத்தில் Cape of Good Hope மற்றும் Strait of Megallen ஆகிய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக. வரலாற்று விழிப்புணர்வு உள்ளவர்களுக்கு அங்கேயே ஒரு சந்தேகம் தட்டியிருக்கும். இந்தப் பெயர்கள் அந்த இடங்களுக்கு அந்த வரை படம் வரையப்பட்ட (1420-களில்) அடுத்த நூறாண்டுகள் கழித்துத்தான் சூட்டப்பட்டப் பெயர்கள்.

அந்த வரை படம் வரையப்பட்டு நூறு ஆண்டுகள் கழித்து 1520-களில்தான் அந்த இடங்களுக்கு அந்தப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. அப்படியானால் அந்தப் பெயர்கள் எப்படி நூறு ஆண்டுகளுக்கு முந்திய ஒரு வரை படத்தில் இடம் பெற்றிருக்க முடியும்? சிறந்த கேள்விதானே!

ஆனால் அந்த வரை படத்தில் இருந்த பெயர்கள் Boa Esperança மற்றும் Dragon’s Taile. ஆப்பிரிக்க தென் கோடியாக இன்றைக்கு அழைக்கப்படும் Cape of Good Hope அந்த வரை படத்தில் Boa Esperança என்று குறிக்கப்பட்டிருந்தது. தென் அமெரிக்காவின் தென் கோடியாக இன்றைக்கு அழைக்கப்படும் Strait of Megallen அந்த வரை படத்தில் Dragon’s Taile என்று குறிக்கப்பட்டிருந்தது.

எல்லாம் சரிதான்... அந்த உலக வரை படத்தை வரைந்தவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக இருந்தால் என்னுடைய அடுத்த புத்தகமான ‘அமெரிக்காவை முதன் முதலில் கண்டுபிடுத்தவர் ஒரு இஸ்லாமியரா?’ புத்தகத்தைப் படிக்கவும்.

Pin It

“தற்போதுள்ள நமது கல்விமுறை குழந்தைகளுக்கு நியாயம் வழங்குவதாக இல்லை. ஏனெனில் அவர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. நடைமுறையில் அறிவியல் உண்மைகள் மாணவர்களுக்கு மனிதநேயக் கண்ணோட்டத்தில் கற்பிக்கப்படுவதில்லை. அசையாமல் இருக்கும் பொருட்கள் அல்லது சீராக நகரும் பொருட்களை வைத்து அறிவியல் கற்பித்தலை தொடங்கக் கூடாது. மனித உடலை வைத்து அதுவும் மூன்றாம் வயதிலிருந்தே அறிவியல் கற்பித்தல் தொடர வேண்டும்” - என்று அப்போதிருந்த கல்வி முறை குறித்து அறிவித்தார் ஹால்டேன்.

                j b s haldaneமனித குல நல்வாழ்வில் மிகுந்த அக்கறை கொண்ட அறிவியல் அறிஞர் ஜான் பர்டன் சாண்டர்சன் ஹால்டேன் இங்கிலாந்தில் 05-11-1892 அன்று பிறந்தார். அவரது தந்தை ஜான் ஸ்காட் ஹால்டேன். தாய் லூசியா காத்தலின் ஹோல்டேன். அவரது தந்தை மனித சுவாசம் குறித்த ஆய்வை மேற்கொண்டு , இரத்தத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவே சுவாசத்தின் வேகத்தைத் தீர்மானிக்கிறது என்பதை கண்டுபிடித்தார்.

                ஹால்டேன் சிறுவனாக இருந்த போதே, அவரது தந்தையார் ஆய்வுக்கூடத்தில் அவருக்கு உதவியதன் மூலம் தொடக்க நிலை அறிவியல் பயிற்சியைப் பெற்றார். “எனது தந்தைக்கு உதவுவதற்காக, அவரது ஆய்வுக் கூடத்தில் பயிற்சியாளராக இருந்தபோது, எனது எட்டாவது வயதிலிருந்தே நான் அறிவியல் கற்றேன். எனது பல்கலைக் கழகப் பட்டம் இலக்கியத்திற்கானது; அறிவியலுக்கானது அல்ல” என்று கூறினார்.

                பள்ளியில் வேதியியல் , இயற்பியல், வரலாறு , உயிரியல் முதலிய பாடங்களை விரும்பிக் கற்றார். அவரது மாணவப் பருவத்திலேயே இலத்தீன், கிரேக்க இலக்கியங்களையும், ஆங்கில இலக்கியங்களையும் விரும்பிப் படித்தார்.

 ஹால்டேன், ஈடனிலும், ஆக்ஸ்போர்டில் உள்ள புதுக்கல்லூரியிலும் பயின்றார். தமது 19-ஆம் வயதில், 1911 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கணித விரைவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.

                விலங்கியில் மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு, முதுகெலும்புள்ள உயிரிகளின் மரபணுக்களுக்கிடையேயான தொடர்புகள் குறித்து தமது கண்டுபிடிப்பை அறிவித்தார்.

                முதல் உலகப்போரில் 1914 ஆம் ஆண்டு தாமகவே முன்வந்து ஆங்கிலப் படையில் சேர்ந்து கருப்புக்காவல் படைப்பிரிவில் பணியாற்றினார். உலகப் போர் முடிந்ததும், தமது சொந்த நகரமான ஆக்ஸ்போர்டுக்குத் திரும்பி, அங்கு உள்ள புதுக்கல்லூரியில் 1919 முதல் 1922 வரை உடல் இயங்கியில் மற்றும் மரபியலில் ஆய்வு மேற்கொண்டார்.

                பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று டிரினிட்டி கல்லூரியில் துணைப் பேராசியராக பணியாற்றினார். மேலும் நொதி மற்றும் மரபியல் குறித்த ஆய்வை மேற்கொண்டு புகழ்பெற்ற முக்கிய கட்டுரைகளை எழுதினார். அவை பின்னர் 1927 ஆம் ஆண்டு ‘சாத்தியமான உலகம் ’ (Possible World) எனும் தலைப்பில் வெளியானது.

                ஹால்டேனின் அறிவியல் பங்களிப்பு உயிர் வேதியியல், உடல் இயங்கியல், மரபியல் ஆகிய மூன்று வேறுபட்ட துறைகளில் இருந்தது. அவர் மனித உடல் இயங்கியலின் பல்வேறு பண்புக் கூறுகளை ஆராய்ந்தார். ஹால்டேனின் மற்றொரு முக்கிய பங்களிப்பு அவர் ‘மரபியல்’ இதழுக்கு பதிப்பாசிரியராய் இருந்து ஆற்றிய பணியாகும்.

                ஹால்டேன், 1956 இல் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியை விட்டு, இந்தியாவில் குடியேறினார். அவர் இங்கிலாந்தை விட்டு வெளியேறியதற்கு காரணம் “சூயஸ் கால்வாய் நெருக்கடியால் இங்கிலாந்து எடுத்த முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததால் நான் இங்கிலாந்து குடியுரிமையைத் துறக்கிறேன்” என்று அறிவித்தார். அப்போது , இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அழைத்ததால் இந்தியாவிற்கு வந்த குடியேறினார்.

                ஹால்டேன், இந்தியாவில் முதலில் கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் (Indian  statistical  Institute) பணியில் சேர்ந்து , உயிரிக் கணக்கியல் (Biometry) பிரிவுக்குத் தலைமை தாங்கினார். அங்கு மானுடவியல், மனித மரபியல் மற்றும் தாவரவியல் ஆய்வுகளில் கவனம் செலுத்தினார். பின்னர் 1961 ஆம் ஆண்டு ஒடிசாவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட உயிரித் தொகையியல் நிறுவனத்தில் பணியேற்றார்.

                இந்தியா, ஹால்டேனை 1961 ஆம் ஆண்டு இந்தியக் குடிமகனாக ஏற்று அவருக்கு குடியுரிமை வழங்கியது.

                ஹால்டேன் ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு , ஜெர்மன் முதலிய மொழிகளில் மிகுந்த புலமை பெற்றிருந்தார். அரசியல், வரலாறு, வேதியியல், உயிரியல், கணிதம், மரபியல் முதலியவற்றில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.

                ஹால்டேன் ராயல் சொசைட்டியின் தகைமையாளராக 1932 இல் தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய மக்கள் தொகுப்பின் தோற்ற வேறுபாடு குறித்த ஆய்வைத் தொடங்கி வைத்ததை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு 1952 ஆம் ஆண்டு ‘ டார்வின் பதக்கம் ’ ராயல் சொசைட்டியால் வழங்கப்பட்டது. 1956 இல் அரச மானுடவியல் நிறுவனத்தால் ஹக்ஸி நினைவுப் பதக்கம் வழங்கப்பட்டது.

                லண்டன் லின்னேயன் சொசைட்டியால் பெருமைக்குரிய ‘டார்வின் வாலேஸ் பதக்கம்’ அளிக்கப்பட்டது. அவர் பெற்ற பிற பரிசுகள் 1961 இல் பெற்ற ‘பெல்ட்டி நெல்லி பரிசு’, அறிவியலுக்கான மதிப்புறு முனைவர் பட்டம், புதுக்கல்லூரியின் ‘மதிப்புறு தகைஞர் ’ தகுதி, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய அறிவியல் அகாடெமி வழங்கிய ‘கிம்பளர் பரிசு’ , பிரெஞ்சு அரசு 1937 ஆம் ஆண்டு ‘பிரெஞ்சு நாட்டின் சிறப்புநிலைக் கௌரவம்’, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ‘வெல்டன் நினைவுப் பரிசு’ முதலிய பரிசுகளும், பதக்கங்களும், பாராட்டுகளும் பெற்றார்.        

                ஹால்டேன் 1932 முதல் 1934 வரை மரபியல் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். ‘டெய்லி ஒர்க்கர்’ என்னும் கம்யூனிஸ்ட் இதழின் இலண்டன் பதிப்பிற்கான பதிப்புக்குழுத் தலைவராக விளங்கினார். கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக 1942 முதல் 1956 வரை செயல்பட்டார்.

 ‘மார்க்சிய தத்துவமும் அறிவியலும்,’ ‘வேதியியல் போர்க்கருவிகளிலிருந்து பாதுகாப்பு’ , ‘கடைசித் தீர்ப்பு’, ‘விலங்கு உயிரியல் ’, ‘உயிரினத் தொடக்கம்’, ‘ அறிவியலும் அறவியலும்’, ‘என்சைம்‘, ‘பரிமாணத்திற்கான காரணங்கள்‘, ‘உண்மையும் நம்பிக்கைகளும்’, `அறிவியலும் மனிதவாழ்வும்’, `அறிவியலும் நீங்களும்’, `சந்ததியும் அறிவியலும்’, `மரபியலில் புதிய பாதை’, `அமைதியிலும் போரிலும்’, `அறிவியல் முன்னேற்றம்’, `எது வாழ்க்கை’ என இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இவ்வுலகிற்கு அளித்துள்ளார்.

                அறிவியல் வளர்ச்சியை, அறிவியல் கொள்கைகளை சாதாரண மக்களுக்கும் புரியும்படி கூறவேண்டியது அறிவியல் அறிஞர்களின் கடமையென ஹால்டேன் வலியுறுத்தினார்.

                ஹால்டேன் 01-12-1964 ஆம் ஆண்டு மறைந்தார். அவரது விருப்பப்படி, அவரது உடல் காக்கிநாடாவில் உள்ள இரங்கராயா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

                ஹால்டேன் , எதையும் சோதனை செய்து தனக்குச் சரியெனப்படும் கருத்துக்களை சுதந்திரமாகவும் துணிச்சலாகவும் வெளிப்படுத்துபவராகவும், பெண்களுக்கும் பாமர மக்களுக்கும் சமஉரிமை அளிப்பவராகவும், பொதுவுடைமைச் சிந்தனையாளராகவும் விளங்கினார். பிறருக்கு உதவுவதைத் தமது வாழ்நாள் குறிக்கோளாய்க் கொண்டு வாழ்ந்தார்.

- பி.தயாளன்

Pin It

ஹம்ப்பிரி டேவி இங்கிலாந்தில் உள்ள கடற்கரை நகரமான பென்ஸான்ஸ் என்னும் ஊரில் 1778-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் மரவேலை செய்யும்  தச்சுத் தொழிலாளியாவார்.

humphry davyஹம்ப்பிரி டேவி பென்ஸான்ஸிலும் அதன் அருகில் உள்ள டிருரோ நகரிலும் கல்வி பயின்றார். டேவி இளம்வயதில் மிகவும் நுட்பமான மதியும், சிறந்த சொல்லாற்றல் திறனும் கொண்டு விளங்கினார். டேவி நூல் நிலையத்திற்குச் சென்று நூல்கiளைப் படிக்கும் வழக்கத்தை சிறு வயது முதலே கொண்டிருந்தார் வில்லியம் நிக்கல்ஸன் என்பவர் எழுதிய அறிவியல் நூல் அவரைக் கவர்ந்தது. வில்லியம் நிக்கல்ஸன் மின்சாரத்தைப் பயன்படுத்தி நீரை அதன் மூலப் பொருள்களான ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனாகவும் பகுக்க முடியும் என்று கண்டறிந்தவர். மேலும், டேவி பிரான்ஸ் நாட்டு அறிவியலாளரான ஆண்வான்லவ்வாஸ்யே என்பவர் எழுதிய அறிவியல் கட்டுரைகள் அடங்கிய நூலையும் படித்தார். இதுபோன்று அறிவியல் நூல்களைப் படிக்கப் படிக்க அவர் இரசாயனத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். டேவி தாமே பல அறிவியல் சோதனைகளிலும் ஈடுபட்டார்.

டேவி பள்ளியில் படிக்கும்போது, அவரது தந்தையார் திடீரென்று இறந்துவிட்டார். தந்தையார் விட்டுச் சென்ற கடனை, வீட்டிலிருந்த பொருள்களை விற்று அடைத்தார். தமது தாயைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. டேவி ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பணியாளராகச் சேர்ந்தார். அங்கிருந்த மருத்துவர் இரசாயனக் கலவை தயார் செய்வது பற்றி டேவிக்குக் கற்பித்தார். டேவி, தமது இரசாயன அறிவை வளர்த்துக் கொண்டார். அந்த ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த நூல் நிலையத்தில் இரசாயனம் சம்பந்தமான நூல்களை எடுத்துப் படித்தார். அதில் கூறப்பட்டிருந்த பரிசோதனைகளைச் செய்து பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்தார்.

ஜேம்ஸ்வாட் என்னும் புகழ்பெற்ற அறிவியலாளரின் மகனான ஜீனியர் ஜேம்ஸ்வாட்டுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. அவர் டேவியை அரசர்பிரான் சங்கத்தின் தலைவரான கில்பெர்ட்டுக்கு அறிமுகப்படுத்தினார். டேவியின் அறிவுக் கூர்மையைக் கண்டு வியந்த கில்பெர்ட், அவரை ‘வாயு இயல் சங்கத்தின்’ நிறுவனருக்குப் பரிந்துரை செய்தார். அங்கு எந்தெந்த வாயுவுக்கு என்னென்ன மருத்துவக் குணங்கள் உள்ளன என்பதை ஆராய்ச்சி செய்தார். மேலும், அச்சங்கத்தின் தலைமை பொறுப்பு டேவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பள்ளியில் சென்று இரசாயனம் பயிலாமல், தாமே அறிவியல் கற்று, நைட்ரேட் ஆக்ஸைடு என்ற வாயுவைக் கண்டுபிடித்து, அதன் மருத்துவக் குணங்களை ஆராய்ந்தார். வாயுக்களை ஆராய்ச்சி செய்வது ஆபத்தானதொரு செயல். அது சிலநேரங்களில் ஆராய்ச்சி செய்பவரின் உயிரையே பறித்துவிடும். ஆனாலும், டேவி நைட்ரேட் ஆக்ஸைடு வாயுவைப் பற்றி ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டார். அந்த வாயு நஞ்சுமிக்கது அல்ல என்பதைக் கண்டறிந்தார். பின்னர், அந்த வாயுவை அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தினார். நோயாளி மயக்க நிலை அடைவதை அறிந்தார். மேலும், அறுவை சிகிச்சையின்போது நோயாளி வலியை உணரமாட்டார் என்பதையும், அந்த வாயுவுக்கு வலியை மறக்கடிக்கச் செய்யும் சக்தி உண்டு என்பதையும் அறிந்தார். தாம் கண்டறிந்ததை மருத்துவர்களுக்கு எடுத்துரைத்தார். அவர்கள் அறுவை சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு குளோரோபார்ம் வாயுவைச் செலுத்தி வெற்றி கண்டனர்.

                டேவிக்கு ‘காப்ளே பதக்கம்’ உள்ளிட்ட பல விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. உலகம் முழுவதும் டேவியைப் பாராட்டியது.

ஒருசமயம் அமெரிக்க பல் மருத்துவர் ஒருவர் தம்முடைய பல்லைப் பிடுங்க வேண்டியிருந்தது, அவர் தம்மீது குளோரோபார்ம் செலுத்தினார், அவருக்கு வலி தெரியவில்லை. அந்த வாயுவை டேவி அளவுக்கு அதிகமாக உறிஞ்சியபொழுது அவர் தன்னை மீறி விழுந்து விழுந்து சிரித்தார். அன்று முதல் அந்த வாயு ‘சிரிக்க வைக்கும் வாயு’ (Laughing Gas) என்று அழைக்கப்படுகிறது.

ராம்பர்ட்பிரபு என்ற அமெரிக்க நாட்டு அறிஞர் லண்டன் நகரில் ‘இராயல் நிறுவனம்’ (Royal Institution) என்னும் அமைப்பை நிறுவினார். அந்நிறுவனத்தில் இரசாயனப் பேராசிரியராக டேவியை நியமித்தார். தோல் பதனிடுதல் குறித்த டேவியின் உரை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இராயல் நிறுவனத்தின் விவசாயப் பிரிவினர், அவரை விவசாயத்துறையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டனர். அவர் விவசாயத்தில் இரசாயனங்களின் பயன்பாடு குறித்து ஆராய்ந்தார். இரசாயன உரங்கள் தயாரிப்பதில் பல மாற்றங்களையும், புதிய முறைகளையும் கண்டறிந்தார்.

குழந்தைகளுக்கான அறிவியல் உரைகளை, ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் வாரத்தில் நிகழ்த்தி எதிர்கால சமுதாயம் அறிவியல் அறிவு பெற பாடுபட்டார்.

நிக்கல்சன் போன்றவர்களுடன் இணைந்து ‘மின்சார – இரசாயனம்’ என்னும் துறையை டேவி நிறுவினார்.

பிளாட்டினம் என்ற உலோகத்தில் செய்யப்பட்ட கிண்ணம் ஒன்றில் டேவி சோடியம் ஹைடிராக்ஸைடை எடுத்து, பிளாட்டினக் கம்பியையும், ஒரு மின் கலத்தின் முனையையும் ஒரு மின் கம்பியினால் இணைத்தார். அப்போது சோடியம் ஹைட்ராக்ஸைடு கரைசல் மேலும் இளகி அதிலிருந்து சோடியம் வெளிப்பட்டு உலோக உருண்டைகளாக மாறி குமிழ்களாக மேலே வந்தன. வெளிக்காற்று வந்ததும் தீப்பற்றி எரிந்து போயின. இப்படி சோடியம் உலோகத்தை அதன் உப்புகளிலிருந்து , அதாவது ,சோடியம் ஹைட்ராக்ஸைடு சோடியம் குளோரைடு ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் டேவியே ஆவார். அதே ‘மின்சார – இராசயன’ முறையைப் பயன்படுத்தி பொட்டாசியம் உலோகத்தைப் பிரித்தெடுக்க டேவி வகை செய்தார். மக்னீஷியம், கால்சியம், குளோரின், பேரியம் முதலிய தனிமங்களைப் பிரித்தெடுக்க வழிகாட்டினார்.

பிற்காலத்தில் அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்தாகவும், வலி தெரியாமல் உணர்ச்சியடங்கச் செய்வதற்காகவும் இந்த வாயுவை ‘அனெஸ்தெடிக்காக’ மருத்துவர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள். டேவியின் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பாராட்டி பிரான்ஸ் நாட்டு மன்னர் நெப்போலியன் ‘தங்கப் பதக்கம்’ வழங்கிச் சிறப்பித்தார்.

டேவி, ‘ஆர்க் லாம்ப்’ எனப்படும் மின் விளக்கை உருவாக்கினார். இதனை அவர் 1809-ஆம் ஆண்டு இராயல் நிறுவனத்தில் செயல்படுத்திக் காட்டினார்.

தொழிலாளர்களின் உயிர்ப் பாதுகாப்பிற்கு வழிகோலிய இந்த விளக்கைக்   கண்டுபிடித்ததற்காக ஒரு பைசாக் கூட வாங்கவில்லை, ‘என் ஒரே குறிக்கோள் மனித சமுதாயத்துக்குப் பணியாற்றுவதுதான், நான் பயன்பெறுவதற்கல்ல’ என அறிவித்தார் டேவி. இவர் கண்டுவிடித்த ‘ஆர்க் லாம்ப்’ இராணுவம், திரைப்படத்துறை மற்றும் சுரங்கத்துறை முதலியவற்றில் இன்று மிகுந்த பயனடையுதாக விளங்கி வருகிறது.

நிலக்கரி சுரங்கத்தினுள் உருவாகும் எரிவாயுவினால் விபத்துகள் அடிக்கடி ஏற்படும், இந்த விபத்துக்களில் சிக்கி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பலியானார்கள். குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ‘பயர் டாம்ப்’ எனப்படும் இத்தகைய எரி வாயுவினால் மடியும் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேயிருந்தது. நிலக்கரியை வெட்டி எடுப்பதற்குச் சுரங்கம் அமைத்துக் கொண்டிருக்கும்போது, நிலக்கரி வாயு உண்டாகிறது. இந்த வாயு சுரங்கத்தில் நிறைய சூழ்ந்து கொள்ளும்போது சுரங்கத் தொழிலாளர்கள் வெளிச்சத்துக்காகப் பயன்படுத்தும் விளக்குகளின் சுடர், இந்த நிலக்கரி வாயுவில் தீப்பற்ற வெடி விபத்து ஏற்படுகிறது. விளக்குச் சுடர், வாயுவோடு தொடர்பு கொள்ளாமலிருக்க பாதுகாப்பு முறைகளில் அப்போது அதிக கவனம் செலுத்தப்படவில்லை.

விபத்துக்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தது, அதைத் தடுத்திட, ‘நிலக்கரிச் சுரங்க விபத்துக்களைத் தடுக்கும் கழகம்’ (Society for Preventing Accidents in Collieries) டேவியிடம் விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து அளிக்கும்படி கேட்டுக்கொண்டது. அவர் முயற்சி செய்து ‘டேவியின் காப்பு விளக்கு’ என்ற விளக்கைக் கண்டுபிடித்து உலகிற்கு வழங்கினார். 1815-ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு விளக்கு (Safety Lamp) டேவிக்கு புகழ் சேர்த்தது.

மைக்கேல் பாரடே 1812-ஆம் ஆண்டு ஹம்ப்பிரி டேவியைச் சந்தித்தார். அவரது அறிவியல் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, தமது சோதனைக் கூடத்திலேயே பணிக்கு அமர்த்திக் கொண்டார். அதன் விளைவாக எதிர்காலத்தில் மைக்கேல் பாரடே ஒரு புகழ் வாய்ந்த விஞ்ஞானியாகத் திகழ்ந்தார். காற்றில்லாத பேழையில் பனிக்கட்டிகளை வைத்து டேவி ஆராய்ச்சி செய்தார் பனிக்கட்டிகள் இரண்டையும் உராயும்படி செய்தார். பனிக் கட்டிகள் உருகி நீராயின. இந்த ஆராய்ச்சியின் பயனாக ஒரு பொருளிலுள்ள அணுக்கள் மிக விரைவாக அசைவதால் வெப்பம் உண்டாகிறது என்கிற உண்மையை உலகுக்கு அறிவித்தார்.

இங்கிலாந்து மன்னர் ஹம்ப்பிரி டேவிக்கு ‘சர்’ பட்டம் வழங்கி அவரைக் கௌரவித்தார். டேவி இளம் விதவைப் பெண்ணை 1813-ஆம் ஆண்டு மணம்புரிந்தார். டேவி, அவரது மனைவி, மைக்கேல்ஃபாரடே ஆகிய மூவரும் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது பாரிஸ் நகருக்குச் சென்றனர், அங்க ‘பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்’ நிறுவனத்தின் உறுப்பினர் பதவி என்னும் அந்தஸ்து டேவிக்கு வழங்கப்பட்டது.

இத்தாலியில் உள்ள பிளாரென்ஸ் நகரில் அவர் தமது ஆராய்ச்சியின் விளைவாக வந்த வில்வடிவத் தீப்பொறியைக் கொண்டு ஒரு வைரத்தை எரித்துக் காட்டி, ‘வைரம் சுத்தமான கரியே’ என்பதை நிரூபித்தார்.

ஸ்வீடன் நாட்டு இரசாயன விஞ்ஞானி பெர்ஸிலியஸ் என்பவருடன் டேவி வாதம் புரிந்து குளோரின் ஒரு தனிமமே என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தார். டேவி நிலக்கரிச் சுரங்கத்தில் வெளிச்சம் ஏற்பட கண்டுபிடித்த பாதுகாப்பு விளக்கின் உரிமையைப் பதிவு செய்யும்படி அவரது நண்பர்கள் கூறினார்கள். ஆனால் அவர் பதிவு செய்ய மறுத்துவிட்டார். டேவி பொதுநலம் பேணும் பண்பாளர்.

“இதுபோன்ற சுயநல எண்ணம் என் இதயம் நினைத்துப் பார்த்ததே இல்லை. என்னுடைய பாதுகாப்பு விளக்கு சுரங்கத் தொழிலாளிகளுக்குப் பேருதவி செய்கிறது. என்னை எல்லோரும் பாராட்டுகிறார்கள். அதுவே எனக்குப் போதும்”- என்று டேவி கூறிவிட்டார்.

இவரது அரிய கண்டுபிடிப்பைப் பாராட்டி சுரங்கத் தொழிலாளர்கள் அவருக்கு, வெள்ளியால் செய்த சாப்பாட்டுப் பாத்திரங்களைப் பரிசாக வழங்கினர். அவ்விளக்கை அமைத்ததற்காக டேவி யாதொரு கட்டணமும் பெற மறுத்துவிட்டார்.

தாம் மறைந்த பிறகு அந்த வெள்ளிப் பாத்திரங்களை உருக்கி விற்று அந்தத் தொகையைக் கொண்டு ‘டேவி பதக்கம்’ என்னும் பரிசு முறை உருவாக்கப்பட வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார். அய்ரோப்பியாவிலோ, அமெரிக்காவிலோ ஒவ்வொரு ஆண்டிலும் மேற்கொள்ளப்படும் மிகச்சிறந்த இராசாயனக் கண்டுபிடிப்புக்கு டேவி பதக்கம் பரிசாக அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தமது உயிலில் எழுதி வைத்துவிட்டுச் சென்றார்.

‘இளங்கோமான்’ (Knight) என்னும் பட்டத்தை 1811-ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசர் டேவிக்கு வழங்கிப் பாராட்டினார். ‘இராயல் நிறுவன’த்தின் தலைவராக இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார்.

ஹம்ப்பிரி டேவி 1829-ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி ஜெனிவாவில் காலமானார். இவரை இன்றும் அறிவியல் உலகம் ‘மின்சார – இரசாயனத்தின் தந்தை’ எனப் போற்றிப் பாராட்டுகிறது. 

 - பி.தயாளன்

Pin It

                ஹாலந்து தேசத்திலிருந்து வந்து அமெரிக்காவின் வட பாகத்திலிருந்த எலிஸபெத் போர்ட் என்னும் ஊரில், 1730 ஆம் ஆண்டில் எடிசன் என்பவர் குடியேறினார். அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசனின் பாட்டனார். அவரது தந்தை ஸாமியல் எடிசன் காலத்தில் அமெரிக்காவின் வடபாகத்திலிருந்தவர்களுக்கும், தென் பாகத்திலிருந்தவர்களுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக, தெற்கே மிலான் என்னும் ஊரில் 1842 ஆம் ஆண்டு ஸாமியல் எடிசன் குடியேறினார். மிலான் நகரம் ஓர் ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. இதனால், அங்கே தானியங்களின் ஏற்றுமதி , இறக்குமதி வியாபாரம் அதிகமாக நடைபெற்று வந்தது. ஸாமியல் எடிசன் படகுகள், வீடுகள் முதலிய கட்டுவதற்கு பயன்படுத்தப்டும் பலகைகள் அறுத்து ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் ஒரு பட்டறையை ஆரம்பித்தார். ஸாமியல் எடிசனுக்கு, 11-02-1847 ஆம் நாள் மகனாகப் பிறந்தார் தாமஸ் ஆல்வா எடிசன். ஏழு வயது வரை மிலான் நகரத்தில் வளர்ந்தார். இளம் வயதில் அதிக விளையாட்டுப் புத்தியுடையவராயிருந்தார். அதேவேளை எதையும் கூர்ந்து கவனிக்கிற தன்மையும் இருந்தது. மற்ற குழந்தைகளோடு இயல்பாக விளையாடுவது இல்லை. அதற்கு மாறாக, தமது தந்தையிடம் சென்று ஏதேனும் கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருப்பார்.

thomas edison

                தந்தையின் வியாபாரம் குறைந்தது. எனவே, குடும்பத்தோடு ‘ஹியூரான் போர் ‘ (ழரசடிn ஞடிசவ) என்னும் துறைமுகப்பட்டினத்திற்குச் சென்று குடியேறினார். அந்த ஊரில் தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லவில்லை. மூன்று மாதம் வரையில்தான், பள்ளிக் கூடம் சென்றார். ஆசிரியர்கள் இவரை முட்டாளென்று பரிகசித்தார்கள். எடிசனுடைய தாயார் , தன் மகனைப் பள்ளிக்கு அனுப்பாமல் , தானே வீட்டில் பாடம் கற்பித்து வந்தார்; மகனும் உற்சாகத்தோடு, ஆர்வமாக படித்தார். எடிசன் சிறுவயது முதற் கொண்டே வரலாறு, வானஇயல், அறிவியல், வேதியியல் முதலியவை சம்பந்தப்பட்ட நூல்கள் மீது ஆர்வங்கொண்டு படித்தார். தான் படித்தவற்றைப் பரிசோதனை செய்து பார்ப்பதில் எடிசனுக்கு ஆர்வம் மிக அதிகம். இதற்காக வீட்டின் அறையொன்றில் , தனக்கு வேண்டிய கண்ணாடிப் புட்டிகள், சில திராவகங்கள் முதலியவற்றைச் சேகரித்து, தனது முதல் பரிசோதனைச் சாலையை அமைத்தார். பெற்றோர்கள் கைச்செலவுக்கென்று கொடுக்கும் பணத்தில், மருந்துக் கடைக்குச் சென்று தேவையான ரசாயனப் பொருள்களை வாங்கி வந்து விடுவார். இவரது உற்சாகமும், உழைப்பும் ரசாயனப் பரிசோதனையிலேயே சென்றன.

                ரசாயனப்பொருள்கள் வாங்க எடிசனுக்கு பணம் தேவைப்பட்டது. எனவே, தாமே பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். இரயில் வண்டிகளில் பத்திரிக்கைகள் விற்றுப் பணம் சம்பாதிக்கத் தீர்மானித்தார். ஹியூரான் பட்டினத்திற்கும் டெட்ராயிட் என்னும் ஊருக்கும் இடையே சென்று கொண்டிருந்த ‘ கிராண்ட் ட்ரங்க் ‘ இரயிலில் பத்திரிகைகளை விற்க இரயில்வே அதிகாரிகளிடம் அனுமதி பெற்றார். காலை முதல் இரவு வரை இரயிலில் பத்திரிகைகள் விற்றுப் பணம் சம்பாதித்தார் எடிசன். பிறகு, கையிலிருந்த பணத்தைக் கொண்டு ஹியூரான் இரயில் நிலையத்தில் பத்திரிகைகளை விற்பதற்கென்று ஒரு கடையும், கறிகாய்கள் விற்பதெற்கென்று ஒரு கடையும் ஆரம்பித்து நடத்தினார். இரவு பகலாக உழைத்துச் சம்பாதித்தார். அப்பொழுது எடிசனுக்கு வயது பன்னிரண்டு தான் !

                எடிசன் தாம் சம்பாதித்த பணத்தில் ஒரு டாலரைத் தாயாரிடம் கொடுத்து விடுவார். மீதிப் பணத்திலிருந்து தனது சோதனைக்கு வேண்டிய இரசாயனப் பொருள்கள் வாங்குவதற்கு செலவிட்டார். பத்திரிகைகளைச் சேமித்து வைத்து விற்பதற்காக, இரயில்வே அதிகாரிகள் எடிசனுக்கு, சாமான்களை போட்டு வைக்கும் பெட்டியில் ஒர் இடம் கொடுத்திருந்தார்கள். பத்திரிகைகள் விற்கிற நேரம் போக மற்ற நேரங்களில் , இந்தப் பெட்டியிலேயே ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பார்.

                ஜெர்மன் இரசாயன அறிவியலாளர் எழுதிய நூலொன்று இவருக்குக் கிடைத்தது. அதைப் படித்து, அதில் கூறப்பட்டடுள்ள ஒவ்வொரு பரிசோதனையையும் செய்து பார்த்தார் எடிசன்!

                பத்திரிகைச் செய்திகளைப் படிப்பதில் மக்களுக்கு உள்ள ஆர்வத்தை அறிந்த எடிசன், தாமே ஒரு பத்திரிகையை நடத்திட முடிவு செய்தார். டெட்ராயிட் நகரத்திலிருந்து ஒரு சிறிய அச்சு இயந்திரத்தையும், அதற்கு வேண்டிய எழுத்துக்களையும் வாங்கினார். அச்சுக் கோப்பது முதலிய அனைத்து வேலைகளையும் விரைவிலேயே கற்றுக் கொண்டு ‘ தி வீக்லி ஹெரால்ட் ‘ என்னும் வாரப் பத்திரிகையை வெளியிட்டார். இவரே ஆசிரியர், அச்சுக் கோர்ப்பவர், அச்சடிக்கிறவர், விளம்பரம் சேகரிப்பவர், பத்திரிகைகளை விநியோகிப்பவர் - என அனைத்தும் அவரே செய்தார். இந்தக் காலத்தில் எடிசனுக்கு மின்சார சக்தி எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.

                இரயில் வண்டியில் நடந்து கொண்டிருந்த எடிசனுடைய பத்திரிகாலயமும், பரிசோதனைச் சாலையும் நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால், ஒரு நாள் இரயில் வண்டி வேகமாகச் சென்று கொண்டு இருந்த போது , எடிசனுடைய பெட்டியிலிருந்த ஒரு கந்தக வத்தி திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. இந்தத் தீ இரயில் வண்டி முழுவதும் பரவியது. உடனே வண்டியை நிறுத்தி, தண்ணீரைக் கொண்டு தீயை அணைத்தார்கள். இரயில்வே கார்டு மிகுந்த கோபத்தோடு, எடிசன் பெட்டியிலிருந்த அச்சு இயந்திரத்தையும், பரிசோதனைக் கருவிகளையும் மவுண்ட் கிளமென்ஸ் என்ற இரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் தூக்கியெறிந்து விட்டான். எடிசனுடைய காதை திருகி , கன்னத்திலும் ஓங்கி அறைந்து விட்டான். எடிசனுக்கு அன்று முதல் சரியாகக் காது கேளாதவனாகவே தமது வாழ்நாள் முழுவதும் இருந்தார். இதன் பிறகு அச்சு இயந்திரத்தையும், பரிசோதனைச் சாலையையும் தமது வீட்டிற்கே கொண்டு வந்து விட்டார். சிறிது காலத்தில் பத்திரிகை நின்றுவிட்டது.

                டெட்ராயிட் நகரத்தில் உள்ள அரசாங்க புத்தக சாலைக்குச் சென்று பல நூல்களைப் படித்து அறிவை பெருக்கிக் கொண்டார். மேலும், இரயில்வே பணிமனைக்குச் சென்று , அங்கே இயந்திரங்கள் எப்படி இயங்குகிறது என்பதை கவனித்து வந்தார். அங்கே பணிபுரிந்தவர்களுடன் நட்பு கொண்டு , இரயில்வே இஞ்சினையும் தானே ஓட்டினார்.

                 எந்த இரயில் நிலையத்தில் எடிசனுடைய சாமான்களெல்லாம் தூக்கியெறியப்பட்டனவோ, அதே மவுண்ட் கிளாமன்ஸ் இரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் எடிசன் ஒரு வண்டிக்காகக் காத்துக் கொண்டிருந்தார். அங்கு, ஸ்டேசன் மாஸ்டரான மெக்கன்ஸி என்பவரது குழந்தை இரயில் பாதையில் விளையாடிக் கொண்டிருந்தது. இதன் பின்னால் ஒரு சரக்கு இரயில் வந்து கொண்டிருந்தது. குழந்தைக்கு இது தெரியவில்லை. இதனைக் கவனித்த எடிசன், தன் கையிலிருந்த பத்திரிகைக் கட்டையும், தலைத் தொப்பியையும் தூக்கியெறிந்து விட்டுக் கீழே இறங்கிக் குழந்தையைக் காப்பாற்றினார். ஸ்டேசன் மாஸ்டரான மெக்கன்ஸி, இவருக்கு நன்றி செலுத்தினார். மேலும், எடிசனை இரயில்வே தந்தியடிக்கும் தொழிலில் சேர்த்து விட்டார். இறுதியில் ஓண்ட்டாரியா மாநிலத்திலுள்ள ‘ஸ்ட்ரா போர்ட் ‘ இரயில் நிலையத்தில் எடிசனுக்கு ஒரு தந்தி குமாஸ்தா வேலை கிடைத்தது. காலை முதல் மாலை வரை பன்னிரண்டு மணி நேரம் பணிபுரிந்தார். எடிசன், பல ஊர்களில் தந்தி குமாஸ்தாவகப் பணி புரிந்தார் . தான் ஏற்றுக் கொண்டுள்ள தொழிலில் மனப்பூர்வமாக ஈடுபட்டு, அதில் இன்னும் என்னென்ன விதமான முன்னேற்றங்களைச் செய்யலாம் என்பதில் கவனம் செலுத்தினார். ஒரு நாள் இவர் பரிசோதனை செய்து கொண்டிருந்த போது, திராவகம் இரயில் நிலைய மேலாளருடைய மேஜை விரிப்பை எரித்துப் பாழாக்கிவிட்டது. இதனால் கோபம் கொண்ட மேலாளர், எடிசனை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.

                மீண்டும் வேலை தேடி அலைந்தார். எப்படியோ முயற்சி செய்து, மின்சார சாமான்கள் செய்கிற ஒரு பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார். இங்கே வேலை செய்து கொண்டிருக்கும் போதுதான் , சட்டசபைகளில் ஒட்டுகள் எடுப்பதற்கு ஒரு கருவியைக் கண்டுபிடித்து அதன் உரிமையைப் பதிவு செய்தார். இதுதான் இவர் முதன் முதலாகக் கண்டுபிடித்த கருவி.1869 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நாளன்று இதற்கான உரிமையை பதிவு செய்தார். இக்கருவியைப் பற்றி சட்டசபை அதிகாரிகள் முன்னிலையில் விளக்கிச் சொல்ல வாஷிங்டன் நகருக்குச் சென்றார். ஆனால், அதிகாரிகள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

                பின்னர், எடிசன் வேலைக்காக பல ஊர்களிலும் அலைந்து திரிந்தார். இறுதியில் பாஸ்ட்டன் நகரில் ஒரு தந்தி அலுவலகத்தில் வேலையில் சேர்ந்தார். தனது ஊதியத்தின் பெரும் பகுதியை நூல்கள் வாங்குவதிலும், ஆராய்ச்சிக் கருவிகள் வாங்குவதிலும் செலவழித்தார். தினம் பதினெட்டு மணி நேரம் பணி புரிந்தார். ஒரு நாள் தமது நண்பனான ஆடம்ஸ் என்பவரிடம், “ நான் செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. வாழ்க்கையோ மிகக் குறுகியது. ஆதனால் நான் மிக வேகமாக வேலை செய்யப்போகிறேன்”. – என்று சொன்னார். எடிசனின் மனமெல்லாம் ஆராய்ச்சியில் சென்றதே தவிர, தந்தி ஆபிஸ் வேலையில் ஈடுபடவில்லை. இதற்காக எடிசன் சோர்வு அடையவில்லை. அதற்குப் பதிலாக புதிய சாதனங்கள் பலவற்றைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று உறுதிபூண்டார்.

                நியூயார்க் நகரத்தில் தங்க நாணயத்தை விற்பனை செய்கிற ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். இவர் , தங்க விலையின் ஏற்றத்தையும், இறக்கத்தையும் அறிவிக்கிற மின்சாரக் கருவியை, பல வகையிலும் மேம்படுத்தி, வியாபாரிகள் எளிதாக தங்க விலையை அறிந்து கொள்கிற மாதிரி செய்தார். அப்பொழுது எடிசனுக்கு வயது இருபத்திரெண்டு !

                லெப்பர்ட்ஸ் என்பவர், எடிசனுடைய ஆராய்ச்சிகளுக்கெல்லாம் ஊக்கமளித்து வந்தார். பல புதிய கருவிகளைக் கண்டுபிடித்தார். எடிசனுக்கு, லெப்பர்ட்ஸ் நாற்பதினாயிரம் டாலர் கொடுத்தார். அந்த பணத்தைப் போட வங்கியில் கணக்குத் திறந்தார் எடிசன் !

                 எடிசன், தமக்குக் கிடைத்த தொகையை மூலதனமாகக் கொண்டு, நேவார்க் என்னும் இடத்தில் ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்தார். அத்தொழிற்சாலையில் ஜம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். தொழிலாளர்களோடு இணைந்து தானும் உழைத்தார். நல்ல வருமானம் கிடைத்தது. அதைக் கொண்டு மேலும் ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்தார். இந்தத் தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டிருந்த காலத்தில் சுமார் நாற்பத்தைந்து விதமான புதிய கருவிகளைக் கண்டுபிடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்.

                ‘ ஸ்டென்சில்’  முறையைக் கண்டுபிடித்தவர் எடிசன் தான். டெலிபோன் முறையை அய்ரோப்பாவின் பல இடங்களில் பரப்புவதற்காகச் சில நிறுவனங்களையும் ஆரம்பித்தார். லண்டனில் நிறுவப்பட்ட , எடிசனின் நிறுவனமொன்றில் 1879 ஆம் ஆண்டு பிரபல ஆங்கில நாவலாசிரியரான பெர்னாட் ஷா ஒரு எழுத்தராகப் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                லௌட் ஸ்பீக்கர் என்ற ஒலிபரப்பும் கருவி எடிசனால் கண்டுபிடிக்கப்பட்டது.

                மேரி ஸ்ட்டில் வெல் என்ற பெண்மணியை மணந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார் எடிசன். தமது மனைவியுடன் நியூயார்க் நகரின் அருகில் உள்ள மென்லோ பார்க் என்னும் இடத்திற்குச் சென்று வசித்தார்.

                ‘ போனோகிராப்’ என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். எடிசன் கண்டுபிடித்த முதல் போனோகிராப் கருவி இப்பொழுது லண்டனிலுள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. பல செல்வந்தர்களின் துணையோடு ‘எலக்ட்ரிக் லைட் கம்பெனி ‘ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் எடிசன். அதிக பிரகாசமுடையதாகவும், மலிவாகவும் உள்ள மின்சார விளக்கை கண்டுபிடிக்க எடிசன் செய்த பரிசோதனை சுமார் 1600 என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. முதன் முதலாக மின்சார விளக்குகள் நியூயார்க் நகரத்தில் எரியத் தொடங்கியது 1882 ஆம் ஆண்டு செப்படம்பர் மாதம் நான்காம் நாள் ஆகும். 1890 ஆம் ஆண்டு சலனப்படக் கருவியைக் கண்டுபிடித்தார். இதற்கு ‘ கினிடோகிராப்’ என்று அப்பொழுது பெயர். இதுவே பின்னர் சினிமாவாயிற்று. எடிசன் முயன்று பேசும் சலனப்பட நிலைக்கு கொண்டு வந்தார்.

                                தாமஸ் ஆல்வா எடிசன் தமது அறுபத்து மூன்றாவது வயதிற்குள் 1328 புதிய சாதனங்களைக் கண்டுபிடித்து உரிமைகளைப் பதிவு செய்தார்.

                எடிசன் எப்பொழுதும் ஒய்வு எடுத்தது கிடையாது. ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்குச் செல்வது தான் அவருக்கு ஒய்வு. எடிசன் தமது எழுபத்தைந்தாவது வயதில் கூட மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்தார். நாள் ஒன்றுக்கு பதினெட்டு முதல் இருபது மணி நேரம் வேலை செய்வார். எடிசன் ஆடம்பரத்தை விரும்பாதவர். மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.

                எடிசன் , தமது ஆராய்ச்சி உரிமைகளைப் பதிவு செய்து கொண்டதன் மூலமாகவும் அவற்றைப் பிறருக்கு விற்பனை செய்ததன் மூலமாகவும் ஏராளமான பொருள் சம்பாதித்தார். ஆனால், அவர் பணமே தமது லட்சியமாகக் கொள்ளவில்லை.

                 விடா முயற்சி, சலியாத உழைப்பு இவை இரண்டும் தான் எடிசனுடைய வாழ்க்கையை நிர்ணயித்தது.

                எடிசன் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் நாள், தமது எண்பத்து நான்காவது வயதில் காலமானார். அவர் மறைந்தாலும், அவரது அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக மக்கள் மனதில் அவரது பெயர் என்றும் நிலைத்து நிற்கும்!

- பி.தயாளன்

Pin It

kamil zvelebil

                அயல்நாட்டில் பிறந்து, தமிழுக்கும் திராவிட இயலுக்கும் தொண்டாற்றிய சிறந்த அறிஞர்களில் ஒருவர் பேராசிரியர் முனைவர் கமில் வாக்லேவ் சுவெலபில்.

                அய்ரோப்பிய நாடான செக்கோலோவாகியாவின் ப்ரேக் என்னும் நகரில், 1927 நவம்பரில் 17-ல் பிறந்தார், கமில் சுவெலபில்; தந்தை கமில் சுவெலபில், தாயார் மரியம்மா ஆவார்.

                ப்ரேக் (Prague) நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக் கழகத்தில் (Charles University) 1946 முதல் 1952 வரை ஆறு ஆண்டுகள் பயின்றார்.  இந்திய இயல்,  ஆங்கில மொழி, இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.  மேலும், சமஸ்கிருதம், ஆங்கிலம், தத்துவம் ஆகியவற்றில் ஆய்வு செய்து, முனைவர் (Ph.D.) பட்டத்தை 1952-ல்  தமது இருபத்தைந்தாவது வயதில் பெற்றார்.

                தமிழகத்திற்கு வருகை புரிந்து தமிழ்மொழியையும், தமிழ் இலக்கியத்தையும் கமில் சுவெலபில் நன்கு கற்றார்.  தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் முதலிய தமிழறிஞர்களிடம் பயின்றார்.  திராவிட மொழி அறிவியலை ஆய்ந்து, 1959-ஆம் ஆண்டு இரண்டாவது முனைவர் பட்டத்தைப் பெற்றார். 

                திராவிட மொழிகளின் ஆய்வுக்கு அடித்தளம் அமைத்தவர்கள் பிரான்சிசு எல்லிசு, கால்டுவெல் முதலிய அறிஞர்கள்.  அவர்களையடுத்து திராவிட மொழி ஆய்வுகளை முன்னெடுத்துச் சென்ற அயல்நாட்டவர்கள் எமனோ, பர்ரோ (Burrow) முதலியோர்.  ஏமனோவிடம் பயிலும் வாய்ப்பை கமில் சுவெலபில் பெற்றார்.  தமது முன்னோர்களை அடியொற்றி, திராவிடமொழி இயலை மேம்படுத்தினார்.  அத்துடன் தமிழ் இலக்கியம், மரபு, பண்பாடு ஆகியவற்றையும் நன்கு கற்றறிந்தார்.  தமது எழுத்தின் மூலம் ஆய்வுகளை உலகம் அறிந்திடச் செய்தார்.  நூல்கள், கட்டுரைகள், திறனாய்வுகள், சிறந்த மொழிபெயர்ப்புகள் ஆகியன அவரது எழுத்துக்களில் அடங்கும்.

                ‘தமிழ் இலக்கியப் பேரகராதி’ (Lexicon of Tamil Literature), ‘திராவிட மொழிகள் ஓர் அறிமுகம்’ (Dravidian Linguistics: An Introduction), ‘தமிழ் இலக்கிய வரலாற்றுக்குத் துணையான ஆய்வுகள்’ (Companion Studies to the History of Tamil Literature), ‘தமிழ் செம்மொழி யாப்பிலக்கணம்’(Classical Tamil prosody), ‘நீலமலை இருளர்கள்’(The Irulas of the Blue mountains), ‘தென்னிந்தியத் தமிழ் இலக்கியத்தில் முருகனின் புன்னகை’(The Smile of Murugan: on Tamil Literature of South India), ‘திராவிட மொழி ஒலிப்பியல் ஒப்பீடு’ (Comparative Dravidian Phonology), ‘சித்தர்கள் தேடிய இறவாமை’ (Siddha Quest for Immortalits), ‘சிந்து நாகரிகத்தின் காலம், எழுத்துமுறை (Indus Age:  The writing system), ‘தமிழ் இலக்கிய வரலாறு’(History of Tamil Literature), ‘திருமுருகன்’ (Thirumurugan), ‘தமிழ் இலக்கியம்’ (Tamil Literature), ‘தமிழ் மொழியின் இலக்கண வரலாறு ஓர் அறிமுகம்’ (Introduction to the Historical Grammer of the Tamil Language), ‘எமது வாழ்க்கைக் கதை’ (The Story of my life), ‘தொல்காப்பியம் - சொல்லதிகாரம், ‘தமிழிலக்கிய அறிமுகம்’  (Introducing Tamil Literature) முதலிய இருபத்தைந்துக்கும் மேலான ஆய்வு நூல்களை படைத்தளித்துள்ளார்.

                செக்கோஸ்லோவாகியாவில் உள்ள கீழையியல் துறையில் (Oreintal Institute of the Czechoslovak Academy of Sciences) தமிழ் திராவிட மொழியியல் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்தார்.  கிரேக்கம், இலத்தீன், ஜெர்மன், ஆங்கிலம், ருசியன், சமஸ்கிருதம், தமிழ் முதலிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.  மேலும், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, இத்தாலி, போலந்து மொழிகளையும் அறிவார்.

                செக்கோஸ்லாவாகிய நாட்டின் தூதரகத்தில் பணியாற்றிய ஒரு தமிழ் அன்பர் வழியாக தமிழ் கற்கத் தொடங்கிய கமில் சுவெலபில், வானொலி வழியாகவும், நூல்கள் வழியாகவும் தமிழ்படிக்கத் தொடங்கினார்.

                தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக சென்னைக்குக் களப்பணிக்காக பலமுறை வருகை புரிந்துள்ளார்.

                கமில் சுவெலபில் கற்கவும், கற்பிக்கவும் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்.  அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ பல்கலைக் கழகத்தில் 1965-66-ம் ஆண்டுகளிலும், ஜெர்மனி கெய்டல்பெர்க் பல்கலைக் கழகத்தில் 1967-1968 ஆண்டுகளிலும்  வருகை தரும் பேராசிரியராகப் பணியாற்றினார்.   மேலும்,  டெல்லி,  சென்னை,  டோக்கியோ, பிலாடெல்பியா,  மாஸ்கோ,  லெனின் கிராட் முதலிய நகரங்களுக்குச் சென்று  கற்பிக்கும்  பணியில்  ஈடுபட்டார்.

                ப்ரேக்  நகரில்  உள்ள சார்லஸ் பல்கலைக் கழகத்தில் 1968 ஆம் ஆண்டு  முதல் இணைப்பேராசிரியராகப்  பணிபுரிந்தார்.   பிரான்சில் 1970 ஆம் ஆண்டு  வருகைதறா பேராசிரியராகப்  பணிபுரிந்தார்.  லெய்டன் பல்கலைக் கழகத்திலும்  (ருniஎநசளவைல டிக டுநனைநn), நெதர்லாந்து , யூட்ரிச்  பல்கலைக் கழகத்திலும் (University of Utrech)  பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

                தமிழ்க் கடவுள்  எனக் கருதப்படும் ‘ முருகன் ‘ குறித்து  இவர் எழுதியுள்ள  ஆங்கில  நூலில் முருகக் கடவுள் குறித்த  பல செய்திகளை ஆய்வுக்கு  உட்படுத்தியுள்ளார்.

                தமிழ் யாப்புப் பற்றி  அறிஞர் சிதம்பரநாதன்  செட்டியார்  வழியாக  ஈடுபாடு  கொண்ட  கமில் சுவெலபில் தமிழ்  யாப்புப் பற்றி விரிவாக  ஆங்கிலத்தில் ஆய்வு  நூலை எழுதியுள்ளார்.  இவரது  யாப்பு  குறித்த  பல நூல்களை  முனைவர்  பொற்கோ மதிப்பீடு  செய்து  உள்ளார்.   ‘தமிழ்-சப்பானிய’-மொழி உறவு  குறித்து  பல முன்வைப்புகளை வழங்கியுள்ள  கமில் சுவெலபில், நீலகிரிப்  பகுதியில் இருளர் பேசும்  மொழிப் பற்றிய  ஆராய்ச்சி  மேற்கொண்டு  ஆய்வு  நூலை  வெளியிட்டுள்ளார்.

                திராவிட  மொழியியல்,  சங்க  இலக்கியம்  பற்றி  விரிவாக  ஆங்கிலத்தில்  பல நூல்களை  எழுதியுள்ளார்.   தமிழ் வழக்குச் சொற்கள் பற்றியும்  எழுதியுள்ளார்.

                ஐம்பது  ஆண்டுகளுக்கும் மேலாக, திராவிட  மொழியியலை  ஆராய்ந்து,  “ மனித  இன வரலாற்றில்  திராவிடப் பண்பாடு  மிகத்   தொன்மையான   ஒன்று “  என்பதை  நிறுவியுள்ளார்.   மேலும், “ உலக  நாகரிகத்தின்  உயர்ந்த , அழியாத  கருவூலங்களில் ஒன்றாகத் தமிழர்களின் பண்பாடு  திகழ்கிறது  என்பதில்  அய்யமில்லை “ என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

                தமிழ் மொழி இலக்கியத்தையும்,  தமிழரின்  நாகரிகத்தையும்  இந்தியாவின்  பிற மாநில்  மக்களும்,  உலகில் உள்ள பிற மக்களும், அறிந்து  கொள்ள இவரது ஆங்கில ஆய்வ நூல்கள்  பெருமளவு  உதவியிருக்கின்றன.

                கமில் சுவெலபில், நீலமலை  மக்களின்  மொழியியல்,  திராவிடர்களின்  வேளாண்மைப் பரவல்,  தென்னிந்தியப் பண்பாடு மற்றும்  சமய  வரலாறு, இந்து மதம் , சமஸ்கிருதச் கடங்கு  நூல்கள்  முதலியவற்றைப் பற்றியும்  பல ஆய்வுக் கட்டுரைகளையும்,  நூல்களையும்  அளித்துள்ளார்.

                சுவெலபில்  எண்பதற்கு  எதையும்  சிறப்பாகச் செய்பவர், சரியாகச் செய்பவர், அழகாகக் செய்பவர் ‘  என்பது பொருளாகும் .  சைவசித்தாந்த  நூற்பதிப்புக் கழக ஆட்சியர் வ.சுப்பையா பிள்ளை  ‘நிரம்ப அழகியர் ‘  என்னும்  பெயரைக் கமில்  சுவெலபிலுக்குத் தமிழில்  சூட்டினார்.

                பேராசிரியர்  பணியிலிருந்து  1992 ஆம்  ஆண்டு  ஒய்வு  பெற்றார்.  பின்னர்,  பிரான்சு தலைநகர் பாரிசுக்கு  அருகில்  உள்ள  சிற்றூரில்  வாழ்ந்து  வந்தார்.   புற்று  நோய்  தாக்கி  2009 ஆம் ஆண்டு சனவரி 17 ஆம் நாள்  மறைந்தார் அறிஞர் கமில் சுவெலபில்’!

                தமிழின் இனிமை, தமிழரின் உயர்மரபு  ஆகியவற்றை  எண்ணித்  தம்மை  ‘செவ்வியன்’  எனவும்  அழைத்துக் கொண்டவர் கமில்  சுவெலபில்.

                செக்கோஸ்லோவாகியா நாட்டில்  பிறந்து  தமிழுக்குச் சிறந்து  தொண்டாற்றிய  மொழியியல்  வல்லுநரானகவும் , தமிழ்,  தமிழர்  பற்றியும்  பிறமொழியினருக்கு அறிமுகம்  செய்து   வைத்தவருமான  கமில் சுவெலபில் பெயர்  திராவிட இயல்  வரலாற்றில் என்றும் நிலைத்து  நிற்கும் !

- பி.தயாளன்

Pin It