திருவண்ணாமலை மாவட்டம், சிறுநாத்தூர் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபொழுது, என்னுடைய 2ஆம் வகுப்பு ஆசிரியர் சுப்பிரமணி என்பவர், நான் நெற்றியில் விபூதி வைக்கவில்லை என்று மாட்டுச் சாணியை எடுத்து பூசிவிட்டார், அன்றுமுதல் நான் தினமும் விபூதி வைத்துக்கொண்டு வந்தேன். கோயில்களில் உள்ள சாமி சிலைகளையும் வணங்கி வந்தேன். எங்கள் பள்ளி நடுநிலைப் பள்ளியாகிவிட்டதால் எட்டாம் வகுப்பு வரை பக்தியுடனேயே இருந்தேன்.

1971-72 கல்வி ஆண்டில் கீழ்ப்பென்னாத்தூர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன். அப்பொழுதும் நான் நெற்றியில் விபூதி வைத்துக்கொண்டு பக்தியுடன் வகுப்பிற்கு வருவேன். சேர்ந்த ஒரு வாரத்திலேயே எனக்கு வந்த வகுப்பு ஆசிரியர் என். சானகிராமன் அவர்கள் என்னிடம் நீ என்னடா பண்டாரப் பையன் மாதிரி விபூதி பூசி வருகிறாயே என்று கூறி மாட்டுச் சாணியை எடுத்து நெற்றியில் பூசி விட்டார். சாணியை பூசிய இருவருமே ஆசிரியர்கள். அப்பொழுது வரை மாதா, பிதா, குரு, கடவுள் என்ற வழிபாட்டில் இருந்தவன், மாதா, பிதா, குரு இவர்களைப் பார்க்க முடிகிறது. கடவுளை நாம் கண்ட தில்லை. விபூதி பூசியது கடவுளுக்காகத்தான். ஆனால் கடவுள் என்பது கற்பனையே என்று எண்ணி, அன்றுமுதல் கடவுள் பக்தியை மட்டும் என்னிடமிருந்து நீக்கிவிட்டேன். இதே நிலையில் இன்றுவரை உள்ளேன்.

கடவுள் செய்வார், கடவுள் மதிப்பெண் போடுவார், கடவுள் கொடுப்பார் என்று நினைத்துக்கொண்டே இருந்தால் எதுவும் நமக்குக் கிடைக்காது. நம்முடைய முயற்சி தான் நமக்கு அனைத்திலும் பலன் கிடைக்கச் செய்யும். ஜோதிடர்கள் நம்மை ஏமாற்றும் செயலில் முயற்சி அடைந்து நம்மை ஏமாற்றி வெற்றி பெறுகின்றனர். இதையே இன்றைய அனைத்து ஊடகங்களும் பெரும்பான்மையாக உள்ள ஏமாளிகளாக வாழும் மக்களை ஏமாற்றும் செயலில் செய்தி களைப் பரப்புகின்றன. ஊடகங்கள் மட்டும் இதுபோன்ற செய்திகளை நீக்கிவிட்டுப் பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்பினால் மனத்தெளிவு பெற்று நிம்மதியுடன் இருப்பார்கள்.

எனக்குத் தெரிந்த தொழிலதிபர் வியாபாரத்தில் சரிவு உள்ளது எதனால் என்று சோசியரிடம் கேட்டுள்ளார் (கேட்டவர் இந்து, சோசியர் முஸ்லீம்). அதற்கு சோசியர் அவரிடம் உன் வீட்டில் குட்டிசைத்தான் உள்ளது. அதை விரட்டிவிட்டால் நீ நலமாக வருவாய் என்று கூறியுள்ளார். அதை நம்பி அவரும் அந்த குட்டி சைத்தானை விரட்டச் சொல்லி அவரிடம் ரூ.25000/- கொடுத்துள்ளார். சோசியரும் வீடு முழுக்க சாம்பிராணி புகை போட்டுவிட்டு குட்டிசைத்தான் போய்விட்டது என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் 1991இல் நடந்தது. அந்தத் தொகையைத் தொழிலில் போட்டிருந்தால் இன்னும் வளர்ந்திருக்கலாம்; அநியாயமாக ஏமாந்துவிட்டேன் என்று அந்தத் தொழிலதிபர் என்னிடம் கூறினார். அனைத்து சோதிடமும் பொய்யே; அறிவியல்படி தான் நமது வாழ்க்கை இருக்க வேண்டும். பகுத்தறிந்து வாழ்ந்தாலே பரிகாரம் செய்யாமல் பலன் கிடைக்கும்.

Pin It