அண்மையில் ‘ம.பொ.சி.யின் தமிழன் குரல்’ என்னும் நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் தமிழ் முரசு, தமிழன் குரல், செங்கோல் ஆகிய ஏடுகளை நடத்தி யுள்ளார். இவற்றுள் தமிழன் குரல் ஏட்டின் இலக்கியக் கட்டுரைகள் மட்டுமே இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ம.பொ.சி.யுடன் சேர்த்துப் பேராசிரியர் ந. நஞ்சீவி, அ.ச.நா., கி.வா.ஜ., தெ.பொ.மீ. போன்றோரின் கட்டுரைகளும் இதில் உள்ளன.

ம.பொ.சி.யின் கட்டுரைகளில் ‘இலக்கியத்தின்எதிரி ஈ.வே.ரா.’ எனும் படைப்பைப் பற்றி இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். ம.பொ.சி.யின் அரசியல் பயணம், பெரும்பாலும் பெரியாருக்கு எதிர்த் திசையிலேயே இயங்கியது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இந்தி எழுத்துகளைத் தார்கொண்டு அழித்திட, அவற்றை மண்ணெண்ணெய் கொண்டு துடைத்தவர் ம.பொ.சி. திராவிட இயக்கம் மக்கள் நடுவே செல்வாக்குப் பெற்று வளரத் தொடங்கிய காலங்களில் நாடு முழுவதும் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகள் நடத்தியவர் அவர். பெரியார் தன்னுடைய அரசியல் எதிரியாகக் கருதிய இராசாசியைத் தன் அரசியல் வழிகாட்டியாக ஏற்றவர் ம.பொ.சி.

அரசியலில், சமூகவியலில் அவரவர் மாற்றுக் கருத்தோடு இயங்குவது ஏற்கக் கூடியதே. ஆனால் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கையில் ஒவ்வொருவரும் உண்மையான ஈடுபாட்டுடன் நடந்துகொள்ள வேண் டும். 1917களிலேயே ஈரோடு நகரமன்றத் தலை வராகப் பொறுப்பேற்ற ஈ.வெ.ரா., காங்கிரசின் கொள் கைகளால் ஈர்க்கப்பட்டு, அப்பதவியைத் துறந்து பொதுவாழ்வுக்கு வந்தார். பின்னர் அக்கட்சியின்பால் நம்பிக்கை இழந்து, தனியே தன்மான இயக்கம் கண்டவர், தன் வாழ்வின் இறுதிக்காலம் வரை, எவ்வகைத் தன்னல நோக்கமும் இன்றித் தமிழர் வாழ்வின் முன்னேற்றம் கருதியே தன்மூச்சைக் கரைத்துக் கொண்டார். காந்தி, நேருவின் தந்தை மோதிலால் உள்ளிட்ட எல்லாத் தலைவர்களோடும் அரசியல் நடத்தியவர். தன் நீண்ட நெடிய பொதுத் தொண்டில் எப்போதும் அவர் விளம்பர வெளிச்சத்தை அண்டியதே இல்லை.

ஆனால் பெரியார் நடத்திய இராமாயண எதிர்ப்பியக்கம் பற்றிக் கூற வந்த ம.பொ.சி. பின்வருமாறு எழுதுகிறார் :

“ஏதேனும் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது பெரியார் ஈ.வே.ராவுக்கு வழக்கமாகி விட்டது. காரண காரியத்தோடு எதிர்ப்பு நடத்தப்பட்டால் அதைப்பற்றிக் குறை கூறுவதற்கில்லை. ஆனால் காரண காரியம் இல்லாமலே சுய விளம்பரத்திற்காக எதிர்ப்பு இயக்கம் நடத்துவது குறைமட்டுமல்ல; குற்றமு மாகும்... இலக்கியத் துறையில், அதுவும் ஆராய்ச்சி வழியில் ஈ.வே.ரா.வுக்குப் போதிய அறிவோ அனுபவ மோ இருப்பதற்கில்லை.” (ம.பொ.சி.யின் தமிழன் குரல், தொகுப்பாசிரியர் தி. பரமேசுவரி, பக்.178).

முன்பொரு முறையும் பெரியார் கம்பராமாயண எதிர்ப்பில் ஈடுபட்டாராம். ஆனால் கண்டனக் கணைகள் உடலைத் துளைத்ததால் அப்போதைக்கு எதிர்ப்பைக் கைவிட்டு விட்டாராம். இப்போது அரசியல் துறையில் அவருடைய வட்டாரத்திற்கு வேலையில்லாத் திண் டாட்டம் ஏற்பட்டுவிட்டதாம். சமூகச் சீர்திருத்தத் துறை யிலும் அவருடைய சரக்குகளுக்கு ‘மார்க்கெட்’ இல்லாமற் போனதால் இடைக்கால இயக்கமாக கம்பராமாயண எதிர்ப்பு நாடகத்தை நடத்தப் புறப்பட்டிருக்கிறாராம். மீசை கூசாமல் ம.பொ.சி. இப்படியெல்லாம் பொய் எழுதுகிறார்.

தன்மான இயக்கம் தமிழகத்தின் பட்டிதொட்டி யெங்கும் இராமாயணத்தின் புரட்டுகளை மக்களிடையே எடுத்துச் சென்று பரப்புரை செய்தது. படித்தவர்கள் நடுவே கம்பராமாயணத்தில் படிந்துள்ள இன எதிர்ப்புக் கசடுகளை அறிஞர் அண்ணா தன் ஆற்றல் மிக்க சொல்வன்மையால் துலக்கிக் காட்டினார். சொல்லின் செல்வர் என்று பாராட்டப் பெற்ற ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தரபாரதியார் போன்ற பெருமக்க ளெல்லாம் அண்ணாவின் பேச்சாற்றல் முன்னால் துவண்டு போயினர். கம்பராமாயணத்திற்கு எதிராய் ‘தீபரவட்டும்’ என்ற பகுத்தறிவுச் செந்தீ மதப்புராணப் பழமைவாதிகளைச் சுட்டெரித்தது.

நடிகவேள் எம்.ஆர். இராதா ஊர்தோறும் சென்று இராமாயண நாடகங்கள் நடத்தி இராமனின் அவதாரப் பொய்மையைத் தோலுரித்தார். அலையலையாய்த் திரண்டு வந்து அவருடைய இராமாயண நாடகங்களைப் பார்த்த தமிழக உழைக்கும் மக்கள் ஆரியப் பொய்மைகளைக் கண்டு ஆர்ப்பரித்தனர். திருவாரூர் தங்கராசு, எஸ்.டி. விவேகி போன்ற அறிவியக்கப் படைமறவர்கள் தமிழக மெங்கும் சுற்றிச் சுழன்று இராமாயணப் புரட்டுகளை மக்கள் முன் மேடை ஏற்றினர். ஆனால் ம.பொ.சி. சொல்கிறார் ‘கண்டனக் கணைகள் உடலைத் துளைத் தால் பெரியார் அப்போதைக்கு எதிர்ப்பைக் கைவிட்டு விட்டாராம்’.

இலக்கியத் துறையில் அதுவும் ஆராய்ச்சி வழியில் ஈ.வெ.ரா.வுக்குப் போதிய அறிவோ அனுபவமோ இருப்பதற்கில்லை என்கிறார் ம.பொ.சி. இலக்கியத் துறையிலோ, ஆராய்ச்சி வழியிலோ ஈடுபட ஒரு வர்க்கு வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமே போதும் என்கிறாரா, இவர்? அவ்விலக்கணம் ம.பொ.சி.க்கே பொருந்தாதே! சாதாரண அச்சுக்கோக்கும் தொழிலாளி யாய்த் தன் வாழ்க்கைத் தொடங்கிய அய்யா ம.பொ.சி. மெத்தப்படித்த மேதைகளையெல்லாம் விஞ்சும் வகை யில் இலக்கியப் புலமையும் பேச்சாற்றலும் பெற்றது எதனால்? தன் ஊக்கத்தாலும் உலையா உழைப் பாலும் அன்றோ அவர் இந்த உயர்நிலையை அடைந்தார்?

பெரியார் இராமாயணம் பற்றிச் சொற்பெருக்காற்ற அமர்ந்தால் அவர்முன் மேடைமேல், பல்வேறு பண்டிதர்கள் எழுதிய பலவகையான இராமாயண நூல்கள் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பெரியார் அத்தனை நூல்களையும் எழுத்தெண்ணிப் படித்துவிட்டுத்தகுந்த சான்றுகள் காட்டித்தான் மேடை யில் சண்டமாருதம் செய்வார்.

சான்றுக்கு ஒன்றாக ‘இராமாயணப் பாத்திரங்கள்’ என்னும் தலைப்பில் இராமனைப் பற்றிய அவருடைய ஆய்வு :

1.கைகேயியை மணம் செய்து கொள்ளும் போதே தசரதன் நாட்டைக் கைகேயிக்குச் ‘சுங்கமாக’க் கொடுத்துவிட்டதும், அதனால் நாடு பரதனுக்குச் சொந்தமாக வேண்டியது என்பதும் இராமனுக்கு நன்றாய்த் தெரியும்.

2. நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும் கைகேயிக்கும், குடிகளுக்கும் நல்ல பிள்ளையாக நடந்து வந்திருக்கிறான்.

3. பரதன் ஊரில் இல்லாத சமயத்தில் பட்டாபிஷேகம் செய்யத் தசரதன் செய்யும் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக்கொள்ள முனைகிறான்.

இப்படி 1, 2, 3... என வரிசையாய் மொத்தம் 46 காரணங்களைச் சொல்லி, இராமனின் வண்டவாளங் களைத் தண்டவாளத்தில் ஏற்றுவார் பெரியார். அவற் றில் 10ஆவது காரணம் : “இராமன் பல மனைவி களை மணந்திருக்கிறான். (இதை மொழிபெயர்ப்பா ளர்களான தோழர் சி.ஆர். சீனிவாசய்யங்காரும், தோழர் மன்மதநாத் தத்தரும் தெளிவாக எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். இராமாயணத்தில் பல இடங் களில் ‘இராமன் மனைவியர்’ என்றே வாசகங்கள் வருகின்றன.)”

இறுதியில் 46ஆவதாக, “சாதாரண மனிதர் களைப் போலவே இராமன், இலட்சுமணனையும் தள்ளிவிட்டுத் தானும் ஆற்றில் விழுந்து சாகிறான். பிறகு, உப இந்திரனாக ஆகிறான் (தோழர் சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழிபெயர்ப்பு அயோத்தியா காண்டம் சருக்கம் 8, பக்கம் 28, 36ஆவது பாயிண் டுக்கு உதாரணமாக)” என முடிப்பார். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பதிப்பாசிரியர் வே.ஆனைமுத்து, தொகுதி 4, மதமும் கடவுளும் 1, பக்கங்கள் 1920-1924).

தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள ம.பொ.சி.யின் கட்டுரையில் “இலக்கியத் துறையில் எல்லாம் உணர்ந்தவர் போல அடிக்கடி அபிப்பிராயம் கூற முற்படுவதும், ‘ஆராய்ச்சி’ என்ற பெயரால் ஆபாசக் கருத்துகளை வெளியிடுவதும் ஈ.வெ.ராவுக்குத் தொழி லாகிவிட்டது” என வேலை வெட்டி இல்லாத ஆள் போலப் பெரியாரைச் சாடுகிறார். ஆனால் இராமாயண ஆராய்ச்சியில் பெரியார் ஈடிணையற்ற படிப்பாளியாய் இருந்தார் என்பதை வரலாறு அறியும். மேலும் பெரியார் இராமாயணத்தைக் கட்டுடைப்பதில் காட்டிய அக்கறை தனித்தன்மையானது.

“இராமன், அவனுடைய ஒழுக்கத்திற்காகவும், உயர் குணங்களுக்காகவும் தெய்வமாக்கப் பட்டிருப் பினும், வடநாட்டு இராமனைத் தமிழ்நாட்டார் வழிப டக் கூடாதென்கிறார் ஈ.வெ.ரா. எவ்வளவுதான் உயர்குணத்தவனாயினும் மனிதனைத் தெய்வமாகக் கருதுவது கூடாதென்றால், அந்த வாதத்திற்கு மதிப்பு தரலாம். தெய்வ வழிபாடே கூடாதென்றாலும், அதை நாத்திகத்துவமாகவேனும் கணக்கில் வைக்கலாம். ஆனால் இராமன் வடநாட்டான்; ஆகவே தமிழ்நாட் டார் அவனை வழிபடக்கூடாது என வம்பு பேசுவது நிறவெறிப் பேயாட்டமேயன்றி அறிவுவழிப் போராட்ட மன்று” (மேற்படி ம.பொ.சி. நூல், பக்கம் 183).

இராமனை எதிர்ப்பது நிறவெறிப் பேயாட்டம் என்கிறார் ம.பொ.சி. பெரியாரின் கருத்து பின்வரு மாறு:

இராமாயணத்தை ஆரியர்-திராவிடர் போராட்ட மென்றும், ‘இராமாயணக்கதை திராவிடரை இழிவு படுத்துவதற்காகவே ஆரியர்களால் கற்பனை செய்யப் பட்ட கட்டுக்கதை’ என்றும், ‘இராமாயணக் கதை ஆரியருக்குத் திராவிடர்கள் மீது இருந்த வெறுப்பைக் காட்டுவதற்கென்றே ஆரியரால் (பார்ப்பனரால்) புனை யப்பட்ட கதை’ என்றும், ‘இராமன் ஆரியத் தலைவன் - இராவணன் திராவிட அரசன்’ என்றும், மற்றும் இராமாயணம் ‘புத்தனுக்குப் பின் கற்பனை செய்து பார்ப்பனரால் எழுதப்பட்டது’ என்றும், ‘இராமாயணம் நடந்த கதையல்ல; சரித்திரத்தில் பட்டது அல்ல; நீதியும் அல்ல’ என்றும், ‘இராமாயணம் பார்ப்பனத் தர்மத் துக்கு எடுத்துக்காட்டு’ என்றும் ‘இராமாயணம் பார்ப் பனர்கட்கு அவர்கள் நடந்துகொள்ள வேண்டிய முறைத் தொகுப்பு’ என்றும் - மற்றும்

பலவாறாகச் சரித்திர ஆசிரியர்கள் முதல், ஆய் வாளர்கள் உட்படப் பார்ப்பனராலும், வெளிநாட்டு அறிஞர்களாலும் சுயமரியாதை உணர்ச்சியுள்ள தமிழ் அறிஞர்களாலும் ஆதாரங்களுடன் சொல்லப்பட்டிருக் கிறது. இவற்றிற்கு ஆதாரங்கள் நம்மிடம் இருக் கின்றன. அவைகட்கு அன்றுமுதல் இன்றுவரை எந்த அறிவாளியும் - தமிழரில் எந்தப் புலவரும் ஆட்சேப ணையோ, மறுப்போ கூறியது கிடையாது.

மற்றும், இந்த இராமாயணத்தைப் பற்றி அதில் காணப்படும் ஆபாசங்களுக்கு, ஒழுக்கக் கேடான காரியங்களுக்கு, அநீதிகளுக்கு நாளது வரை எந்தப் புலவரும் மறுப்புக் கூறியதும் கிடையாது. இப்படிப்பட்ட நிலையிலுள்ள இராமாயணத்தைக் கடவுள் கதை யாகப் பாவித்து, பாமர மூட மக்களிடம் புலவர்கள் புகுத்தி அதில் பலன்பெறுகிறார்கள் என்றால் - இதற்கு எதை ஒப்பிடுவது? இப்புலவர்களுக்கு எதை உதாரண மாக்குவது?

தோழர்களே! சிந்தியுங்கள், நன்றாய்ச் சிந்தியுங்கள். புலவர்களுக்குப் புத்தி, மனம் இல்லாவிட்டாலும், நீங்க ளாவது கொளுத்துங்கள் கம்ப இராமாயணத்தை!

- ‘விடுதலை’ தலையங்கம், 27-10-1972

இந்தியாவைப் பொறுத்தவரை, இராமன் என்ப தும் இராமாயணம் என்பதும் வெறும் கற்பனைப் பாத்திரமோ, கற்பனைக் கதையோ அன்று. மடமை யில் மூழ்கியுள்ள பெரும்பான்மை இந்துச் சமுதாய மக்கள் உள்ளத்தில் கொண்டுவிட்ட ஒரு குருட்டு நம்பிக்கை.

இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியத் துணைக்கண்டத்தில் முதல் இந்துப் பார்ப்பன அரசனாய் இடம்பிடித்தவன் புஷ்யமித்திர சுங்கன். அவன் அசோகனின் கொள்ளுப் பேரனாய் ஆட்சிப் புரிந்த பிரகதத்தனின் படைத்தளபதி. பட்டப் பகலில் தன் அரசனின் தலையைத் தானே சீவி எறிந்து ஆட்சிக்கு வந்தவன்தான் புஷ்யமித்திர சுங்கன்.

அவன் வேதமதம் தழைக்க வினைபல ஆற்றி னான். அசோக மன்னன் காலத்தில் தழைத்திருந்த பவுத்தக் கொள்கைகளை அடியோடு வெட்டிச் சாய்த் தான். பவுத்தப் பிக்குகளின் தலைகளை வெட்டிக் கொண்டு வருவோர்க்குப் பொன்னும் பொருளும் வாரிக் கொடுத்தான். வேதியர் குல ஆட்சியை விண்முட்டத் தழைக்கச் செய்தான். அவன் காலத்தில்தான் இராமாய ணக் கதை தொகுக்கப்பட்டது. செவிவழிச் செய்தியாக வும், நாட்டுப்புறக் கூத்தாகவும் அங்கங்கே நிகழ்த்தப் பட்டுவந்த இராமன் பற்றிய கற்பனைக் கதையைச் செப்பம் செய்து எழுத்து வடிவிலான இலக்கியம் ஆக்கினான். அப்படித் தொகுத்த இராமாயணக் கதை யை இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கை, பர்மா, சயாம், ஜாவா, சுமத்திரா, போர்னியா போன்ற நாடு களிலும் பரவச் செய்தான், அப்படி அவன் காலத்தில் பரப்பப்பட்ட இராமாயணக் கதைதான் இன்றுவரை எல்லாருடைய மனங்களிலும் கோலோச்சிக் கொண் டுள்ளது.

வடஇந்திய இந்து அரசர்கள் மட்டுமல்ல, இசுலாமிய அரசர்கள் தென்னாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், பின்னர் ஆண்ட விசய நகர அரசர்கள், மராட்டியர்கள், நவாபுகள் என எல் லார்க்கும் அமைச்சர்களாய், அதிகாரிகளாய் இருந்த வர்கள் பார்ப்பனர்கள்தாம். எனவே அவர்கள் இராமா யண வெறியை எல்லார் மனங்களிலும் நெய்யூற்றி வளர்த்தனர். அந்த வெறி இன்று இந்துத்துவ நரேந்திர மோடியின் ஆட்சியில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுள்ளது.

இன்னும் சொல்லப் போனால், இந்த ஆட்சி நடுவண் அரசை இவ்வளவு பெரும்பான்மையோடு கைப்பற்ற, மெய்ப்பற்றோடு துணை செய்தவனே அயோத்தி இராமன்தான்.

பாபர் மசூதிச் சிக்கல் இன்றைக்கு நேற்றுத் தொடங்கியதல்ல. இங்கு அமைப்புகள் வேறாய் இருந்தாலும், ஆள்கள் வேறானவர்கள் அல்ல. இந்தி யத் தேசியக் காங்கிரசும், இந்துமகா சபையும் தோற் றத்தில் வேறு வேறு அமைப்புகளாய் இருக்கலாம், இந்துத்துவ அலைவரிசை எல்லா மட்டங்களிலும் ஒன்றுதான். காங்கிரசுக் கொடியும் காவிக் கொடியும் காட்சிப் படலத்தில் வேறு வேறாய்த் தெரிந்தாலும் கருத்துத்தளத்தில் ஒன்றோடொன்று கைகுலுக்கிக் கொள்ளும். அமைச்சர், ஆட்சியாளர், நீதிபதி இவர்கள் எல்லோரையும் ஒற்றைப் பூணூல் கயிறுதான் ஒன் றாக இணைக்கிறது.

1949இல் திருட்டுத்தனமாய் அயோத்தியில் பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்ட இராமன் சிலையை, இந்துப் பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்துவிட 1986இல் நீதிமன்ற ஆணை வழங்கிய பைசதாபாத் மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே ஒரு பார்ப்பனர்.

சிக்கலுக்குரிய அந்த இடத்தில் செங்கல் பூசை நடத்தித் தன் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய இராசீவ் காந்தி தொடங்கி 1992 திசம்பர் 6ஆம் நாள் பாபர் மசூதி இடிப்பைத் தன் கண்ணாரக்கண்டு மகிழ்ந்த நரசிம்மராவ் வரை இந்தப் பாசிச நடவடிக் கைகளுக்குத் துணை போனவை பஜ்ரங்தள குரங்குப் படைகளல்ல. பச்சை காங்கிரசுப் பார்ப்பனக் கும்பல் தான்.

‘அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் மதநம்பிக்கை. அது நீதிமன்றங்களின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது’ என்று முழங்கிய சங்கப் பரிவாரங்களின் இந்து வெறிக் கூச்சலையே 30.09.2010 அன்று தன்னுடைய ஒருமித்த தீர்ப்பாக அறிவித்துவிட்டது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக ஒரு சிக்கல் நிலவி வந்தது. மீன்பிடிதொழில், சுற்றுச்சூழல் கேடு எனப் பல்வேறு தடைகளைக் கொண்டிருந்தாலும் தமிழர் களின் பல்லாண்டு கோரிக்கைகளுக்குப்பின் அன்றைய நடுவண் அரசால் சேதுக்கால்வாய்த்திட்டம் அறிவிக்கப் பட்டது. அந்தத் திட்டத்திற்கு அயோத்தி இராமன் குறுக்கே வந்துவிட்டான். சுப்பிரமணியசாமி போன்ற மாமாக்கள் மூலம் இராமர் பாலத்தை உடைக்கும் சதி எனச் சொல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டது.

அப்போது தமிழக முதல்வராய் இருந்த கலைஞர் கருணாநிதி, “இராமர் என்ற ஒருவர் வரலாற்றில் வாழ்ந்ததாக எங்கும் சான்றுகள் இல்லை. அத்தகை யவர் எப்படிப் பாலங்கட்டியிருக்க முடியும்? அவர் எந்தக் கல்லூரியில் படித்துவிட்டுப் பாலம் கட்டினார். இராமாயணம் என்பது ஆரியர்-திராவிடர் போராட் டத்தில் கதை வடிவம் என்று நேருவே சொல்லி இருக்கிறார்” என்றார்.

உடனே இராம்விலாஸ் வேதாந்தி என்கிற ஒரு இந்துமத வெறியர், ஹவாலா வழக்கின் கிரிமினல் பேர்வழி “கருணாநிதியின் தலையையும் நாக்கையும் துண்டித்துக் கொண்டு வருபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும்” என்று அறிவித்து விட்டார்.

உடனே, பெரியாரைத் தமிழின எதிரியென்றும், ம.பொ.சி.யைத் தமிழ்த் தேசியப் போராளி என்றும் உயர்த்திப் பிடிக்கும் உண்மைத் தமிழ்த் தேசியர் தோழர் மணியரசன் அவர்கள் “கருணாநிதி தமிழர் கட்டடக் கலையை எள்ளி நகையாடிவிட்டார். கல்லணை கட்டிய கரிகாலன் பட்டம் முடித்தவனா? தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய மாமன்னன் இராசராசன் பொறியியல் கல்லூரியில் படித்தவனா? என்றெல்லாம் வினா எழுப்பி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக் கும் முடிச்சுப் போட்டார்.” ‘திராவிடர் இயக்கத்தின் வெள்ளையர் புகழ்பாடும் உளவியல் அவரது இந்தத் திறனாய்வில் வெளிப்படுகிறது’ என வழக்கம் போலத் திராவிட இயக்கத்தை வம்புக்கிழுத்தார்.

மணியரசனையும் தமிழ்த்தேசிய வாதிகளையும் பொறுத்தவரை பெருமாளும் இராமனும் தமிழ்க் கடவுள்களே. தோழர் மணியரசன் அவர்கள் மக்கள் நன்மைக்காக இராமர் பாலம் என்ற சிறுபகுதியை வெட்டிக் கால்வாய் அமைப்பது அவர்களை (?) அவமதிப்பது ஆகாது என்று தமிழ் வைணவர்களை முழங்கச் சொல்கிறார். வைணவச் சீர்திருத்தச் செம்மல் இராமானுசரை ஆசானாக ஏற்றுக்கொண்டவர்களும் அதேபோல் முழங்க வேண்டும் என்கிறார் (காண்க : தமிழர் கண்ணோட்டம், 2007, அக்டோபர்).

தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சி தற்போது எல்லா ஆரியக் கடவுளர்களையும் தமிழ்க் கடவுள்களாக உருமாற்றி வருகிறது. புலிவீரம் பேசும் இன்னொரு தமிழ்த்தேசியர், பச்சை உடுத்திப் பழனி முருகனுக்குக் காவடி தூக்கப் போய்விட்டார்.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், தோழர் பெ. மணியரசன் பெரியாரை வசைபாடுகிறார். “நான் அறிந்தவரை பெரியார் தமிழின மறுப்பாளர்; தமிழ் மொழி எதிர்ப்பாளர். ஆனைமுத்து ஐயா பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் மூன்று தொகுதி களாக வெளியிட்டுள்ளார். அந்த மூன்று தொகுதி களையும் இளைஞர்கள் ஒரு மாதத்திற்குத் தொடர்ச்சி யாகப் படித்துப் பாருங்கள். அதன்பிறகு பெரியாரைப் பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள். நான் சொல்கிறேன் என்பதற்காக ஏற்க வேண்டியதில்லை” (தமிழர் கண்ணோட்டம் 2015, மார்ச்சு 1-15, பக்.12).

மணியரசன் தமிழ் மீதில் மாளாப் பற்றுள்ளவர். வடமொழித் திணிப்பை எதிர்ப்பவர். இந்துத்துவ கருத்தியலை ஏற்காதவர். இந்தியத் தேசிய ஒருமைப் பாட்டை இறுதி மூச்சுள்ள வரை எதிர்க்கும் போராளி. இவர் தூக்கிப் பிடிக்கும் ம.பொ.சி. எப்படிப்பட்டவர்,

* தமிழ்மொழியை எனது தாய்மொழியாகக் கருது கிறேன். அது என் வாழ்க்கை மொழியாக அமைந்து விட்டதால், ‘இந்தியன்’ என்ற முறையிலே - ‘இந்து’ என்ற வகையிலே சமஸ்கிருதம் எனது கலாச்சார மொழியாக இருந்து வருகிறது (பக்.5).

* தமிழ்ப் புலவர்களிலே சமஸ்கிருதத்திடம் நல் லெண்ணமில்லாத சிலர், ‘அது செத்த மொழி’ என்று கொச்சையாகக் கூறுகின்றனர் (பக்.10).

* இன்றைய சூழ்நிலையிலே தமிழ்நாட்டு இந்துக்கள் மத விஷயத்தில் மறுமலர்ச்சி அடைய வேண்டி இருக்கிறது. இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டுக் காகவும் அது தேவைப்படுகிறது. அது தவறல்ல என்பதை நாம் உணர வேண்டும். இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டின் அவசியம் கருதியும் நான் சமஸ்கிருதத்தை வெறுக்க மறுக்கிறேன் (பக்.27).

* சமஸ்கிருதம் இந்துக்களின் பொதுமொழியாக இருப்பதன் காரணமாக, இம்மொழியில் ‘பீஜ மந்திரம்’ என்று சொல்லப்படுகிறதே அதை மட்டும் திருக்கோயில்களில் அர்ச்சகர் பயன்படுத்தலாம்; அதில் தவறில்லை. சமஸ்கிருத அருச்சனையை விரும்புவோர்க்கும் தடை சொல்லத் தேவை யில்லை. இது இந்து மதத்தவரின் ஒருமைப் பாட்டுக்கும் உதவி புரியும் (பக்.43).

* தமிழ்நாட்டுப் பிராமணர்கள் ஆங்கில மோகத்திற்கு அடிமையாகிச் சமஸ்கிருதக் கல்வியை கைவிடாதிருந்திருந்தால், “பிராமணரல்லாதாரும்” சமஸ்கிருதத்தை விரும்பிப் பயின்று வந்திருப் பார்கள். சமஸ்கிருதத்தைப் புறக்கணிப்பதிலே பிராமணர்கள்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டி யாக இருக்கிறார்கள் என்று காஞ்சிப் பெரியவரான ஆசாரிய சுவாமிகள் கூறியிருப்பதையும் இங்குச் சான்றுகாட்ட விரும்புகிறேன் (தமிழும் சமஸ்கிருத மும் : சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம் 2ஆம் பதிப்பு, அக்டோபர் 2002, பூங்கொடி பதிப்பக வெளியீடு).

இப்போது நாடு இந்துத்துவ வானரப் படையின் கைப்பிடியில், அவர்கள் ‘இது இந்து நாடு’ என்கிறார்கள். அயோத்தியில் இராமனுக்குக் கோயில் கட்டத் துடிக்கிறார்கள். மசூதிகளையும் தேவாலயங் களையும் இடிக்கிறார்கள். இந்தித் திணிப்பு, பசுவதை தடுப்பு, கோட்சேவுக்குச் சிலை, பகவத் கீதை தேசிய நூல், வடமொழி வாரக் கொண்டாட்டம், மத மோதல் கள், சாதிக் கொடுமைகள், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் தொடர்கின்றன.

ம.பொ.சி. தேசிய காங்கிரசிலிருந்து அரசியல் வாழ்வைத் தொடங்கியவர். தமிழரசுக் கட்சியெனத் தனி இயக்கம் கண்டாலும் இந்துச் சனாதனவாதி. தான் எதிர்த்த திராவிட இயக்க ஆட்சிகளில் பதவி சுகங்களை அனுபவித்தவர். ஈழத் தமிழரை அழிக்கச் சென்ற இந்திய அமைதிப் படையை மேடைதோறும் ஆதரித்தவர். இறுதியில் இந்தியத் தேசிய காங்கிரசில் போய்க் கரைந்தார்.

பெரியார் இந்தியத் தேசியத்திலிருந்து பொது வாழ்வைத் தொடங்கினாலும் வாழ்வின் இறுதி மூச்சு வரை இந்தியத் தேசியத்தை உடைத்து நொறுக்க அவாவிய அரிமா. இந்துத்துவ வயிற்றால் செரித்துக் கொள்ளமுடியாத நெருப்புத்துண்டு. தமிழினம் கடந்த தன்னேரில்லாத் தலைமகன். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காகவே உலவிய போர் வேங்கை.

மணியரசன் போன்ற தமிழ்த் தேசியர்கள் ம.பொ.சி. யைப் போற்றுகிறார்கள். பெரியாரைத் தூற்றுகிறார்கள். வாழ்க தமிழ்த் தேசியர்கள்!

Pin It