எளிமை வாய்மை

கொல்லாமை என

மூன்றின் வடிவமுமாய்

முயன்று காட்டியவர் காந்தி

அரை ஆடைப் பக்கிரியாய்

அவர் வாடிநந்ததாலோ என்னவோ

காந்தியின் எளிமையைக்

கொள்கையாய் ஏற்றுக்கொண்ட

காங்கிரஸ் அரசு

இந்தியாவில் ஏறக்குறைய

நாற்பதுகோடி மக்களை

பக்கிரிகளாகவே வைத்திருக்கிறது

ஒரு பொய்க்கூடச் சொல்லாமல்

அரிச்சந்திரனைப் போல

காங்கிரஸ் காரர்கள் இந்தத் தேசத்தை

ஆள்கின்ற பெருமையைச்

சுற்றியுள்ள நாட்டிற்கெல்லாம்

“ஸ்விஸ் வங்கியே”

பறைசாற்றி வருகிறது

காங்கிரசுக் கட்சியின் சொத்தையும்

காங்கிரஸ் காரர்களின் சொத்தையும்

ஒரு தட்டில் வைத்து...

இன்னொரு தட்டில் இந்தியாவையே

வைத்து நிறுத்தாலும்

ஈடாக வராது; ஈடாக வராது.

கொல்லாமையிலும் காங்கிரசுக்குக்

“கொள்ளை” ஆசை

விடுதலைக்குப்பின்

பிழைக்க வழியின்றி வக்கின்றி

பட்டினிச்சாவும் தற்கொலைகளுந்தான்

அதிகமானதே தவிர

காங்கிரஸ்காரர்கள் போய்

யார் கழுத்தையும் நெரித்துக்

கொல்லவில்லையே!

மற்றொரு கொள்கை

மது ஒழிப்பு

உற்பத்தி செய்த மதுவை

இறக்குமதி செய்த மதுவை

எப்படித்தான் ஒழிப்பது?

நீங்களே சொல்லுங்கள்...

குடிக்காமல் எப்படி

குடி ஒழியும்?

இந்தியாவையே சட்டப்படி

சுதந்தரக் “குடி அரசு” என்றுதானே

ஏற்றுக் கொண்டிருக்கிறோம்?

அந்நிய நாட்டின் பிடியிலிருந்து

எங்களை மீட்ட அண்ணலே...

இந்த உலகத்தில் நாங்கள்

எந்த நாட்டுக்கும் அடிமையில்லை

அமெரிக்காவிற்கும் எங்களுக்கும்

எந்தத் தொடர்புமில்லை

வாழ்கநீ! எம்மான் எம்மை

வாழ்விக்க வந்த காந்தி!

மகாத்மா காந்திக்கு ஜே!

பாரத மாதா கி ஜே!

ஹே ராம்!

Pin It