கொலைக் குற்றக் கைதிகள் சிறையிலேயே சாக வேண்டுமா? இராஜீவ் கொலைக் குற்றம் சாற்றப்பெற்ற ஏழு தமிழர்களை விடுதலை செய்க!

pariarvalam 450இந்தியாவை விட்டு வெள்ளைக்காரன் வெளியேறி 68 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால், வெள்ளையன் 1860இல் இயற்றிய காவல் துறைச் சட்டம், குற்றத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், உரிமை இயல் சட்டம் இவற்றின் அடிப்படைகள் 2015லும் மாற்றம் செய்யப்படவில்லை.

கி.பி.10ஆம் நூற்றாண்டு வரையில் மனுநீதி அடிப் படையிலேயே குற்றத்தண்டனைகள் வழங்கப்பட்டன.

நால்வருணப் பிறவிச் சாதிச் சட்டம் அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதாவது, ஒரு பார்ப்பனன் இன்னொரு மனிதனைக் கொன்றுவிட்டால், கொலைக் குற்றம் செய்தவனின் தலையை மொட்டையடித்து அவனை ஊரைவிட்டு வெளியேற்றி விடவேண்டும் என்பதே அன்றையச் சட்டம்.

ஆனால் வேறு வருணத்தான் ஒரு மனிதனைக் கொலை செய்துவிட்டால், கொலைகாரன் தலையை வெட்டிவிட வேண்டும் என்பது மனுநீதிச் சட்டம்.

இது இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் - கொலைக்குக் கொலை, திருட்டுக் குற்றவாளியின் கைகளையும் கால்களையும் வெட்டுவது தான் தண்டனை, என்பதே தண்டனை முறை. அதன்படி, வங்காளத்தில் ஒரு திருட்டுக் குற்றத்துக்குத் தண்டனையை நிறைவேற்றிட, குற்றவாளிகளைக் கட்டாந்தரையில் மல்லாக்கப்படுக்க வைத்தார்கள்.

ஒவ்வொருவனின் இரண்டு கைகளையும், கால்களை யும் நீட்டி, நீளமான ஆணிகளால் தரையோடு அடித்து இறுக்கினார்கள்; வாயில் துணியைத் திணித்தார்கள். அக்குற்றவாளியின் கைகளையும் கால்களையும் மெது மெதுவாக அறுத்தார்கள்; கொதிக்கும் எண்ணெயில் முண்டமான கைகளையும் கால்களையும் தோய்த்து, துடிதுடித்துச் சாகவிட்டார்கள்.

இந்தக் கொடிய வதையை நேரில் பார்த்த வெள்ளைக் காரன், தங்கள் நாட்டுக் குற்றத்  தண்டனை முறை அடிப்படையில் குற்றத் தண்டனைச் சட்டம், குற்ற வியல் நடைமுறைச்சட்டம் இவற்றை எல்லா இந்திய ருக்கும் ஒரே மாதிரியானதாகச் செய்தான்.

ஆனால் வெள்ளையர் அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தவர்களையும், கொலைக் குற்றம் செய்தவர்களை யும் மரத்தில் தூக்கிட்டுக் கொன்றார்கள். வாழ்நாள் முழுவதும் இந்தியாவிலோ, அந்தமான் தீவிலோ சிறைக் கைதியாக இருக்க வேண்டும் என்று குற்றத் தண்டனைச் சட்டத்தையும், குற்ற நடைமுறைச் சட்டத் தையும் 1860இல் இயற்றினார்கள்.

நாடு விடுதலை பெற்ற பிறகு இந்திய ஆட்சித் திருடர் கள் இங்கு எல்லா மக்களுக்கும் அடிப்படைக் கல்வியைக் கொடுக்கவில்லை; 12ஆம் வகுப்புப் படித்தவர்களுக்குச் சட்ட அடிப்படைகளைச் சொல்லித் தரவில்லை. இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ, பட்டம் பெற்றவர்களுக் கோ அடிப்படைச் சட்ட அறிவு தரப்படவில்லை.

அதன்விளைவாக, இந்தியாவிலுள்ள 21 உயர்நீதி மன்றங்களிலும், தில்லி உச்சநீதிமன்றத்திலும் 2015 லும் 100க்கு 85 பேர் பார்ப்பனர்களும், இந்து மேல்சாதிக்காரர்களும், பெருநில உடைமைக்காரர் களுமே உயர்நீதிபதிகளாக இருக்கிறார்கள்.

சிறந்த வழக்குரைஞர்களில் 50 விழுக்காட்டுப் பேரும், இந்திய அரசு முதல் நிலை அலுவல்களில் 100க்கு 75 விழுக்காட்டுப் பேரும் மேல்சாதிக்காரர்களே.

எனவே, “பார்ப்பான் பண்ணையம் கேட்பார் இல்லை” என்பது 2015லும் உண்மையாக இருக்கிறது. சரி!

1860ஆம் ஆண்டைய இந்தியக் குற்றத் தண்ட னைச் சட்டம் (Indian Penal Code, 1860) என்ன சொல்லுகிறது?

6.10.1860இல் வெள்ளையரால் இயற்றப்பட்ட அதன் பகுதி-II (Chapter-II)-இல் உள்ள 45ஆவது பிரிவின் படி (Section 45) :

“வாழ்நாள்” (அ) “ஆயுள்” என்னும் சொல் - உரிய சந்தர்ப்பத்தால் அதற்கு மாறான பொருள் தருவதாகத் தோன்றினால் அன்றி, “மனிதனின் வாழ்நாள் முழுவதும்” என்றே பொருள்படும்.

Section 45 : “Life” - The word “life” denotes the life of a human being, unless the contrary appears from the context.

பிரிவு 46 : “மரணம்” (அ) “சாவு” என்னும் சொல் - உரிய சந்தர்ப்பத்தால் அதற்கு மாறான பொருள் தருவதாகத் தோன்றினால் அன்றி, “மனிதனின் மரணம் (அ) சாவு” என்றே பொருள்படும்.

Section 46 : “Death” - The word “death” denotes the death of a human being unless the contrary appears from the context.

இந்த விளக்கங்களின் வெளிச்சத்தில், கொலை செய்ததற்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302 என்பது என்ன சொல்லுகிறது எனக் காண்போம்.

பிரிவு 302 : கொலை செய்ததற்கான தண்டனை : எவரொருவர் கொலை செய்தாரோ அவருக்கு மரண தண்டனையோ அல்லது (வாழ்நாள் சிறைத் தண்ட னையோ) மற்றும் பணத் தண்டமும் சேர்த்தோ தண்ட னையாக விதிக்கப்படும்.

Section 302 - Punishment for murder : Whoever commits murder shall be punished with death or (imprisonment for life) and shall also be liable to fine.

பிரிவு 303 : ஆயுள் (அ) வாழ்நாள் தண்டனைப் பெற்ற சிறைக் கைதி, கொலை செய்தாரானால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

இதில் பிரிவு 302-இன்படி, இராஜீவ் கொலைக் குற்றஞ்சாற்றப் பெற்றவர்களில், தடா சிறப்பு நீதிமன் றம், 26 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. இவர்களுள் 19 பேர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது; சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகிய நால்வருக்கும் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. இராபர்ட் பயஸ், ஜெயகுமார், இரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கும் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் அப்போதே தீர்ப்பளித்தது. பிறகு நளினிக்குத் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இவை குற்றவியல் நடைமுறைச்சட்டம் ( Code of Criminal Procedure ) பிரிவு 432, 433-இன் கீழ்ச் செய்யப்பட்டன.

இவ்விதிகள் - இச்சட்டத்தின் XXXII-ஆம் பகுதியில் நு-என்ற உட்பிரிவின் கீழ் உள்ளவை ஆகும்.

தண்டனையைத் தள்ளுபடி செய்தல், தண்ட னையை மாற்றுதல் மற்றும் தண்டனைகளைக் குறைத்தல் பற்றிய விதிகள் இவை.

இவ்விதிகளின் படி, தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்கள், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனை யாகக் குறைத்துத் தீர்ப்பு அளித்தார்.

அந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உடனேயே மன்மோகன்சிங் அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டது.

தமிழக முதலமைச்சர் அவர்கள், 19.2.2014 அன்று சட்டமன்றத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

“பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட் பய°, இரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவரும் 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டதால், அவர்களை விடுதலை செய்வது என்று தமிழக அமைச்சரவை தீர்மானித்துள்ளது” என்பதே அவ்வறிவிப்பு. மேற்கண்ட, தமிழக அரசின் முடிவை எதிர்த்து, 20.2.2014 அன்றே மன்மோகன் சிங் அரசு வழக்குத் தொடுத்து, தடை ஆணை பெற்றுவிட்டது.

இது, நீதிமன்றம் ஆளும் கட்சியின் அருளை எதிர்நோக்கி, நீதியை வளைத்துவிட்டதே ஆகும்.

இதே வழக்கைப் பிறகு ஆய்வு செய்த தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்கள் பிரிவு 434இன்படி, தமிழக அரசு மய்ய அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், அரசமைப்புச் சட்ட ஆய்வுக்குரிய அதிகாரம் படைத்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இவ்வழக்கை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

ஏழு பேர்களையும் விடுதலை செய்ய நீதிமன்றம் விதித்த ஆணை செல்லும் என 15.7.2015 அன்று அய்வர் அமர்வு அறிவித்தது.

அதே நாளில்,

1.    வாழ்நாள் முழுவதும் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளை மாநில அரசுகள் விடுவிக்க முடியாது;

2.    20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் என்று தீர்ப்பளிக் கப்பட்ட கைதிகளை மாநில அரசுகள் விடுவிக்க முடியாது;

3. சி.பி.ஐ. போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் விசாரித்த வழக்குகளில் ஆயுள் கைதி களை விடுவிப்பது பற்றி மாநில அரசுகள் ஆய்வு செய்ய முடியாது;

4. தடா போன்ற மத்திய அரசின் சட்டங்களின்கீழ் தண் டனை பெற்றவர்களையோ, கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை பெற்றவர்களையோ விடுவிப்பது பற்றி மாநில அரசுகள் ஆய்வு செய்ய முடியாது;

இவையெல்லாம் எடுத்த எடுப்பில் உச்சநீதிமன்றத் தின் அநீதியான - நேர்மையற்ற நிலைப்பாடுகள். ஏன்?

மேலே 4ஆவதாகச் சுட்டிச் சொல்லப்பட்ட குற்றங் கள் இந்த 7 பேருக்குப் பொருந்தாதவை.

மேலே 1-இல் கண்டபடி, ஆயுள் கைதிகள் 23 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகும், சாகும் வரை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும்; மேலே 2-இல் கண்டபடி 20 ஆண்டுகள், 25 ஆண்டு கள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள்கூட, வாழ்நாள் முழுவதும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளவை - குற்றவியல் நடைமுறைச் சட்டத் தின் பிரிவுகள் 433, 433-அ இவற்றுள் (Sections 433 and 433A ) சொல்லப்பட்டுள்ள முறையே “14 ஆண்டுகளுக்கு மேற்படாமல்” என்றும், a term not exceeding 14 years or for fine” ” மற்றும் “..... அப்படிப்பட்ட வாழ்நாள் கைதி, குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தாலன்றி”, தண்டனைக் குறைப்பு செய்யப்பட்ட கைதிகளை விடு தலை செய்ய முடியாது என்றும் உள்ளதன் நோக்கம் பயனற்றுப் போகிறது.

நாம் ஒவ்வொருவரும் இவ்விதிகள் 432, 433, 433--A, 434, 435 இவற்றை மனங்கொண்டு படித்து, தெளிவாக அறிந்து, விவாதிக்க வேண்டும்.

“இந்த ஒரு கொலைக்குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் என்பது தான்” - சட்ட எரிப்புக்காக விதிக்கப்பட்ட என் கடுங்காவல் சிறைத் தண்டனையை வேலூரிலும், திருச்சியிலும் 12 மாதங்கள் அனுபவித்த போது நேரில் நான் பார்த்தது.

18 வயது வரையில் நான் வளர்ந்த ஊர் வடக்கலூர் அக்ரகாரம். அவ்வூரை அடுத்த வடக்கலூர் இராமசாமி ரெட்டியார் என்கிறவர், இன்னொருவர் மனைவியைத் தொடர்ந்து அனுபவிக்க விரும்பி, அப்பெண்ணின் கணவரைக் கொலை செய்த குற்றத்துக்காக, ஆயுள் தண்டனை பெற்றவர்.

நான் 1958இல் இரண்டாம் வகுப்பு (B-Class)க் கைதி, அந்த இராமசாமி ரெட்டியார் எனக்கு உதவி செய்ய அதிகாரிகளால் அமர்த்தப்பட்ட மூன்றாம் வகுப்புக் கைதி (C Class).

இப்படிப்பட்ட கைதிகள் பற்றி, மாநில அரசினர் அமைத்த ஆய்வுக்குழுவினர் வேலூர் சிறையி லும், வடக்கலூரிலும் அவருடைய நடத்தையைப் பற்றி ஆய்வு செய்து, “14 ஆண்டுகள் முடிவில் விடுதலை செய்யப்படப்” பரிந்துரைத்தனர்.

நான், 1958 திசம்பரில் விடுதலையானவுடன், வடக்கலூருக்குப் போய் ‘இராமசாமி ரெட்டியார் 14 ஆண்டுகள் முடிந்தவுடன் விடுதலையாகி வருவார்’ என்று அவருடைய வீட்டாரிடம் சொன்னேன்; மகிழ் வித்தேன்.

இன்றும் இந்த நடைமுறை இருக்கிறது. மேலும் பிரிவுகள் 433, 433அ இவற்றில் “14 ஆண்டுகள்” என்ற வரையறை மிகத் தெளிவாக இருக்கிறது. உச்ச நீதிமன்ற அய்வர் அமர்வு இவற்றைத் துச்சமாக எண்ணி-“வாழ்நாள் தண்டனை என்றால் சாகும் வரையில் சிறைதான்” என்று முரட்டுத்தனமாகக் கூறுவது, இயற்கை நீதிக்கு (Natural Justice) முற்றிலும் முரணானது.

வாழ்நாள் முழுவதும் சிறை என்பது, 15 மணித் துளிகளில் தூக்கில் தொங்கி செத்துப் போவதை விட, வாழ்நாள் முழுவதும் நொடி தோறும் நொந்து, நொந்து அணுஅணுவாகச் சாவச் செய்வது ஆகும். இது என்ன சட்டம்? இது நீதியா? அநீதியா? பச்சை அநீதி இது.

சி.பி.அய்., தடா சட்டம், ரா (RAW) என்பவை மக்களின் உரிமைகளையும் சுதந்தரத்தையும் கொன்று குவிக்க இந்தியப் பாசிச அரசுக்குத் துணை போகிற ஆட்சிகளின் - ஆளும் கட்சிகளின் உயர் அதிகாரம் பெற்ற ‘கையாள்களைக் கொண்ட அமைப்புகள்’. சி.பி.அய். சார்பாக விசாரணை நடத்திய திரு. தியாகராசன் அவர்களே 2013, 2014, 2015ஆம் ஆண்டுகளில் - பேரறிவாளன் குற்றத்தை மறுத்த போதும் தான் வற் புறுத்திக் கையொப்பம் பெற்றதை ஊரறியச் சொல்லி விட்டார்.

பேரறிவாளன், நளினி, முருகன் மற்றும் நால்வர் உள்ளிட்ட ஏழு பேரும் 24 ஆண்டுகளின் சிறை வாழ்வில் தங்கள் தங்களின் கல்வித் தகுதியை மிக மிக உயர்த்திக் கொண்டவர்கள் ஆவர். எனவே திருந்திய மனிதர்கள் ஆகிவிட்டார்கள். மேலும் நூற்றுக் கணக்கான கைதிகள் 10, 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற ஆசிரியர்களாகத் தொண்டு செய்தவர்கள்.

சிறை வளாகத்துக்கு உள்ளேயே பேரறிவாளன் மற்றும் 6 பேரும் சிறைக் கைதிகளாலும், வெளியி லிருந்து சென்ற மக்கள் தலைவர்களாலும் பாராட்டப் பட்டவர்கள் நம் தங்கத் தமிழ்ப் போத்துகள்.

கொல்லப்பட்ட இராஜீவ் உயிர் எவ்வளவு முதன்மை யானதோ, அதேபோல, எந்தக் குற்றமும் செய்யாத தமிழர் ஏழு பேர்களின் உயிர்களும் மதிப்பு மிக்கவை. அணுஅணுவாக அவர்கள் செத்துக் கொண்டு இன்னும் 30, 40 ஆண்டுகள் சிறையில் கிடக்க வேண்டும் என்று, கடந்து சென்ற ஆட்சியாளரும், இன்றைய ஆட்சியா ளரும் எண்ணுவதும், அதைச் சாதிப்பதில் குறியாக இருப்பதும் - உலகத் தமிழர் 9 கோடிப் பேரையும் பகைத்துக் கொள்வதாகும். நோகச் செய்து அவமானப் படுத்துவதாகும்.

மேல்சாதி ஆதிக்கக் காங்கிரசுக்கு எச்சரிக்கை!

காங்கிரசை விடத் தீதான பா.ச.க. அரசுக்கு எச்சரிக்கை!

உச்சநீதிமன்றம் மனித உயிர்களைப் பேணும் உயர்அறமன்றம் ஆகட்டும் என வேண்டுகிறோம்.