மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதில் தமிழக அரசும், நடுவண் அரசும் தமிழக மக்களை நம்ப வைத்துக் கழுத்தை அறுத்துவிட்டன, உச்சநீதிமன்றம் 22.8.2017 அன்று தமிழ்நாட்டிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை, தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test - NEET - நீட்) அடிப் படையில்தான் நடைபெற வேண்டும் என்று தீர்ப்பு கூறிவிட்டது. அதன்படி 24.8.2017 முதல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு நடுவண் அரசு ஒரு அவசரச் சட்டத்தின் மூலம், விரும்பாத மாநிலங்களுக்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளித்தது. ஆனால் தமிழக அரசு, நீட் தேர்விலிருந்து நிலையான விலக்குப் பெறுவோம் என்று தொடர்ந்து உறுதியளித்துக் கொண்டே இருந்தது. அதனால் பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வு பற்றிக் கவலைப்படாமல் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் கள் பெற்று, அதன்மூலம் மருத்துவப் படிப்பில் சேரும் நம்பிக்கையுடன் படித்தனர்.

ஆனால் நீட் தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை என்கிற நிலையால் பனிரெண்டாம் வகுப்பின் பொதுத் தேர்வில் மருத்துவப் படிப்பில் சேருவதற்குரிய அதிக மதிப்பெண் பெற்றுள்ள - மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த பல ஆயிரம் மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவு தகர்க்கப்பட்டுவிட்டது. இம்மாணவர்களும் இவர் களின் பெற்றோரும் தமிழக அரசாலும் இறுதியில் நடுவண் அரசாலும் வஞ்சிக்கப்பட்டதை எண்ணி கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.

மனுநீதி போன்ற இந்துமத சாத்திரங்களின் பெய ரால் இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பார்ப்பான், சத்திரி யன், வைசியன் ஆகிய மேல் சாதியினருக்கு மட்டுமே உரியதாக இருந்த கல்வியை 21ஆம் நூற்றாண்டில் மீண்டும் கைப்பற்றுவதற்கான ஆளும்வர்க்கத்தின் நடவடிக்கையே நீட் தேர்வு கட்டாயம் என்பதாகும், கீழ்ச்சாதி மக்களாகவும் உழைக்கும் மக்களாகவும் உள்ள ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகள் மருத்துவக் கல் லூரியில் சேருவதற்கான வாய்ப்பை “நீட்” பறித்து விட்டது.

தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் உயிரியல் பாடப் பிரிவில் மாநிலப் பாடத் திட்டத்தில் 4.2 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி னார்கள். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் வெறும் 4,675 பேர் எழுதினர். 7.5.2017 அன்று நடைபெற்ற நீட் தேர்வை தமிழ்நாட்டில் 83,859 பேர் எழுதினர். இவர்களில் 32,570 பேர் மருத்துவப் படிப்பில் சேரு வதற்கான தகுதி-தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அறிவிக் கப்பட்டது.

நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டு அரசு, மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 27,212 பேர் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் முதல் இருபது இடங்களைப் பெற்றுள்ள மாணவர்களில் 15 பேர் சி.பி.எஸ்.இ.யில் படித்தவர்கள். மருத்துவப் படிப்பில் அரசின் பொதுக் கலந்தாய்வுக்காக உள்ள மொத்த இடங்கள் 3534 ஆகும். இதில் பத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுக்கு ஒப்படைக்கும் 860 இடங்களும் அடங்கி உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிருவாக ஒதுக்கீட்டின்கீழ் 715 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டுவரை நிருவாக ஒதுக்கீட்டு இடங்களை மருத்துவக் கல்லூரிகளே ஏலத்தில் விடுவது போல் அதிக தொகை செலுத்துவோர்க்கு விறப்னை செய்து வந்தன. ஆனால் இந்த ஆண்டு நடுவண் அரசின் ஆணைப்படி, நிருவாக ஒதுக்கீட்டு இடங்கள் தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

தமிழக அரசின் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் 3534 இடங்களில் இந்த ஆண்டு நீட் அடிப்படையின் காரணமாக, மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 2,224 பேரும், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 1310 பேரும் மருத்துவப் படிப்பில் சேருகின்றனர். கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 30 பேர் மட்டுமே சேர்ந்தனர் என்பதை ஒப்பிடும்போது, நீட் என்பது சி.பி.எஸ்.இ.யில் படிக்கும் மேல்சாதி - நகர்ப்புற - பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் நலன்களுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது என்பது அப்பட்டமாகப் புலப் படுகிறது. சி.பி.எஸ்.சி. படித்த 1310 மாணவர்களில் 64 விழுக்காட்டினர் 2015-16 ஆண்டில் 12ஆம் வகுப்பை முடித்தவர்கள்; கடந்த ஓராண்டில் நீட் தேர்வுக்காகப் பல இலட்சம் செலவு செய்து தனியார் பயிற்சி நிறுவனங் களில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள்.

அரசு நடத்திய கலந்தாய்வு மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் கள் தமிழ்நாட்டில் வாழ்வதாகப் பொய்யான இருப்பிடச் சான்று பெற்ற பிற மாநிலத்தவர்கள் என்கிற அதிர்ச்சி யான செய்தி வெளியாகி உள்ளது. இந்த முறைகேட்டுக் குத் தமிழக அரசு அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டு உடந்தையாக இருந்திருக்கிறார்.

Neet exam strike 600அதேபோன்று மாநிலப் பாடத் திட்டத்தில் படித்து இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேரும் 2,224 மாணவர் களில் இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பை முடித்தவர்கள் 1,281 பேர். மீதி 943 பேர் இதற்கு முந்தைய கல்வி ஆண்டில் (2015-16) பனிரெண்டாம் வகுப்பை முடித்து, மருத்துவப் படிப்பில் இடம் கிடைக் காததால், தனியார் சிறப்பு பயிற்சி நிறுவனங்களில் பல இலட்சம் செலவிட்டு, நீட் தேர்வுக்காக ஓராண்டுப் படித்தவர்கள், அதாவது இவர்கள் 44 விழுக்காட்டினர். நீட் தேர்வு இருக்காது என்று தமிழக அரசு உறுதி யளித்துக் கொண்டிருந்த நிலையிலேயே ஓராண்டை ஒதுக்கி நீட் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களில் 943 பேர் மருத்துவப் படிப்பில் இடம்பெற்றுள்ளனர். இனி நீட் கட்டாயம் என்று ஆகிவிட்ட நிலையில், அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில், அரசின் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் 3534 இடங்களில் 90 விழுக் காட்டுக்கு மேற்பட்ட இடங்களை பனிரெண்டாம் வகுப்பை முடித்த பின், ஓராண்டு நீட் சிறப்பு பயிற்சி பெறும் பணக்கார வீட்டு மாணவர்களே கைப்பற்றுவார்கள் என்பது உறுதி, ஏனெனில் முன்பு, பனிரெண்டாம் வகுப்பின் பொதுத் தேர்வின் மதிப்பெண்ணை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்காக, மாணவர்களுக்கு ஓராண்டுக் காலம் (Improvement System) வழங்கப் பட்டிருந்த போது, கூடுதலாக ஓராண்டு தனியாகப் பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களைப் படித்தவர்களே மருத்துவப் படிப்பில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றினர். அதனால் அந்த மேம்படுத்தல் வாய்ப்பு அரசால் நீக்கப்பட்டது.

நீட் முறை வருவதற்குமுன் கடந்த ஆண்டுவரை மருத்துவப் படிப்பில் பெரும்பாலான இடங்களைப் பல இலட்சம் உருவா செலவிட்டு தனியார் மேனிலைப் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்த மாணவர்களே கைப்பற்றினர். 2009 முதல் 2016 வரையிலான எட்டு ஆண்டுகளில் 29,000 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். அதே சமயம் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 278 பேர் மட்டுமே சேர்ந்தனர். 2016ஆம் ஆண்டில் 48 பேர் சேர்ந்தனர். ஆங்கில வழிக் கல்வியையும் தனியார் கல்விக் கொள் ளையையும் தமிழ்நாட்டு அரசும், அரசியல் கட்சிகளும் ஊக்குவித்து, சமூக நீதியைக் கொன்று மருத்துவக் கல்வி கிராமப்புற - நகர்ப்புற ஏழை, எளிய, கீழ்நிலை நடுத்தரக் குடும்பங்களுக்கு எட்டாக்கனி ஆக்கிவிட்ட கொடுமை சமூகநீதியின் தாயகம் என்று கூறப்படும் தமிழ்நாட்டில் அரங்கேறியிருக்கிறது. மேலும் தமிழக அரசு, கல்விக் கொள்கையடிக்கும் தனியார் மேனிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்புக்கு உரிய பாடங்களை நடத்தாமல், இரண்டு ஆண்டுகளும் 12ஆம் வகுப்பு பாடங்களையே நடத்திய கேட்டினைத் தடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 23, தனியார் 10, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 8 என மொத்தம் 41 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சாதாரண வசதி கொண்ட குடும்பத்தின் மாணவன் முட்டி மோதி மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெற்றாலும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் மருத்துவம் படிக்க முடியாது, ஏனெனில் அரசுக் கல்லூரி யில் ஆண்டுக்கட்டணம் ரூ,13,600; தனியார் ஒதுக் கீட்டு இடத்துக்கு ஆண்டுக் கட்டணம் நான்கு இலட்சம்; தனியார் மருத்துவக் கல்லூரியின் நிருவாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.12.50 இலட்சம் என்று அரசு நிர்ணயித் துள்ளது. எட்டு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 1328 இடங்கள் உள்ளன. இவற்றில் ஆண்டுக் கட்டணம் இருபது இலட்சத்துக்குமேல், எனவே கல்விக் கொள் கையை ஒழிப்பதற்காக என்று கூறி, கொண்டுவரப் பட்ட நீட் முறை மேலும் கல்விக் கொள்ளையை வளர்ப்பதற்காகவே இருக்கிறது.

தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்ட நீட் விலக்கு கோரும் சட்டத்துக்கு நடுவண் அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்பதுடன் அதுபற்றி எந்தக் கருத்தும் கூறாமல் கள்ளமவுனம் காத்தது. இறுதியில் ஓராண்டுக்கு மட்டும் விலக்குகோரும் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதாகத் தெரி வித்தது. தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதாகத் தெரிவித்தது. தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்குச் சட்ட அமைச்சர், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்தன. ஓராண்டுக்கு விலக்கு உறுதியாகிவிட்டது என்று எல்லோரும் நம்பிக்கை கொண்டிருந்த நிலையில், நடுவண் அரசு உச்சநீதி மன்றத்தில், “ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு தர இயலாது. எனவே தமிழக அரசின் அவசரச் சட்டத் துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது” என்று கூறி, தமிழக மக்கள் மீது வெடிகுண்டை வீசியது.

நடுவண் அரசின் சுகாதாரத் துறைக்கான நாடாளு மன்ற நிலைக்குழுவின் 92ஆம் அறிக்கை 2016 மார்ச்சு 8 அன்று நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. அதில் இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்குப் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும், இதில் பங்கேற்க விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. எனவே தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று இப்போது நடுவண் அரசு கூறுவது தமிழக மக்களை ஒடுக்கும் கொடிய செயலாகும்.

தன்னுடைய மாநிலத்தில் எந்த முறையில் கல்வி வழங்க வேண்டும்; தேர்வுகள் நடத்த வேண்டும்; உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை கூட மாநில அரசுக்குக் கிடையாது என்று சொல்வது மாநில உரிமையைப் பறிப்பது ஆகும்; கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான தாகும். ஆகவே கல்வியை 1977க்குமுன் இருந்தது போல் மாநில அதிகாரப் பட்டியலில் சேர்ப்பதன் மூலமே கல்வியில் நடுவண் அரசின் ஆதிக்கத்தைத் தடுக்க முடியும்.