உலக மதங்களுள் ஜொராஸ்டியனிசம் மிகப் பழைய மதம்.

இந்திய மதங்களுள் இந்து மதம் என்கிற வேத மதம் அல்லது பிராமண மதம் மூத்தது.எல்லா மதங்களும் தலைவிதி, முன்பிறப்பு, மறு பிறப்பு, மோட்சம், நரகம் இவற்றை நம்புகின்றன.

திட்டமிட்டுக் கொலை செய்தாலும், திருடினாலும், ஆணோ பெண்ணோ சோரம் போனாலும் அது பாவம் என்று எல்லா  மதங்களும் கற்பித்தன. அத்துடன் அப்படிப்பட்ட பாவத்தைச் செய்தால் அதற்கு மன்னிப்பு உண்டு, பிராயச்சித்தம் உண்டு என்றும் கற்பித்தன, மதங்கள்.

எனவே பாவம் செய்தவர்கள் தப்பித்துக் கொள்ளத் தான் பிரார்த்தனை அல்லது வழிபாடு செய்கிறார்கள். இதில் எல்லா மதமும் ஒரே தன்மையானதுதான். எனவேதான் பாவம் செய்கிறவனுக்குப் புகலிடமாகக் கோவில்கள், மசூதிகள், மாதாகோவில்கள், புத்த விகார்கள் இருக்கின்றன.

இந்தப் பாவ மன்னிப்பு இடங்களுக்கு அரசு பாதுகாப்புக் கொடுக்கிறது. மக்கள் பிரார்த்தனை வரி அல்லது தட்சணை கொடுக்கிறார்கள்.

இவற்றை நிருவகிக்கப் பூசாரிகள் (அ) அர்ச்சகர் கள், பாதிரிகள், முல்லாக்கள், மவுல்விகள், பிட்சுகள் இருக்கிறார் கள். இந்துக் கோவில்களில் பூசாரி அல்லது அர்ச்சகராகப் பார்ப்பனர் மட்டுமே இருக்கின்றனர்.

மற்ற மதங்களில் உள்ள பூசாரிகள், அதற்கு என்று இருக்கிற படிப்பைப் படித்தவர்கள் என்கிற ‘தகுதி’யால் பூசாரிகளாக வருகிறார்கள்; அமர்த்தப்படுகிறார்கள்.

ஆனால் இந்துக் கோவில்களில் உள்ள அர்ச்சகர் மட்டும் பிராமண-பார்ப்பன சாதியில் பிறந்தவர்களாகவே இருக் கிறார்கள். இவர்கள் பிறவியாலேயே உயர்ந்தவர்கள். ‘பிறவி உயர்வு’ என்பதை மட்டுமே ‘தகுதி’யாகக் கொண்டவர்கள். இது 2017லும் இப்படி இருக்கிறது.

பிராமணர், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற பிறவிசாதிப் பெயர்கள் “இந்துச் சட்டத்தில்” தெளிவாக உள்ளன.

இந்து மதத்தில் பிறந்வதர்கள் இதை அறிந்தும், அறியா மலும் இருக்கிறார்கள். அத்துடன் மட்டுமா?

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற சொற்கள் எழுதப்படாமலேயே, இந்திய அரசமைப்புச் சட்ட விதிகள் 13 (2) (அ), (ஆ) - Article 13 (2) (a), (b) என்கிற பிரிவுகளில் - பிறவி நால்வருண சாதிக்குக் கெட்டியான பாதுகாப்பு இருக்கிறது. எந்த வடிவத்தில் இருக்கிறது?

வழக்கம் (Custom), பழக்கம் (Usage) என்கிற பெயர் களில் இந்த 13ஆம் விதியில் உள்ளது.

விதி 13 என்பது அடிப்படை உரிமைகள் என்கிற பகுதியில் உள்ளது என்பது முதன்மையானது.

அத்துடன், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் XX-ஆம் பகுதி “அரசமைப்புச் சட்டத் திருத்தம்” (Amendment of the Constitution) என்பதாகும்.

அதன்கீழ் உள்ள விதி 372(3) விளக்கம் I -என்பதில் ((Article 372 (3) Explanation I) என் பதன்கீழ் - நால்வருண பிறவி சாதி வழக்கச் சட்டம், பழக்கச் சட்டம் இவை தகுதி வாய்ந்த சட்ட அவையால் நீக்கப்படுகிற வரையில் செல்லுபடி யாகும் என்று தெளிவாக உள்ளது.

இங்கே மார்க்சியத்துக்கு என்ன வேலை-கார்ல் மார்க்சுக்கு என்ன வேலை என்கிற வினா-இயல்பாகவே எழவேண்டும்.

கார்ல்மார்க்சு முதன்முதலாக, இந்தியாவைப் பற்றி 10.5.1853இல் முதலாவது கட்டுரையை எழுதினார்.

1853இல் இந்துச் சட்டம் தொகுக்கப்படவில்லை.

வெள்ளையர் ஆணைப்படி, வடநாட்டுப் பார்ப்பனப் பண்டிதர்கள், 1860இல் தான் இந்துச் சட்டத்தைத் தொகுத்தனர்.

மார்க்சுக்கு, 1853இல் இலண்டன் நூலகத்தில் கிடைத்தது மநுஸ்மிருதியின் ஆங்கில மொழிபெயர்ப்புத்தான். அவர், மனுஸ்மிருதியை நன்றாக ஆய்வு செய்து, 10.5.1853இல் இந்தியாவைப் பற்றி முதலாவது கட்டுரையை எழுதினர்.

அக்கட்டுரையில், “இந்தியாவிலுள்ள இழிசாதி மக்கள் - தாங்கள் எந்தப் பயனும் எதிர்பாராமல் மேல்சாதிக்காரர் களுக்கு ஊழியம் செய்வதுதான், தாங்கள் மோட்சத்துக்குப் போக (Beatitude) வழி என்று இன்றும் நம்புகிறார்கள்” என எழுதினார்.

இது, மனுஸ்மிருதியின் பத்தாவது அத்தியாயத்தில் உள்ளது என்றும் அக்கட்டுரையின் அடிக்குறிப்பில், மேற்கோளாக எழுதினார்.

மார்க்சின் சமகாலத்தில் இந்தியாவில் வாழ்ந்த வடலூர் வள்ளலார் 1865இல் இதைச் சொன்னார்; பூனேவில் வாழ்ந்த மகாத்மா புலே 1870இல் இதைச் சொன்னார்; அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் 1882இல் இதைச் சொன்னார்.

“தீண்டாமையை ஒழித்திட தமிழகக் காங்கிரசு பாடுபட வேண்டும்” என்கிற தீர்மானத்தை, திருப்பூரில் வாசுதேவ அய்யர் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசு மாநாட்டில் 1922 திசம்பர் 15இல் முன்மொழிந்தார், ஈ.வெ. ராமசாமி.

மாநாட்டுத் தலைவர் அதை எதிர்த்தார்; ச. இராசகோபா லாச்சாரியார் எதிர்த்தார்; எஸ்.சீனிவாச அய்யங்கார் எதிர்த் தார். அதுகண்டு வெகுண்டெழுந்த ஈ.வெ. இராமசாமி, அன்றிரவு திருப்பூரில் நடந்த காங்கிரசுப் பொதுக் கூட்டத்தில்,

“மநுஸ்மிருதியும், இராமாயணமும் தான் நால் வருண பிறவி சாதியையும் தீண்டாமையையும் காப்பாற்றுகின்றன. இவற்றை எரிக்க வேண்டும்” என்று அடித்துப் பேசினார்.

இந்திய சமுதாயத்தைப் பற்றி, காரல்மார்க்சு 1853 இல் எழுதியதைத்தான் - 1922இல் ஈ.வெ.ராவும் கூறினார்,

மார்க்சும் பெரியாரும் சிந்தனை உள்ளவர்கள் என்பதை உணருவோம், வாருங்கள்!