சமூகத் தொண்டனாகத்

தன்னை

அடையாளம் காட்டிக்கொண்டார்

‘புகழ்விரும்பி’

புகழுக்காக

‘எதையும்’ செய்யத் துணிந்த அவர்

புகழுக்காக

‘எது’ வேண்டுமானாலும்

செய்துவந்தார்; பேசி வந்தார்!

அடுத்தநாள் ஏடுகளை

ஆவலோடு தேடித்தேடித்

தன்னைப் பற்றிய

செய்திகளையும் படங்களையும்

சேகரித்துச் சேகரித்துச்

செயற்கைச் சிரிப்பால்

செழித்து வந்தார்

ஆட்சித் தலைவர்முதல்

அனைத்துத்துறை அதிகரிகளிடமும்

பல்லைக்காட்டிப்

பாதாபிஷேகம் செய்து

பல்வேறு விருதுகள் பெற்றுப்

பரவசம் அடைந்தார்

வீட்டின்

வரவேற்பறை முழுக்க

அதிகாரிகள் பேச்சாளர்களுடன்

தான் எடுத்துக்கொண்ட

படங்களை மாட்டிவைத்து

வீட்டிற்கு வருவோரை

வியக்க வைத்தார்

இன்னும்

ஒரேஒரு படத்தைக்கூட

மாட்டுவதற்கு இடமின்றி

நான்கு சுவர்களிலும்

பின்பக்கம் வரை

பிதுங்கி வழிந்தன படங்கள்

‘நம்மைக் கழற்றி

எந்த மூலையில்

எறிந்துவிடுவார்களோ’ என

ஏற்கெனவே மாட்டிவைத்த

பழைய படங்கள்

பயந்துபோயிருந்தன

அவர் வழக்கம்போல்

எல்லா மேடைகளிலும்

நிரம்பி வழிந்தார்;

எல்லாச் செய்தித் தாள்களிலும்

புரண்டு எழுந்தார்!

கைத்தட்டலும் பேச்சுந்தான்

அவர் கனவைக் கூட

ஆக்கிரமித்திருந்தன!

எந்த நிகழ்ச்சியானாலும்...

பெயரே போடவில்லையென்றாலும்...

அழைப்பே இல்லையென்றாலும்...

வலியச் சென்று

“மைக்”கை வாங்கிக்கொண்டு,

தெரியாமல் வந்து

உட்கார்ந்துவிட்டவர் காதுகளைத்

தென்னந் துடைப்பத்தால்

தொளைத்தெடுத்தார்!

தான்

யாருக்குப் பிறந்தோமென்கிற

அடையாளமே மறைந்து போகிறபடி

பட்டப் பெயர்களும்

விருதுப் பெயர்களும்

அவரது சொந்தப் பெயரைச்

சுற்றி வளைத்துக் கொண்டன

அந்த ஊரிலிருந்த

எல்லா விருதுகளும் பட்டங்களும்

அவருக்கே கொடுத்துத்

தீர்ந்து போய்விட்டன

இனி...

வெவ்வேறு ஆள்களை வரவழைத்து

விருதுகளைக் கொடுப்பதென

மேடைவணிகர்கள் எடுத்தமுடிவை

ஏற்றுக்கொள்ள முடியாமல்

எரிச்சலில் குமைந்தார்

ஒரே நேரத்தில்

பல மேடைகளில் இருப்பதற்கான

வழியில்லையே என்ற வேதனை

அவரை

உள்ளிருந்து வாட்டி

உருக்குலைய வைத்தது

மேடை வாய்ப்புகளே

இல்லாத

ஒருமாத இடைவெளியில்

வாய்க் கோணையாகி

கோமாவில் விழுந்த அவரை

வரவேற்பறையின் மூலையில்

ஒரு கட்டிலில் கிடத்திப்

படுக்க வைத்தார்கள்

சுவரில் மாட்டியிருந்த

படங்களெல்லாம்

எப்போதும் அவரையே...

உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன

“வாய் வாங்கு” வாழ்ந்தவர் நிலை அது!