உலகில் தோன்றிய முதன்மையான மதங்களில் கிறித்துவ மதமும் ஒன்றாகும். உலகில் அய்ரோப்பிய வடஅமெரிக்க நாடுகளில் பெரும்பான்மையோர் கிறித்துவர்களாகவே இருக்கின்றனர். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறித்துவர்கள் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர். உலக அளவில் கல்வி மருத்துவம் போன்ற பணிகளை ஏழை மக்களுக்காகக் கிறித்துவ அமைப்புகள் செய்து வருகின்றன. கிறித்துவ மதம் 16ஆம் நூற்றாண்டில் இரண்டாகப் பிளவுபட்டது.

அய்ரோப்பாவில் தோன்றிய சீர்த்திருத்த இயக்கத்தின் தாக்கம் கிறித்துவ மதத்திலும் பல புதிய பிரச்சனைகளைக் கிளப்பியது. கத்தோலிக்க மத குருமார்களான பீட்டர் வால்டோ ஜான், ஒய்கிலிப் ஜான் ஹேஸ் போன்றோர், 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதத் தலைமைப் பீடத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மதத்தலைமையின் அணுகுமுறையில் மாற்றம் தேவை என்றும் வாதிட்டனர்.

1517இல் பேராசிரியர் மார்டின் லூதர் கிங் 99 ஆய்வு வினாக்களை மதத் தலைமைக்கு எதிராக வெளியிட்டார். குறிப்பாக 14, 15ஆம் நூற்றாண்டுகளில் அய்ரோப்பிய நாடுகளில் அரசர்களுக்கு இடையேயும் நாடுகளுக்கு இடையேயும் ஏற்பட்ட போர்களையும் பேரழிவுகளையும் கிறித்துவத் தலைமைப்பீடம் கண்டும் காணாதது போல இருந்தது. ஏழைகள், வேளாண் தொழிலில் ஈடுபட்டோரின் மீது எவ்வித அக்கறையு மின்றிச் செயல்பட்டது. இங்கிலாந்து அரசரின், ஆதரவு கத்தோலிக்கத் தலைமைப்பீடத்திற்கு இருந்ததனால் நாட்டில் நடந்த ஊழல்களையும் கொடுமைகளையும் எதிர்க்க மக்கள் பயந்தனர்.

இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றி, மார்டின் லூதர் கிங் கிறித்துவத் தலைமைக்கு எதிராகக்களம் அமைத்தபோது, கிறித்துவத் தலைமைக்கு முதலில் ஆதரவாகதான் செயல்பட்டார். ஆனால் எட்டாம் ஹென்றி தனது ஆண் வாரிசிற்காக மற்றொரு மணம் முடிக்கும் போது, போப் ஆண்டவர் அதைக் கண்டித்து எதிராகச் செயல்பட்டார். அக்காலக்கட்டத்தில் மார்டின் லூதர் கிங்கை இங்கிலாந்து அரசு ஆதரித்து அங்கீகாரம் செய்தது. இறுதியாகக் கிறித்துவ மதம், கத்தோலிக்க மதம் என்றும் பிராட்ட°டன்டு மதம் என்றும் இரண்டாகப் பிளவுபட்டு இங்கிலாந்து அரசின் செல்வாக்கோடு மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியது.

உலகம் உருண்டை என்று வாதிட்ட கோப்பர் நிக்கஸ், கலிலியோ ஆகியோர்க்கு எதிராகக் கத்தோலிக்க மதம் செயல்பட்டது. தொலைநோக்கிக் கருவியைக் கண்டு பிடித்து வானியல் அறிவியலில் பெரும்புரட்சியை உருவாக்கிய கலிலியோவை மதத்தலைமையின் தூண்டுதலால் சிறைபிடித்துத் தண்டித்தது. இந்நிகழ்வு களை நினைவூட்டுவதற்காகத்தான் டெனிஸ் டிரைட்ரோட் என்கிற ஒரு பேரறிஞர் ‘மெய்யியல் அறிஞர்கள் ஒருபோதும் எந்தக் கிறித்துவக் குருமார்களையும் கொன்றதில்லை. ஆனால் கிறித்துவக் குருமார்கள் தலைசிறந்த மெய்யியல் அறிஞர்களைக் கொன்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக எந்த மதமாயினும் ஆளும் சக்தி களோடுதான் கைகோத்து ஏழை மக்களை ஏமாற்றின. ‘நான் ஏன் கிறித்தவன் இல்லை’ என்ற புகழ்மிக்க நூலை எழுதிய பெட்ரன்ட் ர°ஸல் உலகில் அறிவும் அறிவியலும் தான் மானுடத்தை உயர்த்திப் பிடித்தன என்றார். உலகில் புத்தமதம் ஒன்றுதான் இதற்கு விதிவிலக்கு என்று குறிப்பிட்டார். அறிவியல் அறிஞர் சார்லஸ் டார்வின் தொடக்கக்காலத்தில் ஒரு கிறித்துவராகத்தான் இருந்தார். உயிர்களின் தோற்றத்தை ஆய்வு செய்யும் போது கடவுள் மதம் ஆகியன பொய் என்று உணர்ந்தார். கிறித்துவ மத நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டார். இது போன்ற எண்ணற்ற அறிஞர்களை அய்ரோப்பிய அமெரிக்க நாடுகளில் நாம் காணலாம்.

காரல் மார்க்சின் தந்தையான ஹென்ரிச் 1817இல் யூத மதத்திலிருந்து பிராட்டஸ்டன்ட் கிறித்துவராக மாறி, 1824இல் மார்க்சு உட்பட தனது எட்டுக் குழந்தைகளையும் கிறித்துவர்களாக மாற்றினார். அறிஞர் காரல் மார்க்சு பல நூல்களைக் கற்று அறிந்து தெளிந்து, மதம் ஒரு போதைப் பொருள் என்று கூறினார். அமெரிக்கப் பேரறிஞர் இங்கர்சால் கிறித்துவ மதத்தை மிகக் கடுமையான முறையில் கண்டனம் செய்தார்.

நாத்திகராகவே வாழ்ந்து உலகிற்குப் பகுத்தறிவு நெறிகளைத் தொகுத்துத் தந்தவர். அவர் 20ஆம் நூற்றாண்டில் அறிவியல் புரட்சியும் 21ஆம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் மதம்சார்ந்த பல கருத்துகளைப் புரட்டிப் போட்டன. குறிப்பாக கத்தோலிக்க மதத்தில் 1990க்குப் பிறகு பல மாறுதல்களைக் காண முடிந்தது. 1992இல் கலிலியோவிற்கு அளிக்கப்பட்ட தண்டனைக்காக வாட்டிகன் திருச்சபை மன்னிப்புக் கோரியது. 1995இல் இக்கட்டுரையாளர் அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 50வது ஆண்டு விழா எடுக்கப்பட்டது.

உலகின் அனைத்து நாட்டுத் தலைவர் களும் நியுயார்க் நகரில் கூடினர். ஈழத்தமிழர்களும் மாபெரும் போராட்டத்தை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் முன் நடத்தினர். அப்போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக கட்டுரையாளர் அமெரிக்க நண்பரின் வீட்டிலேயே இருந்தார். அந்நாளில் தொலைக்காட்சி வழியாக அரசியல் நிகழ்வுகளைக் காண நேரிட்டது. நியூயார்க் மாநகர மேயர், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கிளின்டன் ஆகியோர் அளித்த விருந்துகளில் கியூபா நாட்டின் புரட்சியாளர் பிடல் கேஸ்ட்ரோவிற்கு அழைப்பு இல்லை.

அப்போது நியூயார்க் நகரின் அபிசீனியன் கத்தோலிக்க திருச்சபை பிடல் காஸ்ட்ரோவிற்கு மாபெரும் வரவேற்பை அளித்தது. பெரும்பாலும் கருப்பர் இனத்தவர்கள்தான் இதில் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு 1960இல் முதன் முதலில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பிடல் கே°ட்ரோ அமெரிக்க ஏகாதிபத்தி யத்திற்கு எதிராக முழங்கினார். இதனால் வெறுப்படைந்த அமெரிக்க அரசியல் தலைமை ஒரு நாட்டின் தலைவர் என்ற மரியாதையைக்கூட அவருக்கு அளிக்க மறுத்தது. அப்போதும் ஆர்லம் நகரில் உள்ள கிருத்துவ தேவால யத்தில் தெரசா விடுதியில்தான் தங்கினார் பிடல்.

1995ஆம் ஆண்டு பீடல் காஸ்ட்ரோவின் முன் திரண்டி ருந்த மதகுருமார்கள் மத்தியில் ஒரு மாபெரும் புரட்சி உரையை ஒரு மணிநேரம் நிகழ்த்தினார். ‘உலகில், 1000 குழந்தைகளுக்கு 10 குழந்தைகள்தான் கியூபாவில் இறக்கின்றன. 60000 நல்ல தேர்ச்சி பெற்ற மருத்து வர்கள் நோய்களைத் தடுப்பதற்குப் பணிகள் ஆற்றி வருகின்றனர், என்று குறிப்பிட்டார். அமெரிக்காவில் இருந்தும் பலர் கியூபாவிற்கு வந்து சிகிச்சை பெறுகின்ற னர் என்றும் குறிப்பிட்டார்.

“மானுட நேயத்தைக் கிருத்துவம் போற்றுகிறது என்றால் கியூபா அதனைச் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்துகிறது ஏழைகளைப் பணக்காரர்கள் சுரண்டுகிறார்கள். இரண்டு கோடிப் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பசியாலும் கடும் நோயாலும் இறக்கிறார்கள். இரண்டாம் உலகப் போர் முடிவுற்றாலும் ஆயுத உற்பத்தியும் போட்டியும் தொடர்கின்றன. அணு ஆயுதமும் இராணுவ மேலாதிக் கமும் நீடிக்கின்றன. எவ்வளவு நாள் இவ்வித போட்டியை நாம் வேடிக்கை பார்க்கப் போகிறோம்” என்று பிடல் கா°ட்ரோ முழங்கினார். அன்றைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கிளின்டன் தலைசிறந்த பேச்சாளர். இருப்பினும் பிடல் காஸ்ட்ரோவிற்குக் கிடைத்த வரவேற் பும் தொலைக்காட்சிகளில் அவரது உரை திரும்பத் திரும்ப காட்டப்பட்டதும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தினருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

திருச்சபையின் அருட்தந்தை கால்வின், ‘மக்கள் விடுதலைக்காகப் பாடுபடுகின்ற புரட்சியாளர்களையும் தொலைநோக்குத் தலைவர்களையும் வரவேற்பதுதான் எங்களது மரபு’ என்று கூறி பிடல் காஸ்ட்ரோவின் சாதனைகளைப் பட்டியலிட்டார். இதற்குப் பிறகுதான் கத்தோலிக்க திருச்சபையில் பல மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. போப் இரண்டாம் ஜான்பால், 1998 ஜனவரி 21 முதல் 25 வரை ஐந்து நாட்கள் 1960ம் ஆண்டிற்குபின், கியூபாவில் முதன்முதலாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போப் ஜான்பால் கியூபா மீது விதித் திருக்கின்ற பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மானுட உரிமைகளும் மத உரிமைகளும் எந்தெந்த நாட்டில் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் கிறித்துவ மதக்கோட்பாடுகள் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதன் தொடர்சியாகத்தான் தற்போதுள்ள போப் பிரான்சிஸ் பல முற்போக்கான கருத்துகளை முன்மொழிகிறார். பொருளாதாரம் கொல்கிறது (îe Economy Kills) என்ற ஒரு ஆய்வினை வாட்டிகன் வெளியிட்டுள்ளது. ஏசுநாதர்தான் உலகின் முதல் கம்யூனிஸ்ட் என்று போப் குறிப்பிடுகிறார். உலகமயமாதல் கொள்கை சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிப் புதுவகையான வறுமையை நிலைப்படுத்தி வருகிறது.

தேவைக்கு அதிகமான உற்பத்தியையும் அதற்காகவே நுகரும் பண்பாட்டையும் விரிவாக்கி வருகிறது. தற்போது உள்ள அமைப்பு, பொருளாதாரக் கொடுங்கோன்மை அமைப்பாக மாறி வருகிறது. மக்கள் வறுமையால் வாடுகிற போது செல்வந்தர்கள் நுகர்ச்சியில் மீதமான உணவுப் பொருட்களைக் குப்பையில் வீசுவதைப் பார்த்துக் கொண்டு இருக்கலாமா? செல்வாக்கு மிக்கவர்கள்தான் சந்தைப் பொருளாதாரப் போட்டியில் முன்னிலையில் நிற்கின்றனர். ஒடுக்கப்பட்டவர்களின் ஏற்றத்தாழ்வை நிரந்தரப்படுத்துகின்றனர்.

கிறித்துவர்கள் பணத்தை மையப்படுத்தக் கூடாது. தேவையான பொருட்களை சமுதாயத்திற்குக் கிடைக்கும்படிச் செய்யவேண்டும். இதைத்தான் ஏசுநாதர் ‘நீ கடவுள், செல்வம் என்ற இரு முதலாளிகளுக்குச் சேவை செய்ய முடியாது’ என்று குறிப்பிட்டார். வறுமை, ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, நிலம் வீடு ஏழைகளுக்கு மறுக்கப்படும் நிலை, தொழி லாளர் உரிமைகள் பறிப்பு இந்தப் பணப்பேரரசில் இடம் பெற்றுள்ளன. இறுதியாக நீங்கள் கெட்ட கிறித்துவர்களாக இருக்காதீர்கள். மக்கள் நாத்திகமே மேலானது என்று நம்பத் தொடங்கிவிடுவார்கள். ஏழைகளுடைய கூக்குர லைக் கவனியுங்கள். செல்வக்குவிப்பையும் பணக்காரர் களையும் புறக்கணிக்க வேண்டும். எந்த நாடும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக்கூடாது”. மேற்கூறிய கருத்துகள் வாட்டிகன் வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

மேலும் தற்போதைய போப், வாட்டிகன் நகரில் உள்ள ஆடம்பர மாளிகையில் தங்காமல் ஓர் அறையில்தான் தங்கி வருகிறார். கிறித்துவத் திருச்சபையின் பழமை மரபுகளைப் புறக்கணித்து இதற்கு முன்பு போப்பாகப் பணியாற்றியவரின் தங்கும் இடத்திற்குச் சென்று நோயுற்றவருக்கு ஆறுதலையும் அன்பையும் வழங்கி னார். பிடல் காஸ்ட்ரோவால் 1995இல் தொடங்கிய முதலாளித்துவத்திற்கு எதிரான பெருகிவரும் கருத்துகள், இன்று போப் ஆண்டவரால் முன்னிறுத்தப்படுகின்றன. உலக அளவில் முற்போக்குச் சிந்தனையாளர்கள் கிறித்துவ அமைப்பினர் போப்பின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பற்ற நாடு என்று சொல்லப்படுகிற இந்தியாவில், கிறித்துவ, இசுலாமிய மத வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. காந்தியைக் கொன்ற கோட்சேவிற்கு ஊர்தோறும் சிலை அமைப்போம், கோயில் கட்டுவோம் எனும் குரல்கள் ஒலிக்கின்றன. ‘தாய்வீட்டிற்குத் திரும்புதல்’ என்று கூறி, ஏழை மக்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றும் நிகழ்வுகளும் ஒரு பக்கம் தொடர்கின்றன. மறு பக்கம் பன்னாட்டு, உள் நாட்டுப் பெருமுதலாளிகள் வளம் பெறச் சிறு குறு விவசாயிகளின் நிலங்களை அவர்களின் ஒப்புதல் இன்றிப் பறிக்கும் அவசரச் சட்டம் அறிவிக்கப்படுகிறது. அச்சட்டத்தை எப்படியாவது நாடாளுமன்றத்தில் ஏற்க வைப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.

2005ஆம் ஆண்டு ஏழைகளுக்காகவும் பெரு நோயால் தாக்குண்ட பழங்குடி இன நோயாளிகளுக்காகவும் ஒரிசாவின் ஆதிவாசிகள் வசிக்கின்ற பகுதிகளில் பெரும் பணியையும் தொண்டையும் ஆற்றி வந்த கிரகாம் ஸ்டின்சு என்ற ஆஸ்திரேலிய கிறித்துவப் பணியாளரை அவரது மகன் மகளுடன் உயிரோடு எரித்த நிகழ்வு இந்தப் பாரத புனித பூமியில்தான் நடந்தது. மிகப் பெரிய இந்தச் சோக நிகழ்வால் தாக்குண்ட பிறகும் திருமதி.°டின்சு குற்றவாளிகளை மன்னித்துவிடுங்கள் என்று பெருந்தன்மையோடு கூறினார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு-சங்பரிவாரங்களின் வன்முறைத் தாக்குதல்கள் பகுத்தறிவாளர்கள் மீதும் மற்ற மதத்தினர் மீதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மார்ச்சு திங்களில் மேற்குவங்கத்தில் பல ஆயிரக்கணக் கான பெண்களுக்குத் தரமான கல்வியை வழங்கிவரும் பள்ளிக்கூடத்தின் வளாகத்தில் உள்ள விடுதிக்குச் சென்று 71 வயதான கிறித்துவ பெண் பணியாளரைப் பல பேர் சேர்ந்து பாலியல் சீரழிவைச் செய்து இந்திய மக்களாட்சி முறைக்கும் பன்முகத் தன்மைக்கும் பெருங்கேட்டினைச் செய்துள்ளனர்.

இவ்வாறாக இன-மொழி-மத-பண்பாட்டுக் கருத்துரி மைகள் இந்துத்துவா சக்திகளால் பறிக்கப்படும் சூழல்கள் தொடர்கின்றன. பிரதமர் மோடி கண்டும் காணாதது போல், பன்னாட்டு முதலாளிகளையும் குஜராத் முதலாளிகளையும் ஊக்கப்படுத்துவதிலேயே தனது முழுச் செல்வாக்கையும் பயன்படுத்தி வருகிறார். முதலாளித்துவமும் இந்துமதவாதமும் தற்போது பாஜக ஆட்சியில் கைகோர்த்து நிற்கின்றன.

உலகின் ஒரே (Vatican), கிறித்துவ நாடான ரோமில் உள்ள வாட்டிகனிலோ முதலாளித்துவத்திற்கும் பணக் காரர்களுக்கும் எதிராகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் மனித உரிமையைப் பாதுகாக்கவும் கிறித்துவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டுமென்று போப் பிரான்சிஸ் முழக்கமிடுகிறார்.

வாட்டிகனில் நடைபெறுவது வரவேற்கத்தக்க மாற்றம்தானே !

Pin It